நூறாசிரியம்/எவன்கொல் அறிகும்

விக்கிமூலம் இலிருந்து



31 எவன்கொல் அறிகும்

எவன்கொல் அறிகும் இறையவன் கிடக்கை!
கவண்முகத் துருவிய சிறுகல் போல
விசைப்பே அளவிடைப் பொழுதே! வினையே
நசையள வயினே; நலிதலும் மெலிதலும்
அதனுட் பட்ட அவைபொறி வழிய! 5
செவ்விதி னமையா ஐம்பொறி முனைப்பும்
எல்லையுள் வாங்கும் அறிவி னான!
இவைகொடு தெளிவே இறையவன் உண்மை!
அவன்றிறல் மேற்றே அண்டம்;
அவிழ்தலுங் குவிதலும் அரிதுமற் றறிவே! 10

பொழிப்பு:

இறைவனின் இருக்கையை எவரே அறிகுவர்? கல்லெறி கருவியின் முனையினின்று உருவிப்போகும் சிறுகல்லைப் போலும் வாழ்க்கையின் விசைப்பு ஒர் அளவுபட்ட சிறுபொழுதே அவ்விடைப் பொழுதில் செய்யப் பெறும் வினையோ, உள்ளத்தெழுந்த விருப்பத்தைப் பொறுத்தது. உடல், உள்ள நலிவுகளும் மெலிவுகளும் அவ்விருப்பத்தின் உள்ளடங்குவன. அந்நலிவும் மெலிவும் உள்ளடங்கிய விருப்பமும் வினையும் உடலின் ஐம்பொறிகளை வாயாகக் கொண்டன. ஒன்றுக்கொன்று மேலவும் தாழவுமாகச் செப்பமுற அமையாத அவ்வைம்பொறிகளும் தம்முள் முனைத்து நிற்பினும், அவற்றின் அறிதிறனோ ஒர் எல்லையுள் வாங்கும் அளவுடையது. இயல்வனவும் இயலாதனவுமாகிய இவற்றைக் கொண்டுதான் இறைவனின் உண்மை தெளியப்பெறுதல் வேண்டும். அத்தகு இறைவனின் ஒளியின் மேலும் வலியின் மேலும் அளாவி நிற்பவைதாம் இவ்வுலக உருண்டையும் இது போல் பிறவும். அவற்றின் மலர்ச்சியாகிய தோற்றத்தையும், கூம்புதலாகிய ஒடுக்கத்தையும் அறிவது அரியது ; இயலாதது.

விரிப்பு:

இப்பாடல் புறத்துறையைச் சார்ந்தது.

அகச்செருக்கும் அறிவுச் செருக்கும் வினைச்செருக்கும் மிகுந்து.

அருளும், மெய்யறிவும், அடக்கமும் குறைந்துவரும் தற்காலத்து இறைமை பொதுளிய இயற்கைத் தன்மையினை மறந்து வாழும் மாந்த உயிர்களுக்கு, உள்ளொளி கொளுத்தி உயிரியக்கம் சிறக்கக் கூறியதாகும் இப்பாட்டு.

இனி, 'செருக்கு' என்பது கருப்பையை படைத்த கொழுப்பு போலவும், வித்தை அளவு மீறி மூடிய வலிந்த தோல் போலவும் விளைவைக் கட்டுக் குலைக்கும் ஒருவகைத் திரிபுணர்ச்சியாகும். அகச்செருக்கு இயல்பான அகவளர்ச்சியையும், அறிவுச்செருக்கு உயிர்களின் மெய்யுணர்வையும், வினைச்செருக்கு வாழ்வடக்கத்தையும் கட்டுக்குலைத்துத் திரிபடையச் செய்யும் என்னை? நேராக வளரக்கூடிய ஒரு மூங்கில் அல்லது ஒர் உடல் திருகல் முறுகலாக வளர்வதைப் போன்றதே திரிபு என்க.

இனி, உலகின் அகப்புறச் சமயங்கள் அனைத்தும் இறைவனின் இருக்கை பற்றிப் பலப்பலவும் கூறும். அவ்வச் சமயமும் அவ்வக் காலத்தே வாழும் மாந்தர்க்காக, அவ்வவ் விடத்தே வாழும் முதிர்வுற்ற மெய்யுணர்வினார் ஒருவர் அல்லது சிலரால் தோற்றுவிக்கப் பெற்றுக் காலக்கழிவில் பலராலும் பயிலப்பெற்றும், பயிற்றுவிக்கப்பெற்றும், வித்துருவினின்றும் அதைச் சுற்றியுள்ள கொட்டையும் சதைப்பும், நாறும், தோலும் எனப்படும் பொருள் உருவாய் வளர்ந்தும் பரந்தும் வருவதே ஆகும். எனவே எல்லாச் சமயத்துள்ளும் அகக்காழாய் இறையுண்மை இருப்பது போலவே புறக்காழாய் காலவெச்சங்களும், இடக் குற்றங்களும் மாந்தப் பிழைகளும் அமைந்தே இருக்கும். எல்லாச் சமயத்துள்ளும் அவை ஒரே படித்தாயும் இரா. ஒரே வகைப் பழம் பலாமரத்தின்கண் பல வேறு சுவையாயும், இனி அதுவே பல்வேறு நாட்டின்கண் வெவ்வேறு வடிவாயும் இருப்பது போலவே, இறையுண்மையும் சமயத்திற்குச் சமயமும், காலத்திற்குக் காலமும், இடத்திற்கு இடமும் மாறுபட்டு விளங்கும், இன்னுஞ் சொல்வதானால் பருப்பொருளாகிய பழத்தினும் நுண்பொருளாகிய இறைமை கால இடம் நோக்கி மிகவும் மாறுபடும். மாந்த இனத்திலேயே கற்கால மாந்தத் தோற்றமும் தற்கால மாந்தத் தோற்றமும் மிகுதியும் வேறுபட்டு விளங்குவதை யாவரும் நன்கு அறியலாம். சுருக்கமாகக் சொன்னால் உலக அமைப்பை ஒரு சில மூலக்கூறுபாடுகளின் வேறுபாட்டுத் தோற்றமே என்பதை அறிவியல் மெய்ப்பிக்கும். இனி, மெய்யறிவியலோ அம்மூலக்கூறுபாடுகளும் ஒரே ஒன்றின் உள்ளீட்டுத் திரிபுகளே என்று வரை நிறுத்தும். அந்த ஒன்றாய் இருப்பதையே சமயம் இறைமை என்கிறது.

உலகியலில், ஒருவர்மேல் பிறிதொருவர் கொள்ளும் ஈடுபாடே பொதுமை என்றும், பற்றென்றும், நட்பென்றும், அன்பென்றும், அருளென்றும், காதலென்றும், பத்தி என்றும் வேறுபட்டு விளங்கி நிற்பது போல், அவ்விறைமைப் பொருளே இயற்கையென்றும், மூலப்பொருள்கள் என்றும், ஐம்பூதங்கள் என்றும், உலகென்றும், உயிர்கள் என்றும் மக்கள் பற்றென்றும், இனமென்றும் தொண்டென்றும் வேறுபட்டு விளக்கமாகப் பேசப்பெறுகின்றது.

ஓர் உழவன் நிலத்தை உழுது, வித்தி, விளைவிப்பது அவனுக்கும் பிறர்க்குமே ஓர் அரசன் அரசியல் நடத்துவதும் அவனுக்கும் பிறர்க்குமே. தாயொருத்திக்குப் பிறக்கும் குழந்தைகூட அவளுக்கும் பிறர்க்கும் பயனுடையதாகும். ஆக இவ்வுலகத்திலுள்ள எந்த ஒர் உயிரும் தனக்காகவும் பிறர்க்குமாகவே தோற்றம் எடுக்கின்றது. இக்கூட்டுச் சார்பு நிலையே இறைமையின் அகவியக்கமாகும். ஒரு தாயின் உடலினின்று ஒரு சேயின் உடலை அறிவியல் வேறுபிரித்துக் காட்டலாம். ஆனால் ஒரு தாயினது மனத்தில் சுரக்கும் பிள்ளைப் பாசத்தையும் அப்பிள்ளைக்குள்ள தாய்ப் பாசத்தையும், எந்த அறிவியலும் வேறு பிரித்துவிட முடியாது. இனி, அத்தகு இரு பாசமும் வெவ்வேறு தாய்க்கும் பிள்ளைக்கும் வெவ்வேறு வகையாக அவரவர் உயிர் விளைவுக்குத் தக்கபடி சுரந்து வருவதையும் எந்த அறிவியலறிஞரும் கருவி வைத்து அளவிட முடியாது. இதன் இயக்கம் மட்டில் இயற்கையோடு பொருந்திய இயக்கமாக இறைமை இயக்கமாக மெய்யறிவியல் பேசும். இவை விரிக்கில் பெருகும். ஆனால் இப்பாட்டின் உட்பொருளாய் விளங்கித் தோன்றும் இறைமையின் இருப்பை - அதன் தனித்த உருவை நிலையினை எவரும் அறிதற்கியலாது என்னும் உண்மையை ஒருவாறு விளக்கவே இவ்வளவில் கூறப்பெற்றது என்க? என்னை, எவரும் அறியப்பெறாத ஒன்றினை ஈண்டு நீவிர் மட்டும் அறியப் பெற்றதுபோல் பேசுவது யாங்கனம் எனில், அறியப் பெற்றது 'அறியப்பெறாது என்பது தானே யன்றி 'அறியப் பெறாத அறிவை' அன்று. இதனை இன்னும் சில படி மேலே விளக்குவோம்.

ஒன்றின் அல்லது ஒருவனின் 'அறியாமை' என்னும் நிலையில் அவனுக்குள்ள தன்மை வேறு. அவனைப் பற்றி நமக்குள்ள தன்மை வேறு. அவன் ஒன்றை 'அறியேன்' என்று நம்பால் எடுத்துச் சொன்னாலொழிய , அவன் அறியாமையை நாம் அறிந்து கொள்ளல் இயலாது. 'காந்தள் மலரைக் கண்டதில்லை’ என்று ஒருவன் சொல்லும் வரை, அவன் காந்தள் மலரைக் கண்டுள்ளானா அல்லனா என்பதை நாமறிவது எங்ஙனம்? இனிக்'கண்டேன்’ என்று கூறினாலும் அவன் அதனை விளக்கினாலொழிய நமக்கு அது பற்றி விளக்கமுறுவது யாங்கன்? இனி அவன் முழுவதும் முற்றும் விளக்கினாலும், நாமே அதனைக் கண்டு அறிவது போல் அத்துணை முழுவிளக்கமும் பெறுவது இயலுமோ? இனி, நாமே அதனை முழு அளவில் கண்டு கொண்டாலும் ஒர் இயற்கையியல் வல்லுநர் கண்டு அறிவதைப் போல் விளங்கிக் கொள்ள வியலுமோ? இனி, அவ்வியற்சையியல் அறிஞரும் ஒரு மூலிகை மருத்துவர் போல் அதிலுள்ள மருத்துவப் பயன்களைத் தேர்ந்து கொள்ளல் சாலுமோ? இனி அம் மருத்துவரும், அக்காந்தள் மலர்ச்செடி விளைவதற்கு வேண்டிய தட்ப

வெப்பக் கூறுபாடுகளையும், கால இடவேறுபாடுகளையும் பயிரியல் அறிஞர் ஒருவரைப் போல் உணர்ந்துரைத்தல் முடியுமோ இவ்வாறு ஒரு பொருளைப் பற்றிய அறிவுக்கு எத்தனைப் படி நிலைகள் உண்டோ, அத்தனைப் படிநிலைகளும் அறியாமைக்கும் உரியனவாம் என்க. என்னை? பிந்தினவரின் முந்தினவர் படிப்படியாக அறியாமை மிக்கவராகத்தாமே கருதப்பெறுவர். முந்தினவரின் பிந்தினவர் படிப்படியாக அறிவுமிக்கவராகத் தாமே கருதப் பெறுவர்.

எனவே, அறியாமையை அறியாதது ஒர் அறியாமை ; அதனை ஒரளவு அறிந்த பின்னும் ஒர் அறியாமை அறியாமையை அறியாமல் இருப்பவனை விட, அதனை அறிந்தவன் ஒரளவுமேல் என்றாலும் முழுநிலையைப் பொறுத்த அளவில் அவனும் அறியாதவனே. ஆகவே, இறைப்பொருள் அறியப்படாதது என்றால், ‘அறியப்படாத ஒன்று உமக்கு மட்டும் அறியப்பட்டது யாங்கன்?” என்னும் கேள்விக்குப் பொருளே இல்லாமல் போகிறது. அறியப்படாதது இறைமையின் தன்மையே யன்றி இறைமையின் உண்மை யன்று.

தாயின் கருப்பையுள் கிடந்தோம் என்ற உண்மையை நாம் அனைவரும் அறிவோம். அதன் தன்மையை நாம் அறிவோமா ? இனி, தன்மையறியப்படாததால் அதன் உண்மையும் பொய்யாகுமோ? இனி உண்மை உணரப்பெற்றதால், அதன் தன்மையும் உணரப்பெறுவதாகத் தான் இருக்க வேண்டும் என்பதில்லை. இப்பொழுதுள்ள அறிவியல் இன்னும் நூறு பங்கு வளர்ந்தாலும், நாம் கருப்பையுள் கிடந்த பொழுதிருந்த நிலையை இக்கால் நமக்குப் புலப்படுத்திக்காட்டுதல் இயலாது. ஏனெனில் கருப்பையுள் நம் உடலுறுப்புகள் இருந்த நிலையிலேயே நம் அறிவுணர்வும் இருந்திருக்கும். அந்த நிலையை அறிவுணர்வு மிகுந்த நமக்கு உணர்த்துவது யாங்கன்? அப்படி உணர்வதுங்கூட இல்லாத நிலைதானே அது. கல்லுக்குக் கல்போல் கிடக்குந் தன்மையை உணர்த்துவது யார்?

எனவே, நம் அறிவின் எல்லை இறைவனைப் பற்றிய அறியாமையின் தொடக்கமாக அமைவதைக் கண்டு தெளிக. அவ்வறியாமை நிலை நம்மால் அறியப்பெறும் பொழுது, நமக்குள்ள புலன் உறுப்புகள், மூளைத்திறன்கள் யாவும் செயலற்றுப் போகும். இனி, இவ்வுலகின்கண் இருந்துகொண்டே இறைமைத் தோற்றத்தை அறிந்தவராகச் சமயக்குரவர் சிலர் எல்லாச் சமயத்தும் கூறியிருக்கின்ற தென்னை யெனின், அதைப் பற்றியும் சிறிது விளக்குவோம்.

அறிவு நிலையும் அறியாமை நிலையும் பலபடி நிலைகளையுடையன என்பது பற்றி முன்னரே அறிவோம். அறிவு நிலையில் உள்ள ஒருவர் அறியாமை நிலையில் உள்ள ஒருவர்க்குத் தாமே தம் அறிவு நிலையைப் புலப்படுத்திக் காட்டினாலொழிய அவ்வறியாமை நிலையில் உள்ளவர்க்கு



அவ்வறிவு நிலை புலப்படாதாம் என்பதையும் நாம் அறிந்து கொள்ளுதல் வேண்டும். ஆகவே இறைப்பேரறிவு தானே மாந்த உயிரொன்றிற்குத் தன்னை விளக்கிக் காட்டவேண்டும் என்று கருத்துக்கொண்டு காட்டினால் ஒழிய, அது தன்னை அறிந்து கொள்ளல் எவர்க்கும் இயலாது. இனி அப்பேரறிவும், அறியாமையே மிக்குள்ள ஒரு மாந்த உயிர்க்கு, அது தன்னை எந்த அளவில் விளங்கிக் கொள்ள வியலுமோ அந்த அளவறிந்துதான் தன்னைப் புலப்படுத்திக் காட்டுமேயன்றித் தன்னை முற்றும் அவ்வுயிர்க்கு விளக்கிக் காட்டவும் செய்யாது. இனி, ஓர் எறும்போ ஒரு புழுவோ எவ்வளவுதான் தன் நிலையில் முன்னேறினாலும் நம்போலும் ஒரு மாந்த உயிரை அறிய விரும்பும் ஒரு நிலைக்குத் தன்னை உயர்த்திக் கொள்ள முடியாது. அவ்வாறே உயர்த்திக் கொண்டாலும் அவ்வெறும்பின் மீமிசை அறிவுக்குப் புரியாத நிலையில் நாம் நம்மை விளக்கிவிட மாட்டோம். ஒர் அரையாண்டுக் குழந்தை ‘தான் இவ்வுலகத்திற்கு வந்தது எப்படி’ என்று நம்மைக் கேளாது. ஏனெனில் அவ்வாறு கேட்கவும் ஓர் அறிவு நிலை வேண்டும். ஒரு கால், அத்தகைய அறிவு வளர்ந்த மூன்று அல்லது நான்கு ஆண்டுகள் நிரம்பப்பெற்ற குழந்தை அந்தக் கேள்வியைக் கேட்பினும் அக்குழந்தை அக்கேள்விக்கான விடையை எந்த அளவில் விளக்கிக் கொள்ள வியலுமோ, அந்த நிலையில்தான் நாம் அதற்கு விளக்குவோமேயன்றி, நமக்கு அத்துறையில் விளங்கிய அனைத்தையும் விளக்கிவிட மாட்டோம். அவ்வாறு விளக்கினாலும் அக்குழந்தைக்கு ஒவ்வொரு படிநிலையிலும் ஒவ்வொரு வகை அறியாமை வந்து இடை மறிக்கும்.

இறைமை நிலைக்கு நாம் சிற்றெறும்பினும் பல்லாயிரங் கோடி அளவில் எல்லா நிலையிலும் தாழ்ச்சியுற்றவர்கள். அளப்பதற்கரியதாய் விரிந்து கொண்டே போகின்ற இப்பேரரும் புடவியுள் கணக்கற்றுத் தாறுமாறாக ஒடிக்கொண்டிருக்கும் பேரண்டங்களையும் சிற்றண்டங்களையும் நம் உலகம் போல் உயிர்கள் சான்ற பல்லாயிரங்கோடி உலகங்களையும் தம்முள் ஒடுக்கிக் கொண்டு கிடக்கும் இறைப்பேராற்றல் எங்கே? குற்றுயிரும் குறுவினையும் கொண்டு மிக மிகக் குறுங்காலத்தில் வாழ்ந்து மடியும் நாம் எங்கே? நமக்கு அப் பேரிறைப்பொருள் தன்னைப் புலப்படுத்திக் காட்டுதல் எங்கே? அது தன்னைக் காட்டினாலும் நாம் அதனை அறிந்து கொள்ளுதல் எங்ஙன்? (இது பற்றி இன்னும் தெளிவாக உணர்ந்து கொள்ள இறைக்காட்சி என்னும் என் கற்பனை ஊற்றுக் கட்டுரையைக் காண்க)

இனி, அச்சமயக் குரவர்கள் தாம் இறைவனைக் கண்டதாக உரைத்த நிலைகள் பொய்யாகுமே எனில், ஆகாது. அந்நிலைகள் அப்பெரியார்களின் மனக்கற்பிதங்களே! அஃதாவது அவர்கள் இறைப் பேராற்றலை எவ்வகையில் கற்பித்துக் கொண்டு பார்க்க விழைந்தனரோ, அவ்வகையில் கண்ட ஒரு கற்பிதத் தோற்றமே அக் காட்சி என்கர் என்னை, ஒவ்வொரு

சமயக்குரவரும் இறைப் பேராற்றலை அவரவர் விரும்பிய வடிவிலேயே கண்டுள்ளதாகக் கூறியுள்ளனரேயன்றி, எல்லார்க்கும் ஒரு வடிவே காட்சியுட் பட்டது என்பது எங்கும் புலப்படுத்தப் பெறவில்லை. எனவே அவர்கள் தம் அறிவுக்கொப்ப அவர்கள் கண்டவை ஒரு வகைக் கனவு நிலைப்பட்ட கற்பிதக் காட்சிகளேயாம் என்று தெற்றெனத் தெளிந்து கொள்க. அக்கர்ட்சிகள் முன்னிய மெய்யுணர்வுடைய உங்கட்கும் எமக்கும் கூட வரும். இனி, அக்காட்சிகள் போன்றனவே இவ்வுலகத் தோற்றங்களும், வானின்று கொட்டும் அருவியின் பேருருவமும், நிலவுலகையே பிளப்பது போல் இடிக்கும் பேரிடியின் பேரோசையும் அத்தகைய உணர்வு நிலைகளையே உருவாக்குகின்றன. அவற்றைக் கொண்டுதாம் நாம் இறைமையுணர்வு எய்திப் பல்வகை உருவ வழிபாடுகளைப் படைத்துக் கொண்டோம். ஆனால் அந்த நிலைகள் யாவும் இறைப் பேராற்றலின் இருக்கை நிலை யாகா.

இவற்றை உணர்த்தி நிற்பது தான் இப்பாடலின் ‘எவன் கொல் அறிகும் இறையவன் கிடக்கை’ என்னும் முதல் வரியாகும்.

கிடக்கை என்பது புறக்கிடக்கையை உணர்த்துதல் போலவே அகக்கிடக்கையையும் உணர்த்தும்.

புறக்கிடக்கை இருப்புநிலையையும், அகக்கிடக்கை விருப்பு நிலையையும் உணர்த்தும் உணர்த்தவே, இறைவனின் இருப்பு நிலையை யாவர் அறிவர் என்பதாகவும், அவன் விருப்பத்தை அறிவர் யாவர் என்பதாகவும் பொருள் கொள்க

இனி, அடுத்துவரும் அடிகள் முதலடி முதற் சொல்லாகிய ‘அவன்’ என்பதற்குப் பரியாய பொருள் விளக்கமாக வருவனவாம். என்னை? எவன் அறிகும் இறையவன் கிடக்கை எனும் கூற்றின்கண் உள்ள ‘எவன்’ என்னும் வினாவுள் மாந்தவினத்துள்ள யாவரும் அடங்குவரோ எனின், அடங்குவர் என்க.

இனி, அவருள்ளும் இயக்கம், அதன் மேலெழுந்த வினை , அதன் கருவாய நசை, அதன் பருவாய எடுப்பும் படுப்பும் சான்ற வலிமையும் மெலிமையும், அவை பற்றி நின்ற பொறிகளின் முனைப்பும் என இவ்வனைத்து நிலைகளானும் சிறந்து விளங்கும் நுண்ணுணர்வினோரே மேல் வரையினராக ஈண்டுக் குறிக்கப் பெற்றார் என்க. பெறவே, அவர்க்குரித்தாகிய வினையும் நசையும் பொறியும் முனைப்பும் அறிவும் தெளிவும் முறையே விளக்கப்பெறும்.

விசைப்பே கவண்முகத்து உருவிய சிறுகல் போல அளவிடைப்பொழுதே - கவண் முகத்து வைக்கப்பெற்ற சிறுகல்லின் இயக்கம் உருவியதும் ஓடியதும்

உறுத்ததும் என ஓரிரு நொடிப் பொழுதிலேயே நடைபெறுதல் போல், அவனின் இயக்கமும் உயிர்ப்பும் வாழ்வும் முடிவும் என்ன ஒரு சிறு இடைப் பொழுதிலேயே நடைபெறுகின்ற தன்மையுடைத்து.

இனி, ஒரு குறி நோக்கி வீசப்பெற்ற அக் கவண்கல், ஓரிரு நொடியிலோய தன் இலக்கைத் தொட்டு இயக்கத்தை முடிப்பதாய் இருக்க, அஃது அவ்விடைப் பொழுதிற்குள். தன்னறிவு பெறுதலும், தன்னை எற்றியவனை எண்ணுதலும், அவன்றன் அறிவையுணர்தலும் யாங்கன்? அதுபோல் இவ்வுலகின் கண் ஒரு குறிநோக்கி வீசப்பெற்ற மாந்தன், தனக்கு இயக்கமாகிய ஓரிடைப் பொழுதிற்குள் தன்னறிவுற்று, அதன் வழித் தன்னுணர்வு பெற்று, அதன்வழித் தன்னை இறுத்தானை மெய்யறிதலும் யாங்கன் இயலும் என்க. அறிவு என்பது ஒன்றின் புறமும் உணர்வு என்பது அகமும் ஆம். இவ்வுவமையால், மாந்த உயிரின் தோற்றமும், வாழ்வும், முடிபும் நன்கு தெளிய வைக்கப் பெற்றன.

என்னை? கவண் என்றதால் இவ்வுயிர் இறைப் பொருளின் ஓராட்சி நிலையில் அடக்கப்பெற்றுக் கிடந்ததும், முகம் என்றதால் அவ்வகப்பாடும் இறைப் பேராற்றலின் அகத்தே உள்ளொடுங்காது, உருண்டையின் மேற்புறமும் ஒளியின் புறச்சுடரும் போல் புறப்புறமாய் ஒடுங்கி நின்ற நிலையும், உருவிய என்றதால், அஃதோர் இலக்கு நோக்கித் தனியாட்சி நிலைக்கு எறியப்பெற்றநிலையும், அஃது அப்பேராற்றலினன்று உருவி வெளிப்பட்ட நிலையும், சிறு என்றதால் அவ்வுயிரின் சிற்றறிவும், சிறு வினையும், சிறுவியக்கமும் உள்ளடங்கிய சிறுமையும், கல் என்றதால் தன்னளவில் அவ்வுயிரேற்ற பூதவுடம்பின் இருப்பும் பருப்பும், உலகளவில் அதன் அளவும் தன்மையும், போல் என்றதால் உலகப் பொருள்கள் யாவும் ஒன்றுபோல் ஒன்று என்ற ஒப்புமைக் குறிப்பும், விசைப்பு என்றதால், கொண்டு செலுத்தும் விசையேற்றமும் செலுத்தக் கொள்ளும் விசையிறக்கமும், அளவு என்றதால் எல்லாவற்றுக்கும் அளவுண்டாம் என்னும் பேருண்மையும், இடை என்றதால் முதலும் முடிவும் அறியப்பெறாமல் வாழ்க்கை ஒன்றே அறியப் பெற வாய்த்ததொரு நிலையும், பொழுது என்றதால் இருநிலைக்கும் இடை யூடாய் அமைந்த காலம் என்பதும் நுண்ணிதின் உணர்த்தப் பெற்றன என்க.

இனி, சிறுகல் என்றதால் சிறுவிசை, (சிறுஅளவு) சிற்றளவு, சிறுபொழுது என்றும் வருமாறு உணர்க.

இனி, கவ்வுவதால் கவண் என்றும், முக (முன்) நிற்பதால் முகம் என்றும், உள்ளிருந்து புறப்படலால் (உள்-உர்-உரு), உருவு என்றும் கனப்பதால் கல் என்றும், விசும்பு(இயங்கு)வதால் விசை என்றும், ஒன்றின் முழுமையை அளாவுவதால் அளவு என்றும், புலர்தலால் பொழுது என்றும் சொற்பொருள் கண்டுகொள்க. விளையே நசையுள வயினே - (இனி, அவ்வியக்கத்துட்பட்டவனின்) வினையோ, அவன் உள்ளத்து எழுந்த நச்சுதல் தன்மை வயத்தது. நச்சுதல்-நசை-ஆசை-அவாவுதல். ஒன்றின் உள்ளுணர்வே அவாவுதலுக்கடிப்படையும், அவ் வவாவுதலே வினைக்கு அடிப்படையும் ஆம் என்க. உளவயின் நசையும், நசைவயின் வினையும் எனக் கொள்க. நவிதலும் மெலிதலும் அதனுட்பட்ட (இனி அவ்வினையின்) நலிவும் மெலிவும். (அவற்றின் அடியாய ஆசையின் நலிவையும் மெலிவையும் பொறுத்தன வென்க)

நலிதல் வளத்தில் குறைதல், மெலிதல் பருமையிற் குறைதல்.

நலிதலும் மெலிதலும் கூறியதால் ஆசைக்கும் அதையொட்டியெழுந்த வினைக்கும் வளமும் பருமமும் உண்டென்க. ஆசை நிறைவேறுதலும் வினை முற்ற முழுமையுறுதலும் அவ்வவற்றின் வளத்தையும் பருமத்தையும் பொறுத்தனவே.

ஆசை அறத்தைத் தழுவி நிற்கையில் வளமையையும், பொருளைத் தழுவி நிற்கையில் பருமையையும் எய்தும் அது, முன்னதைத் தழுவாமல் பின்னதை மட்டும் தழுவுகையில் தன்னளவுற்றுப் பேராசை என்றும், பின்னதைத் தழுவாமல் முன்னதை மட்டும் தழுவுகையில் தன்னளவுற்று வெற்றாசை என்றும். இரண்டையும் தழுவுகையில் பொதுவளவுற்று முற்றாசை என்றும் பெயர் பெறும்.இம்மூன்று நிலைகளும் முறையே கடையும் இடையும் முதலும் ஆகும் என்க.

இனி, பேராசை நின்றெழுந்த வினை, ஆரவாரமும் கொடுமையும் தன்னலமும் நிறைந்ததென்றும், வெற்றாசை நின்றெழுந்தவினை அமைவும் மிடிமையும் தன்னலமறுப்பும் நிறைந்ததென்றும், முற்றாசை நின்றெழுந்த வினை பண்பும் பயனும் பொது நலமும் நிறைந்ததென்றும் கண்டு கொள்க.

இனி, இவ்வாசையின் அடியிரு நிலைகளும் ஒன்றின் ஒன்று தாழ்ந்தும் உயர்ந்தும்.நிற்கும் நிலைகளும் உண்டு என்க. அவ்வந் நிலைகளில் அவ்வவ் வினைகளும் அங்ஙங்கனே பயன் கொளுவும் என்க. இனி, இவ்வினைகளே நல்வினையென்றும் தீவினை என்றும் புறப்பயன் நோக்கி வகுத்துக் கூறப் பெறும் எவ்வாறாயினும் வினைக்கு அடிநிலை மன அவாவுதலே என்க.

அவை பொறி வழிய அவ்வினைகளும் உடலின் ஐம்பொறிகளின் வழியே நடைபெறுவனவாகும்.

வினைகள் அவாவினின் றெழுந்து பொறிகளின் வழியாய் நிகழ்த்தப் பெறுகின்றன. வினை எழுச்சிக்கு அவாவுதலே கரணியமாய் அமைந்தாலும், அவ்வினைமலர்ச்சிக்கு ஐம்பொறிகளே கருவிகளாக அமைந்துள்ளன. அமையவே ஒரு வினை நிகழ்வு மன அவாவுதலையும் ஐம்பொறி நலத்தையும் பொறுத்த தென்க. எனவே அளவிடைப் பொழுதாயமைந்த சிறுகல் விசைப்புப் போன்ற மாந்த வாழ்க்கை படிப்படியாய் ஒவ்வொரு நிலைகளையும் கரணியங்களாக உள்ளடக்கிக் கொண்டு கிடக்கின்ற தென்க

செவ்விதின் - அறிவினான - இனி, அவ் வைம்பொறிகளும் தம்முள் ஒத்தபடி முனைப்புற்று நிற்பினும் அவை உள்வாங்கும் அறிவோ ஓர் எல்லையுட்பட்டது.

செவ்விதின் அமையா ஐம்பொறி என்றதால் உலக உயிர்கள் யாவினுக்கும் ஐம்பொறிகளுக்கும் ஒத்தபடி முழுமை பெற்று நிற்பதில்லை என்க. ஒவ்வோர் உயிர்க்கும் ஒன்றோ பலவோ குறைவுற்றே இருக்கும். ஆனால் அவ்வாறின்றி எல்லாப் பொறிகளும் தம்முள் ஒத்தும் மேம்பட்டும் விளங்கினும், அவற்றின் முனைப்பிற்கும் ஓர் அளவுண்டு என்க. காட்டாகக் கட்பொறி அமைப்பை நோக்குவோம்.

ஒருவருக்குக் கட்பொறி அமைதல் ஒரு நிலை, அஃது அழகான வடிவாய் இருப்பது ஒரு நிலை. பின் அது துல்லியமாயிருத்தல் ஒரு நிலை. அடுத்து அது பித்தநீரானும், பீளைமலங்களாலும், சூடானும் குளிர்ச்சியானும் தாக்கப் பெறாமல் தூய்மையுற்றிருத்தல் ஒரு நிலை. அதன் பின், அது கூச்சம், அரிப்பு, மழுக்கமின்றியிருத்தல் ஒரு நிலை, அத்துடன் அஃது ஒளிக்குருடு நிறக்குருடு போலும் குறையின்றியிருத்தல் ஒருநிலை இப்படித்தாய் பல நிலைகளிலும் அது குறையற்று நிறைவுற்றிருப்பினும், அதனால் மிகத் தொலைவில் உள்ள விண்மீனையோ, நேராக வன்றி வளைந்து செல்லும் நிலப்பரப்பினையோ, காணுதல் கூடுமோ? கூடாதென்க. இனி, அது காணக்கூடிய எல்லைப் பரப்பு என்பது ஒன்றுண்டே, அதுதான் அதன் எல்லை என்க. அந்நிலை பலர்க்கும் பலவாறாக வேறுபட்டு நிற்கும்.

இவ்வாறு நம் புறப் பொறிகளான ஐம்பொறிகளும் ஒரு சிறு குறைபாடும் அற்றனவாகி யிருந்தாலும் நம்மால் இவ்வுலகில் மிகமிகச் சிறு பயனையே பெறுதல் இயலும்.

பொறிகளின் ஈர்ப்புத் திறனையே அறிவு என்கிறோம். ஈர்ப்புத் திறனே வாங்கும் அறிவு என்று ஈண்டு சொல்லப்பெற்றுள்ளது.

இவைகொடு தெளிவே இறையவன் உண்மை-முற் கூறப்பெற்ற வாழ்வாகிய சிறு இடைப்பொழுதில், உள்ளத் தெழுந்த முற்றாசையான் பற்றப் பெற்ற வினையையுடைய மாந்தர், தமக்கியல்பாகிய நலிவும் மெலிவும் தவிர்க்கப் பெற்றவராயும், செவ்விதின் அமைந்த ஐம்பொறி முனைப்புடையவராயும் இருந்து அறியப்பெறும் தெளிவின் அளவாகத்தான் இறைவனின் உண்மை புலப்படும்.

என்னை? நமக்குற்ற கண் வழியாகப் பார்க்கப் பெறுவதே இவ்வுலகமும் புடவியும். நமக்குற்ற செவிகளின் வழியாகக் கேட்கப் பெறுவதே இங்குற்ற ஒசையும், ஒலியும். இவ்வாறே பிற பொறிகளின் வழியாக அறியப்பெறுவனவே பிற உணர்வுகளும். இனி, இறையுண்மையோ இவை யாவற்றையும் கொண்டு தெளியப் பெறுவதாகும். இவற்றுள் ஒன்று முரணுற்றாலும் அவ்வுண்மை சரிவரத் தெளியப் பெறாது போம். இனி, இவை துலங்கத் துலங்க இவற்றின் அடிப்பற்றியதாய மனமும் அறிவும் அகன்மையும் நீட்சியும் அடையப் பெற்று அவ்விறையுண்மையை மேன்மேலுந் துலங்கச் செய்வதும், அவை மழுங்க மழுங்க அவ்வுண்மையும் மழுக்கலுறுவதும் தன்னறிவான் கண்டு கொள்க.

இனி, இவ்வுலக அறிவுணர்வெல்லாம் ஒருயிர்க்கு இருவழிப் புலப்பாடுடையது. தன்வழித் தானறிதலும் பிறர்வழித் தானறிதலுமாகும். தன் வழித் தானறிதல் என்பது தனக்குற்ற கருவி கரணங்களால் தானே யறிதல்; பிறர் வழித் தானறிதல் என்பது பிறர்க்குற்ற கருவி காரணங்களால் அறியப் பெற்றவற்றை அவர்வழிக் கேட்டுத் தானறிந்து கொள்வது. உலகியலறிவு யாவும் ஒருவன் தன்வழித் தானே யறிதல் இயலாது. இனி, பிறர் வழித் தானறிதலும் ஒரளவே என்க. இனி, இவ்விருவகையானும் அறியப் பெறும் அறிவு பலவாயிருக்க இறையறிவு தன்வழித் தானறிதலில் தலையாயதென்க. அறிதலினும் தெளிதல் நுண்மை யுடைத்தாதல் பற்றித் தெளிவு எனலாயிற்று.

உண்மை - உள்ளமை. உள்ளதாந்தன்மை,

அவன்றிறல் மேற்றே அண்டம் - அவ்விறைப் பொருளின் திறத்தே அணுவும் அண்டமும் மேற்று மேலது. வழியது. அடிப்படையானது.

அண்டம் - அணுக்கள், அண்டியது அண்டம்.

அண்ணியது - சுருங்கியது.குறுகியது. விரிவின் சுருக்கம்- அணு.

அணுக்கள் - நெருங்கினது அண்டம்.

அவிழ்தலும் குவிதலும் அரிது மற்றறிவே! மற்று, மலர்தலையும் ஒடுங்குதலையும் அறிவது அரிது; இயலாதது. அண்ட இடை நிகழ்வின் ஒரு சிறு கூறுபாட்டைக் கூடச் சரிவர உணரமுடியாத நாம் அதன் மலர்ச்சியையும் அழிவையும் அறியமுடியாது.

அவிழ்தல் - கட்டுக்குள் இருந்து நெகிழ்தல் - விரிதல் - மலர்ச்சியுறுதல்

குவிதல் - கட்டுக்குள் ஒடுங்குதல் - ஒன்று கூடுதல்.

இப்பாடல், இறைப்பொருளின் இருப்பு நிலைபற்றித் தெளியவிலாதார்க்கும் தெளிந்தார்ப் போலப் பிதற்றுநர்க்கும் உலகியல் கூறி, அறிவின் தன்மையும் அறியப்பெறும் பொருளின் நுண்மையும் புலப்படுத்துவதாகும்.

இது பொதுவியலென் திணையும் முதுமொழிக் காஞ்சியென் துறையுமாம்.