உள்ளடக்கத்துக்குச் செல்

நூறாசிரியம்/இளநகை காண்குவன்

விக்கிமூலம் இலிருந்து

80 இளநகை காண்குவன்


அடைவா யெஃகம் வலிகடை புடைப்பினும்
நடைமா றாதா யீண்டு கடுகல்
குவித்த அறுகொடு மென்புகை மணக்க
அவியற் காணம் நினைதியோ யானுந்
திதலைப் பொன்பொறி சுருக்கத் தொடுங்கும் 5
புதல்வற் பயந்த புனிற்றிள வயிற்றோள்
குளம்பொலி மடுத்துப் பூக்கும்
இளநகை காண்குவ னின்னொடு விரைந்தே!

பொழிப்பு:

வாயின்கட் பொருந்திய கடிவாளத்தை இழுத்தலானே கடைவாய் வீங்கப் பெறினும் செலவில் மாற்றமில்லாதோய் இவ்வாறு நீ விரைதல் என்னை? குவித்து வைக்கப்பெற்ற அறுகம் புல்லொடும் , மெல்லிய ஆவிமணங் கமழ அவிக்கப்பெற்ற கொள்ளினையும் நினைக்கின்றனையோ? யானும் நின்னொடு விரைந்து சென்று, தேமலாகிய பொன்னிறப்புள்ளிகள் தோற் சுருக்கத்தின் கண் மறைகின்ற, மகனைப் பெற்ற ஈன்றணிமையுடைய வயிற்றினளாகிய தலைமகள் நின் குளம்பு எழுப்பும் ஒலியைச் செவிமடுத்து மலரும் புன்னகையைக் காண்பேன்.

விரிப்பு:

இப்பாடல் அகப்பொருள் சார்ந்தது.

தலைமகன் ஒருவன் சேய்மைக்கண் சென்று மேற்கொண்ட செயலை நிறைவேற்றி மீளுங்கால் தான் இவர்ந்து வருங்குதிரை கடிவாளத்தை இழுத்துப் பிடிப்பினும் நடைதளராது விரைந்து செல்லக் கண்டு அதனை நோக்கித் தீனியை நினைந்து இவ்வாறு விரைகின்றனையோ, யானும் நின்னொடு விரைந்து சென்று நின் காலடியோசையால் என் வரவுணர்ந்து மகிழும் தலைமகளின் புன்னகையைக் காண்பேன் என்று கூறுவதாக அமைந்தது இப்பாட்டு,

அடைவாய் எஃகம் வலி - வாயின்கட் பொருந்திய கடிவாளத்தை இழுத்தலானே.

அடைவாய் வாய் அடை என மாறிக்கூட்டி வாயின்கட் பொருந்திய எனப் பொருள் கொள்ளப்பட்டது.

எஃகம் இரும்பினான் ஆகிய கடிவாளம். வலி இழுத்தல்.

கடை புடைப்பினும் நடைமாறாதாய் - கடைவாய் வீங்கப் பெறினும் செலவு மாறாதோய்!

கடை கடைவாய், புடைத்தல்- வீங்குதல் நடை செலவு 'கதி’.

மாறாதாய்- மாற்றமில்லாதோய் குதிரையை முன்னிலைப்படுத்தி இவ்வாறு கூறினான்.

ஈண்டு கடுகல் - இவ்வாறு விரைந்து செல்வதற்குக் கரணியம் என்னை?

மேல், 'நினைதியோ’ என்பது நோக்கி ஈண்டு என்னை என்பது வருவித்துரைக்கப்பட்டது.

குவித்த அறுகொடு - குவித்த அறுகம்புல்லொடும்.

குவித்த என்றமையால் புல்லின் மிகுதி கூறப்பட்டது.

மென்புகை மணக்க அவியல் காணம் - மெல்லிய ஆவியின் மணங் கமழ வேகவைக்கப்பட்ட கொள்ளு.

புகை என்றது புகைபோலும் ஆவியை காணம் கொள்ளுப் பயறு.

நினைதியோ - நீ நினைக்கின்றனையோ, நீ - என்பது தோன்றா எழுவாய்.

கடிவாளத்தை இழுத்துப்பிடிப்பினும் நடைமாறாமல் விரைவதற்குக் கரணியம் இந்நினைவுதானோ என்றனன்.

திதலைப் பொன்பொறி சுருக்கத்து ஒடுங்கும் -தேமலாகிய பொன்னிறமான புள்ளிகள், வயிற்றுச் சுருக்கத்தின் கண்மறைகின்ற.

திதலை-தேமல், பொன்பொறி. பொன்னிறப் புள்ளி,

சுருக்கம் தோற் சுருக்கம் தோலின் மடிப்பு.

புதவல் பயந்த -ஆண்மகவை ஈன்ற

புனிறு இள வயிறோள் - ஈன்றணிமையுடைய மென்மையான வயிற்றையுடையவள்.

புனிறு- ஈன்றணிமை அது பதினாறுநாள் வரை என்பது உலக வழக்கு மகப் பெற்ற மகளிர்க்குப் பதினாறு நாள் காறும் உடல் வலிமை குன்றியிருத்தலின் அம் மென்மை இளமை எனப்பட்டது.

வயிறோள் - வயிற்றோள். ஈண்டு வயிறு என்பதன் கண்ணுள்ள வல்லெழுத்து இரட்டியாமை அதன் மெல்லிமை நோக்கிப் போலும்,

குளம்பு ஒலி மடுத்து - குதிரையின் காலடி ஓசையைக் கேட்டு.

குளம்பு. குதிரைக் காலின் அடிப் பகுதி.மடுத்து-செவிமடுத்து கேட்டு.

தலைவன் வரவைத் தொலைவிலிருந்தே அறிவிப்பது அவன் ஊர்ந்து வரும் குதிரையின் குளம்பொலியாதலின் தலைவி அதனைச் செவிமடுத்து கூறப்பட்டது.

பூக்கும் இளநகை - மலருகின்ற புன்னகையை,

யானும் நின்னொடு விரைந்து காண்குவன் - யானும் உன்னுடன் விரைந்து சென்று காண்பேன்.

இரையை நினைத்து விரைகின்ற குதிரையை நோக்கி இவ்வாறு கூறினான்.

“ஞாயிறு திங்கள் அறிவே நாணே
கடலே கானல் விலங்கே மரனே
புலம்புறு பொழுதே புள்ளே நெஞ்சே
அவையல பிறவும் நுதலிய நெறியாற்
சொல்லுந போலவுங் கேட்குந போலவுஞ்
சொல்லியாங் கமையும் என்மனார் புலவர்"

(தொல்.செய்.201)

என்பவாகலின் ஈண்டுத் தலைமகன் பரிமாவை நோக்கிக் கூறுமாறு அமைந்தது இப்பாட்டு.

இப்பாட்டு முல்லை என்னும் அகத்திணையும் இடைச்சுரத்துத் தன் குதிரையை நோக்கிக் கூறியது என்னுந் துறையுமாம்.