நூறாசிரியம்/குடுக்கைப் பசுங்காய்

விக்கிமூலம் இலிருந்து

81 குடுக்கைப் பசுங்காய்


குவடேய்ங் கூரை சுவடுபடப் பதிந்த
குடுக்கைப் பசுங்காய்ச் சுருட்கை போலப்
படர்கொள வலையுஞ் சுடர்க்கொடி நெஞ்சம்
இடர்பெறுந் தகைதில் பெரும! ஈனியர்
பொய்நிழல் வேட்டெனும் புரைசொன் மாற்றி 5
மொய்குழ னளைந்து முயங்கியாக் காலே!

பொழிப்பு:

மலைமுகடு போல் உயர்ந்து விளங்கும் கூரை தன் அடையாளத்தைக் கொள்ளுமாறு பதிந்திருக்கின்ற குடுக்கையாகும் பசுமை பொருந்திய காயையுடைய சுரைக்கொடியின் சுருளும் கையே போல், பற்றிப் படர்தற்கு அலைகின்ற ஒளிபொருந்திய கொடி போலும் தலைவியின் நெஞ்சம் துன்பத்தைத் தாங்கிக்கொள்ளும் ஆற்றலுடையதில்லை; பெருமகனே, பெற்றோர்தம் பொய்யான களைகண் விரும்பியுறைகிறாள் என்னும் ஊரவர் பழியுரையை மாற்றித் தலைமகளின் அடர்ந்த கூந்தலை நீவி அவளொடு கூடாதவிடத்து.

விரிப்பு:

இப்பாடல் அகப்பொருள் சார்ந்தது.

தலைமகள்பால் களவு நிலையில் காதல் கொண்டொழுகும் தலைமகன் அவளை வரைந்து கொள்ளுதற்குக் காலம் நீட்டித்தானாக, தோழி அவனைநோக்கி, கரைக்கொடியின் சுருட்கைபோல் கொழுநனைப் பற்றுதற்கு அலைகின்ற தலைமகளின் நெஞ்சம் துன்பத்தைப் பொறுத்துக் கொள்ளும் தன்மையுடைய தன்று இவள் பெற்றோரின் ஆதரவில் உறைதலையே விரும்புகிறாள். என ஊரவர் கூறும் பழியுரையைப் பொய்யாக்கி அவளை விரைவில் வரைந்து கொள்ளுக எனத் துண்டுவதாக அமைந்தது இப் பாட்டு.

குவடு ஏயும் கூரை சுவடுபட -மலை முகடு போல். உயர்ந்து விளங்கும் கூரை தன் அடையாளத்தைக் கொள்ள,

வீட்டின் கூரை தொலைவிலிருந்தார்க்கும் தெரியுமாறு உயர்ந்து நிற்றலின் குவடு ஏய்ங் கூரை என்றார். குவடு மலை முகடு, மலையுச்சி.

சுவடுபடுதலாவது காய் பறிக்கப்பட்ட பின்னும் அக்காய் பதிந்திருந்த இடம் தெரியக் கிடத்தல்.

குடுக்கைப் பகங்காய் - குடுக்கையாகும் பசிய காய். காய் முற்றியபின் குடுக்கை யாதலின் காயைக் குடுக்கைக் காய் என்றார்.

குடுக்கை - சுரைநெற்று. உள்ளிடு முற்றக்காய்ந்து, காய் முற்றியபின் உள்ளிடின்றித் துளையாய் இருத்தலின் அது சுரைக்காய் எனப்பட்டது. சுரை. துளை.

சுருள்கை போல -சுரைக் கொடியின் முனையிலுள்ள சுருளும் கைபோல.

மேலே சுரைக்காய் என்றமையின் காயையுடைய கொடி வருவித்துக் கொள்ளப்பட்டது. சுரைக்கொடியின் முனையிலுள்ள சுருண்ட நாம்பு கைபோலப் பற்றிக் கொள்ளுதலின் சுருட்கை என்றார்.

படர்கொள அலையும் கடக்கொடி நெஞ்சம் - படர்தற்கு அலைகின்ற ஒளிபொருந்திய கொடி போல்வாளின் நெஞ்சம்.

சுரைக்கொடியின் சுருட்கை போல் இச்சுடர்க்கொடியின் நெஞ்சம் கொழுநனைப் பற்றிக் கொள்ள அசைகின்றது என்க. படர்கொளபற்றிப்படர. அலைதல்-நிலை கொள்ளாது ஆடி அசைதல்.

இடம்பெறும் தகையது இல் பெரும - துன்பத்தைத் தாங்கிக் கொள்ளும் ஆற்றலுடையது இல்லை பெருமானே!

தலைமகள் துன்பத்தைத் தாங்கமாட்டாது உயிர்விடவும் நேரும் என்னும் அச்சக் குறிப்போடு பெரும என ஈண்டு விளித்தாள். பெருமகன் என்பதின்றும் மருவிய பெருமான் என்னுஞ் சொல் அண்மை விளியில் பெரும என ஆயிற்று.

ஈனியர் பொய்நிழல்... மாற்றி'- பெற்றோர்தம் பொய்யான ஆதரவையே விரும்பி வாழ்கிறாள் என்னும் பழியுரையைப் போக்கி.

ஈனுதல் தாயின் வினையும், அதுபற்றி ஈன்றாள் என்பது தாய்க்கே தனிச்சிறந்த பெயருமாம். ஆயினும் ஈண்டு ஈனியர் என்பது பெற்றோர் என்னும் பொருளில் பொதுப்பட நின்றது.

இல் வாழ்க்கையை மேற்கொண்டு தலைவன் தலையளியில் இனிது வாழ வேண்டியவளாதலின் பெற்றோர் ஆதரவு பொய்நிழல் எனப்பட்டது.

வேட்டுவிரும்பி, விரும்பியுறைகிறாள் என்றவாறு,

புரைசொல்- பழிச்சொல், ஊரவர் பழித்துரைக்கும் சொல். மணமாகாத பெண்ணை இங்ஙனம் பழித்துரைத்தல் யாண்டுங் காண்கில மாதலின் இது தோழியின் புனைந்துரையாம்.

மொய்குழன் அளைந்து முயங்கியாக் காலே - தலைமகளின் அடர்ந்த கூந்தலை வருடிக் கூடாதவிடத்து.

அச்சங் களைந்து ஆறுதலளிப்பார்தம் மெய்ப்பாடாதல் பற்றிக் கூந்தலை வருடி அணையக் கூறினான்.

மொய்குழல் -அடர்ந்த கூந்தல்; அளைதல் வருடுதல் முயங்குதல் புணர்தல், முயங்காக்கால் என்பது செய்யுள் நோக்கி முயங்கியாக்கால் என நின்றது.

இப்பாடல் குறிஞ்சி என்னும் அகத்திணையும், தோழி தலைவிநிலை கூறித் தலைமகன்பால் வரைவு கடாயது என்னுந் துறையுமாம்.