உள்ளடக்கத்துக்குச் செல்

நூறாசிரியம்/உட்புலன் முனைப்பே

விக்கிமூலம் இலிருந்து

38 உட்புலன் முனைப்பே!


பிரிவுறு மகனே! பிரிவுறு மகனே!
அறிவமை கழகத் தன்றன் றாயும்
நெறிமுறை பயிலப் பிரிவுறு மகனே!
எறிதிரை முந்நீர் இழைந்ததர் தப்பிய
கலங்கரைந் துய்க்கும் கதிர்சுழல் விளக்கம் 5
சேண்தடவு மாடச் சென்னையம் பதியின்
ஒவத் தெருவும், கோவினைக் கோட்டமும்
நெறிதரு மன்றும் திரிதரு மக்களும்
கான்படு விலங்கின் காட்சியும் அவ்வினத்
தூன்படு பொய்யுடல் உயிர்பெறு வியப்பும் 10
அருந்தற் பொருள்களும் மருந்தின் மனைகளும்
திருந்தா உள்ளம் திசைதிசை வீழ்த்தும்
ஒளிநடக் காட்சியும் ஒலியின் ஒக்கமும்
களிகொள் ஒதுக்கமும் கவிஆ வணமும்
விலைகூய்ப் புணர்ந்து நோய்பல வித்தும் 15
பொலிவுடல் தோற்றத்துப் போலி மகளிரும்
புறம்புனை மயக்கின் புரைநரி கரிகத்
தறம்பிறழ் வினைகளும் அலவே சிறந்தன!
இசைபெறு கல்வியின் ஏர்ந்தன் றொழுங்கே!
வசைபெறு வாழ்வின் மாய்கை நன்றே! 20
தசைபெற லன்றே வாழ்க்கை! தசையுடன்
அறிவும் உணர்வும் அவையினு முண்மையும்
செறியுநல் லுயிர்க்குச் சிறப்பென் றாரே!
உண்கையு முடுக்கையு முறுபொருள் பெறுகையுங்
கற்ற வன்றே கல்வி 25
முட்டறப் பொருந்திய உட்புலன் முனைப்பே!

பொழிப்பு:

பிரிந்து செல்லும் மகனே! பிரிந்து செல்லும் மகனே! அறிவு நிறைந்த கல்விக் கமகத்தே அன்றன்று புதுவதாக ஆராய்ந்து அறிகின்ற வாழ்வுமுறைகளைப் பயில்வதன் பொருட்டுப் பிரிந்து செல்லும் மகனே! வீசுகின்ற அலைகளையுடைய கடலில் உராய்ந்து சென்று வழி தவறி விடும் கப்பல்களைக் கூவியழைத்துக் கரைசேர்க்கும் சுழல்கின்ற கலங்கரை விளக்க ஒளிக்கதிர்கள் தடவிச் செல்லுகின்ற உயர்ந்த மாடங்களைக் கொண்ட சென்னையென்னும் அழகிய நகரின், ஒவியம் போன்ற தெருக்களும், அரசுப் பணி நிகழும் அரண் சேர்ந்த கட்டடமும், அறநெறிகளை ஆய்ந்து தீர்ப்புத் தரும் அறமன்றமும், வினையின் பொருட்டாதல், வினையின்மை பொருட்டாதல் பல திசைகளிலும் விரைந்து திரிகின்ற மக்கள் கூட்டமும், காடுகளில் பிடிக்கப் பெற்ற விலங்குகளை அடைத்து வைத்துக் காட்டும் காட்சியும், அவை போலும் இறந்து போன விலங்குகளின் தசைகளை நீக்கி அவற்றின் தோல்களால் பொய்யாய்ச் சமைக்கப் பெற்று உயிருள்ள உடல்கள் போல் தோற்றுவிக்கும் வியப்புப் பொருந்திய பழம் பொருள் காட்சியும், துய்ப்பதற்குரிய பல நுகர்ச்சிப் பொருள்களும், அவற்றால் விளையும் நோய்களைப் போக்குகின்ற மருத்துவமனைகளும், செப்பமில்லாத உள்ளமுடையவர்களை நாற்புறத்தும் கவர்ந்து அடிமைப்படுத்தும் ஒளியுருப் படக்காட்சிகளும் ஆரவார ஒலிகளின் பெருக்கமும், களியாட்டங்கள் நிறைந்த ஒதுக்குப் புறங்களும், ஆரவாரம் மிகுந்த கடைத்தெருக்களும், விலை வைத்துக் கூவி உடன்பட்டவர்களைத் தழுவிப் பல வகை நோய்களைத் தோற்றுவிக்கின்ற, பொலிவுமிக்க உடல்களையுடைய பெண்மைச் சிறப்பு நீங்கிய மகளிரும், புறத்தே புனைவு மிகுந்து மயக்கத்தைத் தருகின்ற தீமை மிக்க நாகரிகத்தின் அறம் பிறழ்ந்த செயல்களும் ஆகிய இவை சிறப்பானவை அல்ல. புகழ்பெறுகின்ற கல்வியைவிட உயர்ந்தது ஒழுக்கம். இகழ்ச்சி பெறுகின்ற வாழ்வைவிட மாய்ந்து போவது நல்லது. உடல் தசைகளை வளர்க்கப் பெறுவதன்று வாழ்க்கை நல்ல உடல் அமைப்புடன் கூடிய நல்லறிவும் நல்லுணர்வும், இனி அவற்றை விட உள்ளத்து உண்மையும் செறிந்து விளங்குவதே, உயிர் வாழ்க்கைக்குச் சிறப்புத் தருவதாகும் என்றார் முன்னோர். அதனால் உண்ணுவதும், உடுப்பதும், அவற்றுக்குத் தேவையான பொருள்களை எவ்வகையானும் ஈட்டுவதும் கற்றுக் கொள்வதன்று கல்வி : உயிர் வளர்ச்சிக்குள்ள தடைகள் அகலும்படி, அதற்குப் பொருந்திய உள்ளுணர்வின் எழுச்சியாகும் அது!

விரிப்பு:

இப்பாடல் புறத் துறையைச் சார்ந்தது.

கல்வி கற்பற்காகப் பெற்றோரைப் பிரிந்து செல்லும் மகனிடம், உலகியல் உணர்ந்த தந்தையார் அறிவுரை கூறித் தெளிவுறுத்துவதாக அமைந்ததிந்தப் பாடல்.

‘பிரிதலுறும் மகனே! நீ கல்வி கற்கப் புகும் நகரின் சிறப்பியல்களாக நீ கருதிக் கொண்டிருக்கும் அவையல்ல உயர்ந்தன. கல்வியே உயர்ந்தது; அக் கல்வியினும் உயர்ந்தது ஒழுக்கம். ஒழுக்கம் திரிந்த இழிவான வாழ்வைவிட இறந்து போதலே நல்லது. உடல் நலமும் உள்ள நலனும் நடை நலனும் சேர்வதே உயிர் வாழ்க்கைக்குச் சிறப்புத் தருவது. எனவே உண்பதும், உடுப்பதும், அவற்றுக்கான பொருளைத் திரட்டுகின்ற வழிமுறைகளைக் கற்றுக் கொள்வதுமே கல்வி என்று பிறழ உணராமல், உயிரின் முன்னேற்றத்திற்குத் தடையாயுள்ள முட்டுப்பாடுகளைத் தவிர்த்துக் கொள்ளும் மெய்ப்புலன் எழுச்சியே கல்வியாகும் என்று உணர்ந்து கொள்!” -என்று அறிவுறுத்துவதாக அமைந்ததிப்பாட்டு.

இப்பாட்டில் கல்வியின் முழுச் சிறப்பும், நோக்கமும், பெருமையும் கூறப்பட்டன.

மகன் ஒருவனது கல்வி நலனில் அவனைப் பெற்றோர்க்கே, அதினும், அவன் தந்தைக்கே மிகுந்த அக்கறை இருத்தல் உலகியில்பு ஆதல் பற்றித் தந்தையின் கூற்றாக இது கொள்ளப் பெற்றது. உண்மைக் கல்வி எவ்வாறிருத்தல் வேண்டும் என்பதைச் செவியறிவுறுத்தலாகவும் கூறப்பெற்றது என்க.

பிரிவுறும் மகனே! - பிரிதலுறும் மகனே! பிரிதலுறும் மகனே என மும்முறை அடுக்கியது, அன்பும், உரிமையும், அக்கறையும், கடமையும், ஆற்றாமையும், எச்சரிக்கையும் போன்ற பல உணர்வுகளை வெளிப்படுத்த வேண்டி என்க! பிரிவு கல்வியென்னும் இயற்கைக் கரணியம் பற்றி நிகழ்வதாகலின், உறுதல் என்னும் தன்வினை நேர்ச்சிச் சொல்லால் உணர்த்தப் பெற்றது.

மகன் என்னும் அகடுஉ முன்னிலையால் விளிக்கப்பெற்றது, பெற்றோர் உடன்போகாத் தனிமை குறித்தலான் என்க. மகடூஉ வாயின் உடன் துணை போகும் நேர்ச்சியான், பிரிவுறு வினை நிகழாதென்க.

அறிவமை - பயில - ஆன்றவித்தடங்கிய சான்றோர் இருந்து பயிற்றும் கழகமாகலின் அறிவமை கழகம் எனப் பெற்றது. இனி, நாள்தொறும் பெறும் அறிவு வளர்ச்சிக்கேற்பப் பயிற்றுவித்தல் கல்விக் கொள்கையாகலின், அன்றன்றாயும் எனப் பெற்றது.

நெறிமுறை - என்றது, உலகின் இயற்கை நெறிகளையும், வாழ்வியல் நெறிகளையும் முறையாகப் பயிற்றுவிக்கும் கல்வியை என்க. கல்வி தன் முயற்சியால் விளையும் உணர்வாகலின் பயில எனப் பெற்றது.

எறிதிரை முந்நீர் இழைந்து எழுந்து வீசுகின்ற அலைகளையுடைய கடல் நீரில் உராய்ந்து.

அதர் தப்பிய கலம் - வழி தவற விட்ட கப்பல், கடல் நீரைக் கிழித்துக் கொண்டு தன் வழியில் போகப் புறப்பட்ட கலம், கடல் நீரின் போக்கில் சென்றதால் வழி தப்பியதை “முந்நீர் இழைந்து அதர் தப்பிய” என்பதால் உணர்த்தப் பெற்றது. இனி, கல்வி கற்கப் புகும் நீ, நகரின் சூழலை எதிர்த்துக் கொண்டு, உன் வழியில் செல்லாமல் நீ, கற்கப் புகும் நகரின் சூழலில் அகப்பட்டு வழி தப்பி விடக்கூடாது என்பதைத் தந்தை எச்சரித்தார் என்க. அங்குள்ள நகரச் சூழல்க எழுந்து வீசுகின்ற அலைகளைப் போலும், ஆழ்ந்த கடலைப் போலும் வலிவுடையனவாக இருப்பினும், நீ தன் ஆற்றல் தவிர்ந்த கப்பல், கடல் நீரின் போக்காகப் போய் வழிதவறி விடுதல் போல் தவறி விடக் கூடாது என்பதாகக் கூறினார் என்க.

ஆற்றுநீர், ஊற்றுநீர் மழைநீர் ஆகிய மூன்று நீர்களும் சேர்வதால் கடல் “முந்நீர்” எனப்பெறும் அச்சொல்லால் கடலை இவ்விடத்துக் குறித்தது, நகரத்தை உருவகப்படுத்துவான் வேண்டி என்க. நகரம் பல போக்குடைய மாந்தர்களைக் கொண்டதாகலின் அதனை முந்நீர் போன்றது என்றார்.

மழை நீர் சான்றோர்க்கும், ஊற்று நீர் உலகியல் உணர்வுடைய நடுநிலை மாந்தர்க்கும், ஆற்று நீர் உலகியல் தீமைகளையெல்லாம் கைக்கொண்டொழுகும் கீழ்நிலை மாந்தர்க்கும், இம்மூவகை மாந்தரும் கலந்து வாழும் நகரம், முந்நீர் என வழங்கும் கடலுக்கும் உருவகிக்கப் பெற்றன என்க.

தீமையும் நன்மையும் சார்ந்த உலகில் வாழ்ந்தாலும், கதிரவன் போலும் அறிவு வெப்பத்தால் பிரித்தெடுக்கப் பெற்று , அவ்வப் பொழுது தம்மைத் துய்மை படுத்திக் கொண்டு, மேனிலை எழுச்சி பெற்று, மழை போலும் தூய அறநெறிகளைப் பரந்துபட்டு வழங்கும் தன்மையராய்ச் சான்றோர் உளராகலின், அவர் மழை நீர் போல்வார் என்றார்.

உலகியல் உணர்வால் அழுந்தி நின்று, தாம் இருக்கும் இருப்பிலேயே தம்மளவில் ஊறிச் சுரந்து, தம்மைச் சார்ந்தார்க்கு மட்டுமே நின்றுதவும் தன்மையோராகியோர் நடுநிலை மாந்தராகவின், அவர் ஊற்று நீர் போல்வார் என்றார்.

இனி , தோற்றத்து எளியராகவும், வாழ்வியல் ஒட்டத்து வழியின் கண்பெற்ற அனைத்துத் தன்மைகளையும் தம்முள் கரைத்துக் கொண்டு திரிபுற்றவராகவும், கரைகட்டித் தேக்கின் நன்மையும், தேக்காவிடத்துக் கரைபுரளும் வெள்ளம்போல் தீமையும் செய்யும் திறத்தினோராகியோர் கீழ்நிலை மாந்தராகலின், அவர் ஆற்று நீர் போல்வார் என்றார்.

இத்திறத்து, இம்மூவகை மாந்தரும் கலந்தியக்கும் நகரம், அம் மூவகை நீரும் கலந்தியங்கும் கடல் போல்வதாகும் என்றார்.

இம்மூவகை மாந்தத் தன்மைகளையும் இராசக தமச இராக்கத குணங்கள் என்பர் ஆரிய நூலார். அந்தண்மை, மாந்தன்மை, கயமை என்பது தமிழ்ச் சான்றோர் வழக்கு என்க.

கலம் கரைந்துய்க்கும் கதிர்சுழல் விளக்கம்-கப்பல்களைக் கூவி அழைத்துக் கரைசேர்த்து உய்விக்கும் ஒளிக்கதிர்கள் சுழல்கின்ற பெரிய விளக்கம். கரைதல் கூவி அழைத்தல். “அவ்வாறு நகர்ப்புறச் சூழலில் மயங்கி, நின் கல்வி நோக்கைக் கைநெகிழவிட்டு வழி தடுமாறி நீ நிற்கின்ற பொழுதில், என்னின் இந்த உரை நினக்கு வழி தப்பிய கப்பல்களைக் கூவியழைத்துக் கரைசேர்க்கும் கலங்கரை விளக்கம் போல் நின்று கை கொடுக்கட்டும்” என்னும் குறிப்புணர்வு தோன்ற, தந்தை இதைக் கூறுவாராயினர் என்க. அத்தகைய கலங்கரை விளக்கின் கதிரொளி தடவிச் செல்கின்ற உயர்ந்த மாடங்களையுடைய சென்னை நகரம் என்பார், கலங்கரைந் துய்க்கும் கதிர் சுழல் விளக்கம், சேண்தடவும் மாடச் சென்னையம் பதி என்றார் என்க.

“உயர்ந்த மாடங்களைத் தடவும் கழல் கதிர்போல் இவ்வுரைகள் உன் உயர்ந்த நோக்கங்களைத் தடவி ஒளிவீசட்டும்” என்றார் என்க.

பதி - குடிகள் அயலிடம் பெயராமல் பதிந்து வாழும் நகரம்.

பதிதல் - பதிந்து வாழ்தல் பதி. இதுவே முன்னிலை திரிந்து வதிதல் என்னும் சொல்லைத் தோற்றுவிக்கும்.

ஒவத்தெரு - ஒவியம் போலுள்ள அழகிய தெரு.

கோவினைக் கோட்டம் - அரசுப் பணி செய்யும் காவல் உள்ள மனை.

நெறிதரு மன்று - அறமுறை வகுக்கும் அறநெறி மன்றம்.

திரிதருதல் - நாற்றிசைகளிலும் ஒரு நோக்கம் பற்றியேர் நோக்கமின்றியோ போய்வந்து கொண்டிருத்தல்.

கான்படு விலங்கின் காட்சி - காட்டில் பிடிக்கப்பட்ட விலங்குக் காட்சிச் சாலை.

அவ்வினத்து - வியப்பும் - அவ்விலங்கினங்கள் இறந்துபட்டயின், அவற்றின் உடல் ஊன்களை அகற்றி, அவற்றின் தோல்களைக் கொண்டு பொய்யாகச் சமைக்கப் பெற்ற உடல்கள், உயிருள்ளவை போலவே தோற்றந் தரும் பழம்பொருட் காட்சிச்சாலை.

அருந்தற் பொருள்கள் - பலவகையான நுகர்ச்சிப் பொருள்கள்.

மருந்தின் மனைகள் - மருத்துவ மனைகள்.

இரண்டு சொற்களும் அடுத்தடுத்துப் பயில்வதால், அருந்துகின்ற பொருள்களால் வரும் நோய்களை அகற்றுவதற்குரிய மருத்துவமனைகள் என்றும் இணைந்து பொருள் பெற்றன.

திருந்தா உள்ளம் - செப்பம் பெறாத உள்ளங்கள், சென்றவிடத்தால் செலவிடாதீதொரீஇ, நன்றின் பால் உய்க்கும் அறிவு குறைந்த உள்ளங்கள்.

திசை திசை வீழ்த்தும் - திரும்புகின்ற திசைகள் தொறும், திருந்தாத உள்ளங்களைக் கவர்ந்திழுத்துத் தன் அடிப்படுத்தும். ஒளிநடக் காட்சி - ஒளியுருவம் அசைகின்ற காட்சி- திரைப்படக் காட்சிகள்.

ஒலியின் ஒக்கம் - ஒலியின் பெருக்கம்- ஆரவார ஒலி,

களிகொள் ஒதுக்கம் - களிப்பு நிகழ்ச்சிகளைக் கொண்ட ஒதுக்குப் புறங்கள். நகர்ப்புறங்கள் கட்டிடங்களாலும் போக்குவரத்துகளாலும் நெரிசல்கள் மிகுந்து நிற்குமாகலின், பொழுது போக்குக்காக நடத்தப்பெறும் களிப்பு நிகழ்ச்சிகளைக் கொண்ட கொட்டகைகளும், கூடாரங்களும் ஒதுக்கமாயுள்ள வெற்று வெளிகளில் அமைக்கப் பெறுவதால், அவை ‘களிகொள் ஒதுக்கம்' ஆயிற்று.

கலி ஆவணம்- ஆரவாரமிக்க கடைத்தெரு.

கலித்தல் - நிறைதல், மிகுதல், தழைத்தல், கல்-ஓசையைக் குறிக்கும் ஒர் ஒப்பொலிச் சொல். அதனின்று கலிங் கலிங், கலகல முதலிய பல ஒசைச் சொற்கள் பிறக்கும். ஒர் ஒழுங்கின்றிக் கலப்பு மிகுந்த ஒர் ஒலித்தொகுதியைக் குறிக்கின்ற பொழுது, கலி என்று மட்டில் நின்று பொருள் தரும்.

ஆவணம் - நுகர்ச்சிப் பொருள்கள் நிறைந்த இடவரிசை என்று பொருள்தரும் சொல். ஆ - நுகர் பொருள். அணம் வரிசைப் பொருள் தரும் ஒரு பெயர்ச் சொல்லீறு. பொட்டணம், கட்டணம் என்பவற்றில் நோக்குக. வரிசை- முறை-ஒழுங்கு- ஒரு பொருள் பல சொற்கள்.

விலைகூய்ப்...... போலி மகளிர்- கூய், புணர்ந்து, வித்தும், என்னும் எச்ச வினைச்சொற்கள் போலி மகளிரைச் சார்வதால், அவரின் வினையாளுமை உணர்தல் பாலது. பொலிவுடல் அழகுமிக்க உடல், இனி, புணர்ச்சிக்கே உரிய உடல் என்றும் பொருள்படும். பொலிவு- புணர்ச்சி. மகளிர் என்னுஞ் சொல் பொதுவில் சிறந்த பெண்டிரைக் குறித்தாலும், சிறப்பில் மணமாகிய பெண்டிரையே மனைவியரையே- குறிக்கும் உயர்ந்த சொல். போலி மகளிர் என்னுமிடத்து, மனைவியர்போல் உரிமையாட்டுக்குரிய பெண்டிர் என்றும் சிறப்புப் பொருள் தரும்.

புறம் புனை...... புரை நாகரிகம் - வெளிப்புறப் பார்வைக்குச் சிறப்பாகவும் மயக்கந் தருமாறும் விளங்கி உள்ளே பயன் ஒன்றுமில்லாத நாகரிகம். புரை-உள்ளீடற்ற தொளை.

நாகரிகம்- நகர வொழுக்கம் புற நடை மாறுபாடு.

அறம் பிறழ் வினைகள் - நெறிமுறைகள் மாறுபட்ட செயல்கள்.

அறம் - ஆறு (வகுமுறை, நெறிமுறை, ஒழுக்க முறை) என்னும் அடியாகப் பிறந்த சொல். அகத்தானும் புறத்தானும் சான்றோர்களால் வகுக்கப்பெற்ற ஒழுகலாறு. கடைப்பிடி அலவே சிறந்தன: இவை அல்லவே சிறந்தன.

ஒவத்தெரு முதல் அறம் பிறழ் வினைகள் ஈறாக நகரக் காட்சிகளையும், மாட்சிகளையும் கூறி வந்த தந்தையார், தம் மகன் அவற்றின் அழகிலும், புனைவிலும், நடையிலும் உள்ளமும் உடலும் பறி கொடுத்துத் தன் கல்வியைக் கெடுத்துக் கொள்ளக் கூடாது என்கின்ற குறிப்புத் தோன்ற, ‘மகனே! இவையல்ல சிறந்தன' என்பார். ,

சிறந்தன அல்லவே என்னும் உரை மரபை மாற்றி, 'அல்லவே சிறந்தன' என்று உறுதிப்பொருள் தோன்றவும், 'நீ கவனிக்க வேண்டிய, சிறந்த பொருள் வேறொன்று உண்டு' அஃது இசைபெறு கல்வி- என்னும் குறிப்புப் பொருள் தோன்றவும் கூறினார் என்க.

இசைபெறு கல்வி- புகழைப் பெறுவிக்கின்ற கல்வி. இது காறும் கூறியவை கடலில் உள்ள சுழல்கள் போலும் நகரில் உள்ள சூழல்கள். இனிமேற்றான், நீ அங்குப்போய் எந்த நோக்கத்துடன் இருக்க வேண்டும் என்பதைச் சொல்லப் புகுகின்றேன்’ என்று கூறியவர் கல்வி கற்க வேண்டும் என்றுகூட நேரிடையாகச் சொல்லாமல், ‘புகழைத் தருகின்ற கல்வியைத்தான் நீ கற்கவேண்டும்; ஆனால் அதைவிட உயர்ந்த ஒழுக்கத்தை நீ எப்பொழுதும் கைவிடல் கூடாது’ என்று இரண்டையும் இணைத்துப் பேசுவதுடன், கல்வியை விட ஒழுக்கத்தை உயர்வு படுத்தியும் பேசுகின்றார்.

“புகழ்பெற வைப்பது கல்வி என்று ஆனாலும் அந்தப் புகழைத் தாங்குவதற்கு உடல் வேண்டும்; அந்த உடலில் உயிர் வேண்டும். அந்த் உடலும் உயிரும் இணைந்து இயங்கித்தான் புகழாகிய கல்வியைத் தாங்குதல் வேண்டும். நலமில்லாத உடல், அல்லது உயிரில்லாத உடல் கல்வியைப் பெற்றுப் பயன் என்னையோ, ஆகலின் உடலும் உயிரும் ஒருமிக்க நலத்துடன் இயங்கவேண்டும்; அதற்கு ஒழுக்கம் வேண்டும். “ஒழுக்கமில்லாத உடல் உயிரில்லாத உடம்பு ஒழுக்கத்தை உயிர் என்று சான்றோர் கூறியது இதன் பொருட்டே ஆகும். எனவே, புகழ் தருகின்ற கல்வி கற்பதற்காகச் செல்கின்ற நீ, அதனை மட்டும் நினைந்து கொண்டிராமல், ஒழுக்கம் அதனினும் உயர்ந்தது,ஏர்ந்தது, சிறந்தது என்றும் நினைந்து கொண்டிருக்க வேண்டும்” என்று விளக்கச் சுருக்கமாகத் தன் மகனிடம் கூற விரும்பியவர், 'இசைபெறு கல்வியின் ஏர்ந்தன்று ஒழுங்கே’என்று கூறுகின்றார். ஏர்ந்தன்று-ஏர்ந்தது. ஏர்தல்-உயர்தல்.

வசை பெறு வாழ்வின் மாய்கை நன்றே - வசைபெற வாழ்வதைவிட மாய்ந்து போவது நல்லது.

“இசை தருவது கல்வி; வசை வராமல் காப்பது ஒழுக்கம் இசை பெறுவதைவிட வசை வராமற் காக்கும் ஒழுக்க வாழ்க்கையே ஒருவர்க்கு வேண்டும். அவ்வாறு இன்றி, வசை பெறும்படி ஒருவன் ஒழுக்கத்தைக் கைவிட்டு விட்டு, வாழ்வதைவிட அவன் மாய்ந்து போவது நல்லது. நீயும் இசைபெறும் கல்வியுடன் திரும்பி வருவதைவிட வசை தராத ஒழுக்கத்துடன் வருவதைத்தான் நான் மிகுதியும் விரும்புகின்றேன். அவ்வாறு ஒரு வேலை ஒழுக்கமுடன் திரும்பி வராத சூழ்நிலை உனக்கு வருமானால் இங்கு வராமல் அங்கேயே மாய்ந்து போதல் நல்லது” என்று உறுதிப்படப் பேசினார் என்க.

தசைபெறல் அன்றே வாழ்க்கை - உடலுக்கு ஊன் அமையப் பெறுதலன்று வாழ்க்கை.

தசையுடன் ... சிறப்பென்றோரே! - உடல், தசை வரப்பெறுதலன்று வாழ்க்கை என்றவர், மீண்டுத் தசையுடன்... என்று தொடங்குவதால் நல்ல உடலும் வேண்டும் என்றார். ஆனால் அந்த நல்ல உடலுடன் அறிவும் உள்ள உணர்வும் வேண்டும் என்றார். இனி, அவற்றுடன், அவையெல்லாவற்றையும் ஒளிபெறச் செய்யும் உண்மையும் வேண்டும் என்றார். இவையனைத்தும் நிறைந்து நிற்கும் உடல்தான் நல்லுடல் என்றும், அவ்வுடலைத் தாங்கும் உயிர்தான் நல்லுயிர் என்றும், அதுதான் அவ்வுடலைப் பெற்ற அவ்வுயிர்க்குச் சிறப்பு என்றும் கூறுகின்றார் என்க.

இனி, உயிருண்மையும், உயிர்த் தன்மையும் உயிரியக்க முறையும், அவ்வுயிர் உலகொடு பொருந்தி உடலெடுக்கும் பான்மையும், எம் உலகியல் நூறின், மெய்யதிகாரத்தில் கண்டு தெளிக.

உண்கையும்...கல்வி - உண்பனவற்றையும், உடுப்பனவற்றையும் வாழ்க்கைக்குற்ற பிற பொருள்களையும் பெறுகின்ற வழி முறைகளைக் கற்றுக் கொள்வதற்கன்று, கல்வி.

இப்பாட்டின் கருப்பொருளே இவ் விறுதி மூன்றடிகளில்தான் அடங்கியுள்ளது.

“கல்வி என்பது உண்பதற்கும் உடுப்பதற்கும் வாழ்வதற்கும் உரிய பொருள்களைப் பெறுவதற்குரிய அறிவு என்று கூறும் பொருளியல் கருத்தினாரை மறுத்துக் கூறியதாகும் இக்கூற்று. அவற்றைக் கற்பது கல்வியாகாது. அது தெரிந்து கொள்ளுதல் learning என்பதே ஆகும். கல்வி என்பது வேறு. தெரிந்து கொள்ளுதல் வேறு.

ஆங்கிலத்தில் கல்வி என்பதற்குரிய நேரிய சொல் Education என்பது. Education என்பதற்கு development of character or mental Power என்பதே பொருள்.

எனவே, Education (கல்வி என்பது) வேறு; Learning (தெரிந்து கொள்ளுதல் என்பது) வேறு.

கல்வி என்னும் தூய தமிழ்ச்சொல் தோண்டுதல் என்று பொருள்படும் உயர்ந்த சொல். இதற்குரிய 'வித்துவம்' என்னும் வித் ( Vid) என்னும் சொல்லடியாகப் பிறந்த வடசொல்கூடத் தெரிந்து கொள்ளுதல் என்னும் பொருளினதே. Vid-to Know, இதிலிருந்துதான் தெரிந்து கொள்ளுதல் என்று பொருள்படும். வித்தை, வேதம் முதலிய வட சொற்கள் தோன்றும். Vid- என்னும் வடசொற்குரிய தமிழ் மூலமும் விழி என்பதே. Know என்னும் கிரேக்கச் சொல்லுக்குரிய தமிழ் மூலமும் 'காண்’ என்பது கண்டு அறிவதே Knowing என்பது புறநிலையறிவு அது, (பாவாணரின் வடமொழி வரலாறு காண்க)

ஆனால், கல்வி அஃதன்று.

மனத்தின் அடியில் புதைந்து கிடக்கின்ற கருத்துகள், நிலத்துள் புதைந்து கிடக்கும் செல்வங்களைப்போல் விலைமதிப்பற்றவை ஆகும். அவற்றை அகழ்ந்து அறிந்து கொள்வதே கல்வியாகும்.

‘எனவே வெறும் உலகியல் தெரிவுகளை மட்டும் தெரிந்து கொள்வதைக் கல்வி என்று நினையாதே'. என்று கூறுகின்றவர், கல்வியென்பதற்குரிய உண்மைப் பொருளை அடுத்துவரும் அடியால் விளங்குகின்றார், அது.

முட்டறப் பொருந்திய உட்புலன் முனைப்பு- என்கின்றார். முட்டற தடைகள் அற. பொருந்திய-ஏற்கனவே உயிரின் துய்ப்பினால் வந்து பொருந்தியுள்ளி. “உட்புலன், அகவறிவுப் புலன்” முனைப்பு- அதன் முனைந்து நிற்கும் தன்மைகளாகும்.

உயிரின் துய்த்தல் நுகர்வால் பெறும் உண்மையறிவை உணர்ந்து கொள்வதே கல்வியாகும் என்னும் விளக்கத்தையும் பிற அறிவு நிலைகளையும், எம் உலகியல் நூறின் வாழ்வதிகாரத்தில் கண்டு தெளிக.

இனி, அறிவமை கழகத்து அன்றன்றாயும் நெறிமுறைகளைப் பயின்று கொள்ளும் பொருட்டு எம்மைப் பிரிதலுறும் மகனே உண்கையும் உடுக்கையும் உறுபொருள் பெறுகையும் கற்றுக் கொள்வதன்று கல்வி, அது, நம் உயிரியக்கத் தடைகள் நீங்கும்படி, முன்னரே வந்து பொருந்திய உட்புலனறிவுகளைக் கண்டு கொள்வதற்கும், அவற்றினின்று மேலும் மேலும் அகழ்ந்து உண்மைகளை அறிவதற்கும் உரிய ஓர் உணர்வு முனைப்பைப் பெறுதற்கான ஒர் உத்தி என்று கண்டு கொள்க’ என்று தந்தை தன் மகனுக்கு அறிவுறுத்துவதாகும் இப்ப பாட்டு.

இது, பொதுவியல் என் திணையும், பொருண் மொழிக் காஞ்சி என் துறையுமாகும்.