நூறாசிரியம்/உயிர்கொல் நெஞ்சம்

விக்கிமூலம் இலிருந்து
39 உயிர்கொல் நெஞ்சம்

வடுவின் றெடுத்த மார்பி னோனே
நெடுவின் றிமிலிய தோளி னோனே
குழலென் கரிந்த குஞ்சியும் பரந்த
ஒளிவார் நெற்றியும் வளிவார்ந் தெழுந்த
கொழுவின் கூரிய மூக்குமன் னோனே 5
அருளுமிழ் கண்ணோ டணைந்தடி வடிந்த
கரிமயிர் தடவிய விரிசெவி யோனே
அரியிதழ் வாயின் அடுக்கிய நகையும்
மலையிழித் திறங்கிய கலைபுண ரருவி
அலையெனப் புடைத்த அருட்கையு மாகி 10
மயர்வறப் பொலிந்த மல்லல் மேனியோற்
குயிர்கொல் நெஞ்சம் எவன்குடி கொண்டதே!

பொழிப்பு:

குற்றமில்லாமல் உயர்ந்து விளங்கும் மார்பினன்; நீண்டு புடைத் தெழுந்த தோளினன்; குழல்போலும் சுருண்ட தலைமயிரும், அகன்று, ஒளி ஒழுகும் நெற்றியும், ஒழுங்குபட்ட உயிர்ப்பை உடையதால், எடுத்து நின்ற, கொழுமுனையைப் போலும் கூர்மையுடைய மூக்கும் வாய்க்கப்பெற்றவன் ; வேற்றுமையற்று அன்பைப் பொழிகின்ற கண்களை அணைந்து, அடிநோக்கி அழகுற அமைந்ததும், குறுஞ் சுருள் மயிர் தடவிக் கொண்டுள்ளதுமாகிய விரிந்த செவியினன்; பருக்கைக் கல்போலும் இதழ்களையுடைய வாயில் வரிசையுற அமைந்த பற்களும்; மலையினின்று தவழ்ந்து விழும் கலையுணர்வைத் தோற்றுவிக்கும் அருவியின் அலைகள் போலும் புடைத்து நின்ற அருள் தோய்ந்த கைகளும் உடையவனாகி, மாறுபாடு அற்ற வகையில் அழகுற விளங்கும் வளப்பம் மிகுந்த மேனியோன் இவனுக்கு என் உயிரைக் கொல்லுகின்ற நெஞ்சம் மட்டும் எங்ஙனம் கூடி கொண்டதோ!

விரிப்பு:

இப்பாடல் புறத்துறையைச் சார்ந்தது. தன்னை விரும்பாத தலைவனுடைய காதலுக்கு ஏங்கிய தலைவியொருத்தி, அவன் உடலழகை வியந்து உள்ளத்தைக் கடிந்து கூறியதாகும் இப்பாட்டு.

ஓவிய அமைப்புக்கு மாறுபாடுறாத வகையில் அமைந்த உயர்ந்து பரந்த மார்பும், நீண்டு பருத்த தோளும், சுருண்ட அழகிய தலைமயிரும், அகன்று ஒளிபொருந்திய நெற்றியும், எடுத்து நின்ற கூரிய மூக்கும், அருள் பொழியும் கண்களும், அழகுற வடிந்து வீழ்ந்த செவிகளும், பருத்து ஒளிசார்ந்த இதழ்களும், வரிசையுற அமைந்த பற்களும், வீழ்ந்த நெடிய கைகளும் கொண்டு விளங்கும் அவனுக்குத் தன்னை விரும்பாததும் தன்னுயிரைக் கொல்லுகின்றதுமாகிய நெஞ்சு எப்படி அமைந்ததோ என்று ஏக்கமும் வெறுப்பும் கடுமையும் தோன்றக் கூறினாள் என்க.

வடுவின்று- மாசு மறுவில்லாமல்,

ஆடவன் ஒருவனின் மார்பே காதல் உணர்வு கொண்ட பெண்களை முதலிற் கவர வல்லதாகையின் முதற்கண் மார்பைக் கூறினாள் என்க.

எடுத்த மார்பு -உயர்ந்த மார்பு பரந்து நிற்பதால் பரப்பும் உணர்தலாயிற்று.

மார்பினோன் - மார்பை உடையவன்.

நெடுவின் திமிலிய தோளினன் - நீண்டு திமில்போலும் புடைத்து நின்ற தோள்களை யுடையவன்.

தழுவலுக்குரிய தோள்களாதலின் அவற்றின் எடுப்பை அடுத்துக்கூறினாள் என்க.

திமில் என்னும் பெயரடியாகப் பிறந்த வினைச் சொல் திமிலிய,

குழல் என் சுரிந்த- குழல் போலும் சுருண்ட

குஞ்சி -ஆண்களின் தலை மயிர்

பரந்த ஒளிவார் நெற்றி- அகன்று ஒளி சிந்தும் நெற்றி.

அகன்று ஒளி பொருந்திய நெற்றி அறிவுணர்வுக்கு அடையாளமா கலின் அதனை வியந்தாள் என்றபடி

வளி வளர்தல் - காற்று ஒழுங்குபட இயங்குதல்.

மூச்சுக்காற்று ஒழுங்குபட இயங்குதல் உடல் நலமுள்ளவர்க்கே அமையுமாகவின், அவனின் நலம் பொருந்திய உடலை நயந்தாள் என்க. மூச்சுக்காற்று ஒழுங்குபட இயங்கியதை அறிய ஏதுவாய் நின்றது அவனது எடுத்து நின்று கூரியதாய் விளங்கும் மூக்கு ஆகலின் அதன் வழி அவன் மூச்சியக்கமும், அதன் வழி அவன் உடல் நலமும் கண்டு கொள்ளப்பட்டன. கொழு - ஏர்க்கொழு, மூக்குக்கு ஏர்க்கொழுவை உவமித்தது அதன் முப்பட்டை உருவமும் கூர்மையும் பற்றி.

மூக்கும் மன்னோன்: மூக்கும் பொருந்தியவன். மன்னுதல் பொருந்தியிருத்தல்.

அருளுமிழ் கண் - உயிர்களிடத்து வேற்றுமையின்றி அன்புப் பார்வை வீசும் கண்கள்.

அத்தகையவன் என்மேல் அப்பார்வையை வீசினால் என்ன என்று ஏக்கம் புலப்படப் புலந்த உணர்வுடன் கூறினாள் என்க.

கண்ணோடு அணைந்து அடிவடிந்து சுரிமயிர் தடவிய விரிசெவி - கண்களின் புற ஓரத்தொடு இணைந்து நின்று, அடிப்பகுதி நீள இறங்கிய வாறு, காதுப்புறம் சுருண்ட மயிர் தடவிக் கொண்டிருக்க விரிந்துள்ள செவிகள். செவிகளை இவ்வாறு நீள வண்ணித்தது, தன் காதல் மொழிகளைக் கேளாத அவற்றிற்கு இத்துணை அழகோ, எனப் புலந்து ஏங்கியது. தன் மொழி கேளாக்காதுகள் விரிந்து நின்று என் பயன் என்று வெறுத்ததுமாம். அரியிதழ் பருக்கைக் கல் போலும் பருத்து செவ்விய மெல்லொளி படர்ந்த இதழ்.

நீரான் உருட்டப்பெற்று, அதன் மேற்புறத்துச் சொர சொரப்பாய பகுதிகள் அரிக்கப்பெற்று, உருண்டு திரண்டதால் பருக்கைக் கல் அரியென்னும் பெயரினதாயிற்று. இனி, அரி என்பது, அழகு என்றும் செவ்வரி என்றும் பொருள் பெற்று, அழகிய, சிவந்த கோடுகள் சார்ந்த இதழ் என்றும் பொருள் தருமாம். ஆயினும் உருவும் ஒளியும் நோக்க முன்பொருளே பொருத்தமும், பின் பொருளை அளவியதும் ஆகும் என்க.

அடுக்கிய நகை - வரிசையுற அடுக்கப் பெற்றாற் போலும் எயிறு. நகை ஆகு பெயராய் இடத்தைக் குறித்து, எயிறு என்னும் பொருள் பெற்றது.

இனி, எயிறு என்பது தோன்றா நின்று, நகை என்பதைப் புன்னகை யவிழ்க்கும் வாய் என்றலும் ஆம்.

மலை யிழிந்து இறங்கிய -மலையினின்று நழுவி இறங்கிய

கலையுணர் அருவி - கலையுணர்ச்சியைப் புணர்த்துவிக்கும் அருவி.

அருவி அலை எனப்புடைத்த - அருவி நீரின் அலைகள் எனப் பருத்து நின்ற. கடல் அலை மிகவும் புடைப்பு உடையதாகலின் அலை உவமமாயிற்று.

அருட் கை - அருள்கின்ற கை, 'அருள்கின்ற கை என்பொருட்டு அருளாத தென்னையோ?' என்று ஏக்கமும் எரியும் தோன்றக் குறித்தாள் என்க.

பெண் ஒருத்திக்குக் கை அருளுதல் அணைத்தல் ஆம்

மயர்வு அற -வேற்றுமை அற்றவாறு, உருவ அமைப்புக்கு மாறுபடாதபடி

பொலிந்த - அழகுற விளங்கிய,

மல்லல் மேனி - வளப்பம் வலிமையும் உடைய உடல்,

‘உடல்’ என்னாது மேனி என்றது உயிருள்ள உடலாகையான், உயிர்மேன் நின்றது மேனி. இனி, மேனி என்பது சிறப்பாக உடலின் மேற் பொலிவையும் குறிக்கும்.

உயிர்கொல் நெஞ்சம் - உயிரைக் கொல்லுகின்ற நெஞ்சம். தன் காதலை ஏற்காத நெஞ்சு, தன் உயிரைக் கொன்று உடலைப் பிணமாக்கும் நெஞ்சாதலின் உயிர் கொல் நெஞ்சு என்றாள்.

எவன் குடி கொண்டதே - எவ்வாறு குடிகொண்டதோ அறிகிலேனே என்றபடி

இத்துணை அழகிய உடல் நலம் வாய்த்தவனுக்கு என்னை விரும்பும் நெஞ்சு வாய்க்கவில்லையே என்று ஏங்கினாள் என்க.

“உடலழகுக் கேற்றவாறு உள்ளழகு வாயாத நெஞ்சம் ஆகலின், அதனை அவன் விரும்பிக் குடிவைத்துக் கொண்டதாக இருத்தல் இயலாது. அதுதானே வந்து குடியேறி இருத்தல் வேண்டும்" என்னும் கருத்துத் தோன்றக் குடி கொண்டது என்றாள் என்க.

எவன்:- என்னுஞ் சொல் எங்கிருந்து என்று இடப்பொருள் தோன்றவும் பொருள்படும்.

பெண்மை நயக்கும் ஆண்மைச் சிறப்பைக் குறித்ததாகும் இப்பாடல்.

இது, பாடாண் திணையும், பெருந்திணை என் துறையுமாம்.