உள்ளடக்கத்துக்குச் செல்

நூறாசிரியம்/உழையா துண்மர்

விக்கிமூலம் இலிருந்து

91உழையாதுண்மர்


செடிகொடி மரனுஞ் சிப்பியுஞ் சங்குத்
துடியல் எறும்புத் தும்பியும் புள்ளும்
விலங்கு மென்றிவை வினைசெய் துயிர்த்தலோடு
இலங்கு மாந்தர்க் கியற்றலு மாக
இருகை யிருகால் இருகண் ணிருசெவி 5
ஒருவாய் ஒருவயி றுற்றவ ரெல்லாந்
தாந்தாந் தேடலுந் தாந்தமைப் புரத்தலும்
ஏந்துநீ ருலகத் தியற்கை யாதலின்
உழையா துண்மர் உருக்குறைந் திரிந்து
பிழைப்போர் தம்மின் பிழைப்பார் வாரே!10

பொழிப்பு:

செடியே கொடியே மரமே என்னும் நிலைத்திணைகளும், சிப்பியும் சங்கும் என நீந்துவனவாகவும், துடியலும் எறும்பும் என ஊர்வனவாகவும், தும்பியும் புள்ளும் எனப் பறப்பனவாகவும் விலங்கு என நடப்பனவாகவும் உள்ள இயங்கு திணைகளும் ஆகிய இருவகை உயிரிகளும் செயற்பட்டுத் தரம் உயிர்வாழ்தலொடும் விளங்குகின்ற மக்களுக்கு உதவுகின்றனவாகவும் இருப்ப, இருகண்ணும் இருசெவியும் ஒருவாயும் ஒரு வயிறும் கொண்டுள்ள மக்களெல்லாம் தாமே தமக்குத் தேவையானவற்றை முயன்று தேடலும் தம்மைக் காத்துக் கொள்ளுதலும் நீரால் ஏந்தப் பெற்றிருக்கும் இவ்வுலகத்து இயற்கையாய் இருத்தலின் உழைக்காமேலே உண்டு வாழ்பவர்கள் உடல் கூனிக் குறுகி இரந்து வாழ்வோரைவிட இழிவான பிழைப்பில் நிறைவுறு வோராவர்.

விரிப்பு:

இப்பாடல் புறப்பொருள் சார்ந்தது.

நிலைத்தினையும், இயங்குதினையுள் நீந்துவனவும், ஊர்வனவும் பறப்பனவும், நடப்பனவும் ஆகிய பல்வகை அஃறிணை உயிரிகளும் தாந்தாம் வினைப்பட்டு வாழ்தலோடு, மாந்தப் பிறப்பினருக்கும் துணையாகி உதவுகின்றனவாக, மாத்தரும் முயற்சியாற் பொருள்தேடியும் தற்காத்துக் கொண்டும் வாழ்கின்றனர். இவ்வாறிருக்கும் உலக இயற்கைக்கு மாறாக மாந்தராய்ப் பிறந்தும்.உழைக்காமலே உண்டு வாழ்பவர்கள், மானமின்றிக்

கூனிக் குறுகி இரந்து வாழ்வாரினும் இழிவான பிழைப்பினர் என அவரை இடித்துரைப்பதாக அமைந்தது இப்பாட்டு.

செடிகொடி மானும் செடியும் கொடியும் மரமும்,

செடி குத்துச் செடியும் பெருஞ்செடியும் எனவும், கொடி நீரில் படர்வதும் நிலத்தில் படர்வதும் கொம்பில் இவர்வதும் எனவும், மரம் குறுமரமும் பெருமரமும் என்பதோடு புறக்காழனவும் அகக்காழனவும் எனவும் பலவகைப் படுத்தலறிக!

சிப்பியும் சங்கும் - சிப்பி, சங்கு முதலான நீர்வாழ்வனவாகிய இயங்குதினை உயிரிகள்.

துடியல் எறும்பும்- துடியலும் எறும்பும்.

துடியலும் எனும்பும் முதலாயின ஊர்வனவாகிய இயங்கு திணை உயிரிகள்.

துடியலாவது ஒருவகை எறும்பு.

உடுக்குப் போலும் உடலமைப்புடைய ஒருவகை ஊரி என்ப.

தும்பியும் புள்ளும் - வண்டும் பறவையும்.

வண்டும் பறவையும் முதலாயின பறப்பனவாகிய இயங்கு திணைஉயிரிகள்

விலங்கு - விலங்குகள்,

விலங்குகள் நடப்பின வகையைச் சேர்ந்த இயங்குவன உயிரிகள்.

என்று இவை - என்று சொல்லப்படும் உயிரிகளும்

வினை செய்து உயிர்த்தலோடு-தாந்தாம் செயற்பட்டு உயிர் வாழ்வதோடு,

நிலைத்திணை உயிரிகளின் செயற்பாடுகளாவன காற்றை உறிஞ்சி வளியிடுதலும், நீரையுறிஞ்சி ஆவியாக விடுதலும் பூத்தலும் காய்த்தலும் பிறவுமாம்

இயங்குதினை உயிரிகளின் செயற்பாடு வெளிப்படை

இலங்கு மாந்தர்க்கு இயற்றலும் ஆக விளங்குகின்ற மக்களுக்கு உதவுவனவும் ஆக

விளங்குதலாவது மேற்கூறிய ஓரறிவு உயிரிகள் முதல் ஐயறிவு உயிரிகள் ஈறான அனைத்து உயிரிகளிலும் மேம்பட்ட ஆறாவதான மனப்புலனையுடைமை.

அஃறிணை உயிரிகளெல்லாம் மாந்தர்க்கு உதவியாகச் செயற்படுதலும் பயன்தருதலும் வெளிப்படை

இருகை ..... இருகால் ... உற்றவரெல்லாம். இரு கையும் இரு காலும் இரு கண்ணும் இரு செவியும் ஒரு வாயும் ஒரு வயிறும் உற்றவரான மாந்தரெல்லாம்.

அஃறிணை உயிரிகள் பற்பலவும் கையற்றனவாகவும், ஒருகை உடையனவாகவும், கையே காலாகக் கொள்வனவாகவும், நாற்காலும், அறுகாலும், எண்காலும் பல காலும் உடையனவாகவும் காலில்லாதன வாகவும்

வேறு வேறு உருவும் வேறு வேறு இயற்கையும்

நூறு நூறு ஆயிரம் இயல்பினவாக இருத்தலின் மாந்தரை இவ்வாறு சுட்டினார் எனக் கொள்க!

தாம் தாம் தேடலும் தாம் தமை. இயற்கை யாதலின் - தத்தமக்குத் தேவையானவற்றைத் தாந்தாமே தேடிக் கொள்ளுதலும் தாமே தம்மைக் காத்துக் கொள்ளுதலும் நீரால் ஏந்தப் பெற்ற இவ்வுலகத்தின் இயற்கையாக இருத்தலினால்,

உலகம் நீரால் சூழப்பெற்றிருப்பது அது நீரில் மிதப்பதுபோல் காட்சியளித்தலின் ஏந்து நீர் உலகம் என்றார். நீரை ஏந்தியுள்ள உலகம் எனினுமாம்.

உழையாது உண்மர் - உழைக்காமலே வாளா இருந்து உண்போர்.

உருக்குறைந்து இரந்து பிழைப்போர் தம்மின் - தம் உருவம் கூனிக்குறுகி இரந்து உயிர் வாழ்வோரினும்,

உருக்குறைதலாவது மானமின்றி மற்றையோரிடத்து உடல்கூனிக் குறுகி நிற்றல். பிழைப்போர் - உயிர் வாழ்வோர்.

பிழைப்பு ஆர்வார் இழிவான பிழைப்பில் நிறைவோர் ஆவர்.

ஆர்தல் நிறைதல்

இப்பாடல் பொதுவியல் என்னும் புறத்தினையும் பொருள்மொழிக் காஞ்சி எனும் துறையுமாம்.