உள்ளடக்கத்துக்குச் செல்

நூறாசிரியம்/உளக்கனல்

விக்கிமூலம் இலிருந்து

90 உளக்கனல்


மருளாய் வாழி நெஞ்சே! அருளற
இருள்தோய் வழக்கின் இனநலந் தீய்க்கும்
நெறியலர் செல்வக் குறியெதிர் நினைந்து
பொறியின் மாக்கள் புன்செயல் விஞ்சும்
பெற்றிய ராகிப் பெரியோர்க் குழத்தல்
முற்றிய கொள்கை முழுநலந் தேக்கும்
நீரவர் உளக்கனல் நில்லா(து)
ஊரவர் திரளும் நாளுமொன் றுண்டே!

(ஞா.தேவநேயனார் அண்ணாமலைப் பல்கலைக் கழகத்தினின்றும் விலக்கப்பெற்ற காலை நெஞ்சு தேர்வுற எழுதி விடுத்த பாவோலை)

பொழிப்பு:

பெரும, வாழி! நெஞ்சம் மயங்கற்க அருளுணர்வின்றி ஆணவம் பொருந்திய வழக்கத்தினை யொட்டி, இனநலத்தை அழிப்பவரான கீழ்மக்கள் செல்வமாகிய கைமாறு கருதி, மனப்பொறியில்லாத விலங்குகளின் இழிசெயலினும் மேம்பட்ட தீவினை புரியுந் தன்மையுடைவராகி, அரிய பணி செய்யும் பெரியோர்க்குத் துன்பம் விளைத்தலால், திண்ணிய கொள்கைத் திறத்தினால் மக்களுக்கு முழுமையும் நலஞ்சேர்க்கும் தன்மையினர்ர் உள்ளத்தின் கண் கனலுகின்ற தீ அடங்காது; ஆதலின் நாட்டு மக்களெல்லாம் திரண்டெழும் நாளும் ஒன்று உண்டு!

விரிப்பு:

இப்பாடல் புறப்பொருள் சார்ந்தது.

பாவலரேறு, தம் ஆசிரியப் பெருந்தகையான மொழி ஞாயிறு பாவாணர் அவர்கள் அருந்தமிழ்ப் பெரும்பணியாற்றச் சென்ற அண்ணாமலை பல்கலைக் கழகத்தினின்றும் பதவி விலக்கம் செய்யப் பெற்ற காலை, அதுபற்றி அவர் மனங் கலங்காதிருக்க வென்று தெளிவுறுத்தி எழுதி விடுத்தது இப்பாட்டு

அருளுணர்வின்றியும் ஆணவத்தாலும், கைம்மாறு கருதி இனநலம் அழிக்கும் கடையர், விலங்கின் செயலையும் விஞ்சுமாறு பெரியோர்ப் பிழைத்துத் துன்பமிழைத்தலால், கொள்கை உரவோர் நெஞ்சத்துப் பற்றிய

நெருப்பு வாளாவிராது; நாட்டவர் திரண்டெழுந்து போராடும் நாளும் ஒன்று உண்டு என்று இப்பாட்டின் மூலம் தெளிவுறுத்துகிறார் பாவலரேறு.

வாழி நெஞ்சே மருளாய் பெரும வாழி மனம் மயங்கற்க!

பெரும என்பது தோன்றா எழுவாய், மருள் மயக்கம். நெஞ்சு மருளாயாய் வாழி எனினுமாம்.

அருள்அற - அருளுணர்வு இன்றி.

யாருக்குந் தீங்கு செய்யாமையாகிய அருளுணர்வு இன்றி என்றவாறு:

இருள் தோய் வழக்கின்-ஆணவம் பொருத்திய வழக்கத்தினை யொட்டி

தாம் யாது நினைப்பினுஞ் செய்யலாம் என்னுஞ் செருக்கான போக்கையொட்டி இருள்-ஆணவம்.

இனநலந் தீய்க்கும் - ஒருவரது தனிநலத்தை மாய்ப்பது மட்டுமல்லாது அவரால் கிட்டும் பொதுநலத்தையும் அழிப்பவரான

தந்நலத்தின் பொருட்டு இனநலத்தையும் அழிப்பவர் என்றார்.

நெறியவர் - நெறிப்பட ஒழுகாது தாம் மேவன செய்யும் கீழ்மக்கள்.

செல்வக் குறியெதிர் நினைந்து - செல்வமாகிய கைம்மாறு கருதி

குறியெதிர்வு கைம்மாறு

பொறியில் மாக்கள் - மணப்பொறி யில்லாத விலங்குகள். ஐம்பொறிகள் பெற்றிருப்பினும் ஆறறிவதுவே அவற்றொடு மனனே என்றாங்குச் சிறப்புடையதான மனப்பொறியில்லாமையால் பொறியில் மாக்கள் என்றார்.

மாக்கள் மக்கள் வடிவிலிருக்கும் விலங்குகள். அல்லது ஐயறிவே பெற்ற மக்கட் பிறப்பினர்.

புன்செயல் விஞ்சும் பெற்றியர்ஆகி - இழிசெயலினும் மேம்பட்ட தீவினை புரியுந் தன்மையுடையவராகி.

பெற்றி தன்மை

பெரியோர்க்கு உழத்தல் - பிறரால் செய்தற்கு அரிய நற்பணியைச் செய்பவரான பெரியோர்க்குத் துன்பம் விளைவித்தல்.

பெரியார் பிறரால் செய்தற்கு அரியன செய்வார்.

செயற்கு அரிய செய்வார்பெரியர்’ என்றார் , மொழிநூன் மூதறிஞர் பாவாணர் மேற்கொண்ட அரும்பணியாவது "செந்தமிழ்ச் சொற்பியல் அகரமுதலி" உருவாக்கும் பெரும் பணியாம்.

உழத்தல் துன்புறுத்தல், துன்புறுத்தலின் என்றவாறு,

முற்றிய கொள்கை முழுநலந் தேக்கும் நீரவர் - திண்ணிய கொள்கைத் திறத்தால் மக்களுக்கு முழுமையும் நலஞ்சேர்க்கும் இயல்புடையார்.

முற்றிய- முதிர்ந்த செறிந்த,

முழுநலத் தேக்குதலாவது தந்நலம் கருதாதும் சிறிதேனும் தமக்கெனக் கொள்ளாதும் தம் பணியின் பயன் பொதுநலத்திற்கே சேர்த்தல், நீரவர்தன்மையாளர்.

உளக்கனல் நில்லாது - உள்ளத்தே துயரத்தால் மூண்ட நெருப்பு அத்துயரஞ் செய்தாரை அழிக்காமல் அணையாது.

ஊரவர் - ஊர் தோறுமுள்ள நாட்டு மக்கள்.

திரளும் - ஒன்று கூடி எழும்; எழுந்து போராடும்.

நாளும் ஒன்று உண்டு - ஒரு நாள் உள்ளது.

நாளும் என்றது காலத்தில் அண்மைபற்றி விரைவில் வருக என்பதாம். இப்பாடலிற் கண்டாங்குத் தென்மொழி அன்பர்கள் ஊர் ஊர் எங்கனும் பாவாணர்க்காகக் குரல் கொடுத்ததும், உலகத் தமிழ்க் கழகம் நிறுவப் பெற்றுப் பன்னூறு கிளைகள் பரப்பிப் பாவாணர்க்காக முழங்கியதும் ஊர்வலங்கள், கருத்தரங்குகள், மாநாடுகளெல்லாம் நடைபெற்றதும் உண்மை நிகழ்ச்சிகளாய் நிறைவேறின.

இப்பாடல் பொதுவியல் என்னும் புறத்தினையும் புதுவகைத் துறையுமாம்.

"https://ta.wikisource.org/w/index.php?title=நூறாசிரியம்/உளக்கனல்&oldid=1251304" இலிருந்து மீள்விக்கப்பட்டது