உள்ளடக்கத்துக்குச் செல்

நூறாசிரியம்/எய்ப்பில் வைப்பு!

விக்கிமூலம் இலிருந்து

89 எய்ப்பில் வைப்பு


வானத் தாயினுங் குன்றத் தாயினும்
னேற் றிலங்கும் ஆழிய தாயினும்
முயல்வின் கொண்மர் பொருள்வேட் டோரே!
பயன்றெரி கல்லாப் பாடில மாக்கள்
அணிமைத் தாயினும் அஃதறி யாரே! 5
குளகு கொறிக்கும் பாசுடல் நெடும்புழு
இணாநறுந் தேறல் அறியாதா கின்றே!
கெடிறின மெச்சம் விழுங்குவ தன்றி
முத்தம் அயிறல் முப்பொழு திலையே!
வித்தும் வீசலின் விளைகொள் ளாதே! 10
அத்தகு விளைவும் அடிப்பற் றாதே!
எப்பொருள் மருங்கும் அப்புடைப் பயனே!
ஒடவிழ் செய்ய ஒளிதரு மணிப்போல்
தேடரு கல்வி வளனே செவ்விது!
ஆகலின் சான்றோ ரனப்பொதிந் தனரே! 15
ஓதுக ஓதுக; உன்னி ஓதுக
ஏதமிற் செல்வஞ் சேதமிற் காக்க
ஏமச் செப்புழை இடுதல் போன்றே
எய்ப்பின் வைப்பாய் இருத்தினர் பொருளே!
உய்யல் வேண்டுவர். ஊன்றிக் 20
கொய்யல் முறையே; கொடுக்கலு மாங்கே:

பொழிப்பு:

வானத்தே இருப்பதாயினும், மலையின் கண் இருப்பதாயினும், மீன்கள் வாழுதலில்லாத கடலின் ஆழத்தே இருப்பதாயினும் ஒரு பொருளை விரும்பியோர் தம் முயற்சியினால் அப் பொருளைக் கைக்கொள்வர். பொருளின் பயனை யறியாத முயற்சியற்ற மாக்கள் தம் அருகிலேயே இருப்பினும் அதனை அறியமாட்டார். இலையைக் கடித்துண்ணும் பசுமையான உடலையுடைய நீண்ட புழு பூவில் இருக்கும் நறுவிய தேனை அறியாததாய் இருக்கின்றது. மீன்வகை யெல்லாம் எச்சிலை விழங்குவதல்லாமல் முத்தினை உட்கொள்ளுதல் எக்காலத்தும் இல்லை. வீசியெறியப்படின் முளைக்காது; ஒரோவழி முளைத்திருந்தாலும் அது வேர்விடாது. எப்பொருணிடத்தும் முயற்சியின் அளவிற்கேற்பவே பயன்கிட்டும்; சிப்பியின் ஓடு உடைந்தவழி ஒளிவீசும் முத்துப் போல் தேடுதற்கு அரிய கல்விச் செல்வமே சிறந்தது; ஆதலினாலே சான்றோர் பெருமக்கள் அக்கல்விச் செல்வத்தைத் உள்ளத்தினுள் நிறைத்துக் கொண்டனர். கற்க, கற்க ஆராய்ந்து கற்க! குற்றமந்த ல்வத்தை அழியாமல் காத்தற்கு அதனைக் காப்புப் பெட்டகத்துள் இட்டுவைத்தல் போல இளைத்த காலத்து உதவும் போருளாகக் கல்வியை நெஞ்சகத்து இருத்திக் கொண்டனர். துன்பத்தினின்று தப்ப விரும்புவோர் மனம் தோய்ந்து கல்வியை கொய்துகொள்க! பிறர்க்கும் வழங்குக!

விரிப்பு

இப்பாடல் புறப் பொருள் சார்ந்தது.

ஒரு பொருளை விரும்புவோர் அஃது எத்துணைச் சேய்மையிலிருப்பினும் அருமுயற்சியார் பெற்றதாயினும் முயன்று கைக்கொள்வர். பொருளின் பயனறியாத சோம்பேறிகள் அரிய பொருள் அண்மையிலேயே இருப்பினும் அதனைக் கொள்ளார்; எளிய முயற்சியாற் செய்யப்பெறும் சிறந்த பயனைக் கொடாது; எப்பொருளிடத்தும் நாம் மேற்கொள்ளும் முயற்சிக்கேற்பவே பயனைப் பெறவியலும் தேடுதற்கு அரிய கல்வியாகிய செல்வயே சிறந்தது; ஆகையாலேயே சான்றோர் கல்வியை உள்ளத்தே பொதிந்து கொண்டனர்; ஈடேற விரும்புவோர் கல்வியை உளந்தோய்ந்து கற்க, பிறரையும் கற்பிக்க என்று உலக மக்களுக்கு அறிவுறுத்துவது இப்பாட்டு

வானத்து ஆயினும் ..... வானத்தே இருப்பதாயினும்

வான வெளியில் இயங்கும் பிறகோள்களிலோ செயற்கைக் கோள்களிலோ, ஊர்திகளிலே இருக்கும் பொருளாயினும் என்றவாறு.அன்றிக் கதிரவன் வெப்பமும், விண்கற்களும் , மழைமுகிலும் போல்வன எனினுமாம்.

குன்றத்து ஆயினும்-மலையின்கண் இருப்பதாயினும் மீன் அற்று இலங்கும் ஆழியது ஆயினும் மீன்கள் வாழுதல் இல்லாத கடலின் ஆழத்தே இருப்பதாயினும்

முயல்வின் கொண்மர் பொருள்வேட்டோரே - பொருளை விரும்பியோர் முயன்று கைக்கொள்வர்.

பயன் தெரிகு அல்லாப் பாடு இல் மாக்கள் - பொருளின் பயனை அறிய மாட்டாத முயற்சியற்ற மாக்கள்

நன்முயற்சிகளை மேற்கொண்டு வாழ்தலே சிறந்த மாந்த வாழ்க்கை யாதலின் அத்தகைய முயற்சியில்லாதாரை மாக்கள் என்றார். பாடு முயற்சி மாக்கள்-விலங்குகள்.

அணிமைத்து ஆயினும் அஃது அறியாரே-அண்மையில் இருப்பதாயினும் அதனை அறியார்.

குளகு கொறிக்கும் பாசுடல் நெடும்புழு -இலையைக் கடித்து உண்ணும் பசுமையான நீண்ட உடலையுடைய புழு,

கொறித்தலாவது ஒவ்வொன்றாகக் கடித்துத் தின்னுதல். கடித்தலைக் குறிக்கும் கறித்தல் என்னுஞ் சொல் சிறிய பொருள் வேறுபாட்டின் பொருட்டுக் கொறித்தல் என்று ஆகியுள்ளது.

குளகு இலை.

இணர்நறும் தேறல் அறியாது ஆகின்று - பூவில் உள்ள நறுவிய தேனை அறியாததாக இருக்கின்றது.

இணர் மலர் நறும் சிறந்த தேறல் தேன்.

கெடிறு இனம் எச்சம் ..... முப்பொழுது இலையே மீனினம் எச்சிலை. விழுங்குவது அல்லாமல் முத்தை உண்பது முக்காலத்திலும் இல்லை.

முக்காலத்திலும் இல்லை யென்றது எக்காலத்திலும் இல்லை என்றவாறு, முற்றுமை தொக்கது.

கெடிறு-மீன். எச்சம் எச்சில், அயிறல் உண்ணுதல்,

வித்தும் வீசலின் விளைகொள்ளதே - வீசியெறியப் பட்டால் வித்தும் முளைக்காது.

முயன்று மண்ணை அகழ்ந்து ஊன்றி நீர்விட்டாலே முளைக்கின்ற வித்து முயற்சியின்றி மேலோட்டமாக வீசியெறியப்பட்டால் முளைக்காது என்பது முயற்சி பற்றியே ஈண்டுக் கூறப்பெறுதலின் இயற்கைச் சூழல் வாய்த்துழி முளைத்தல் ஈண்டுப் பொருளன்றாம்.

அத்தகு விளைவும் அடிப்பற்றாதே. ஒரோ வழி அவ்வித்து முளைத்தாலும் வேர்விடாது.

எப்பொருள் மருங்கும் அப்புடைப் பயனே எப்பொருளிடத்தும் முயற்சியினிடத்துப் பயனே கிட்டும்.

மருங்கு புடை என்பன இடம் பொருள் பற்றியன.

ஒடு அவிழ்செய்ய ஒளிதரு மணிப்போல் - சிப்பியின் ஒடு உடைந்தக்கால் ஒளிவீசுகின்ற முத்துப்போல்.

ஒடு. சிப்பியின் கூடு, அவிழ் செய்ய உடைய மணி தொண்மணிகளுள் ஒன்றான முத்து.

தேடு அரு கல்வி வளனே சிறந்தது - தேடுதற்கு அரிய கல்வியாகிய செல்வமே தலையாயது.

கல்வி என்று ஈண்டுப் பொதுப்படக் கூறினும் அஃது உலகியற் கல்வி போலாது சான்றோர் உளம்பொதிந்த மெய்ம்மை சான்ற கல்வியைச் சிறப்பாகக் குறித்தலால் அது தேடுதற்கு அருமையுடைமை கண்கூடு.

ஆகலின் சான்றோர்.அனப் பொதிந்தனரே - கல்விச் செல்வமே விழுமியது ஆகலின் சான்றோர் பெருமக்கள் அக் கல்வித் துறைகளை உள்ளத்தே பொதிந்து கொண்டனர்.

அன.அத்தகைய கல்வியின் துறைகள். பொதிந்தனர். மனம்பற்றினர்.

ஒதுக ஒதுக உன்னி ஓதுக - கற்க கற்க மனம் ஒன்றிக் கற்க,

ஒதுதலாவது பலுக்கிப் படித்தல்; ஈண்டுக் கற்க என்னும் அளவில் நின்றது. உன்னி-மனம் ஒன்றி.

ஏதம் இல் செல்வம் சேதம் இல் காக்க ஏமச்செப்புழை இடுதல் போல - குற்றமற்ற செல்வத்தை அழியாமற் காக்கும் பொருட்டு அதனைக் காப்புப் பெட்டகத்தில் இட்டுவைத்தல் போல

சலத்தால் பொருள் செய்தே மார்த்தல் பசுமட்

கலத்துணிர் பெய்திரீஇ யற்று

என்றலின் சேதமின்றிக் காக்கப்பட வேண்டிய செல்வம் ஏதமில் செல்வம் எனப்பட்டது.

ஏதம் குற்றம் சேதம் அழிவு ஏமம்-காப்பு: செப்பு பெட்டகம்

எப்பின் வைப்பாய் இருத்தினர் பொருளே - இளைப்புக் காலத்து உதவும் பொருளாகக் கல்விச் செல்வத்தை மனத்தில் இருத்திக் கொண்டனர்.

வைப்பு காத்துவைக்கும் பொருள்.

உய்யல் வேண்டுவோர் ஊன்றிக் கொய்யல் முறையே துன்பத்தினின்றுத் தப்பிக்க விரும்புவோர் மனம் தோய்ந்து கல்வியை முறையாகக் கொய்து கொள்க!

முறையே கொய்தலாவது தக்காரை யடுத்தும் தகுநூல் தேர்ந்தும் படிமுறையாய்ப் பயிலுதல் பூக்கொய்து நிறைத்தல் போல் கல்வியைக் கொள்க என்பார் கொய்தல் என்றார். கொய்தலாவது மென்மையாகப் பறித்தல்.

உய்யல் - துன்பத்தினின்றும் தப்புதல்- ஈடேறுதல்.

கொடுக்கலும் ஆங்கே - அவ்வாறே கல்வியைப் பிறர்க்குங் கற்பிக்க!

கல்வியைப் பயிலுதற்கு அவாவுதல் போல் பிறர்க்குக் கற்பிக்கவும் அவாவுக என்பதாம்.

இப்பாடல் பொதுவியல் என்னும் புறத்திணையும் பொருண்மொழிக் காஞ்சி என்னுந் துறையுமாம்.