நூறாசிரியம்/பெட்பொழி நெஞ்சே

விக்கிமூலம் இலிருந்து

88 பெட்பொழி நெஞ்சே!


முதுசெம் பரத்தை முகங்குத் திட்ட
கொடுமுண் புரையக் கடுங்கண் நோக்கும்
ஊற்றிவாய் வெண்பூ வுன்மத் தன்காய்
மேற்றிகழ் குறுமுண் ணேய்முகக் கடுப்பும்
கருங்கற் பிளவைக் கரட்டுரை யிறுப்பும் 5
சுருங்கை யுளமும் முருங்கை யுரனும்
பெற்றியார்ப் பெரியோ ராக்கும்
பெற்றிய பொருளில் பெட்பொழி நெஞ்சே!

பொழிப்பு:

முதிய செம்பரத்தைச் செடியினது முனைகூர்மைப்பட்டு வளைந்த முள்போலும் வன்மைவாய்ந்த கண்ணின் பார்வையும், ஊற்றியைப் போலும் வடிவமைப்புக் கொண்ட வெண்ணிறப் பூவையுடைய உன்மத்தன்காய் மேற்கானப்படும் சிறுமுள் போலும் முகத்தின்கண் கடுகடுப்பும், கருங்கற் பிளவு போலும் வாயினின்றும் வெளிப்படும் ஒழுங்கற்ற பேச்சும், சுருங்கை போலும் குறுகிய உள்ளமும் முருங்கை மரத்தைப் போலும் புல்லிய உடல் வலிமையும் கொண்ட இயல்புடையாரையும் பெரியோராய் உயர்த்திக் காட்டுகின்ற தன்மை வாய்ந்த பொருள்களைத் தேடுவதில் நெஞ்சத்துக் கொண்ட விருப்பத்தைக் கைவிடுவாயாக!

விரிப்பு:

இப்பாட்டு அகப் பொருள் சார்ந்தது.

தலைவியினிடத்துக் காதல் கொண்ட தலைவன் அவளை வரைந்து கொள்ளாது, பொருள்தேடும் பொருட்டுப் பிரிந்து செல்லக் கருதினானாக. அவன் பிரிவைத் தடுக்கும் நோக்கொடு தோழி அவனுக்குப் பொருளின் இழிவை உணர்த்துவதாக அமைந்தது இப்பாட்டு.

பொலிவிலாத் தோற்றமும், நயமில்லாப் பேச்சும் குறுகிய மனப்பான்மையும் வலிமையற்ற உடலுங் கொண்டாரையும் பெரியோர் என்னுமாறு உயர்த்திக்காட்டும் செல்வத்தை விரும்பற்க என்கிறாள் தோழி. அவள் கூறுவதன் நோக்கம் பிரிந்து செல்வதைத் தவிர்த்துக் தலைவியை வரைந்து கொள்ளவற்புறுத்துவதாம்.

முது செம்பரத்தை ...... கடுங்கண் நோக்கம் - முதிய செம்பரத்தைச் செடியினது முனை கூர்மைப்பட்டு வளைந்த முள்போலும் கொடுமை வாய்ந்த கண்ணின் பார்வையும்.

செம்பரத்தைச் செடியின் முள்ளென்றது அச்செடி முதிர்ந்த விடத்து அதன் கிளைகளில் முரடுபட்டுக் காணப்படும் கணுக்களையேயாம். ஆதலினாற்றான் முதுசெம்பரத்தை என்றார்.

முகம்முனை. குத்திட்ட கூர்மைப்பட்ட கொடு வளைவு, முண்- முள்,

ஊற்றி வாய் வெண்ழ ..... முகக் கடுப்பும்- ஊற்றியைப் போலும் வெண்ணிறப் பூவையுடைய உன்மத்தங்காயின் மேல் காணப்படும் சிறிய முள்போலும் முகத்தின் கடுகடுப்பும்.

உன்மத்தம் பூவுக்கு ஊற்றியை உவமையாகக் கூறினார். ஊற்றியாவது, நீர்மங்களைக் குடுவையில் ஊற்றுவதற்குப் பயன்படுத்தப்படும் வாயகன்றதும் அடியில் குழாயுடையதுமான கருவி (Funnel)

வாய், ஏய் என்பன உவம உருபுகள்.

கருங்கல் பிளவைக் கரட்டு உரைஇறுப்பும் - கருங்கல்லின் பிளவு போலும் வாயினின்றும் வெளிப்படும் ஒழுங்கற்ற பேச்சும்.

பிளவை பிளவு. கரடு ஒழுங்கற்றது. உரையிறுப்பு பேச்சு.

சுருங்கை உளமும் -சுருங்கையைப் போலும் குறுகிய மனமும்.

சுருங்கை- இடுக்கு வழி. சுருங்கையின் வேறு வடிவமே சுரங்கம். மனம்-மனப்பான்மை.

முரங்கை உரனும் - முருங்கை மரம் போலும் புல்லிய வலிமையும்.

வலிமையின்மையைக் குறிக்க உள்ளீடற்ற முருங்கை மரத்தை உவமையாகக் கூறினார். இவ்வாறு கூறுவது உலக வழக்குமாம்.

பெற்றியார் கொண்ட தன்மையினரை. மேற்கூறியாங்குப் பார்வையும், முகத்தோற்றமும், உரையிறுப்பும் மனப்பான்மையும் உடல் வலிமையும் கொண்ட எனக் கூட்டுக.

பெரியோர் ஆக்கும்- பெருமை வாய்ந்தவராக உயர்த்திக் காட்டும்.

பொருளல்லவரைப் பொருளாகச் செய்யும் பொருள்' என்றார் திருவள்ளுவர்.

பெற்றிய பொருளில் நெஞ்சு பெட்பு ஒழி தன்மை வாய்ந்தனவாகிய பொருள்களைத் தேடுவதில் கொண்ட மன விருப்பத்தைக் தவிர்ப்பாயாக

பெற்றியதன்மையுடையனவாய பெட்பு விருப்பம்.

இப்பாடல் பாலை என்னும் அகத்திணையும் தோழி பொருளிழிவு உரைத்து வரைவுகடாதல் என்னும் துறையுமாம்