நூறாசிரியம்/தகவிலார் நோன்பு

விக்கிமூலம் இல் இருந்து
Jump to navigation Jump to search

87 தகவிலார் நோன்பு


நூலோர் அழுந்திய உயர்வழிப் பொருந்தி
மேலோர் தாமென் றுட்பெற வுட்கி
முனிவுங் காய்வும் மூளா நேர்மையும்
இனியவர்க் கன்பும் இன்னார்க் கருளும்
ஓர்ங்கால் மனமும் மெய்யும் ஒடுங்கிக் 5
கூர்ந்தவ வொழுக்கி னேர்தலை நோற்புங்
கொண்டோ ராகி ஊண்டுயில் மறந்து
மண்டிய கல்வி மருவிலர்க் கீந்த
தீமையில் அறமும் பொருளும் இன்பமும்
ஓங்கிய புகழின் உயர்த்தோ 10
தாங்கிய செல்வத் தகவிலார் நோன்யே!

பொழிப்பு:

விழுமிய நூல்களைப் பயின்றுணர்ந்த அறிஞர் பெருமக்கள் கடைப்பிடித்த உயரிய வாழ்க்கை நெறியைப் பொருந்தி, மேலோர் என்று தம்மையும் உட்படுத்திக் கொள்ளுதற்கு அஞ்சி, சினமும் வெறுப்பும் தோன்றாத செம்மையும். தமக்கு இனியரான தம்மைச் சார்ந்தாருக்கு அன்பும், மாறான பகைவர்கட்கு அருளும், ஆராய்ந்து பார்க்குமிடத்து உள்ளமும் உடலும் ஒடுங்கப் பெற்றுச் சிறந்த தவவொழுக்கத்திற்கு நேரிய மிக்கப் பொறுமையும் கொண்டவராகி, உண்டியும் உறக்கமுங் கொள்ளாது தம்மிடத்து நிறைத்த கல்வியைப் பகைவர்க்குக்குங் கற்பித்த குற்றமற்ற அறமும் பொருளும் இன்பமும் சிறந்த புகழைவிட மேலானதோ செல்வத்தை சுமந்திருக்கும், தகுதியில்லாதவர்கள் நோற்கும் நோன்பின் பயன்?

விரிப்பு:

இப்பாடல் புறப்பொருள் சார்ந்தது. செல்வப் பெருக்கமுடைய, தகுதியற்றவர் சிலர் நோன்பு என்னும் பெயரில் ஆரவாரித்தல் கண்டு, சான்றாண்மையுடையார் தொண்டு வாழ்க்கையாற் பெறும் புகழைவிட அத் தகுதியிலாச் செல்வர்கள் கடைப் பிடிக்கும் நோன்பின் பயன் உயர்ந்ததாகாது என்று எடுத்துரைப்பது இப்பாட்டு.

நூலோர் அழுந்திய உயர்வழிப் பொருந்தி - விழுமிய நூல்களைப் பயின்று உணர்ந்த அறிஞர் பெருமக்கள் கடைப்பிடித்த உயரிய வாழ்க்கை நெறியில் பொருந்தி,

அழுந்திய -கடைப்பிடியாகக் கொண்ட

மேலோர் தாம் என்று உள்பெற உட்கி - மேன்மக்கள் என்று தம்மையும் அவ் அறிஞராரொடு உள்ளடக்கிக் கூறிக் கொள்ளுதற்கு அஞ்சி.

மேற்கூறிய அறிஞர்கள் வரிசையில் தம்மையும் இணைத்துக் கொள்ளுதற்கு நாணத்தால் அஞ்சி என்றவாறு.

உட்கி - அஞ்சி.

முனிவும் காய்வும் மூளா நேர்மையும் - சினமும் வெறுப்பும் தோன்றாத செம்மையும்.

சினமும் வெறுப்பும் நடுநிலை பிறழ்தற்கு ஏதுவாம் ஆதலின் அவை தோன்றாத நேர்மை என்றார்.

முனிவு-சினம். காய்வு வெறுப்பு. மூளாத தோன்றாத நேர்மை - செம்மை, நடுநிலை.

இனியார்க்கு அன்பும் - தம்மைச் சார்ந்தவர்கட்கு அன்பும். எயன் அன்பாவது தொடர்புடையார்மாட்டு நிகழும் மனநெகிழ்ச்சி பவாகலின் இவ்வாறு கூறினார்.

இன்னார்க்கு அருளும் - தமக்கு இனியவர் அல்லாதவரான பகைவர்மாட்டு அருளும்,

அனைவர் மீதும் நிகழும் அன்பின் விரிவே அருளாதலின், இவ்வாறு கூறப்பட்டது.

ஓர்ங்கால் மனமும் ..... நோற்பும் - ஆராய்ந்து பார்க்குமிடத்து உள்ளமும் உடலும் ஒடுங்கப் பெற்றுச் சிறந்த தவ ஒழுக்கத்திற்குச் சமமான மிகுந்த பொறுமையும்.

இது எத்தகையது என்று இன்னொன்றொனொடு ஒப்பு நோக்கிக் கூறுதலின் ஓர்ங்கால் என்றார். ஓர்தல் - ஆராய்தல்.

கொண்டோர் ஆகி - உடையவராகி,

மேற்கூறிய அன்பும் அருளும் பொறுமையும் உடையாராகி என்றவாறு.

ஊண்துயில் மறந்து - உண்டியும் உறக்கமும் மறக்கப் பெற்று.

உயிர் வாழ்தற்குரிய கட்டாயத் தேவைகள் ஆதலின் உண்டியும் உறக்கமும் கூறினார். பிறவெல்லாம் தாமே யடங்கும்.

மண்டிய கல்வி- தம்மிடத்து நிறைத்துக் கொண்ட கல்வியை மண்டுதல்திணிதல்,

மருவிலர்க்கு ஈந்த - தம்மொடு ஒன்றாதார்க்கும் இரக்கத்தான் வழங்கி

பகைவராயினும் அவருந் திருந்த வேண்டும் என்னும் இரக்க நெஞ்சால் அறிவுறுத்துதலின் ஈந்த என்றார். மருவிலர்-ஒன்னார்; பகைவர்.

தீமைஇல் - குற்றமற்ற

அறமும் பொருளும் இன்பமும் ஓங்கிய புகழின்-அறம் பொருள் இன்பங்கள் என்னும் பெருவாழ்வுக்குரிய கடைப்பிடிகளால் சிறந்த புகழைவிட

தாங்கிய செல்வத் தகவிலர் நோன்பு - செல்வத்தைச் சுமந்திருப்போரான தகுதியற்றவர்கள் கடைப்பிடிக்கும் நோன்பு,

செல்வப் பெருக்கம் புலப்படுமாறு நோன்பு என ஆரவாரித்தலின் தாங்கிய செல்வம் ஈண்டுக் குறிக்கப்பட வேண்டியதாயிற்று.

உயர்த்தோ - உயர்ந்த தாகுமோ?

உயர்ந்ததாகாது என்றவாறு - ஓகாரம் எதிர்மறைப் பொருட்டு.இப்பாடல் பொதுவியல் என்னும் புத்தினையும் பொருண்மொழிக் காஞ்சி என்னும் துறையுமாம்.