உள்ளடக்கத்துக்குச் செல்

நூறாசிரியம்/காமரா சென்னும்

விக்கிமூலம் இலிருந்து


85 கடமை மாமலை


காமரா சென்னுங் கடமை மாமலை,
தாமிணை காணா அரசியல் தந்தை,
தலைமையை ஆக்கிய தகுபெருந் தலைவன்,
குலைவுறா நெஞ்சின் கோதிலா அமைச்சன்
மக்களுக் குழைத்த மாபெருந் தொண்டன் 5
சிக்கலை யவிழ்க்குஞ் செயற்சீ ராளன்,
தமிழகத் தலைமையை வடவர்கள் ஒப்பும்
அமைவுக் குயர்த்திய ஆளுமை வல்லோன்,
எண்ணமும் பேச்சும் செயலோ டிணைந்த
 உண்மை மாந்தனுக் கொருபே ருவமை, 10
தாழ்ச்சி நிலைக்குத் தனைத்தாழ்த் தாத
காழ்ச்செயல் மறவன், கரும வீரன்,
உலகம் வியக்க அரசியல் வானில்
நிலவிய நேர்மைக் கொள்கை நெடியவன்,
செல்வரைச் செலுத்தி ஏழையர்க் காக்கிய 15
சொல்வரை யிட்ட சோர்விலா வினைஞன்,
புகழுரை விரும்பாப் பொறுமையின் குன்றம்,
இகழுரை யில்லா ஆட்சியின் ஏந்தல்,
நல்லர சாட்சிக்குத் தன்னை நாட்டிய
 இல்லறந் துறந்த நல்லறத் துறவி, 20
ஏழையர்க் குதவிய எளிமை வாழ்வினன்,
ஊழையும் உப்பக்கம் ஒட்டிய திறலோன்,
இலவயக் கல்வி எங்கும் நிறுவிய
வலவன் இவனை வாழ்த்துக நெஞ்சே!

பொழிப்பு:

காமராசர் எனப்படும் இயற்பெயரை உடையவனும் தன் கடமையை உணர்ந்து அதனைச் செய்து நிறைவேற்றுதற்கண் பெருமலைடோல் உய்ர்ந்து விளங்கியவனுமான பெருமகன், மக்களுள் யாரும் தமக்கு ஒப்பாக வைத்து எண்ணிப் பார்க்க இயலாதவாறு உயர்ந்த அரசியல் தந்தை; நாட்டின் தலைவரை உருவாக்கிய தகுதி வாய்ந்த பெருமை மிக்க தலைவன்; இடுக்கண் வந்தவிடத்தும் சிதறாத மனவுறுதி யுடையவன் குற்றமற்ற அமைச்சன்; மக்களுக்காகப் பாடுபட்ட மிகப்பெருந் தொண்டன் கருத்துச் சிக்கல்களை ஆராய்ந்து தீர்வு காணும் செயலில் சிறப்புடையோன்;

தமிழ்நாட்டின் தலைமையை வடநாட்டவரும் ஒப்புக்கொள்ளும் நிலைக்கு அதனை உயர்த்திய ஆளுமைத்திறம் வாய்ந்தோன் எண்ணமும் சொல்லும் செயலொடு பொருந்திய உண்மை மாந்தனுக்கு ஒரு தனி எடுத்துக்காட்டாக விளங்கியோன்; இழிவான நிலைகளில் தன்னை இறக்கிக் கொள்ளாத, கடுஞ்செயல்களையுஞ் செய்து முடிக்கும் தறுகணாளன்; கருமவீரன் என்று சிறப்பிக்கப் பெற்றோன்;

உலக மக்கள் வியப்புறுமாறு அரசியல் என்னும் வானத்தின்கண் நிலவிய, நேர்மையைக் கடைப்பிடித்த உயர்ந்தோன்; செல்வர்களை ஏவி அவர்தம் செல்வத்தை ஏழையர்க்கு உதவச் செய்த, சொற்களை அளவோடு பேசும், மனம் சோர்வடையாத வினையாளன், புகழுரையை விரும்பாத, பொறுமையின் குன்றம் போன்றோன்; பழிக்கப்படாத ஆட்சியை நடத்திய தலைவன் நல்ல அரசாட்சிக்கெனத் தன்னை ஈடுபடுத்திக் கொண்ட இல்லறத்தை மேற்கொள்ளாதே துறந்த, நல்ல அறநெறியில் நடக்கும் துறவோன்; ஏழை மக்களுள் முன்னேற அவர்க்கு உதவி புரிந்த எளிமையான வாழ்வினன்; ஊழ்வினையைப் புறங்காட்டியோடச் செய்த ஆள்வினையாளன்; பள்ளிகளில் இலவயக் கல்வியைத் தமிழ்நாடெங்கனுந் தொடங்கிய திறப்பாடுடையான் இப் பெருமகனை வாழ்த்துக நெஞ்சமே!

விரிப்பு:

இப்பாடல் புறப்பொருள் சார்ந்தது.

இந்திய விடுதலைப் போராட்டத் தலைவர்களுள் ஒருவராகவும் தமிழ்நாட்டின் மேனாள் முதலமைச்சராகவும் அனைத்திந்திய பேராயக் கட்சியின் தலைவராகவும் விளங்கிய கருமவீரர் காமராசர் மறைவுற்ற காலை அவர்தம் அரும் பணிகளையும் பெருஞ் சிறப்புகளையும் நினைவு கூர்ந்து பாடியது இப்பாட்டு.

காமராசு என்னும் - காமராசர் (காமராஜ்) எனப்படும் இயற்பெயரை யுடையவனும்

கடமை மாமலை -கடமையை உணர்ந்து அதனைச் செய்து நிறைவேற்றுதற்கண் பெருமலைபோல் உயர்ந்து விளங்கியவனுமான பெருமகன்.

தாம்இணை கானா அரசியல் தந்தை -மக்களுள் யாரும் தமக்கு ஒப்பாக வைத்து எண்ணிப் பார்க்க இயலாதவாறு உயர்ந்த அரசியல் தந்தை;

அரசியல் தந்தை என்றது அரசியல் அமைப்பை உருவாக்கும் ஆற்றலாளன் என்பது கருதி.

தலைமையை ஆக்கும் தகுபெரும் தலைவன் - அரசியலைத் தலைமை தாங்கி நடத்த வல்லாரை உருவாக்கும் தகுதி வாய்ந்த பெருந்தலைவன்.

ஆட்சியமைப்பிலும் கட்சியமைப்பிலும் பல்வேறு படிநிலைகளில் இருந்து செயல்படத் தக்க தலைவர்களை இனங்கண்டும், பயிற்சியளித்தும் அமர்த்தும் தகுதியுடையான் என்றார். இவ்வாறு தலைவர்களை ஆக்குந் திறத்தான் பெருந்தலைவன் என்றவாறு,

பண்டிதர் சவகர்லால் மறைவுக்குப் பிறகு இலால் பகதூர் சாத்திரி தலைமையமைச்சரானதும், அவ்வாட்சிக் காலத்திலேயே இந்திரா அம்மையார் அமைச்சராக அமர்த்தப் பெற்றமையும், சாத்திரியார் மறைவுக்குப் பின் இந்திரா அம்மையார் தலைமையமைச்சரானதும் இன்ன பிறவும் காமராசர் தலைவரை ஆக்கும் தலைவர் என்பதை மெய்ப்பிக்கும் சான்றுகளாம்.

மக்களுக்கு உழைத்த மாபெரும் தொண்டன் - மக்களுக்காக உழைத்த மிகப்பெருந் தொண்டன்.

கோயிலுக்கும் மடத்துக்கும் குருமார்க்குந் தொண்டு செய்தலின்றி மக்களுக்காகத் தொண்டு செய்தவன் என்றலின் மாபெருந் தொண்டன் என்றார்.

சிக்கலை அவிழ்க்கும் செயல் சீராளன் - கருத்துச் சிக்கல்களை ஆராய்ந்து தீர்வு காணும் செயலில் சிறப்புடையோன்.

சிக்கல் என்னுஞ் சொல் நூலில் விழுஞ் சிக்கலையே முதற்பொருளாகக் கொண்டதாகலின் அதற்கேற்ப அவிழ்க்கும் என்றார்.

தமிழகத் தலைமையை ...... வல்லோன் - தமிழ்நாட்டினின்றுஞ் செல்லும் தலைமைத் திறம் வாய்ந்தாரை வட நாட்டவர்களும் மறுக்க வியலாது ஏற்றுக்கொள்ளும் அளவுக்கு உயர்த்திய ஆளுமைத் திறம் வாய்ந்தோன்.

தமிழ்நாட்டவரின் தலைமையை ஏற்றுக் கொள்ள வடநாட்டவர்கள் இயல்பாக இசையார் எனினும் அவர்களும் மறுக்க வியலாது ஒப்புமாறு ஆளுமைத் திறத்தால் உயர்த்தினான் என்க:

மூத்த தலைவர்கள் ஆட்சிப் பதவியைத் துறந்து கட்சிக்குத் தொண்டாற்ற முன்வரவேண்டும் என காமராசர் கொண்டுவந்த திட்டம் பண்டிதர் சவகர்லால் தலைமையமைச்சராக இருந்த ஞான்றே ஏற்றுக்கொள்ளப்பட்டு கா (K) திட்டம் என்னும் பெயரில் செயலுக்கு கொண்டுவரப்பட்டமையும், காமராசர் அனைத்திந்திய பேராயக் கட்சியின் தலைவராக அமர்த்தப்பட்டமையும், காமராசரிடத்தே பயிற்சி பெற்ற சி.சுப்பிரமணியம், இரா. வெங்கட்டராமன் முதலானோர் நடுவணரசில் பொறுப்பான பதவிகளில் அமர்த்தப் பெற்றமையும் பிறவும் எடுத்துக் காட்டுகளாம்.

எண்ணமும் பேச்சும்...... ஒருபேருவமை - எண்ணமும் பேச்சும் செயலொடு பொருந்திய உண்மையான மாந்தனுக்கு ஒரு தனி உவமையாம்.

எண்ணிய பேசாமையும் பேசியதைச் செயற்படுத்தாமையுமே பெரும்பாலும் மக்களின் இயல்பாகக் காணக்கிடத்தலின் அவ்வாறன்றி எண்ணத்தையும் சொல்லையும் செயல்படுத்திக் காட்டியவன் என்றலின் உண்மை மாந்தனுக்கு ஒரு பேருவமை என்றவாறு.

தாழ்ச்சி நிலைக்குத் தனைத்தாழ்த்தாத காழ்ச்செயல் மறவன்- தன் தகுதிக்குக் குறைவான செயல்களில் ஈடுபட்டுத் தன்னைத் தாழ்த்திக் கொள்ளாத உறுதியான செயல் திறம் வாய்ந்த மாவீரன்,

காழ்ச்செயல்- உறுதியான செயல்.

கருமவீரன் - தனக்கென பயன் கருதாது செயல்படுதலின் கருமவீரன்.

உலகம் வியக்க ...... கொள்கை நெடியவன் - உலகமக்கள் வியப்புறுமாறு அரசியல் என்னும் வானத்தின்கண் நீண்ட காலமாக நிலவிய நேர்மைக் கொள்கைச் சிறப்பால் உயர்ந்தோன்.

செல்வரை ஏவி ஏழையர்க்கு ஆக்கிய- பெருஞ் செல்வர்களை ஏவி விட்டு ஏழை மக்களின் துயர்துடைக்கும் முன்னேற்றப் பணிகளுக்கும் உதவுமாறு ஆற்றுப்படுத்திய,

சொல்வரையிட்ட - சொற்களை அளவாகப் பயன்படுத்திப் சுருக்கமாகப் பேசிய,

சோர்விலா வினைஞன் - தோல்விகளைத் தழுவ நேர்ந்த போதும் சோர்வடையாது செயல்பட்ட வினையாளன்.

புகழ்உரை விரும்பாப் பொறுமையின் குன்றம் - யாரும் தன்னைப் புகழ்ந்து பேசுதலை விரும்பாத பொறுமையின் குன்றம் போன்றவன்.

இகழ்உரை இல்லா ஆட்சியின் ஏந்தல் - யாராலும் பழிக்கப்படாத ஆட்சியை நடத்திய தலைவன்.

நல்அரசாட்சிக்கு.... துறவி- மக்கள் முன்னேற்றங்கருதும் நல்லஅரசாட்சி யின்கண் தன்னை ஈடுபடுத்திக் கொண்ட இல்லறத்தை மேற்கொள்ளாதே துறந்த நல்ல அறநெறியில் நடக்குத் துறவி.

ஏழையர்க்கு உதவிய எளிமை வாழ்வினன் - ஏழைமக்கள் முன்னேற அவர்கட்கு உதவிபுரிந்த எளிமையான வாழ்வினன்.

ஊழையும் உப்பக்கம் ஓட்டிய திறலோன் - ஊழ்வினையையும் புறங்காட்டி யோடச் செய்த ஆற்றலாளன்.

ஊழ்வினையின் பெயரால் காலங்காலமாக மேல்சாதியார்க்கு அடிமைகளாகவும், கல்வியறிவும் பதவி நலமும் அறியாதவராகவும், தலைமுறை தலைமுறையாக வரும் எளிய தொழில்களை வருந்திச் செய்தும் இன்னலுற்ற ஏழைஎளிய மக்கள் கல்வியறிவு பெற்றும் வேலைவாய்ப்புகள் பெற்றும் முன்னைத் தலைகளை முறித்தெறிந்து முன்னேறுதற்கான அடிப்படையாக, இராசாசி தொழிற்கல்வி என்னும் பெயரில் குலக்கல்வித் திட்டத்தைச் சூழ்ச்சியாகக் கொண்டு வந்த போது திட்டமிட்டு அதனை முறித்து வெற்றி கண்டமையின் ஊழையும் உப்பக்கம் ஒட்டிய திறலோன் என்றார்.

இலவயக் கல்வி எங்கும் நிறுவிய வலவன் - இலவயக் கல்வித் திட்டத்தைக் கொண்டுவந்து அதனை செயற்படுத்திய திறமையாளன்.

நெஞ்சே இவனை வாழ்த்துக - நெஞ்சே இவனை வாழ்த்துக,

இப்பாடல் பாடாண்திணை எனும் புறத்தினையும் இயன்மொழி எனும் துறையுமாம்.