நூறாசிரியம்/நல்லோர்க்கும அஃதே

விக்கிமூலம் இலிருந்து

84 நல்லோர்க்கும் அஃதே

புரைமிகு வுரைவாய்ப் புளிங்கள் நாற
முறையறப் பழகும் முழுமாந் தர்க்கும்
இமையா நோக்கின் எல்லை காக்கும்
அமையாத் தோளின் பூட்கை யோர்க்கும்
ஈன்றோ ரிசைதர வூன்றியோர் மணந்து 5
தலைநாட் புல்லிய கழியிள வோர்க்கும்
கைவளை யுகுப்ப விழிநீர் கழல
மெய்கெடத் தணந்த மெல்லிய லார்க்கும்
நெடுநிலை முன்றின் நிலாப்பனி நனைப்ப
அடுகவர் ஒடுங்கும் அளியி னோர்க்கும் 10
இலையா கின்றே இரவே.
நல்லோர்க்கு மஃதே நயந்திசின் நாடே!

பொழிப்பு:

குற்றம் மிகுந்த சொற்களைப் பேசுகின்ற வாயினின்றும் புனித்த கள்ளின் நாற்றம் வெளிப்பட, யாவரிடத்தும் ஒழுங்கின்றிப் பழகும் முட்டாள்களுக்கும், கண்ணிமையாது நோக்குதலால் நாட்டின் எல்லையைக் காத்து நிற்கும் எழுச்சி கொண்ட தோளையுடைய கொள்கை மறவர்கட்கும்; பெற்றோர்தம் ஒப்புதலோடும் தம் உள்ளத்து வரித்தாரை மணந்து முதல்நாளில் கூடிய மிக்க இளமையுடையார்க்கும்; முன் கை வளையலை நெகிழவிடவும், விழி நீர் வெளிப்படுத்தவும் யாக்கை பொலிவிழப்பவும், தம் வாழ்க்கைத் துணைவரைப் பிரிந்த மெல்லிய இயல்பினரான மகளிர்க்கும்; உயர்ந்த கட்டடங்களின் தாழ்வாரத்தே நிலாக்காலத்துப் பணி நனைத்தலால் பொருந்திய சுவரோரத்தில் குளிரால் ஒடுங்கிக் கிடக்கும் இரங்கத் தக்கார்க்கும் இராப்பொழுது இல்லா தொழிகின்றது. நாட்டு நலம் நாடிப் பாடுபடும் சான்றோர்க்கும் அந்நிலையேயாம்.

விரிப்பு:

இப்பாடல் புறப்பொருள் சார்ந்தது.

மன்பதையெல்லாம் செயலொழிந்து துயில்கொள்ளும் இராப் பொழுதில் கண்ணுறக்கங் கொள்ளாதார் இன்னின்னார் எனக் கூறி நாட்டு நலம் விழையும் நல்லோரும் உறங்கார் என்று கூறுவது இப்பாட்டு. நாகரிக மறியா முட்டாள்களுக்கும் நாட்டின் எல்லை காக்கும் வீரர்களுக்கும் அற்றை நாள் மணந்த மணமக்களுக்கும் கணவரைப் பிரிந்த இளம் பெண்டிர்க்கும், குளிரில் நடுங்கும் ஏழைமையாளர்க்கும் இரவில் உறக்கமில்லை; பொது நல விழைவுடைய நன்மக்களுக்கும் அத்தகைய நிலையே என்றவாறு.

புரைமிகு உரைவாய் ..... முழுமாந்தர்க்கும் - குற்றம் மிக்க சொற்களைப் பேசுகின்ற வாயினின்றும் புளித்த கள்ளின் நாற்றம் வீச மற்றையோரிடத்து ஒழுங்குமுறையின்றிப் பழகுகின்ற முட்டாள்களுக்கும்

குற்றமிக்க சொற்களாவன பலுக்கும் முறையானும் பயக்கும் பொருளானும் குளறலும் உளறலுமான குற்றம் மிக்க சொற்கள். குடிமயக்கத்தால் என்ன பேசுகிறோம் என்ற கருத்தில்லாமலே பேசப்படுவன வாகலின் உள்ளீடற்ற சொற்களுமாம். புரை-குற்றம்; உள்ளிடற்ற.

புளிங்கள் - புளித்த கள். நாற தீய நாற்றம் வீச

முறையறப் பழகுதலாவது எவரிடத்தும் அவர்தம் தகுதி நிலைக்குப் பொருந்தாதவாறு பேசியும் நெருங்கியும் உறவாடுதல். முறையற ஒழுங்கு முறையின்றி.

இமையா நோக்கின் ...... பூட்கை யோர்க்கும் - இமைமூடாத கருத்தொடுபட்ட பார்வையால் நாட்டின் எல்லையைக் காக்கின்ற எழுச்சியுற்ற தோளைவுடைய கொள்கை வீரர்க்கும். அமையா-எழுச்சி குன்றாத, பூட்கை கொள்கை.

ஈன்றோர் இசைதர ...... கழிஇள வோர்க்கும்- பெற்றோர் ஒப்புதலளிக்க, தாம் காதல் கொண்டவரையே மணந்து முதல் நாளில் கூடிய மிக்க இளமை வாய்ந்தார்க்கும்.

ஊன்றியோர்-மனத்துப் பதித்த காதலர். தலைநாள்-முதல் நாள். புல்லிய கூடிய, கழி மிகுதி

கைவளை உகுப்ப ...... மெல்லிய லார்க்கும் - முன்கை வளையலை நெகிழவிடவும் கண் நீரை வெளிப்படுத்தவும் மேனி பொலிவிழப்பவும் கணவரைப் பிரிந்து தனித்துறையும் இளம் பெண்டிர்க்கும்.

'நெடுநிலை முன்றில் ...... அளியி னோர்க்கும் - உயர்ந்த கட்டடங்களின் வெளிபுறத் தாழ்வாரத்தே நிலாக்காலத்துப் பணி நனைத்தலால் பொருந்திய சுவரோரத்தில் குளிரால் ஒடுங்கிக் கிடக்கும் இரங்கத் தக்கார்க்கும்;

வாழ வீடின்றிச் சாலையோரங்களில் குடியிருக்கும் மக்கள் இராப்பொழுதில் பூட்டிக் கிடக்கும் ஆங்குள்ள பெருங்கட்டடங்களின் வெளிப்புறத் தாழ்வாரத்தில் மழைக்கும் பனிக்கும் ஒதுங்கி ஒண்டிக்கிடக்கும் காட்சி ஈண்டுக் குறிக்கப்பெற்றுள்ளது.

முன்றில் கட்டடத்தின் வெளிப்புறத் தாழ்வாரம்.

அடுகவர் - நிலத்தொடு பொருந்திய சுவர்; சுவரோரம்

அடுதல் - பொருந்துதல்.

அளி இரங்கத் தக்க நிலை.

இலை ஆகின்றே இரவே - இராப் பொழுது இல்லை ஆகின்றது

ஓய்வும் உறக்கமுங் கொள்ளுதற்கு இடனாய இராப்பொழுது அவ்வாறின்மையின் இராப்பொழுதாய் இல்லாதாயிற்று.

நாடு நயந்திசின் நல்லோர்க்கும் அஃதே - நாட்டு நலன்விழையும் நன் மக்களுக்கும் அவ்வாறு இராப்பொழுது இல்லாதாயிற்று.

நன்றறி வாரிற் கயவர் திருவுடையர்
நெஞ்சத் தவல மிலர்”

- என்றாங்கு நல்லறிவுடைய பெருமக்கள் பொதுநலங் கருதிக் கவலுதவின் உறக்கங் கொள்ளாராயினார்.

இசின் - அசைநிலை. இப்பாடல் பொதுவியல் என்னும் புறத்திணையும் பொருண்மொழிக் காஞ்சி என்னும் துறையுமாம்.