நூறாசிரியம்/குன்றும் மறவார்

விக்கிமூலம் இல் இருந்து
Jump to navigation Jump to search
41 குன்றும் மறவார்

உறக்கத் தெழுந்தழி வுணர்வின சிலவே
உறக்கத் தெழுந்துயிர்ப் பூர்வன சிலவே
கண்படப் புலர்ந்த கனவின சிலவே
எண்படு கனவின் எதிர்வன சிலவே
நினைவுள் உயர்த்தழி நீர்மைய சிலவே 5
நினைவின் விளைதரு நிகழ்வின சிலவே
நிகழ்ச்சியி னுறுபயன் நேர்வன சிலவே
திகழ்தரு பயன்பிறர் தேர்வன சிலவே
பொலிவுறு வினைகளுட் புகழ்வன சிலவே ம
மலிபுகழ் வினைதரும் உயிரின சிலவே 10
உயிரொடும் உடலெனும் - உறவின சிலவே
உயிரொடும் உயிரென உறைவன சிலவே
என்றிவை தேறலின் எம்மின்
குன்றும் மறவார் குழன்மோந் தோரே!

பொழிப்பு:

ஆழ்ந்த உறக்கத்தின் கண்ணே உள்ளத்தின் அடிமனத்துள் எழுந்து, அவ்வுறக்கத்தின் கண்ணாகவே (அங்கேயே) அழிந்துபடுகின்ற உள்ளுணர்வு நிலைகள் சிலவாம் என்க. அவ்வாறு அழிந்தன போக, (உறக்கத்தின் கண்ணாக எழுந்து) அழிந்து படாமல் நின்று, என்றும் நிலைத்த உயிருணர்வைப் பற்றிக் கொண்டு, அதனொடு ஊர்ந்து திரிகின்ற உணர்வு நிலைகள் சிலவாம் என்க . அவ்வுணர்வு நிலைகள் சில வற்றுள்ளும்) அவ்வக்கால், ஆழ்ந்துறங்காது மென்துயிலாகக் கண்மூடும் பொழுதில் புற மனத்துள் தோன்றும் கனா நிலைகள் சிலவாம் என்க: அவ்வாறு தோன்றும் எண்ணப்பெறாத கனவு நிலைகளுள்ளும் எண்ணிக்கைப்படும் கனவுகளுள் நினைவுட் பொருந்துவன சிலவேயாம் என்க, அந்நினைவுட் பொருந்திய வற்றுள்ளும், அங்ஙனே, தோன்றி அங்ஙனே அழிந்தொழியும் தன்மையன சிலவாம் என்க. அவ்வாறு அழிந்தொழியாது நின்ற மிகச்சிலவுள்ளும், நனவின்கண் நிகழ்ச்சியாக விளைவு தரத் தக்கன சிலவாம் என்க. விளைந்துநின்ற நிகழ்ச்சிகளுள்ளும் உற்ற பயனுக்கு உதவுவன சிலவேயாம் என்க. அவ்வாறு பெறும் பயன்களுள்ளும் பிறர்க்கெனப் போய்ச் சேர்கின்றவை மிகச் சிலவாம் என்க: அங்ஙன் அவர்ப் பொருட்டாய்ப் போய்ச் சேரும் பயன் நிலைகளுள், அவர்கள் தம் பொருட்டாய்த் தேர்ந்து பயன்படுத்திக் கொள்ளும் நிலைகளே மிகச்சிலவே என்க. அவ்வாறு தம் பொருட்டாகவும் தேர்வுற்று விளங்கித் தோன்றும் வினை நிலைகளுள், காலத்தானும் இடத்தானும் அழிவுறாது நின்று புகழப் பெறுவன மிகமிகச் சிலவேயாம் என்க. அவ்வாறு புகழ் பெறத்தக்க வினைகளைத் தரும் உயிர்களோ இவ்வுலகத்து ஒரு சிலவே என்க. அச்சிலவுயிர்களுள்ளும் அவை ஈண்டு உயிர்க்கின்ற வரை உறவு கொள்ளும் உடல்களைப் பெறுவன சில என்க. ஆனால், அவ்வாறின்றி, அவ்வுயிர் இங்குமோ வேறெங்குமோ நின்று இயங்குகையில் அவ்வுயிரோடும் பொருந்திய உயிராக நின்று, ஒன்றி உறையுந்தன்மை வாய்ந்த உயிர்கள் மிகமிகவும் சிலவாம் என்னும் இவ்வரிய உண்மைகளை அவர் தேர்ந்து தெளிந்தார் ஆகலின், எம்மின் குழலை மோந்தவர், அக்குழலுக்குரிய எம்மையும் , யாம் வதியும் இக்குன்றையும் என்றும் மறந்துபட மாட்டார் (விரைவில் வருவார்) என்க.

விரிப்பு:

இப்பாடல் அகத்துறையைச் சார்ந்தது.

தலைவன் வரைவிடை வைத்துப் பிரிந்தவிடத்து, அவன் வரவு குறித்து ஐயுற்ற தோழிக்குத் தலைவி, உயிரின் உணர்வு நிலைகள் உணர்த்தித் தன்னொடும் தொடர்புற்ற அவன், வெறும் உடல் உறவினன் அல்லன், உயிருற்வினன்; எனவே தன் குழலை மோந்த உணர்வு நிலைப்பட்டு நிற்கக், காலமும் இடனும் மறவாது வினைமுடித்து உறுதியின் வருவான் என்றது.

உறக்கம் - புறப்புலன்களும் புறமனமும் ஒடுங்கி அடிமனம் ஒன்றே உணர்வினதாகக் கொள்கின்ற அழுந்திய துயில். இந்நிலையைச் சுழுத்தி என்பர் சிவமெய்ந்நூலார். இது கனவு நிலையினும் ஆழ்ந்த ஒடுக்கம் உடையது.

இதன் அடுத்த படிநிலைகளாய பேருறக்கமும் (துரியம்) உயிர்ப் படக்கமும் (துரியதீதம்) மெய்யுணர்வினார்க்கே வாய்ப்பனவாகிய மிகு உணர்வுறக்க நிலைகளாகலின் அவற்றை ஈண்டுக்குறித்திலள் என்க.

உறக்கத்து எழுந்து - புறப்புலனும் புறமனமும் ஒடுங்கிய அவ்வாழ்ந்த உறக்கத்து, அறிவொடு தொடர்பறுந்த அவ்வடிமனத்து விருப்பந்தவிர்த்து, (முன்னைய பிறவிப் படிநிலை வளர்ச்சியான் கிளர்ந்து) உள்நின்ற உயிருணர்வான் எழுந்து தோன்றி.

புற அறிவுத் தொடர்பறுந்த நிலையிற் செயற்படுவது உயிருணர்வொடு பொருந்திய உண்மையறிவாம் என்க. என்னை? 'நுண்ணிய நூல்பல கற்பினும் மற்றுந்தன் உண்மையறிவே மிகும் (குறள் 373) என்றவிடத்துச் சுட்டிய முன்னைய உண்மை அறிவால் என்க. அவ்வறிவுணர்வான் கிளர்ந்தெழுந்து புறமனத்துக்கே புலப்படாத உள்ளுணர்வு நிலைகள் அவை.

அழிஉணர்வின் சிலவே- அவ்வாறெழுந்து அவ்வாறே அழிந்து போகின்ற உள்ளுணர்வு நிலைகள் சிலவாம் என்க.

உறக்கத்தெழுந்து உயிர்ப்பு ஊர்வன சிலவே- அவ்வாறு அங்கேயே அழிந்த உணர்வு நிலைகள் கழிய, அடிமனத்தினின்று வெளிப்போந்து புறமனத்தின் கண்ணே உணர்வின் அளவாக ஊர்ந்து நிற்கும் உணர்வு நிலைகள் சிலவாம் என்க.

இவ்வுணர்வு நிலைகளுட் சிலவே கனவு நிலைகளுட் புலப்படும் புறமன உணர்வலைகள்.

கண்படப் புலர்ந்த -ஆழ்ந்துறங்காது கட்புலனும் அதனையடுத்த பிற புறப்புலன்களும் அடங்கிய நிலையிலும், புற அறிவு அடங்கா நிலையிலும், புறமனத்தே புலர்ந்து தோன்றுகின்ற.

கனவின சிலவே - கனவாகும் உணர்வு நிலைகள் சிலவாம் என்க.

எண்படு கனவின்- எண்ணிக்கையழிந்த கனவு நிலைகளின் எண்ணற்ற கனவுகளுள் எண்ணிக்கைக்குட்படாதன பல உள. அவை போக நம் புற அறிவின் எல்லைக்குள்வந்து புகுந்து நாம் நினைவுநிலையில் வைத்து எண்ணிப் பார்க்க முடிந்த கனவு நிகழ்ச்சிகள்,

எதிர்வன சிலவே- அக்கனவு நிகழ்ச்சிகளுள் நினைவுள் எதிர்ந்து தோன்றுவன சிலவே எதிர்தல்-எதிர் ஒளிர்தல் (Reflection) நினைவு நிகழ்ச்சியைச் சாக்கிரம்’ என்னும் உட்சொல்லாற் குறிப்பர் சிவனியமெய்ந் நூலார்.

கனவு பலவற்றுள்ளும் சிலவே நினைவுள் தோன்றும்.

நினைவுள் உயிர்த்தழி நீர்மைய சிலவே - அவ்வாறு நினைவுள் தோன்றும் உணர்வுகள் பலவற்றும் காலப்போக்கில் அழிந்து போகும் புல்லிய உணர்வுகள் சில. அவ்வாறு போனவை கழிய எஞ்சுவனவும் மிகச்சிலவாம் என்க.

உயிரொடும் உடலெனும்....சிலவே- அப்புகழ் பெறும் மிகமிகச் சிலவாம் மாந்த உயிர்களுள், இறுதிவரை உடலளவானும் தொடர்பு கொள்ளும் உயிர்களோ மிகவும் சிலவே என்க. என்னை? உலகியல் தொடர்பாகப் பிறிதோர் உயிர் நின்ற உடலொடு பொருந்தி, அவ்வுடல் அழியுங்கால், அத்தொடர்பையும் அறுத்துக் கொள்ளும் தன்மையுள்ள பொது உயிர்கள் சில என்க. பல உயிர்கள் அவ்வாறு உடலளவானும் தொடர்பு கொள்ளாது, அவ்வுடலைப் பற்றிய எழிற் பொருட்டாயினும், இளமைப் பொருட்டாயினும் தொடர்பு கொண்டிருந்து, அப் புறவெழிலும் இளமைப் பருவமும் அழியுங்கால் அவ்வுடல் தொடர்பையையும் தவிர்த்துக் கொள்ளும் தன்மையவாம் ஆகலின்.

உயிரொடும் உயிரென சிலவே- அவ்வாறின்றி, உலக வாழ்வு உள்ளளவும் மற்றோர் உயிர் தங்கிய உடலொடு பொருந்தியிருந்து, இவ்வுலகத்தில் வாழ்வாங்கு கூடி வாழ்ந்து, தான் தொடர்புற்ற உயிருடல் அழிவுறுங்கால், அவ்வுடலோடு தன் உடல் வாழ்வையும் தவிர்த்துக் கொண்டு, பிரிந்தேகும் அவ்வுயிரொடு தம் உயிரையும் பொருத்திக் கொண்டு ஈருயிரும் ஒருயிராய் ஒன்றி உறைந்து நின்று, என்றென்றும் இன்புற்றியங்கும் மீமிசை மாந்த உயிர்கள் மிகமிகச் சிலவே என்க.

என்றிவை எம்மோர் தேறலின்- என்று இவ்வரிய உண்மைகளைத் தேர்ந்து அப்புகழ்க்குரிய வினைகளையே செயலுக்குரியவாகக் கொண்டு. எமக்குரிய எம் தலைவர் விளங்கி நிற்றலுமின்றி, எம் உயிரொடு தம் உயிரையும் பொருத்திக் கொண்டு ஒருயிராக இயங்குவார் ஆகலின்,

இவ்விடத்துத் தலைவி, தான் கனவின் கன்றிய காதல் கொண்டு, உடல் நலம் துய்த்தத்தலைவர்க்குத்தகுதி சாற்றினாள் என்றபடி, எம்மோர் என்றதால், எமக்கே உரியர் என்று உரிமையும், பிறள் ஒருத்தியை நாடா ஒழுக்கமும் சிறந்தார் என்று தலைவனைக் குறித்துப் பெருமையுற்றாள் என்க.

மேலும் தாங்கள் இருவரும் வேறு வேறு உயிர்கள் அல்ல ; ஒருயிரே என்றும் தோழிக்குணர்த்தினாள். எம் நட்பு வெறும் உடலொடு தொடர்புடையதன்று உயிரொடு தொடர்புடையது என்றும் தெருட்டினாள் என்க.

உலகத் தொடர்புக்காக மட்டும் எங்கள் உடல்கள் பொருந்தி இன்பம் நுகரவில்லை. உயிர்த் தொடர்புக்காகவே எம் இருவரின் உடல்களும் பொருந்தின என்றாள்.

இனி, இப் பிறவியே எங்கள் ஓருயிர் ஈருடலாகப் பிறவியெடுக்கும் இறுதிப் பிறவி மற்று, அடுத்து வரும் பிறவிகளுள் ஓருடல் ஓருயிராகவே பிறந்து இயங்குவோம் என்றும் குறிப்புணர்த்தினாள் என்க.

இங்ஙன் ஓரினப்பட்ட உயிர்கள் ஒன்றோடு ஒன்று பொருந்தி உறைந்து உயிர்த்திரட்சி பெற்று இறைமை எய்துவதே மேம்பட்ட மெய்யறிவுக் கொள்கை என ஈண்டு உணர்த்தப் பெற்றது என்க.

குழல் மோந்தோர் - எம் கூந்தலை மோந்தவர். குழல் மோந்தோர் என்றது தம்மை உடலாற் பொருந்தியவர் என்று இடக்கரடக்காகக் குறித்திட வேண்டி என்க. எம்மின் குன்றும் மறவார் - எம் குழலை மோந்தவர், எம்மையும் யாம் வதியும் எம் குன்றையும் மறவாமல் நினைத்து விரைவில் மீண்டும் வந்து மணப்பார் என்றபடி

குழலை மோந்தவர், அக்குழலிற் சூடிய பூவின் மணத்தையும், அம்மணம் நிறைந்த பூ மலரும் குன்றையும் யாங்கன் மறத்தற் கியலும் என்றாள் என்க.

'புறவுலகம் மறந்த ஆழ்ந்த உறக்கத்து எழுந்து தோன்றும் பல்லாயிரங்கோடி உணர்வு அலைகளுள் அழிந்தன போக எஞ்சியவை சிலவாம்; அவற்றுள் மேனிலை உணர்வுக்கு வந்து உயிரியக்கத்தொடு கலந்து நிற்கும் உணர்வுகளோ மிகச்சில; அவற்றுள் பல அழிந்தவை போக, கட்புலன் முதலிய புறப்புலன் ஒடுங்கிப் புறஅறிவு ஒடுங்காத துயில் நிலையில் கனவுகளாய் முகிழ்க்கும் பன்னூறு உணர்வு நிலைகளுள், நினைவு நிலையில் எதிர்ந்து தோன்றுவன மிகமிகச் சிலவாம்; அவற்றுள்ளும் நிகழ்ச்சிகளாக மலர்வன மிகவும் சிலவாம்; அந்நிகழ்ச்சிகளுள்ளும் தனக்கு மட்டும் பயன்படும் நிகழ்ச்சிகள் சிற்சிலவாம், அச்சிற்சில நிகழ்ச்சிகளுள்ளும் பிறர்க்குப் பயன்தரும் நிகழ்ச்சிகள் மிகச் சில அவற்றுள்ளும் பிறர் பயன் படுத்திக்கொள்வன மிகவும் சிற்சில; அவற்றுள் புகழ்ச்சிக்குரியனவோ இன்னுஞ் சில; அத்தகு புகழ்ச்சி வினைகளைச் செய்யும் உயிர்களோ உலகில் சிற்சிலி அச்சில மீமிசை மாந்த உயிர்களுள் சிலவே இவ்வுலக வாழ்வின் இறுதிவரை தாம் நட்புக்கொண்ட உடலொடு தொடர்புடையன மிகச் சிலவே என்க. (பிறவெல்லாம் எழிலொடும் இளமையொடும் கழிவன) அத்தகு தேறிய உடல் தொடர்புற்ற சிற்சில உயிர்களுள் மிகவும் சிலவே தாம் நட்புக் கொண்ட உயிர்களோடு இறுதிவரை பொருந்தி உறைந்து நிலையான இன்பம் பெறுவன. இவ்வுயிரியக்க உண்மைகளை எம்மொடு தொடர்பு கொண்ட எம் தலைவர் தேர்ந்து உணர்ந்துளார். ஆகையால், அவரொடு யாம் கொண்ட தொடர்பும் வெறும் உடல் தொடர்பினது அன்று உயிர்த் தொடர்பினது. எனவே எம் உயிரியங்கும் இவ்வுடலையும் அது வதியும் இக்குன்றையும் அவர் மறத்தற்கியலாது; எம்மொடு புணர்ந்த காலத்து எம் கூந்தல் மணத்தையும் அதற்கு ஏதுவாகிய மணமிகுந்த மலரையும், அது மலரும் இக் குன்றையும் அவர் நினைவுகூர்ந்து விரைவில், எம்மை மணந்து கொள்ளுதற்குரிய பொருளை ஈட்டிக் கொண்டுவந்து என்னை மணந்து கொள்வார்; எனவே, தோழி! நீ அவர் பற்றி ஐயப்படாதொழிக'-என்று தலைவி தெருட்டிக் கூறினாள் என்று கூறியதாகும் இப் பாடல்.

இது, பாலை யென் திணையும், வரைவிடை வைத்த பிரிவினை ஐயுற்ற தோழியைத் தலைவி தெருட்டிக் கூறியது என்னுந் துறையுமாம்.