நூறாசிரியம்/சாய்த்தலும் நன்றே

விக்கிமூலம் இலிருந்து
42 சாய்த்தலும் நன்றே!

                         வற்றக் காய்ந்த வறற்களிப் பிளவை
                         துற்றப் பொழிதரத் துளும்புநீர் ஏரிக்
                         கொடுங்கரை யிரிந்தூர் குலைவுறு முன்னம்
                         பாய்கால் எற்றுப் பயன்கொளு பான்மையின்
                         ஆய்வழித் தேங்கிய ஆக்கம் 5
                         சாய்வழிச் சாய்முன் சாய்த்தலும் நன்றே!

பொழிப்பு:

அடி மண்ணும் ஈரம் வற்றும்படி காய்ந்து வறண்ட களிமண் நிலத்து, வெடித்துப் பிளந்த பிளவுகள் மீண்டும் நெருங்கி இணையுமாறு பொழிந்த மழையால் நிரம்பித் துளும்புகின்ற ஏரியின் வளைந்த துரை உடைந்து, அண்டையயல் ஊர்கள் நிலை குலையுமுன், அவ்வூர் மக்கள் வடிகால் வெட்டி, வீணாய்ப் போகும் அவ்வேரி நீரைப் பயன் கொள்ளுதல் போல், ஏதோ ஓர் ஆகின்ற வழியான் வந்து தேங்கிக் கிடக்கும் ஆக்கம், தானே கட்டுடைத்துக் கொண்டு அது சாய வேண்டிய வழிச் சாய்வதற்கு முன்னம், அதனைப் பல்வகைப் பயன்களுக்கும் பலர்பாலும் தாழும்படி செய்தல் அனைத்தினும் நன்றாம் என்க.

விரிப்பு:

இப்பாடல் புறத்துறையைச் சார்ந்தது.

ஏதோ ஒர் ஆகின்ற வழியால் ஒருவர் பால் வந்து தேங்கிக் கிடக்கும் செல்வம், அது தானே வழியில் கழிந்து போகுமுன், அதனைப் பலர்க்கும் பயன் தரும் வகையில் பயன்படுத்த முயற்சி செய்வது நல்லது என்னும் இயற்கை உண்மையை எடுத்துக் கூறுவதாகும் இப்பாடல்.

நன்றாக நீர் வறளும்படி காய்ந்து பாளம் பாளமாக வெடித்துக் கிடக்கும் களிமண் நிலத்தில், அவ்வெடிப்புகள் பொருந்தி இணையும்படி மழை பொழி தருகிறது. அதனால் ஏரி நிரம்பி நீர் துளும்பி நிற்கிறது. நீரின் அழுத்தம் தாளாமல் கரை உடைப்பெடுத்துக் கொள்ளும்; அதனால் அண்டையயல் ஊர்கள் முழுகி அழியும் என்பதை முன்னுணர்ந்து கொண்ட மக்கள் அதற்கு வடிகால் எடுத்து நீரை ஒழுங்குபட வாய்க்கால் வழிச் செலுத்திச் சேய்மையிலுள்ள வயல்களுக்குப் பாயும்படி செய்கின்றனர். அதுபோல் நிரம்பிய செல்வம் ஏதோ ஓர் ஆகும் வழியால் ஒருவரிடம் வந்து தேங்குகின்றது. அதனை அவ்வாறே தேக்கி வைத்திருப்பின், அது மீண்டும் ஏதோ ஒரு போகும் வழியில் போய்விடும். அந்நிலையில் அது பயன் ஒன்றும் பயவாது, அழிவையும் உண்டாக்கிவிடும். அதனை முன்னுணர்ந்து கொண்டு, அதனைப் பயனுடைய வழிகளுக்குச் செலவிட வேண்டும்; அதுவே அறமும் உலகப் பயன் கருதியதும் ஆகும் என்பது இப்பாட்டு,

வற்றக் காய்ந்த- அடிநீரும் வற்றிப் போகும்படி வெயிலிற் காய்ந்த

வறல் களிப் பிளவை : வறண்டு வெடித்த களிமண் பிளவுகள்.

துற்ற:பொருந்தி ஒன்றோடு ஒன்று இணையும்படி

பொழிதர: மழையானது நன்கு பொழிய,

துளும்பு நீர் ஏரிக் கொடுங்கரை : நிறைந்து துளும்புகின்ற நீரையுடைய ஏரியினது வளைந்த கரை,

இரிந்து : இடிந்து விழுந்து

ஊர்குலைவுறு முன்னம்: அண்டை அயல் ஊர்கள் நிலைகுலையும் முன்.

பாய்கால் எற்று : அந்நிரம்பிய நீர் பாய்ந்து ஓடித் தேவையான சேய்மை நிலத்திற்குப் பயன்படும்படி வாய்க்கால்களை எடுத்து ;

பயன் கொளும் பான்மையின்: அந்நீரின் பயனை முழுதாகக் கொள்ளும் தன்மை போல்.

ஆய்வழித் தேங்கிய ஆக்கம் : ஏதோ ஓர் ஆகின்ற வழியில் வந்து தேங்கிய செல்வம் முதலிய ஆக்கங்கள்.

சாய்வழிச் சாய்முன் : ஏதோ ஒரு வழியில் முழுதும் வீழ்ந்துபோகு முன்.

காய்த்தலும் நன்றே : நாமே, அச்செல்வம் நல்ல வழிக்குப் பயன்படும்படி ஈடுபடுத்துவதும் நல்லறமாகும்.

வற்றக் காய்ந்த நிலம் என்றதால் முன் வறுமையுற்ற நிலை உணர்த்தப்பெற்றது.

வறற்களிப் பிளவை என்றதால் வறுமையால் தாக்குண்டவர். தம்முன் பூசலிட்டு உறவும் உற்றமும் வேறுபடப் பிரிந்து நின்ற நிலை கூறப்பெற்றது. துற்றப் பொழி தர என்றதால், செல்வம் வந்த விடத்து அப்பிளவுகள் நீங்கி ஒருமையுறும் இயற்கைத் தன்மை காட்டப்பெற்றது. துளும்புதல், நீர் அளவு மீறலால், தன் இயங்கு நிலை அழுத்தம் மிகுந்து அசைவுற்றுக் கரை மீற முற்படுதல்.

கொடுங் கரை: வளைந்த கரை, ஏரி: ஏருக்குப் பயன்படும் நீர் தேங்கியிருக்கும் நிலை

இரிதல்: இடிந்து விழுதல், முரிதல், இணைவு அறுதல்

பாய்கால் : நீர் பாய்ந்தோடும் வாய்க்கால். ஆய்வழி ஏதோ ஒரு வகையான் ஆகிவரும் வழி.

பரியினும் ஆகாவாம் பாலல்ல உய்த்துச்
சொரியினும் போகா தம்

- என்னும் குறட்பாவை நினைவு படுத்தியது இக்கருத்து.

சாய்வழி : ஒரேயடியாகப் போகும் வழி.

இவ்விடத்துக்

கூத்தாட் டவைக்குழாத் தற்றே பெருஞ்செல்வம்
போக்கும் அதுவிளிந் தற்று.

- என்னும் குறட்பாவை ஓர்க,

வாய்க்கால் வெட்டி விடாமைப்பொழுது, ஏரி நீர் கரையுடைத்து அண்டை அயல் ஊர்களுக்கு அழிவை உண்டாக்குதல் போல், அறவழியில் செலவு செய்யப் பெறாமல் தேங்கியுள்ள பெருஞ்செல்வம் வேறு வழியிற் கழிந்து குற்றங்களையும் தீங்குகளையும் உண்டாக்கும் என்க.

இங்கு,

ஏதம் பெருஞ்செல்வம் தான்துவ்வான் தக்கார்க்கொன்று
ஈதல் இயல்பிலா தான்.

- என்னும் மெய்ம்மொழியை நினைக்க

செல்வம் தேங்குதல் அரிது. ஏதோ ஒரு வகையான் தேங்கி நிற்பின் அது நல்வழிக்குச் செலவிடப் பெறுதல் வேண்டும். அல்லாத வழி, அஃது

அவ்வழியில் சென்று அது குற்றங்களையும் கொடுமைகளையும் விளைவிக்குமாம் என்க.

- இது, காஞ்சிப் பொதுவியல் எண் திணையும் முது காஞ்சி என் துறையுமாம் என்க.