உள்ளடக்கத்துக்குச் செல்

நூறாசிரியம்/எழிலிருந்த வாறே

விக்கிமூலம் இலிருந்து
43. எழிலிருந்த வாறே

மெய்யெனக் கொள்ளினுங் கொள்ளுக; பேதை
வெய்தீர் முயக்கென் றிகழினும் இகழ்க;
எதிர்ப்படு ஞான்றும் விழிமுகங் கவிழ்ந்த;
வதிந்த காலும் நானுறக் குனிந்த;
இனைத்துங் காண்டிலை அம்ம, ஏர்ந்தே 5
பணையார்ந்த நெடுந்தோள் பதிய
எனையூர்ந்த காளைக்கு எழிலிருந்த வாறே!

பொழிப்பு:

உண்மையென்று கருதிக் கொண்டாலும் கொள்ளுக ; அல்லது (பொய் என்று கருதிக் கொண்டாலும் கொள்ளுக;)

பேதைப் பெண்ணாகிய எனது உடல் வெப்பம் தீரும்படியாக (அவனுடன் நினைவின்றி முயங்கிக் கிடந்த) முயக்கம் என்று கருதி இகழ்ந்தாலும் இகழ்க, அவனை நேருக்கு நேராக எதிரில் கண்டு காதலித்த பொழுதும் நாணத்தால் விழிகளும் முகமும் கவிழ்ந்து கொண்டன. அவனுடன் மனங்கொண்டு வாழ்கின்ற இப்பொழுதும் அதே நாணம் மேலுற அவை குனிந்து கொள்ளுகின்றன. எனவாக, இன்றுங்கூட, நான் கண்டில்லை. அம்ம, உயர்ந்து பருத்த அழகிய நெடிய தோள்கள் என் மார்பில் பதியும்படி) என்னைப் புணர்கின்ற காளை போலும் என் தலைவற்கு எழில் இருந்த அவ்வகையினை.

விரிப்பு:

இப்பாடல் அகத்துறையைச் சார்ந்தது.

‘நின் தலைவனது எழில் நலம் எவ்வாறு’ என்று நொதுமல் தோழி

யொருத்தி, கற்பு காலத்துத் தலைவியிடம் வினாவுகின்றாள். அவட்குத் தலைவி இவ்வாறு விடை கூறுகின்றாள் என்பதாகும் இப்பாட்டு.

‘அவன் அழகு நலன் முழுமையாக எவ்வாறிருக்கும் என்பதை, அவனொடுமணம் பொருந்தி இல்லறம் மேவிய எனக்கு இன்று வரையிலும் கூடத் தெரியாது. முன்பு அவனைக் காதலித்துக் களவொழுக்கம் கொண்டிருந்த காலை, அவனை நெருங்கிய பொழுதெல்லாம் அவன் அழகை முழுமையாகப் பார்த்துச் சுவைக்க முடியாதவாறு என் விழிகளும முகமும் நாணத்தால் கவிழ்ந்தே யிருந்தன. திருமணம் ஆகி, உரிமையுடன் என்னைப் பொருந்தி வாழும் இன்றும் அவன் அழகைப் பருக வியலாமல் அதே நாணம் தடுக்கின்றது.

மெய்யெனக் கொள்ளுக. - மெய்யென்று நினைத்துக் கொண்டாலும் நினைத்துக் கொள்க. ஐய உம்மையால் பொய்யென்று கருதினாலும் கருதிக் கொள் என்பது வருவித்துரைக்கப் பெற்றது. மெய் என்று முதற்கண் கூறியதால் இது மெய்யேயாம் என்று உறுதியும் உரைக்கப்பெற்றது.

மெய்-மெய் (உடல்) போலும் உண்மை. உயிர் உளதாதலை மெய்யென்று உறுதிப் படுத்துதலான் அஃது உடலுக்கும், நுண் பொருளுணர்வாகியதைப் பருப்பொருளான் உணர்த்துதலான் அஃது உண்மைக்கும் சொல்லாகியது.

பேதை- அறிவுப் பேதைமை. பருவங்குறித்ததன்று. தன் கணவனை ஏறிட்டுப் பார்க்கின்ற அறிவுத் துணிவும் கொள்ளாளாகையால் பேதை எனப் பெற்றது.

வெய்தீர் முயக்கு- உடலின் காம வெப்பம் தீரும்படி தழுவுகின்ற தழுவல் தீர்தல். தணிதல்.

இகழினும் இகழ்க- உடல் வேட்கையின் வெக்கை தணிக்கின்ற மெய்யுறு புணர்ச்சியில் அறிவு மயங்கிய பேதை என்று இகழினும் இகழ்க என்றபடி இகழ்ச்சி உடலின் காம வெப்பம் மிகுந்தவள் என்னும் நிலையால் கூறப்பெறுவது.

எதிர்ப்படு ஞான்றும் - தலைவன் களவுக் காலத்து தன் எதிர் வந்து தோன்றிய பொழுதும்

விழிமுகம் கவிழ்ந்த- விழியும் முகமும் நாணத்தால் கவிழ்ந்து கொண்டன.

வதிந்த காலும் - கற்புக் காலத்துத் திருமணம் கொண்டு வாழ்கின்ற இப்பொழுதும்.

நானுறக் குனிந்த- நாணம் மேலேறும்படி அவை குனிந்தன.

இனைத்தும் காண்டிலை - இற்றை அளவிலும் கண்டதில்லை.

அம்ம - நொதுமலுக்குரிய பொது விளி

நொதுமல் உறவும் பகையுமல்லாத ஒரு தொடர்பு நிலை முன்பே தோழி என்னும் உறவு பூண்டிருந்தால் அவளுக்குத் தலைவியின் குறிப்பு தெரியுமாகையால் இவ்வினா அவள் கேட்டிரான் பகையெனினும் இக்கேள்வி எழற்கு இடமில்லை; ஆகையான் நொதுமல் என்று கருதி, அதன் குறிப்பாக அம்ம என்னும் பொது விளி தோன்றிய தென்க. ஏர்ந்த- உயர்ந்த

ஏ, ஓ உயர்ச்சி குறிக்கும் ஓரெழுத்தொரு மொழியும் முன்னொட்டுமாம். ஏணி, ஓங்கல் என்னும் சொற்களின் முன்னொட்டுகளைக் காண்க.

பனையார்ந்த - பருமையும் அழகும் நிறைந்த,

நெடுந்தோள் பதிய நெடிய தோள்கள் அழுந்தும்படி

தலைவனை ஏறெடுத்துப் பாரா நிலையில் அவன் தோளழகு கூறியது, மெய்தொட்டுப் பயின்ற உணர்வினால் என்க.

எனையூர்ந்த காளை- என்னை மேலேறிப் புணர்ந்த காளை போன்றவன்.

எழிலிருந்தவாறு - அழகிருந்த வகையினை.

'தலைவனின் உடல் அழகையும் முக அழகையும் நேரிடையாகக் கண்டு பருக முடியாதவாறு என் நாணம் தடுத்தது. அவனை முதன் முதலாகக் கண்டு காதலித்த பொழுதும் இதற்கு வாய்ப்பில்லாமற் போயிற்று, மணந்து கொண்டு இல்லறம் பயிலும் இன்றும் அறியவியலாமற் போனது’ என்று கூறித் தன் நாண மிகுதியை உணர்த்தினாள் என்க.

இது முல்லை என் திணையும் கற்புக் காலத்துத் தலைவனது எழில்நலங்கேட்ட நொதுமலர்க்குத் தலைவி கூறியது என்னுந் துறையுமாம்.