நூறாசிரியம்/பொய்வழங் கிலனே

விக்கிமூலம் இலிருந்து
44 பொய்வழங் கிலனே !

எள்ளாடு செக்கர் நெய்கழி ஈமென்று
உள்ளத் துவப்பின் ஒங்குதியில் எருத்தம்
ஒய்யென் னோசைக்கு உறங்கியாங் குலவரும்
செய்யூர்க் கொண்டல் மெய்யிலா னெனினும்
பொய்வழங் கிலனே தோழி தொய்குழல் 5
நெய்வீப் பெய்யும் நாளுமொன் றுண்டே!

பொழிப்புரை:

எள்ளைச் செக்கிலிட்டு ஆட்டுகின்ற செக்கர், இறுதியில் எள்ளில் உள்ள நெய்யைப் பிழிந்து கொண்டு, அது கழிந்த கழிவாகிய பிண்ணாக்கைத் தனக்குத் தருவர் என்னும் உள்ள உவப்புடன், ஒங்கிய திமிலையுடைய எருது, செக்கு ஆடுதலால் தோன்றிய ஒய்யென்னும் ஓசையைக் கேட்டவாறு உறக்கம் கொண்டு சுழன்று வரும் தன்மையுடைய, வயல்கள் சூழ்ந்த மருத நிலத்தலைவன், எனக்கு மெய்யாக நடக்கிலான் எனினும் பொய் கூறும் தன்மையன் அல்லன், தோழி, அவிழ்ந்து தொய்ந்து கிடக்கும் என் கூந்தல் நெய்யும் பூவும் செரிந்து கொள்ளும் நாளும் ஒன்று உண்டு.

விரிப்பு :

இப்பாடல் அகத்துறையைச் சார்ந்தது. 'நெய்யும் பூவும் இல்லாமல் நின் கூந்தல் இவ்வாறு அவிழ்ந்து பாரிக்கிடத்தல் என்ன' என்று வினாவிய தோழிக்குத் தலைவி இது கூறினாள் என்க.

எள்ளைச் செக்கிலிட்டு ஆட்டுகின்ற மருத நிலத்தைச் சார்ந்தவன் என் தலைவன். அவன் ஊர் வயல்கள் நிறைந்த செய்யூர். எனவே அவன் கொண்டல் என்னும் பெயர் பெற்றான். அவன் இக்கால் என்னைத் துறந்து, என் நலமும் இழந்து, அயற் பெண்ணொருத்தியின் மயல் மேற்கொண்டு புறவொழுக்கம் கொண்டான். அவனின் பொருள் தீரும் வரை காதல் காட்டி, அவனை அவள் கை நெகிழ்க்கும் நாள் ஒன்று வரும். அக்கால் அவன் என்னை நாடி வருவான். அது போழ்து யானும் நெய் சொரிந்து தலைவாரிப் பூச்சூடி மகிழ்வேன் என்று தலைவி விடையாகக் கூறியது இப்பாட்டு

தலைவி குறிப்பாகக் கூறும் விடையில் அவள் தனிமைத்துயரும் தலைவனின் புறவொழுக்கமும், அவன் மேல் உள்ள பழியும், அவன் மேல் இவள் வைத்த அன்பும் நம்பிக்கையும் தெளிவாகப் புலப்படுகின்றன.

எள்ளாடு செக்கர் - எண்ணெய்க்காக எள் ஆடுகின்ற செக்கையுடைய செக்கர்.

நெய்கழி ஈமென்று - நெய் கழிந்த எச்சத்தை பிண்ணாக்கைத் தனக்குத் தருவர் என்று கருதி நெய்கழி. பிண்ணாக்கு

உள்ளத்து உவப்பின் -உள்ளத்தெழுகின்ற மகிழ்ச்சியொடு.

ஓங்கு தியில் எருத்தம் - உயர்ந்த திமிலை உடைய எருது.

ஒய்யென் ஒசைக்கு - செக்கு ஆடுதலினால் எழும் ஒய் என்னும் ஓசையினுக்கு (செவி தந்து)

உறங்கியாங்கு உலவரும் அவ்வோசையைக் கேட்டபடி கண்களை மூடியவாறு துரங்குவது போல் அச்செக்கைச் சுற்றி வரும்.

செய்யூர் - வயல்களையுடைய செய்யூர் என்னும் பெயரிய ஊரைச் சார்ந்த,

கொண்டல் - மருத நிலத்தலைவன். (மேகம் போன்ற தலைவன். கொண்டல் மழையைக் கொண்டுவரும் மேகம்)

மெய்யிலானெனினும்.....தோழி - எனக்குத் தான் எங்குச் செல்கின்றான் என்னும் மெய்யை உரைக்காது (பிறள் ஒருத்தியிடம்) சென்றான் எனினும், ‘வருவேன்’ என்று கூறிவிட்டு போனபடி வருவான்; அவன் பொய் வழங்கிலான், தோழி! என்றவாறு.

‘அவன் சென்றவிடத்தை எனக்குக் கூறிலன் ஆகையால் அவன் மெய்யில்லாதவன் ஆயினும், அவன் பொய்யும் உரையான் ஆகையால், வருவேன் என்றுரைத்தபடி வருவான்’ என்று நம்பிக்கையுடனும் அன்புடனும் கூறினாள் என்க.

தொய் குழல் - நெய்யில்லாது அவிழ்ந்து பரந்த என் கூந்தல்.

நெய்விப் பெய்யும் ... உண்டே! - நெய்யும் பூவும் ஒருசேரப் பெய்து கொள்ளும் நாளும் ஒரு நாள் உண்டு; அதுவரும் என்றாள் என்க.

இதில், நாளும் ஒன்று உண்டு என்றதால் உறுதியும், பொய் வழங்கிலனே என்றதால் அன்பும், மெய்யிலான் என்றதால் சினமும், கொண்டல் என்றதால் அவன் தன்க்குக் காலத்தாலும் இடத்தாலும் பொழிதல் இலாதவன் எனக்குறித்த ஏக்கமும், அவனின் ஊர் செய்யூர் என்றதால் அவனின் விளைவு சான்ற செல்வ நிலையும், அவ்வயல் போல் தான் அவன் பொழிவுக்கு ஏங்கி நின்ற காதல் குறிப்பும் குடும்ப நோக்கமும் புலப்பட உரைத்தாள் என்க. இனி, எள்ளாடு செக்கர் என்றவழி, எள்ளை ஆட்டிப்பிழிந்து கொள்வது போல், தலைவனைக் காதல் உணர்வினால் ஆட்டிப் பொருளைப் பிழிந்து கொள்ளும் அயலாளது உளநிலையும், நெய்கழி ஈயுமென்றதால், தலைவனது பொருளாகிய சாற்றைப் பிழிந்து கொண்டு எஞ்சியுள்ள சக்கைபோல் தலைவனை மட்டில் தனக்கவள் தருவாள் என்னும் எதிர்பார்ப்பும், பொருள் நீங்கிய பின்னேனும் அவன் தனக்குக் கிடைப்பான் என்னும் தலைவியது உள்ள உவப்பும், ஓங்கு திமில் எருத்தம் என்றதால் பெருமை சான்ற அவள் கற்பும், ஒய்யென் ஓசைக்கு உறங்கியாங்கு உலவரும் என்றதால் ஊரார் அவனை உரைத்த பழிகேட்டவாறு, இயக்க மற்றவளாய் அவள் இல்லிருந்து உலவுவதும் புலப்பட்டன என்க.

எள்ளை ஆட்டி எண்ணெயைப் பிழிந்து கொள்ளும் செக்கர் போலும், தலைவனது புறவொழுக்கக் காதலி, தலைவனைக் காதலுணர்வால் ஆட்டி அவன் கைப்பொருளைப் பறித்துக் கொள்வாள். ஆயினும், அவ்வெண்ணெயைப் பிழிந்து கொள்ளும் செக்கர் எஞ்சிய நெய்கழியையேனும் அவ்வெருதுக்குத் தருவதுபோல், அக்காதலியும் தன் தலைவனை வெறுங்கையனாகவேனும் தனக்குத் தருவாள். எனவே அதுவரை அவன் வருவான் என்னும் உள்ள உவகையுடன் செக்கை இழுக்கும் எருது, அது சுற்றப்படுதலால் எழும் “ஒய்" யென்னும் ஓசையைக் கேட்டவாறு, உறங்கிக்கொண்டே சுற்றி வருதல் போல், தானும் அவன் மேல் ஊரார் உரைக்கும் பழிச் சொற்களைக் கேட்டவாறு புறவுணர்வற்றவளாய்ப் புலனொடுக்கத்துடன் இல்லிருந்து வருகிறாள் தலைவி. வயல்கள் நிறைந்த ஊரின் மேகம் போன்ற தலைவன் அவனாகையால், தலைவிக்கு அவன், மழைமேகம்போல் வேண்டிய விடத்து வேண்டிய காலத்துப் பொழியாதவாறும், வேண்டாதவிடத்து அளவின்றிப் பொழியுமாறும், தன்னிடத்து அன்பு மழை பொழியாமல் தன் புறவொழுக்கக் காதலியிடத்துக் காதன் மழை பொழிகின்றான். அவன் தலைவின்ய விட்டு நீங்குகையில் எவ்விடத்துச் செல்கின்றான் என்று கூறாமல் சென்றானாகையால் அவன் மெய்யிலான் ஆகின்றான். ஆனால் அதேவிடத்து 'வருவேன்’ என்று கூறிப் போந்ததால், அவன் வருவான்; ஏனெனில் அவன் பொய் வழங்காதவன். அவன் வரும் வரை அவள் பெருங்கற்பு தோன்ற இல்லிருக்கின்றாள், என்றெல்லாம் பொருள் விளங்கும்படி அவளேன் நெய்யும் பூவும் சொரிந்து தலை புனைந்து கொள்ளவில்லை என்று கேட்ட தோழிக்கு விடை கூறுகின்றாள். தலைவி என்க.

இது முல்லை என் திணையும், புனைந்து கொள் என்ற தோழிக்குத் தலைவன் பொருள் தேடச்சென்றவிடத்துப் பயிலும் புறவொழுக்கத்தால் கவன்று இல்லிருக்கும் தலைவி தன் கற்பு தோன்ற உரைத்தது என்னுந் துறையுமாம்.