உள்ளடக்கத்துக்குச் செல்

நூறாசிரியம்/மறலியின் குறிக்கை

விக்கிமூலம் இலிருந்து

29 பனங்கனிப் பறட்டை பையல்


கூழினும் புளித்தோ உப்பினும் உவர்த்தோ
காழ்த்த சுள்ளிக் காயினுங் கார்த்தோ
கரும்புகை முருட்டின் மழைநீ ரொழுக
இருட்படை புகுந்தநம் இல்லினும் மைத்தோ
பனங்கணிப் பறட்டைப் பையல் சிணுங்க 5
நனைவிழி கலுழும் மனைநின் மேனி
வறளினுந் தேய்வினும் பாழ்த்தோ
மறலியின் குறிக்கை மாட்டுநற் சாவே!


பொழிப்பு:

நாம் அருந்தும் கூழை விடப் புளித்ததோ? அதற்கிடும் உப்பை விட உவர்த்ததோ? அக்கூழை யருந்துகையில் நாம் இடையிடையே கடித்துக் கொள்ளும் விதைமுற்றிய மிளகாயினும் கார்ப்பு உடையதோ? பச்சைச் சுள்ளிகளையும் காட்டுச் சருகுகளையும் போட்டுக் கொளுத்துதலால் எழுகின்ற கரும் புகைசூழ்ந்து கருமையேறியதும், முருடு நிறைந்ததும், மழை நீர் ஒழுக்கு உடையதும், இருள் தன் படையுடன் வந்து புகுந்து கொண்டதுமாகிய நம் வீட்டை விடக் கருமை நிறைந்ததோ ? பனம்பழத்தினைச் சூப்பியெறிந்தது போலும், பறட்டைத் தலையுடன் விளங்கும் நம் பையன் பசிக்காக நின்பால் சிணுங்கியழ, நனைந்த விழிகள் வடிக்கின்ற நீரையுடைய மனைவியே நின் மேனியின் வறட்சியையும் தேய்வையும் விடக் கொடுமையானதோ, உயிரைப் பிரிக்கும் கொடியவனின் குறி தப்பாத கை நம்மைப் பற்றியிழுக்கின்ற சாவு?

விரிப்பு:

இப்பாடல் புறத்துறையைச் சார்ந்தது.

வறுமையால் துன்புற்ற ஒருவன் தன் மனைவியிடம் தம்மை வருத்துகின்ற துயரங்களைவிட உயிரை உடலினின்று பிரிக்கின்ற சாவு கொடுமையானதன்று என வெம்பிக் கூறியதாகும் இப்பாட்டு.

'நாம் அருந்துகின்ற கூழோ மிகப் பழையது; கடுமையான புளிப்பு வாய்ந்தது. அதனை விடவோ சாவு புளிப்புடையதாகவிருக்கும்? இருக்கவே இருக்காது’ என்றும்;

‘கூழ் சிறிதாயினும் உப்புச்சுவை தவிர வேறு சுவை அதற்கு ஊட்டப் பெறாமல் அருந்துவதால், அதன் உவர்ப்பு மிகுந்திருப்பது போல் உள்ளதே, அதனினும் சாவு உவர்ப்புடையதாக இருக்குமோ? இருக்கவே இருக்காது’ என்றும்,

‘கூழுக்காக நாம் கடித்துக் கொள்ளுகின்ற முற்றிய விதைகளையுடைய மிளகாயின் காரச்சுவையை விடவா அது கடுமை நிறைந்ததாக இருந்து விடும்? இருக்கவே இருக்காது’ என்றும்;

நெடுங்காலமாய் நாம் அவ்வப்பொழுது கூழைக் காய்ச்சுவதற்கென்று போட்டு எரிக்கின்ற பச்சைச் சுள்ளிகளாலும், காட்டுச் சருகுகளாலும் அடர்த்து எழுகின்ற கரிய புகை முருடு முருடான சுவரிலும் தரையிலும் தோய்தலாலும், அவற்றின் மேல் மழை நீர் ஒழுகி யிறுகியதாலும், இருளே 'தன் படையுடன் புகுந்து கிடப்பதைப் போல் உள்ள நம் குடிலை விட நமக்கு வந்து வாய்க்கும் சாவு கருமை நிறைந்ததாக விருக்குமோ? இருக்கவே இருக்காது' என்றும்; -

‘பனம்பழத்தைச் சுட்டுச் சூப்பியெறிந்த கொட்டையைப் போல் பிசுக்குற்றும் பறந்தும் வெளிறியும் உள்ள தலையையுடைய நம் பையன் பசிக்காக நின்பால் மெல்லிய அரற்றலுடன் ஒட்டிக் கிடக்க, நனைந்த விழிகளினின்று சுழல்கின்ற நீரையுடைய மனைவியே, நின் மேனியின் வறட்சியையும் தேய்வையும் விடக் கொடுமையானதாக இருக்குமோ, நம்மை வந்தணையவிருக்கும் சாவு? இருக்கவே இருக்காது’ என்றும்;

தலைவன் ஒருவன் வறுமையின் கொடுமையைத் தாளாது கசிந்து கூறினான் என்க.

கூழினும் புளித்தோ - நாம்அருந்தும் கூழைவிடப் புளிக்குமோ? குழைதலால் கூழ் எனப்பெற்றது. தொடக்கத்தில் குழைய வைத்து கூழ் வகைகளையே உணவாகக் கொண்டமையால் கூழ் எனும் சொல் உணவு என்னும் பொருள் பெற்ற தென்க. கூழ் பழையதாக ஆக மிகவும் புளிக்குமாகையால் பழைய கூழையே சிறிது சிறிதாகத் தொடர்ந்து அருந்தி வருவது அறியப் பெறுகிறது என்க.

உப்பினும் உவர்த்தோ - உப்பைவிட உவர்ப்புச் சுவையுடையதோ ?

‘உப்பை விட உவர்ப்பது ஒன்றில்லை யாதலால் அதையே சுவைத்துக் கொண்டிருக்கும் நமக்கு அச்சுவை மிகவும் பழகிப் போய்விட்டது. சாவு அதை விடவா உவர்க்கும்?’ என்று வினவினான் என்க.

கூழ் சிறிதாக விருப்பதால் உப்பின் உவர்ப்பை அவர்கள் மிகுதியாகச் சுவைக்க வேண்டியிருந்ததென்க.

காழ்த்த சுள்ளிக்காய் - நன்கு முற்றிய மிளகாய். கார்த்தோ - கார்ப்பு உடையதோ,

கரும்புகை --- ஒழுக - கரிய புகை சூழ்ந்து கருத்துள்ள சுவர் முருடுகளில் மழை நீர் ஒழுகியிருக்க

சுவர்களும் தரையும் ஒழுங்கற்று முருடு முருடாக இருக்கின்றன. அம்முருடுகள் கரிய புகைகள் சூழ்தலால் கருமையேறியிருக்கின்றன. அவற்றின்மேல் மழை நீர் ஒழுகி அக்கருமையை நனைத்து மேலும் கருமையுடையதாகத் தோன்றுகின்றது. இந்நிலையில் இருள்வேறு தன் படையுடன் வந்து அக்குடிலுட் புகுந்துள்ளதென்க.

இருட்படை புகுந்த நம் இல்வினும் மைத்தோ-'இருள் தன் படையுடன் குடி புகுந்த நம் இல்லத்தைவிட, நமக்கு வந்து வாய்க்கும் சாவு இருண்மை உடையதோ? என்றான் என்க.

புகையால் கருமை நிறமேறிய சுவர்களில் ஒளி பாய்ந்தாலும் ஒளிர வழியில்லை. சுவர் முருடுகளின்றி யிருந்தாலோ ஒருவாறு ஒளி பாய வழியுண்டு. அதுவோ மேடும் பள்ளமுமாய் முருடுகள் நிறைந்துள்ளது. எனவே இருள் தவிர ஒளி சூழ்வதற்கு வழியே இல்லை என்க.

பனங்கணிப்பறட்டைப் பையல் - பனம்பழத்தினைச் சூப்பியெறிந்தது போல் பிசுக்கும், வெளுப்பும், பறக்கையுமுடைய தலையைக் கொண்ட பையன்.

சிணுங்குதல் - மெலிதாக ஆனால் தொடர்ந்து அரற்றி யழுதல்.

நனைவிழி கலுழும் மனை - நனைந்துள்ள விழிகளினின்று ஒழுகுகின்ற கண்ணிரையுடைய மனைவியே!

நின்மேனி . பாழ்த்தோ - நின்னுடைய மேனியின் வறட்சியையும் சீர்கேட்டையும் விடக் கொடியதோ.

மறவி - உடலினின்று உயிரைப் பிரிப்பதாக கருதப்பெறும் காலன்.

'மறல் - கொடுமை, மறலி - கொடியவன்.

காலம் - உடலினின்று உயிர் பிரியும் நேரம் காலன் - அந்நேரத்திற்குரியதாக கருதப்பெறும் ஓர் உருவகத் தோற்றம்

காலம் செய்யும் கொடுமை: அவன் பேச்சு என்னைக் கொன்றது அவள் நினைவு என்னைத் தடுத்தது என்னும் தொடர்களில் காலம், பேச்சு, நினைவு ஆகிய அஃறிணைப் பெயர்கள் உயர்திணை பெயர்கள் போல் உருவகிக்கப்படுவதைப் போன்றது இறப்பு. எனவே அவ்வினைக்குரியவனாக ஒருவன் கற்பிக்கப் பெற்றான்.

குறிக்கை - குறி கொண்ட கை

மாட்டுநற் சாவு - நம்மைத் தப்பாது மாட்டி இறப்பிக்கும் இனிய சாவு

வறுமைத் துன்பத்தினும் சாத்துன்பம் பெரிதாகத் தோன்றவில்லை என்பது மட்டுமின்றி, இனியதும் கூட என்று கூறுவான் வேண்டி நற்சாவு எனப் பாராட்டிப் பேசினான் என்க. இதனால் வறுமையின் கொடுமை நன்கு உணர்த்தப் பெற்றது.

ஏழ்மையுற்றவரின் வாழ்வுப் போராட்டத்தையும் அவர்தம் துயரச் சூழலையும் எடுத்துக் கூறுவதாகும் இப்பாடல்.

இது பொதுவியலென் திணையும் முதுகாஞ்சி யென் துறையுமாம்.