உள்ளடக்கத்துக்குச் செல்

நூறாசிரியம்/செம்பொன் மாணிழை

விக்கிமூலம் இலிருந்து
28 செம்பொன் மாணிழை


செம்பொன் மாணிழை விம்மத் தாங்கி
மும்முறை வணங்கி யெழுந்தனை யன்றே!
அற்றை நன்னாள் நினைவுகொளக் கூர்மதி!
ஒற்றைத் தனியை அல்லை;நின் அழுங்கல்
கொளல்சிறிது மின்றிநின் இளமகன், கொழுஞ்சுவை (5)
வழுக்கை யுறிஞ்சிய முக்கட் கூந்தை
கழைநுதி பொருத்தி யுருள்கொடு வலந்தர
நீநின் செவித்துளை தாழக் குழைவாங்கி
நெய்சுவறிக் குழல்பறம்ப
மெய்பசந்து களையிழப்ப
உகுநீர் விழியோ டுள்ளங் கவலுதல் (10)
தகுவதில் அம்ம! நின்கடை வாயில்
புகுவது முண்டே, அவட்புளித்த ஞான்றே!

பொழிப்பு:

செவ்விய பொன்னால் செய்யப் பெற்றதும் பெருமை மிக்கதும் ஆகிய அணியை, நின் உள்ளம் பெருமிதத்தால் விம்மும்படி உன் தலைதாழத் தாங்கி, அவனையும் அவன் பெற்றோரையும் நின் பெற்றோரையும் முறையாக அடிதொட்டு வணங்கி எழுந்தனை அல்லையோ? அந்த மன்றல் நன்னாளை நினைவிற் கொள்வாயாக இன்று நீ ஒன்றியாய் விடப்பட்ட தனியை அல்லை; நின்னுடை வருத்தத்தைச் சிறிதும் உணர்ந்து கொள்ளவின்றி, நின் இளமகன், கொழுவிய துங்கின் வழுக்கையை யுறிஞ்சி அம்மூன்று கண்களையுடைய பனங்காயை மூங்கிலின் நுனியில் பொருத்திக் கொண்டு, நின் வாயிலை வலம் வருகின்றான். நீயோ, செவியின் துளை தாழும்படி அதன் குழைகளைக் களைந்து நீக்கி, நெய் சுவறிக் காய்ந்த தின் கூந்தல் காற்றில் பறந்து அலையுமாறு, மேனி பசப்புறக் களையிழந்து உகுக்கின்ற நீரையுடைய விழியோடு உள்ளங் கவலுறுதல் தக்கதில்லை அம்ம. அப்பரத்தை வாயிற்பட்ட நின் தலைவன் இனித்துக் கிடக்கும் அவள் தொடர்பு புளித்துப் போகும் பொழுதில் நின் இற்புற வாயில் வழிப்புகுந்து நின்னைப் போற்றுங் காலம் வரும்; அதுவரை அமைந்திருப்பாயாகுக

விரிப்பு:

இப்பாடல் அகத்துறையைச் சார்ந்தது.

தன்னை மணந்த கணவன் பரத்தை ஒருத்தியை நாடி நின்றதால் களையிழந்த ஒருத்தியை, அவன் வரவு விரைவில் வருமென்று தேற்றியும், அதுவரை அமைந்திருக்க வேண்டி ஆற்றியதாகும் இப்பாட்டு.

இல்லற வொழுக்கம் திசைந்து மாறிய ஒருவன், தான் விரும்பிய பரத்தையின் தொடர்பு இனியதன்று; இன்னாதது என்று தானே அறியும் வரை அவனைத் திசை திருப்புதல் யாவர்க்கும் இயலாத தொன்றாகலினாலும், அவ்வாறு அவன் அறிந்து கொள்ளுதலும் விரைந்து நடைபெறும் ஆகலினாலும், 'நீ வருந்தற்க; நின் அமைவே சிறந்தது' எனத் தலைவியைத் தோழி ஒருத்தி தேற்றி அவள் துயரை ஆற்றினாள் என்க.

‘மணந்து கொண்டவள் நீயே! நின் பெற்றோரும் அவன் பெற்றோரும் அவனும் மகிழுமாறு ஒப்பி ஏற்றுக் கொள்ளப் பெற்றவள் நீயே! நீ இல்லற வாழ்க்கைக்குத் தக்கவள் என்பதை நினக்குற்ற மகப் பேற்றால் மெய்ப்பித்தனை. இந்நிலையில் அவன் நின்னைத் துறந்து பிறளொருத்தியை நாடுதல் அறமுமன்று; பண்புமன்று. ஆயினும் புறமயக்கம் ஒன்றே கருதி அவனை நாடிய அவன் உள்ளம் விரைவில் அவளின் கைப்புச் சுவையை உணர்வது கட்டாயம் நிகழும்; அதுவரை நீ ஆற்றியிரு’ - என்று தோழி அறிவுறுத்தினாள் என்க.

செம்பொன் மாணிழை - செவ்விய பொன்னால் ஆகிய பெருமை மிக்க அணி, மாண் இழை இழைத்துச் செய்தலால் அணி இழை எனப் பெற்றது.

பெண் ஒருத்தி அணிகின்ற அணிகள் யாவற்றிலும் அவள் மணவினைப் போதணியும் மங்கல அணியே அவளுக்குப் பெருமை தரும் அணியாகலின் அது மாணிழை எனப் பெற்றது.

இதனை முற்சுட்டிக் கூறியது 'நினக்கே அவன் உரியன்’ என்பதை நினைவு கூர்தற்கென்க.

விம்மத் தாங்கி - நின் உள்ளம் பெருமிதத்தால் விம்மும் படி, நீ அதைக் குனிந்து ஏற்று.

அன்று நின் மங்கல வணியை இன்பத்தால் நெஞ்சு விம்மும்படி தாங்கிக் கொண்டனை. இன்றோ நீதுன்பத்தால் நெஞ்சு விம்மிப் பொருமும் படி துயரத்தை தாங்கிக் கொள் என்றபடி

மும்முறை வணங்கி எழுந்தனை அன்றே! - அவனையும் அவனைப் பெற்றாரையும், நின்னைப் பெற்றாரையும் அந்த மணநாளில் நீ வணங்கி எழுந்தனை அல்லையோ!

‘நீயும், அவன் தனியொருவன் இக்கால் விரும்பியவள் போல் வெறும் புறமயக்கிற் குற்றவள் அல்லள். அவனாலும் அவன் பெற்றோராலும், நின் பெற்றோராலும் எற்றுக் கொள்ளப் பெற்றவள். அத்தகைய பெருமையுற்றது நின் மனம். எனவே அவன் புறவொழுக்கத்தை அவன் பெற்றோரா நின் பெற்றோரா ஏற்றுக் கொள்ளார். ஆகவே நீயே அவனுக்கு நிலையானவள். அதனால் ஆற்றியிரு’ - என்று தோழி தேற்றுவாள்.

அற்றை நன்னாள் நினைவு கொளக் கூர்மதி - மணவினை நிகழ்ந்த அந்த இனிய நல்ல நாளை நினைவு கொண்டு ஆற்றியிருப்பாயாக.

‘அவன் நின்னைப்பிரிந்து புறத்தே ஒழுகிய துன்பந்தரும் இக்கொடிய நாட்களை நினைவு கூராதே! நின்னொடு அவன் வந்து பொருந்திய அந்த நல்ல நாளை நினைத்திடு. அதுதான் நீ என்றும் நினைவில் வைத்திருக்க வேண்டிய இனிய நாளாம். அது தான் அவன்பால் நினக்குள்ள உரிமையினையும் வலிந்த பிணைப்பினையும் உறுதிபடுத்திக் கொள்ளும் நாளாகும். எனவே அதனை 'நினை' என்றாள் என்க.

ஒற்றைத் தனியை அல்லை - நீ தனியொருத்தி அல்லை. நீ தனித்திருக்கின்றாய் என்று கருதிக் கொள்ளாதே. அவன் நின் பால் தொடர்பு கொண்டிருந்த பயனால் ஒர் இளமகன் நினக்குத் துணையாக உள்ளதை மறவாதே!

நின் அழுங்கல் கொளல் சிறிது மின்றி- நின் துயரத்தை ஒரு சிறிதும் கொள்ளுதல் இல்லாமல்,

‘நீ நின் கணவன் பிரிவால் துன்பப்படுதல் போல், அவன் தன் தந்தையின் பிரிவால் துன்புறுதல் சிறிதும் இன்றி, நின் துணையால் அவன் மகிழ்ந்திருத்தல் போல், அவனது துணையால் நீ மகிழ்ந்திரு' என்று அவன் மகனைக் காட்டி ஆற்றினாள் என்க.

கொழுஞ்சுவை வழுக்கை யுறிஞ்சிய முக்கட் கூந்தை - கொழுவிய சுவையை உடையதும், வழுக்கை போல்வது மாகிய நுங்கையுறிஞ்சி யெடுத்த மூன்று கண்களையுடைய பனங்காயை.

கழைநுதி பொருத்தி - மூங்கிற் கழையின் நுனியிலே பொருத்தியவாறு.

உருள் கொடு வலம் தர - உருட்டிக் கொண்டு சுற்றி வர.

'நீ நின் கணவனைப் பிரிகிலை - அவனே நின்னை விட்டுப் பிரிந்தான்; அதுவும் பரத்தை ஒருத்தியின் தொடர்பு கொண்டு பிரிந்தான். எனவே நீ வருந்துவதற்கு என்ன பொருட்டு இருக்கின்றது ? வருந்தாதே! இதோ பார் நின் இளமகனை அவனை விட்டுப் பிரிந்த அவன் தந்தையைப் பற்றிக் கவலுறாது, அவனை விட்டு நீங்காத நின்னால் மகிழ்ந்து, கொழுவிய சுவையையுடைய நுங்கை உறிஞ்சிவிட்டுப் பிறர் எறிந்த பனங்காயை ஒரு கழியின் நுனியிலே பொருத்தியவாறு, அதனை உருட்டிக் கொண்டு கற்றி வந்து விளையாடுகின்றான். அவன் உன் வருத்தத்தைக் கூடப் பொருட்படுத்தினான் இல்லை! அவன்போல் நீயும் மகிழ்ச்சியாக நின் இல்லறப் பணிகளில் ஈடுபடு; கவலையை மறந்திரு. அவன் வருவான்’ என்று தோழி தலைவியைத் தேற்றினாள் என்க.

இனி, தலைவியின் துயரத்தை மாற்றுதற்கு அவன் கணவன் ஒழுகும் பரத்தையொழுக்கத்தின் தன்மையை உள்ளுறையாக வைத்துக் கூறுவாள், அவன் மகன் விளையாடும் பனங்காய் வண்டியையே ஒர் உவமமாகக் கூறினாள் என்க.

"இதோ! பார் நின்மகன் ஒட்டித்திரியும் இப் பனங்காய் வண்டியை! கொழுவிய சுவையையுடைய நுங்கின் வழுக்கையைப் பிறர் உறிஞ்சிவிட்டுத் தெருவில் விட்டெறிந்த இவ்வெற்றுக் கூந்தையை அவன் கழியின் நுனியில் பொருத்திக் கொண்டு, நின் துயரத்தைப் பொருட்படுத்தாது விளையாடுவது போல், கொழுவிய உள்ளீடு நிறைந்த பெண்மையைப் பிறர் முன்னரே உறிஞ்சிவிட்டுப் புறம் வீசிய அப்பரத்தை உடலின் புறத்தோற்றத்தில் மயங்கி, அவன் பிரிவால் நீ வருந்துகின்றதையும் பொருட்படுத்தாது, அவளொடு சிறுபிள்ளை போல் ஆடிக்களிக்கின்றான், நின் கணவன்; அவனுக்கும் அப்பரத்தைக்கும் உள்ள தொடர்பு, இச் சிறுவனுக்கும் அவன் ஒட்டித் திரியும் இவ்வெற்றுப் பனங்காய்க்கும் உள்ள தொடர்பு போன்றது. அவளொடு அவன் கொண்டிருக்கும் ஈடுபாடு, இச் சிறுவன் கையிலுள்ள மூங்கிற் கழியொடு பொருத்தப் பெற்ற அப் பனங்காயின் இணைப்புப் போல்வது. அம் மூங்கிற்கழி முறிந்து போகுங்கால் இச் சிறுவன் அப் பனங்காயை மீண்டுந் தெருவிலேயே விட்டெறிந்து விட்டு நின்பால் வருவது போல், அப் பரத்தையை இணைத்துத் திரிய உதவுவதாகிய நின் கணவனின் கைப்பொருள் முறிவுறுங்கால், அவளை மீண்டும் அங்கே வீசி விட்டு நின்னை நோக்கி வருவது உறுதி. அதுவரை அமைந்திரு “ என்றாள் என்க.

“வெற்றுப் பனங்காய் பொருத்தப் பெற்றிருப்பது மூங்கிற் கழியின் நுனியிற்றானே யன்றிக் கழியின் இடையில் அன்று. நுனியில் பொருத்தப் பெற்ற பனங்காயை விடுவிப்பது அவ்வளவு கடினமன்று. எனவே அவளொடு அவன் கொண்ட தொடர்பும் அவ்வளவு ஆழமானதன்று. ஒரு நுனியின் அளவே' - என்றாள்.

மேலும், கழி முறிவுறுங்கால், பனங்காய் தானே கழன்று கொள்வது போல், நின் கணவரின் கைப்பொருள் முறிவுறுங்கால் பரத்தையும் தானே க்ழன்று கொள்வாள்’ என்று குறிப்பும் காட்டினாள் என்க.

‘பனங்காய் கழலும் பொழுது தானே தூக்கி வீசிவிட்டு நின்னைத் தேடி வரும் நின் இளமகன் போல, பரத்தை இவன் தொடர்பினின்று கைநெகிழ்க்கும் பொழுதில் நின்னைத்தேடி நின் கணவனும் வருதல் உறுதி

என்றும் கூறினாள் என்க.

பெண்மை நலனுக்குக் கொழுவிய துங்கும், பரத்தைக்கு அஃது உறிஞ்சியெடுக்கப் பெற்ற வெற்றுப் பனங்காயும், அவளொடு தொடர்பு கொள்ளுதல் முத்தொளைகளை உடையதும், பனங்காயைப் போன்றதும்ஆகிய ஒரு மண்டையோட்டோடு தொடர்பு கொள்ளுதல் போல்வதே என்பதும், அந்நிலையில் அவள் பார்வைக்கும் பேச்சுக்கும் பொருளில்லை என்பதும் குறிப்பால் உணரத்தக்கன.

நீ நின் செவித்துளை தாழக் குழை வாங்கி - நீ, நின் செவித் துளைகள் தாழும்படி அதில் இட்ட குழைகளைக் கழற்றி நீக்கி.

செவியில் அணியப் பெற்றிருக்கும் ஒருவகை அணியாகிய குழைகளை நீக்குதலால் அதன் துளைகள் தாழ்ந்திருக்கின்றன.

இனி, தன்னைப் பிரிந்த பரத்திமையொழுக்கம் மேற்கொண்ட கணவனைப் பற்றிப் பிறர் தூற்றும் உரைகளை வணங்கிக் கேட்டுக் கொண்டாள் எனற்குச் 'செவித்துளை தாழ’ என்றும் அதற்குத் தடையாக உள்ள குழைகளை நீக்கினாள் எனவே 'குழை வாங்கி' எனவும் பொருள் கொள்ளலாம்.

நெய்சுவறிக் குழல்பறம்ப - இட்ட நெய் காய்ந்து போய், இடா நெய்யால் கூந்தல் பறந்து சிதர்ந்தது.

மெய் பசந்து களையிழப்பு - கணவற் பிரிவாலும் துயராலும் மேனி பசந்து களை யிழந்தது.

உகுநீர் விழியோடு உள்ளங் கவலுதல் - எப்பொழுதும் உருக்கின்ற நீர் சுரக்கும் விழியினளாகி உள்ளத்தே அழுங்குதல்.

புறத்தே அழுங்குதல் போலிமை ஆகலின் உள்ளத்தே அழுங்கினாள் என்றதும், அவ்வழுங்கலை உகுநீர் விழி உறுதிப்படுத்தியது என்றதும் கவனிக்க

தகுவதில் அம்ம! - தக்கத்தில்லை அம்ம!

‘கணவன் வேறு வகையில் பிரிவுற்றான் எனின் நீ வருந்துதல் தக்கதாகும். அவன் தீயொழுக்கத்தால் பிரிந்திருப்பதற்கு நீ வருந்துவது தக்கதில்லை. அவன் வருந்துவதே தக்கது’ என்றாள்.

நின் கடைவாயில் புகுவதும் உண்டே, அவள் புளித்த ஞான்றே! - புறத்தோற்றத்தால் இனித்துள்ள அவள் தொடர்பு விரைவில் அகத்தோற்றம் புலப்பாலல் அவனுக்குப் புளித்துப் போதல் உறுதி அக்கால் அவன் நின் புறக்கடை வாயிலில் வந்து புகுவான் என்றபடி ‘மிக்க இனிப்பான பொருள் விரைவில் புளித்துப் போவது உறுதி. நினக்கு ஒரு மகன் பிறந்தவுடன் நின் உடல் அவனுக்கு இனிப்பற்றதாகியது. எனவே உடல் இனிப்பு நாடி அவன் தீயொழுக்கம் மேற் கொண்டான். இனி, அவளுடைய உடல் இனிப்பதாயினும் அவள் உள்ளம் புளிப்பதாகலின் அந்நிலை உணர்ந்து அவன் விரைவில் திரும்புவான். அக்கால் நீ வரவேற்காமலேயே அவன் நின் கடைவாயிலில் ஒரு திருடனைப் போல் புகுவான். நீ கவலற்க’ என்றாள் என்க.

தீயொழுக்க முற்றவனாகலின் முன்வாயில் வழி வாராது கடை வாயில் வழிப் புகுவான் என்றாள்.

இனி, 'புகுவான்’ என்றதால் ‘நீ வரவேற்க வேண்டியதில்லை’ என்றாள் என்க.

இனி, 'மும்முறை வணங்கி யெழுந்தனை யன்றே' என்று முற் கூறியதால், அவனும் தன் தீயொழுக்கத்திற்கு வருந்தி, நாணுற்று, தன்னைப் பொறுத்தல் வேண்டி நின்பாலும்,நின் பெற்றோர்பாலும் அவன் பெற்றோர்பாலும் வணங்கி எழுவான் என்றும் குறிப்புப் பொருள் புணர்த்திக் கொள்க.

ஒரு தோழமையின் கடமை, தன் அன்புக்குரியார் துன்புற்ற விடத்து அவரை அன்பால் அணுகி, அறிவால் தேற்றி, நேர்ந்த நிகழ்ச்சியை உலகியலறிவால் தேர்ந்து விளக்கி, அவர் துயரை மாற்றுவதே யாகவின் ஈண்டு தலைவிக்குற்ற மெய்த்தோழியும் அவளின் அகப்புறத் துயரை அணுகி ஆய்ந்து அத்துயர் விரைவில் மாறுவதே என்று ஒர் இறைச்சிப் பொருள் நிறை உவமத்தால் எடுத்து விளக்கியும், அவட்குத் துயர் விளைவித்தவர் நாணும்படி அவள் பெருமையுறுவது உறுதி என்று கூறியும் தேற்றினாள் என்பதையுணர்த்துவதாகும் இப்பாடல்.

இது, பாலை பெண் திணையும், தலைமகன் பரத்தை வயப்பட்ட ஆயிடைப் பிரிவின் கண், தலைமகள் கவன்று கையறத் தோழி தேற்றியது என் துறையுமாம்.