நூறாசிரியம்/பெறும் பெற்றி

விக்கிமூலம் இல் இருந்து
Jump to navigation Jump to search


27 பெறும் பெற்றி


நிலமுது கொருபுறம் நீடிய நிழலும்
பலகதி ரோடிய பகலும் போல
உளவோர் உண்மையும் இலவோர் இன்மையும்
அளவுவரைத் தன்றே! ஆயிரு மருங்கும்
நின்று நீளுதல் நீணிலத் தின்றே! 5
குன்றன்ன கொடிநிறுத்தித்
தின்றுய்யத் திருவாழினும்
ஒன்றிலார்க் கொன்றுவந் துதவல்
பின்றைத் தாம்பெறும் பெற்றியா மாறே!

பொழிப்பு:

நிலக்கோளத்தின் வளைந்த புறமுதுகின் ஒரு புறத்தே முன்னோக்கி நீண்டு கொண்டே போகின்ற நிழலாகிய இருளும், மற்றொரு புறத்தே பல்கோடிக் கதிர்க் கற்றைகளால் விளைந்து முன்னோக்கி ஓடிக் கொண்டிருக்கின்ற பகலொளியும் போல், இவ்வுலகின்கண் பொருள் உள்ளவரின் உளவாந் தன்மையும், அஃதில்லவரின் இலவாந் தன்மையும் எல்லை நிலைப்புடையன அல்ல. அவ்விருபுறத்தும் ஒரு பொழுதில் நின்ற நிலையே தொடர்ந்து நீடிக்கப் பெறுதல் இவ்வகன்ற நிலத்தின்கண் யாண்டும் இல்லை. குன்றின் உயர்ச்சியளவாகத் தம் இலச்சினைக் கொடியை நிறுத்தி, அதன் பரும அளவாகத் தாமும் தம் பிறங்கடையரும் தின்று உய்யும்படி தமக்குச் செல்வவளம் வாய்ந்திருப்பினும், அந்நிலைகளில் ஒன்றுதானும் அடைந்திலார்க்கு வேண்டுவதாகிய ஒரு பொருளைத் தம் உள்ளம் உவக்குமாறு உதவுதலே, தமக்குப் பொருந்திய வளம் குன்றிய காலத்துத் தாம் துய்ப்பதற்குரிய வாய்ப்பு உருவாகும் வழியாம்!

விரிப்பு:

இப்பாடல் புறத்துறையைச் சார்ந்தது.

உலக வுருண்டையைச் சுற்றிச் சுழல்கின்ற இரவும் பகலும் போல் மக்கட்கு வந்து வாய்க்கும் செல்வ நிலையும் வறுமை நிலையும் வரையறுக்கப் பட்டன வல்ல. இரு நிலைகளும் ஒரு நிலையிலேயே நிற்றல் மாறாச் சுழற்சியுடைய நிலத்தின்கண் யாண்டும் நடை பெறுதல் இல்லை. குன்றுபோல் குவிந்த செல்வம் உடையவரும் பிற்காலத்து அதைத் தவறாது துய்த்தல் அரிது; அவ்வாறு துய்க்கும் வழி அந்நிலை ஏதும் இல்லாதவர்க் உளம் மகிழ்வடையும்படி கொடுத்து உதவுதலே ஆகும்,என்று உலக வியற்கையை உணர்த்திக் கூறியதாகும் இப் பாட்டு.

செல்வம் நிலைப்படாதது; சுழற்சியுடையது. அஃது ஒரிடத்தே வந்து சேருங்கால் மனவெழுச்சி யுண்டாதலும், பிரிந்து செல்லுங்கால் மனவழற்சி ஏற்படுதலும் மாந்தநிலையில் இயல்பாந் தன்மைகளே. ஆனால் இவ்விரு நிலைகளினும் வேறுபாடு காணாத மெய்யறிவினார், அவற்றை ஒன்று போலவே கருதுவர். கருதித் தமக்குச் செல்வம் வந்துற்றுழி அதன் பயனை எல்லார்க்குந் துய்ப்பக்கொடுப்பர்.அவ்வறிவில்லாதார் அவ்வாறு கொடாது, அதன் முழுப்பயனையும் தாமே துய்க்கக் கருதுவர். ஆனால் அவர் துய்ப்பதற் குள் அச்செல்வம் அவரைத் துறந்து பிறிதோரிடம் சேரும். இந்நிலையில் அச்செல்வத்தின் பயனை இவரும் பெறாது, இவரைச் சேர்ந்தவரும் பெறவிடாது நிற்பர். எனவே உலகவியல்புக்கு மாறாகிய இந்நிலையை அனைவரும் கடைப்பிடியாது தவிர்க்க வேண்டும் என்பதை வலியுறுத்தியும், தாம் பெற்ற விடத்துச் செல்வத்தைப் பிறர்க்கும் பகிர்ந்துவுதலே அச்செல்வத்தைக் துய்க்கும் வழியென்பதை அறிவுறுத்தியும் கூறப் பெற்றது என்க.

என்னை, பெற்றவிடத்துப் பிறர்க்குப் பகிர்ந்து உதவுதல் அச்செல்வத்தின் பயனை முழுவதும் துய்ப்பதாகுமோ என்பார்க்கு. அவ்வாறு முன்னர்ப் பகிர்ந்து கொடுத்த உதவியைப் பெற்றாரும், பின்னர்த் தாம் செல்வத்தைப் பெறுங்கால் தாம் பெற்ற அளவாகினும் திருப்பிக் கொடுக்கக் கடவர். ஆகலின், முன்னர்க் கொடுத்த செல்வம் ஒரிடத்துக் காக்கப் பெற்றுத் தக்கவிடத்து நமக்குத் திரும்புதல்போல் ஆவதால், அந்நிலை அச்செல்வத்தை முழுதும் துய்த்ததாகாதோ என்க. இனி, முன்னர்ப் பெற்றார், தாம் பெற்ற அளவினும், தம் நன்றி புலப்படக் கூடுதலாகக் கொடுப்பதும் நிகழ்வதாகையால், அந்நிலையில் நம் சிறிய செல்வம் பேரளவில் பயன் நல்குதலும் கருதத் தக்கதாம் என்க.

அவ்வாறின்றி, நாம் ஒரு நிலையில் பெற்ற செல்வத்தை ஒருவர்க்கும் கொடாது நாமே துய்க்க விரும்பிக் காத்து வைத்தல், இல்லாத பிறர் அதனைக் கவர இடந்தருவதும், இருக்குங் காலத்து நாம் கொடாததால், நாம் அதனை இழந்து துன்புறுங் காலத்துப் பிறரும் நமக்குக் கொடுக்க விரும்பாததும், செல்வத்தை எவ்வாற்றானும் நுகராத நிலைகளாம் என்க. எனவே பெற்ற செல்வத்தைத் துய்க்கும் சிறந்த வழி அதனைப் பலர்க்கும் பகிர்ந்து உதவுதலே என்று உறுதியாகக் கடைபிடிக்க என்பதாம்.

நிலமுதுகு - நிலக் கோளத்தின் வளைந்த புறமேடு, நீரோ ஒளியோ ஒடுதற்குத் தட்டையினும் உருண்டு வளைந்த நிலையே சமவோட்டந் தருமாகலின் ஒடுகிற நிழலைக் குறிக்குமிடத்து, வளைந்த நிலத்தையும் கருதவேண்டியிருந்ததென்க.

ஒருபுறம் - ஒரு பாதி. நீடிய நிழல் - நீண்டு கொண்டே போகும் நிழலாகிய இருள். ஒரு பொருளோடு இணைந்து நிற்பதாகிய இருள் நிழல், நில் + அல்-நிலல்-நிழல். நிற்றலாகிய இருள். அல்-இருள்.

பலகதிர் ஒடிய பகல் - பல கதிர்க்கற்றைகள் செறிந்து ஓடிக் கொண்டிருக்கும் பகல்-வெயில் திசை மாறாது நேராக ஒடுவதால் கதிர் எனப்பெற்றது. கதிநேர்திசை-செல்திசை, கதிர் நேர் நோக்கிச் செல்வது. நெல், கம்பு. தினை முதலியவற்றின் மணிப்பூட்டைகளும் தாளினின்று குத்திட்ட நேராக எழுவதால் கதிர் எனப் பெயர் பெறுவதாயிற்று. பகல்(பகு+ அல்) இருளைப் பகிர்வது. - பிரிப்பது - வேறுபடுத்துவது:

உள்வோர் உண்மை - (செல்வம்) உள்ளவர்கள் உளதாம் தன்மை,

இலவோர் இன்மை - அஃதில்லாதவர்களின் இலதாம் தன்மை.

அளவு வரைத்து அன்று -அளவான் வரையறுக்கப்பட்டன அல்ல. உண்மையும் இன்மையும் - வரைத்தன்று. என்றது. பன்மை ஒருமை மயக்கம்

நிழலும் பகலும் போல் உண்மையும் இன்மையும் என்னுமிடத்து நிரல் நிறை மாறியுரைத்தது அவற்றின் மாறுபடும் தன்மையைப் புலப்படுத்துதல் வேண்டி என்க.

நின்று நீளுதல் நிலைபெற்று நீட்சியுறுதல்

நீணிலம் - நீண்ட நிலம், பரந்த உலகம்.

குன்றன்ன... வாழினும்- குன்றின் உயர்ச்சி போன்ற கொடியும், அதன் திரட்சி போன்ற செல்வமும் பெற்று வாழினும்

கொடி நிறுத்தி என்றது குன்றுபோலும் செல்வத்தைத் துய்ப்பதற் குரிய உரிமை பெறுவதைக் காட்டியது. கொடி உரிமை இலச்சினை.

ஒன்றிலார்க்கு - ஒன்றும் வாய்க்கப் பெறாதவர்க்கு.

ஒன்று உவந்து உதவல் - அவர்க்குத் தேவைப்படும் ஒன்றினை உள்ள நிறைவோடு கொடுத்து உதவுதல்.

பின்றைத் தாம்பெறும் பெற்றி - தம் செல்வம் குறைவுபடும் பிற்காலத்துத் தாம் துய்ப்பதற்குரிய வாய்ப்பைப் பெறும் தன்மை,

தாம் ஒன்றை ஈந்தாலன்றித் தமக்குப் பிறர் கொடுப்பதிலர் ஆகலின், தாம் பின்னர்ப் பெறும் பெற்றி முன்னர்த் தாம் ஒன்றை ஒருவர்க்குக் கொடுப்பதே என்க.

இது, பொதுவியலென் திணையும், பொருண் மொழிக் காஞ்சி என் துறையுமாகும்.