உள்ளடக்கத்துக்குச் செல்

நூறாசிரியம்/முற்றச் சிலம்பி

விக்கிமூலம் இலிருந்து

26 முற்றச் சிலம்பி'


முற்றச் சிலம்பியின் நுண்ணிழை பெய்த
அற்றங் காவா ஆடை போர்த்து
மறுகிடை அசையும் மடக்கொடி யோயே!
நாண்மிக வுடைத்தே நிற்பெண் டகையே!
என்கொல் அறிகிலம் நின்னுளக் கிடக்கை! 5
இளம்பொன் மேனி எழிற்காட்டு வையினே
மைம்புகை யாடி ஒளிமழுக் கல்போல்
மெய்யுமிழ் வனப்பை நின்னுடை மறைக்கும்!
ஆகலின் அக்கலை அகறலும் நன்றே!
ஈங்கிது பெண்மைக் கிழுக்கென் பையினே, 10
யாங்குநிற் குணர்த்துவ னம்மே? தூங்கெழில்
ஏதென நூலோர் இயம்பின ரென்னின்
பூங்குழன் மாதர்க்குப் பொருந்துநல் நானும்,
விரையொளி நுதலோர்க்குப் புரையிலா நெஞ்சும்,
துவர்வாய்க் கனியோர்க்குத் தவறிலா நடையும், 15
அச்சக் கதவமும் எச்சமில் உரையும்,
என்றிவை தாமே யன்றிப் பிறவே
வென்றி ஆடவர் உளம்வீழ்த் தாவே!


பொழிப்பு:

மனை முற்றத்துக் கட்டிய சிலம்பியினது நுண்ணிய வலையின் இழையினைக் கொண்டு நெய்தது போலும், மறைவிடங்களைக் காவாமல் வெளிப்படுத்திய மெல்லாடையை உடுத்து, மாந்தர் புழங்கும் தெருக்களிடையே அசைகின்ற நடையினளாய்ச் செல்கின்ற இளங்கொடி போன்றவளே! மிக்க நானுறுமாறு உடையது நின் பெண்மைத் தன்மை. நின் உள்ளத்து ஊறிக் கிடக்கும் எண்ணம் எதுவோ என அறிகிலம். இளமைக் கொழுமையும் பொன் போலும் அழகுச் செழுமையும் வாய்ந்த நின் மேனியினது முழு அழகையும் எல்லார்க்கும் கரவின்றிக் காட்டுதற்கு விரும்புவையாயின், கருமையான புகையேறிய ஆடி உள்ளிருக்கும் சுடரொளியை மழுக்கிக் காட்டுவது போல், நின் உடல் வெளிப்படுத்தும் கட்டழகை நீ போர்த்துள்ள இம் மெல்லிய உடையுங்கூட மறைத்துவிடும். ஆகலின் அதனையும் அகற்றி விடுதலே நின் கருத்துப் படி சிறந்ததாகும். இவ்வாறு செய்வது பெண்மைக்கே இழுக்காகும் என்பையாயின், அம்மே, நினக்குப் புரியுமாறு உணர்த்துவது எப்படி?

செறிந்திருக்கின்ற அழகு என்பது யாது எனச் சான்றாண்மை மிக்க நூலாசிரியர் எதனை இயம்பினர் எனில், பூப்பொதிந்த கூந்தலையுடைய கவர்ச்சி மிக்க பெண்டிர்க்கு என்றும் அப்பூப் போலும் பொருந்தியிருந்து அழகும் நன்மையும் தருவதாகிய நாணமும், மணமும் ஒளியும் நிறைந்த நெற்றியை உடைய மகளிர்க்குக் குற்றமிலாத உள்ளமும், செங்கனிபோலும் வாயை உடைய அவர்களுக்குத் தவறு சேராத ஒழுகலாறும், அப்பெண்மையைக் காவல் செய்வதாகிய அச்சம் என்ற கதவமும், குற்றமில்லாத உரையும் என இவை தாமே அல்லாது அப்பெண்டிரை வெற்றி கொள்ளக் கருதும் ஆடவர் தம் உள்ளத்தை வீழ்த்தி அடிமைப் படுத்துவன வேறு அல்ல.

விரிப்பு :

இப்பாடல் புறத்துறையைச் சார்ந்தது.

பெண்டிர்க்கு வேண்டிய தற்காப்புப் பண்பியலை ஞெகிழ விட்ட ஒர் இளமகள் தனக்கு அவள் கைக்கொள்ள வேண்டிய அரும் பண்பியல்புகளைக் கூறி, சான்றோர் அறிவுறுத்தியதாகும், இப்பாட்டு.

ஆடவரைக் கவர்வதன் பொருட்டு, உடலின் அகவெழிலைப் புறங்காட்டும் ஆடையுடுத்து நடைபயிலும் ஓர் அழகிக்கு, அவ்வெழிற் புனைவுகளால் மனக்கிளர்ச்சி யுறுவார், ஆண்மை குறைந்த ஆடவர்தாம் என்பதையும், ஆண்மைமிக்க ஆடவர் அவற்றிற் கருத்து வையார் என்பதையும், அத்தகைய ஆடவருள் ஒருவன் மனத்தைக் கவர்ந்திழுத்து அவன் அன்பைப் பெறவேண்டின், பெண்மைக்குகந்த நாணும், புரையில் நெஞ்சும், தவறற்ற நடையும், அச்சமும், குற்றமுமிலாத உரையும் ஆகிய பண்புகளே என்றும் அறிவு கொளுத்தினார் என்க.

முற்றச் சிலம்பியின் நுண்ணிழை: மனையின் முற்றத்தே கட்டியிருக்கும் சிலந்தி வலையின் நுண்ணிய இழை. காட்டுச் சிலந்தியின் வலையின் இழையினும் வீட்டுச் சிலந்தியின் வலையிழை மெல்லியதாகையால் முற்றச் சிலந்தி எனக் கூறப்பெற்றது.

பஞ்சினின்று இழுக்கப் படுவதால் நூல், இழை எனப்பெற்றது. சிலந்தியினதும் அதுவே.

பெய்த - இடைச்செருகிப் பின்னிய - நெய்த

அற்றங் காவா ஆடை - மறைப்புறுப்புகளைக் காவாமல் வெளிப்படுத்தியவாறு நெய்த மெல்லிய ஆடை போர்த்து-மேலே போர்த்துக் கொண்டு- உடுத்தல் என்னாது போர்த்தல் என்றமையான், அவை உடுத்தியிருந்த முறைமை அறியப் பெறும்.

மறுகிடை - தெருவிடை விளைவும், வீடுமின்றி இடைக்குறையாக இருத்தலின் தெரு, மறுகு எனப்பெற்றது.

அசையும் மடக்கொடி யோயே - அசைந்து செல்லும் இளங்கொடி போன்றவளே மடப்பம் இளமை, மடமை மிக்க கொடியவளே என்றும் சிறப்புப் பொருள் கொள்க.

நாண்மிக வுடைத்தே நிற் பெண் தகையே - நினக்குற்ற பெண் தகைமை பார்ப்போர்க்கு நாணத்தை உண்டாக்குகின்றது. பெண்மைக்கு நாணம் அணிகலன். அஃது அவளிடத்தில் இல்லாமையால் அவளைப் பார்ப்போர் நாணமுற வேண்டியிருக்கின்றது என்க.

என்கொல் அறிகிலம் நின் உளக் கிடக்கை - நின் தோற்றத்தைப் பார்க்குங்கால் நினக்குற்ற கருத்து யாதெனப் புலப்படவில்லை. உளக்கிடக்கை என்பது அடிமனத்தே புதைந்து கிடந்து எவர்க்கும் எளிதே புலப்படாத ஆசை என்க. கிடத்தல்-தோய்ந்து கிடத்தல்.

இளம் பொன் மேனி எழில் காட்டுவையினே-பருவப் பூரிப்பும் பொன்மையும் சான்ற அழகிய உறுப்புகளைக் காட்ட விழைவது நின் கருத்தாயின்.

அவளின் புறத்தோற்றம் காண்பவர் ஒருவேளை அவளுக்குற்ற வண்ணம் அதுவோ என ஐயறவேண்டியிருந்த தென்க

மைம்புகை யாடி - கரிய புகை தோய்ந்த கண்ணாடிக் குமிழ்.

ஒளிமழுக்கல் போல் - விளக்கின் சுடரொளியை மழுக்கிக் காட்டுவது போல்.

கரிய புகை தோய்ந்த கண்ணாடிக்குமிழ், உள்ளிருக்கும் ஒளியை ஒருவாறு காட்டினாலும் தெளிவுறக் காட்டாமை போல், அவள் உள்ளுறுப்புகளின் எழிலை அவள் போர்த்தியுள்ள மெல்லாடை முற்றும் வெளிப்படுத்தாமற் போயினும் ஒருவாறு மழுக்கமுறக் காட்டிய தென்க. இங்கு உள்ளுறுப்புகளை முழுவதும் காட்ட வேண்டும் என்பது அவள் கருத்தாயின், அஃது அவள் அணிந்துள்ள உடையால் நிறைவுறவில்லை என்பது குறிக்கப்பெற்றது.

ஆகலின் - நன்றே - ஆகையால் அவள் அவ்வுடையையும் கூட அகற்றிவிடுதல் நன்று என்று அவட்கு மானம் புலப்படச் சுட்டிச் சொல்லப் பெற்ற தென்க.

ஈங்கிது - இப்படிச் செய்வது. அஃதாவது அவ்வுடையை முற்றும் அகற்றுவது.

பெண்மைக்கு இழுக்கு என்பையினே - (அவ்வாறு செய்வது) பெண் தன்மைக்கே இழுக்காகும் என்று சொல்வாயானால்,

யாங்கு நிற்கு உணர்த்துவன் அம்மே! நீ கொண்ட தோற்றத்தால் பெற்ற இழிவை எவ்வாறு நினக்குப் புரியுமாறு உணர்த்துவது, அம்மே!

தூங்கெழில் - செறிந்த அழகு.

ஏதென...என்னின் - எதுவென்று அறநூல் எழுதிய சான்றோர் எடுத்துக் கூறுவர் என்று கேட்பாயானால்,

பூங்குழன் மாதர்க்கு - பூவை மிடைந்த கூந்தலையுடைய மாதர்க்கு

பொருந்து நல்நாணும் - பொருந்துகின்ற நல்ல நாணையும் அழகுவேண்டி எங்ஙன் கூந்தலுக்குப் பூவைச் சூட்டுகின்றனரோ அவ்வாறே பெண்மைக்கு அழகு வேண்டின் நாணத்தைச் சூட்டிக் கொள்ளுதல் வேண்டும் என்று குறிப்புணர்த்தியவாறு.

விரையொளி...நெஞ்சும் - மணமும் ஒளியும் பொருந்திய நெற்றியை உடைய பெண்டிர் தம் பெண்மைக்கு மணமும் ஒளியும் சேர்ப்பதாகிய குற்றமற்ற உள்ளத்தையும்.

துவர்வாய் ... நடையும் - சிவந்து கனிபோலும் விளங்குகின்ற வாயையுடைய பெண்டிர்களுக்குத் தவறு சேராத ஒழுகலாறும், வாய், செம்மையாய் இருத்தல் போலவே நடையும் செம்மையாய் இருத்தல் வேண்டும் என்பதாம் என்க.

அச்சக் கதவமும் -பூரியர்க்கு அச்சமூட்டுகின்ற அல்லது தான் அஞ்சியொடுங்குகின்ற தன்மையும். இது பெண்மைக்கு காப்பாக அமைதலின் கதவம் எனலாயிற்று.

எச்சமில் உரை - குறையற்ற உரை, குற்றமற்ற சொல், இது பிறர் தம்மேல் சொல்லுதலும், தாம் பிறர்பால் உரைத்தலும் என இருவகைப் பொருளையும் தரும்.

என்றிவைதாமே அன்றி - இங்குக் கூறப்பெற்ற பண்பியல்புகள் மட்டுமே அல்லாமல்.

பிறவே - நீ உடுத்துக் கொண்டிருக்கும் மெல்லிய உடைகளோ, உறுப்புகளைப் பிறர் பார்த்து மனமயக்க முறும்படி வெளியில் காட்டுவது போன்ற பிறவகையில் செய்யும் புனைவுகளோ,

வென்றி ஆடவர் - வெற்றி பொருந்திய ஆடவர், ஆண்மை மிகுந்து விளங்குந் தன்மையர். உளம் வீழ்த்தாவே - உள்ளங்களை ஈர்த்து உன் அடிகளில் வீழ்த்த மாட்டா.

பெண்மைக் கிழிவான நின் செயல்களால் கவர்ச்சியுறுவோர் ஆண்மை நிறைந்தவர் ஆகார் நின் இழிந்த தோற்றத்தால் அவர்தம் ஆண்மையில் தோல்வியுற்று நிற்றலால் நீயே வென்றவளாகின்றனை. ஆனால் உண்மையான பெண்மையைச் சிலர் வெற்றி கொள்வதால், அவரே உண்மையான ஆண்மை மிக்கவராகவும் வென்றவராகவும் ஆகின்றார். எனவே அத்தகையோரே வென் ஆடவர் எனக் கூறத்தக்கவராவார்.

பெண் தனக்கியல்பாகிய நாணத்தையும் அச்சத்தையும் துறந்த விடத்தும் ஆடவரில் சிலர் அல்லது பலர் அவளை விரும்புவராயினும், அத்தகையோர் நல்லாண்மை அற்றவர் என்றே சான்றோரால் கருதப் பெறுவர் என்க. அவ்விழிந்த மன நெகிழ்ச்சியுடையவர் அவளைத் தொடர்ந்து விரும்புவதற்கும் பேணுதற்கும் இயலாது, மேலும் மேலும் அத்தன்மை வாய்ந்த புதுப்புதுப் பெண்டிரையே விரும்பி நுகரத் தலைப்படுவர். ஆகையால் அவர் நிறைந்த ஆண்மை உடையவராகக் கருதப்படுவதிலர். என்னை? நிறையுடைமை கட்டழிந்து போயின் வல்லாண்மை பெறுவதெங்ஙன்? பிறன் மனை நோக்காத தன்மையே பேராண்மை - என்று கூறப்பெறுவதையும் காண்க.

உடல் உறுப்புகள் வெளிப்படுமாறு ஆடை உடுத்தும் பெண்மையின் இழிவுத் தன்மையை நீக்குமாறும், ஆடவரை அத்தன்மையால் கவர்தல் அவர்க்குத் கருத்தாதலின் அவ்வுறுப்புகளை வெளிக்குக் காட்டாவாறு மறைத்தலே மனவியல்படியும் அறவியல் படியும் பொருந்துவதாம் என்றும், அவ்வாறின்றி அகப்புறப் படுத்தும் ஆடை உடுப்பதால் விளையும் கவர்ச்சிக்கு நல்லாண்மை சான்றவர் மயங்கார் ஆதலின் அத்தன்மை வாய்ந்த பெண்டிர்க்கு ஆண்மைக் குறைவுடைய ஆடவரே துணைவர்களாய் வாய்த்துவிடுவர் என்றும், தானமும், புரையிலா நெஞ்சும், தவறு சாரா வொழுங்கும் அச்சம் நிறைந்த காவலும், இழிவு தோயாத உரையுமே நிறைந்த பெண்மைக்குக் காப்பும் அழகும் என்றும், இத்தகைய நிறை பெண்மைக் குனங்களாலேயே ஆண்மை மிக்கவோர் ஆடவனைத் துணையாகத் தேர முடியும் என்றும், அவ்வாறு தேரும் பெண்ணும் தேரப் பெற்ற ஆணும் போன்றவர்களாலேயே இவ்வுலகம் நிறைந்த பயனெய்த முடியும் என்றும் அறிவுறுத்துவது இப் பாட்டாம் என்க.

இது புறத் தினையும், முதுமொழிக்காஞ்சி என்னும் துறையுமாகும்.

.