உள்ளடக்கத்துக்குச் செல்

நூறாசிரியம்/மெளவல் நாற்றம்

விக்கிமூலம் இலிருந்து


25 மெளவல் நாற்றம்


கைம்பாற் கள்ளி யிவரினு மொய்ம்பிலை
மைங்கால் நொச்சி மணப்பினும் அரத்துவாய்
வெவ்விலை வேம்பின் சினையணைந் தவிழினும்
மெளவல் நாற்றம் வெவ்வே றாதே!
எவ்விடம் பெயர்வோ ராயினு மவ்விடஞ் 5
செவ்வி மாறுவ ரல்லர்
ஒவ்வி யுளம்புகுந் தெனைமணந் தோரே!


'பொழிப்பு:

கைப்புடைய பால் ஊறுங் கள்ளிச் செடியின் மிசை ஏறிப்படர்ந்தாலும், அடர்ந்து நெருங்கிய இலைகளையும் கருமை பொருந்திய கால்களையும் உடைய நொச்சிச் செடியினைப் பற்றித் தழுவினாலும், அரத்தின் வாயைப் போன்றதும், வெப்பம் பொருந்தியதுமான இலைகளையுடைய வேப்பமரத்தின் மலர்முகைகளை அளாவி மலர்ந்தாலும், முல்லையின் நறுமணம் அவ்வவ் விடத்திற்குத் தக்கவாறு மாறுபட்டுக் கமழாது, வினையினிமித்தம் எத்தன்மை வாய்ந்த இடங்கட்குப் பெயர்ந்து செல்வோராயினும், அவ்விடங்களால், தமக்கியல்பான பண்பினின்று மாறுபடுவோரல்லர், புறத்தே விரும்பி உடன்பட்டு உள்ளத்துட்புகுந்து நின்று என்னை மணந்து கொண்ட அவரே!

விரிப்பு:

இப்பாடல் அகத்துறையைச் சார்ந்தது.

தலைவனின் அறிவும், பண்பும் அறிந்து, அவன் வினைப்பாடு கரணியமாகப் புறத்தே பலவிடங்களுக்கும் பெயருந் தன்மையோன் எனினும், அவ்விடங்களின் சூழ்புகளாற் கவரப்பட்டுத் தன் ஒழுக்கத்தில் மாறுபடுவோன் அல்லன் என்று அவன் பண்பாட்டைப் போற்றித் தோழியிடம் தலைவி உரைப்பதாக அமைந்ததிப் பாட்டு.

கற்புக் காலத்து மேற்கொண்ட இல்லற வொழுக்கத்திடையில் பொருள் வருவாய் கருதி, வினைமேற்கொண்டு பிரிந்த தலைவன், வரவு நீட்டித்துக் காலங்கடத்தியது கண்ட தோழி, ஒரு கால் சென்றவிடத்துப் பலதேயத்து மகளிரையும் காண வாய்ப்புழி ஒழுக்கங்குன்றுவனோ, குன்றி அவர்வயப்பட்டு நிற்க, வரவு நீடியதோ என ஐயுற்றாளாக, அவள் ஐயுறவு நீக்கி, அவன் அறிவாற்றலறிந்து அவன் பண்பைப் போற்றியுரைத்தது இக்கூற்று.

“வெண்மைத் தன்மையும் மணமும் கொண்ட முல்லை மலர்களை உடைய கொடி, கைப்புச்சுவை நிரம்பிய பால் ஊறுகின்றதும், கொழுவிய தோற்றமுடையதுமான கள்ளிச் செடியின் மீது இவர்ந்து படர்ந்தாலும், கருமைத் தன்மையும் நறுமணமும் கொண்ட இலைகளையும் கரிய கால்களையும் உடைய நொச்சிச் செடியினைத் தழுவி நின்றாலும் , அரம் போலும் ஒரத்தரும்புடையதும் வெப்பு நிறைந்ததும் ஆகிய வேப்பமரத்தின் மலர் முகைகளை அளாவி நின்றாலும், தன் வெண்மையினும் மனத்தினும் மாறுபடாது பூத்தல் தொழில் செய்வது போல், பழக்க வொழுக்கங்கள் மாறுபடும் பல தேயங்கட்குச் செல்லினும் என் தலைவன் தனக்குற்ற இயல்பான பண்பொழுக்கினின்று மாறுபடும் தன்மையோன் அல்லன்” - என்று அவன்பால் ஐயுற்ற தோழிக்கு அறிவுறுத்தினள் என்க.

ஈண்டு முல்லைக்கொடி அவன் செலவையும், மலர் அவன் உள்ளத்தையும் குறித்தன. கைம்பாற் கள்ளியும், மொய்ம்பிலை மைங்கால் நொச்சியும், அரத்துவாய் வெவ்விலை வேம்பும் பிற தேயங்களின் வேறுபாடுணர்த்த வந்தன. கள்ளியினது கசப்பு நிறைந்த பாலும், நொச்சியின் மணமும் கருமையும், வேம்பின் வெப்பும் ஆங்காங்கு வசதியும் நிறையழி மகளிரது கவர்ச்சியையும் தன்மையையும் உணர்த்த வந்தன என்க.

கைம்பால் கள்ளி - கைப்பு நிறைந்த வெள்ளி பாலையுடைய கள்ளி. ஆவின் பால் போன்ற தோற்றங் காட்டினும் கள்ளிப்பால் சுவைப்பின் கசப்பும் உண்ணின் உயிர்ப்போக்குந் தன்மை உடையது போல், பார்த்தற்கு நிறையுடையவர் போல் தெரியினும் பொது மகளிர் புழக்கத்திற் கசப்பும், தன்மையில் உயிர்க்கு ஊறும் கொண்டவராவர் என்றாள் என்க. தன் தலைவன் பொருட்களின் தோற்றம் மட்டுமன்றி மெய்ப்பொருளும் தேர வல்லவன் என்று கூறினாள் என்க.

இவர்தல் - ஏறிப்படர்தல்

ஈண்டு கள்ளி - பிரிவாகிய பாலைக்கு உரிப்பொருளாகி நின்றது.

‘நிலத்தூன்றிய முல்லை, அதனின்றெழுந்து ஏறி, நிலத்தைப் பிரிந்து பாலைத்திணைக்குரியதாகிய கள்ளியின் மேல்படரினும்' என்று பொருள் கொள்க.

மொய்ம்பிலை மைங்கால் நொச்சி-மொய்த்தடர்ந்த இலைகளையுடையதும் கரிய கால்களையுடையதுமான நொச்சிச் செடி

நொச்சி மணமுடையது போல் தோன்றினும் நோயுடையார் நாடிப் போவதொன்றாகலின் அதன் தன்மையினையும் வரைவின் மகளிர்க்கு உவமை கூறினள்.நிறையழி பெண்டிர் நிறைந்த நிலத்து, உறைவோனாயினும் உளத்தின் வெண்மையும் மணமும் விலக்கோனல்லன் என்பது தலைவியின் உறுதி.

மனப்பினும் - தழுவிப் படர்ந்தாலும்.

அரத்துவாய் வெவ்விலை வேம்பு- அரத்தின் பற்களைப் போன்ற ஒரங்களை உடைய வேம்பின் இலை.

வெள்பு-வெப்பு-வேம்பு, வெப்பம் நிறைந்த தன்மையுடைய மரம்.

வரைவின் மகளிர் தம் பற்கள் கூரியவாயினும் அரத்தின் பற்களைப் போல் கொடுமையன. அவை தழுவத்தழுவத் தழுவப் பெற்ற பொருள் நிலைகுலைவது போல், அவரால் தழுவப்பெற்றாரும் நிலைகுலைந்து போவர் என்பது பொருள்.

சினையனைந் தவிழினும் - வேம்பின் பூஞ்சினைகளை யணைந்து அவற்றோடு தானும் ஒன்றாக முல்லை மலர்ந்தாலும்.

பூஞ்சினைகளொடு பொருந்தி நின்றது, தலைவன் புறப்பெண்டிரொடு நெருங்கிப் படரும் நொச்சியைக் குறித்தது. அவ்வாறு நெருங்கிப் படரினும் தன் தன்மையில் மாறுபடாத் தகையவன் அவன் என்றாள் என்க.

மெளவல் - முல்லை - காட்டு மல்லிகை.

வெவ்வேறாதே - வெவ்வேறு ஆகாது - ஆதே-இடைக்குறை.

எவ் இடம் பெயர்வோன் ஆயினும் - எத்தன்மை வாய்ந்த இடம் நோக்கிப் பெயருந் தன்மையோன் எனினும்.

அவ்விடம் - அவ்விடத்து.

செவ்வி - ஒழுங்கு பண்பு - நேர்மை,

செம்- பகுதி நேர்மையைக் குறிக்குமொரு சொற்பகுதி.

செப்டம்-செம்மை- செவ்வி.

மாறுவர் அல்லர்-மாறுபடுவோரல்லர் 'மாறா'என்று குறியாது, மாறுவர் அல்லர் எனக் குறித்தது, அவ்வாறு மாறுபடுவோர் பலராகலின், அத்திறத்தோர் இவரல்லர் என்று உறுதிப்படுத்த வேண்டி என்க.

ஒவ்வி-புறத்தே ஒப்பி.

உளம் புகுந்து - உளத்தே புகுந்து உளத்தில் நிறைந்து,

எனை மணந்தோர் - என்னைத் தழுவினோர். மணந்தவர்.

ஆடவர் பலர் போலன்றி என் தலைவன் தன் திறத்தில் என்றும் எவ்விடத்தும் மாறுபடாத் தன்மையோன் என்று கூறி அவன் மேல் தோழி கொண்ட ஐயத்தைப் போக்கித் தன் தலைவனின் ஒழுக்கத்தை உறுதிப் படுத்தினாள் என்க.

இது முல்லைத் திணையும் அவனறிவாற்ற லறிந்தேற்றியது என்னுந் துறையுமாம்.