உள்ளடக்கத்துக்குச் செல்

நூறாசிரியம்/நலங்கூர் நாவினர்

விக்கிமூலம் இலிருந்து


24 நலங்கர் நாவினர்


முரசுகடிப் புண்ட அரசரு மல்லர்;
உரைசெல் லாட்சியின் அவரி னோங்கியர்.
கோன்முறை திறம்பிக் குடிநிலை திரிமுன்
ஆன்றுரை கொளுவும் அமைச்சும் அல்லர்:
நவைதீர் அவையின் நலங்கூர் நாவினர். 5
நுரைப்பஞ்சின் நரைதாங்கி
அரியேற்றின் அணலடர்ந்து
நெறியாற்றின் நெஞ்சுபடரப்,
பாடியுஞ் சேரியும் பட்டினப் பாக்கமும்
ஊருங் குடியும் ஒதை நகரமும், 10
வெய்யினும் மழையினும் விதிர்க்கும் பனியினும்
பொய்யினும் புரையினும் பூட்கை தளராது,
காலையும் மாலையும் கடும்பகல் யாமமும்,
வைகலும் நாடி மெய்கலந்து புனைவின்றிக்
கொல்வரியின் சொல்பாய்ச்சித் 15
தொல்குடிமை கட்டழித்த
ஆரியத்தை அடிதுமித்துப்
பட்டமும் பதவியும் பரவலும் நாடாது,
பழமை கடிந்து பாழ்மை புலங்காட்டி,
மருளும் இருளும் மறுமையும் போக்கி, 20
நிகழ்நலம் ஒன்றே நிறைத்தெனக் காட்டிக்
குலக்கோ டரிந்து சமயக்கா லறத்துணித்துக்
கலக்குறு கொள்கைக் கடவுண் மறுத்தே
யாரும் யாவும் யாண்டுந் துய்மெனப்
புதுமை பொழிவித்துப் பொதுமை தழைவிக்கும் 25
அரிய ராகலி னவரே
பெரியா ரென்னும் பெயரி யோரே!


பொழிப்பு:

குறுந்தடியால் அடிக்கப்பெற்ற முரசை உடைய அரசருள் ஒருவரும் அல்லர் உரையைக் கட்டளையாகக் கொண்டு செலுத்தப் பெறும் ஆட்சி வன்மையுடைய அவ்வரசரினும் ஓங்கிய ஆற்றல் உடையவர். அரசு முறை மாறுபடலால் குடிமக்களும் தம் நிலையினின்று கெடலுறு முன், அவ்வரசர்க்கு அறிவான் அமைந்து அறவுரை கூறி, அதனை மேற்கொண்டொழுகச் செய்ய வல்ல அமைச்சரும் அல்லர்; குற்றமற்ற அவ்வமைச்சரவையைச் சார்ந்தாரினும் குடிகளின் நலத்தை மிகுதியும் எண்ணி உரைக்கின்ற நாவினை உடையவர். நீரின் நுரைபோலும் மென்மையும், பஞ்சின் இழை போலும் வெண்மையும் கொண்ட நரையைத் தாங்கி, ஆண் அரிமாவின் பிடரியைப் போலும் முகத்துத் தாடியும் மீசையும் அடர்ந்து, மக்களை நெறிப்படுத்தும் வழிமுறைகளையே நினைத்து நிற்கும் நெஞ்சின் மீது படர்ந்து தொங்குமாறு, பாடிகள், சேரிகள், பட்டிகள், பாக்கங்கள், ஊர்கள், குடிகள், ஆரவாரம் மிகுந்த நகரங்கள் தோறும், வெயிலிலும், மழையிலும், நடுக்கஞ் செய்கின்ற பனியிலும், பிறர் தூற்றும் பொய்யுரைகளுக்கும், குற்றஞ் சார்ந்த இழிவுரைகளுக்கு மிடையிலும் தாம் கொண்ட கொள்கைப்பாட்டின் உறுதி தளராமல், காலையென்றும், மாலை யென்றும், வெப்பம் மிகுந்த நண்பகலென்றும், குளிர் மிகுந்த நள்ளிர வென்றும் பாராது, ஒவ்வொரு நாளும் தாமே நாடிப்போய்த் தம் கொள்கையை வலியுறுத்த உண்மையான செய்திகளையே துணைக்கொண்டு, சொற்புனைவும், கருத்துப்புனைவும் இல்லாது, கொல்லப் பாயும் வரிப்புலியின் வீறுசான்று சொற்களைக்கேட்போரின் செவிவழி மனவயலில் பாய்ச்சியும், தமிழ்க்குடியின் வன்மையைக் குலைத்து அழித்த ஆரிய இனத்தின் கேடுகளை அடியோடு வெட்டிச் சாய்த்தும், பட்டப் பெயர்களையும், பதவி நலன்களையும் பாராட்டுரைகளையும் மனத்தால் விரும்பாமலும், மக்கள் தம் அறியாமையால் கைக்கொண்டொழுகும் பழக்க வழக்கங்களைக் கடிந்து விலக்கியும், அவர் தம்மை வளர்ச்சியின்றி வெறுமைப்படுத்தும் இழிநிலைகளைச் சுட்டிக்காட்டியும், மக்களின் மயக்கமுற்ற போக்கையும், அறியாமை இருளையும், பிறவி நம்பிக்கைகளையும் நீக்குமாறு அறிவுறுத்தியும். கண்கூடான வாழ்வு நலம் ஒன்றே யாவருக்கும் நிறைவானதெனச் சுட்டிக் கூறியும், மக்கள் நலமெய்த முட்டுக்கட்டைகளாக நிற்கும் குலப் பாகுபாடுகளை வெட்டி வீழ்த்தியும், சமயங்களின் அடிநிலை வேர்களை அறுத்தும், தெளிவற்றுக் குழப்பமான கொள்கை சார்ந்த போலிக்கடவுள் தன்மைகளை மறுத்துரைத்தும், எல்லா மக்களும் , எல்லா நலன்களையும், எவ்விடத்தும் துய்த்தல் செய்யுங்கள் எனும் புதுமை உரைகளைப் பொழிவித்து, அதன் வழிப் பொதுமை யறத்தை மக்கள் மனத்தில் தழையச் செய்தும் வருகின்ற அரிய செயல்களுக்கு உரியவர் ஆகலின், அவரே பெரியார் என்னும் பெயர்க்கு உரியவர் ஆவர்.

விரிப்பு:

இப்பாடல் புறத்திணையைச் சார்ந்தது.

கோவை,ஈரோட்டைச் சேர்ந்த வேங்கட இராமசாமி என்னும் இயற்பெயர் கொண்டவர், தம் செயற்கரிய செயல்களால் பெரியார் எனும் சிறப்புப் பெயர் கொண்டு அழைக்கப்பெறும் தன்மையை உறுதிப்படுத்தி, வாழ்த்திப் பாடியதாகும் இப்பாட்டு.

தொன்மையும் பெருமையும் வாய்ந்த தமிழ்ப்பேரினம், இடையில் வந்து கலந்த ஆரிய இனத்தால் தம் குடிமை இழந்து, தாழ்வுற்று, மருளும் இருளும் நிறைந்த பல மூடப்பழக்க வழக்கங்களை மேற்கொண்டு மேலும் மேலும் தன்மானமிழந்து தாழ்ந்து போதலைக் கண்டு வருந்தி, அவர்களைத் திருத்தும் பொருட்டுத் தம் வாணாள் முழுமையும் ஒவாது உழைக்கும் ஈ.வே. இராமசாமி என்னும் இயற்பெயரியர், தம் செயற்கரிய செய்கையால், பெரியார் என மக்களால் அழைக்கப் பெறுதலைக் கண்டு வாழ்த்திப் பாடியது இது.

முரசு கடிப்பு உண்ட அரசரும் அல்லர் - இவர் குறுந்தடியால் அடிக்கப்பெறும் முரசை உடைய அரசருள் ஒருவரும் அல்லர் கடிப்பு-குறுந்தடி

முரசு கடிப்புண்ணுதல் - முரசு குறுந்தடியால் அடிக்கப் பெறுதல்.

உரை செல் ஆட்சியின்- தம் வாயுரை செல்லுபடியாகி ஆளுமை செய்யும் ஆட்சி. வெறும் வாயுரையே கட்டளையாகி ஆட்சி செய்தல் அரசர்க்கே இயல்வதொன்று ஆயினும், அரசரல்லாத இவருடைய சொல்லும் தமிழக மக்களிடைச் செல்லுபடியாதல் ஒரு நாட்டையாளும் அரசர்க்குரிய பெருமையை இவருக்களித்தது. ஆனால், கருவியும், காவலும், கடிமதிலும், நாடும் உடைய அரசரின் சொற்கள் செல்லுதல் வியப்பன்று : அவை இல்லாத இவரின் சொற்கள் அரசரின் கட்டளைச் சொற்களாக மக்களால் ஏற்கப் பெறுகின்றன எனின் இவர் அரசரினும் ஓங்கிய அதிகாரம் உடையராதல் பற்றியே இவரை அவரின் ஓங்கியர் எனலாயிற்று.

கோன்முறை திறம்புதல் - அரசன் தனக்குற்ற நெறிமுறைகளினின்று மாறுபடுதல்.

குடிநிலை திரிமுன் - அரசன் நெறிபிழைத்தலை யொட்டிக் குடிகளும் நிலை திரிவார்களாகையின், அதற்குமுன் என்றபடி

ஆன்றுரை - அறிதலால் அமைந்த உரை.

கொளுவும் - உணர உரைக்கும், செலச் சொல்லும்.

அரசன் நெறிதவறின் குடிகளும் தவறுவர் என முந்துணர்ந்து, அவன் அங்ஙன் தவறாதவாறு உணர வுரைக்கும் அமைச்சரும் அல்லர் இவர்.

நவைதீர் குற்றந் தீர்ந்த - அறியாமை நீங்கிய

அவையின் - அறியாமை நீங்கிய அமைச்சரவையினும்

நலங்கூர் நாவினர் - அரசினதும், குடியினதும் நலன்களையே மிகுத்து நாடும் நாவினை உடையவர். அமைச்சர்க்குற்ற கடமையாலும், ஊதியம் பெறும் கருத்தாலும், அரசன் நெறிபிழைத்தல் குடிபிழைத்தலுக்குக் கரணியமாகு மென்றுணர்ந்து, முன்கூட்டியே அவர்க்கு அறிவுரைத்தல் இயல்பாம் என்க.ஆனால் இவரோ, தாம் குடிகளுள் ஒருவராகி, ஊதியமும் அதன் மேற் கடமையும், பெறவும் பேணவும் அல்லவராயிருந்தும், அவ்வாறு பிழைத்தொழுகும் பேதைமையை இடித்துரைக்கும் தன்மையினராய் இருத்தலின் அவ் வமைச்சரினும் குடிகளின் நலனோம்பும் நாவினர் எனலாயிற்று.

நுரைப்பஞ்சின் நரைதாங்கி - நுரைபோலும் மென்மையும், பஞ்சு போலும் வெண்மையும் சார்ந்த நரைமுடியைத் தாங்கி

அரியேறு - அரிமாவின் ஏறு.

அணல்- தாடி முகவாயின் தோன்றிய மீசையும் தாடியும்.

நெறியாற்றின் நெஞ்சு படர - நெறிமுறைகளை வழிப்படுத்தும் நினைவு சான்ற நெஞ்சின்மீது படர்ந்து புரளும்படி

பாடியும்...நகரமும் - முல்லை நிலத் தூர்களாகிய பாடியும் சேரியும், நெய்தல் நிலத்துரர்களாகிய பட்டினமும் பாக்கமும், மருதநிலத்து ஊராகிய, ஊரும் குறிஞ்சி நிலத்தூராகிய குடியும் ஆரவாரமிக்க நகரமும்,

வெய்யினும்...பனியினும் - வெயிலென்றும், மழையென்றும், நடுங்குகின்ற பனியென்றும் பாராது வினைமேற்கொண்டு.

பொய்யினும் புரையினும் - மனத்தை அலைவிக்கும் பொய்யுரைகளாலும், வினையைத் தளர்விக்கும் பழியுரைகளாலும்,

பூட்கை தளராது - தாம்கொண்ட உறுதிப்பாடான கொள்கையில் நிலை நெகிழ்வுறாது.

காலையும் மாலையும் கடும்பகல் யாமமும் - காலையிலும், மாலையிலும், இடைப்பட்ட நடுப்பகலிலும், நடு யாமத்திலும்,

வைகலும் நாடி - நாள்தொறும் மக்களை நாடிப்போய்.

மெய்கலந்து - தம் கருத்தை எண்பிக்கும் மெய்ம்மை சான்ற எடுத்துக்காட்டுகளை இடையிடைக் கலந்து.

புனைவின்றி - சொல்லாரவாரங்களாலும், கருத்து ஆரவாரங்களாலும் அழகுபடுத்தாது எளிய உரைகளால்.

கொல்வரியின் சொல்பாய்ச்சி - கொல்லப் பாயும் வரிப்புலியைப் போலும் வீறுசான்ற சொற்களைக், கேட்போர் உணரும்படி செலச்சொல்லி சொல்லாகிய நீரை மனமாகிய விளைநிலத்து விரைந்து பாய்ச்சி.

தொல் குடிமை கட்டழித்த - தொன்மை மிக்க தமிழ்க் குடியினைக் கட்டுக்குலைத்த ஆரியத்தை அதுமித்து - தமிழினத்தொடு இடை வந்து கலந்த ஆரிய இனம் தாம் பிழைத்தல் வேண்டிப் புகுத்திய எத்து ஏமாற்றுகளின் அடிப்படையெல்லாம் கூறிக்கருத்தான் முறியுண்டுபோமாறு வலுவிழக்கச் செய்து,

பட்டமும் பதவியும் பரவலும் நாடாது - ஆரவாரம் மிகுந்த பட்டப் பெயர்களையும், அதிகாரத்தையும் செல்வத்தையும் மிகுக்கின்ற அரசப் பதவிகளையும், புகழுரைகளையும் நோக்கமாக நாடாது, தொண்டு ஒன்றே குறிக்கோளாய் நின்று.

பழமை கடிந்து - அறியாமையால் மக்கள் தாங்கொண்ட மூடப் பழக்கங்களைக் கடிந்து விளக்கி;

கைம்பெண்ணை மீண்டும் மறுமணஞ்செய்வித்தல் கூடாதென்பதும், பெண்ணைக் கல்வி புகட்டாது அடிமைப்படுத்தி வைத்தல் வேண்டுமென்பதும், அம்மி மிதித்தல், அருந்ததி காட்டல், குத்து விளக்கேற்றுதல், தீவலம் வருதல் போலும் சடங்குகளன்றித் திருமணஞ் செய்வித்தலாகா தென்பதும், காருவா (அமாவாசை), வெள்ளுவா (பெளர்ணமி) நாள்களிலும், கோள் மறைப்புக் காலங்களிலும் சடங்குகள் செய்தல் வேண்டுமென்பதும் போன்ற பழமை நிரம்பிய மூடப்பழக்க வழக்கங்களைக் கடிந்து விலக்கியவர் இவரே என்க.

பாழ்மை புலங்காட்டி - மக்களை முன்னேற்ற விளைவற்றவர்களாக ஆக்குகின்ற இழிநிலைகளை அவர் தம் அறிவுக்குப் புலப்படுமாறு விளக்கிக் காட்டி

மக்களை நான்கு பிரிவுகளாக ஆக்கும் ஆரிய 'வருண' முறைகளையும், அவற்றுள் மேற் பிரிவினர்க்கு அடுத்துள்ள பிரிவினர் தாழ்ந்தவர் என்னும் ஏற்றத் தாழ்வுகளையும் அவர்களுள் ஒரு சாராரைத் தீண்டத்தகாதவர் என்றுரைத்த கொடுமையையும் அன்ன பிறவற்றையும் மக்களை இழிந்தோராக்கும் பாழ்மைகள் என்ற எடுத்துரைத்து, அவற்றிற்குரிய அறிவுநிலைகளைச் சுட்டிக்காட்டி விழிப்புறச் செய்தவர் இவரே என்க.

மருளும் இருளும் மறுமையும் போக்கி - மக்கள், அறியாமை நிலைகளுள் வழிவழியாய்க் கொண்ட ஈடுபாட்டு மயக்கத்தையும், அறிவொளி காணாது அறியாமை இருளுள் தம்மைப் புதைத்துக் கொள்ளும் மனமிருண்ட தன்மைகளையும், மறுபிறப்பு முதலிய பிறவிக் கருத்துகளால் ஏற்பட்ட போலித்தன்மைகளையும் போக்கி;

ஆ. முதலிய விலங்குகளையும், கலுழன் முதலிய பறவைகளையும், மூஞ்சுறு முதலிய சிற்றுயிர்களையும் வழிபடுகின்ற மயக்கத்தையும், ஏவல், வைத்தல், எடுத்தல் ஆகிய பில்லி, இடுமருந்து, மோடி முதலியன செய்தலும், கழிப்பாலும் காற்றாலும் நோய் முதலியன நீங்கும் என்று நினைத்தலும் ஆகிய அறியாமை இருளையும், நோயும், நொடியும், வறுமையும், வாழ்வும் முன்பிறவியிற் செய்த தீவினை நல்வினையைப் பொறுத்தன என்றலும், இப்பிறவியில் இல்லாதார் துன்புறினும் மறுபிறவியில் நலமெய்துவர் என்றலும் ஆகிய பிறவி நம்பிக்கைகளை நீக்குமாறு மக்கட்கு அறிவுறுத்தி நீங்கச் செய்யப் பாடுபட்டவரும் இவரே என்க.

திகழ் நலம்ஒன்றே நிறைந்தெனக் கூறி - கண்கூடான வாழ்வு நலம் ஒன்றே மக்கள் யாவர்க்கும் அறிவுக்கும் பொந்திகை தருவதெனக் கூறி, பொந்திகை மனநிறைவு.

குலக்கோடறிந்து - குலப்பிரிவுகளின் கொடுமை மிக்க ஏற்றத் தாழ்வுகளைத் தம் கருத்தால் முறிவுறச் செய்து குலமாகிய கிளைப் பிரிவுகளை அரிதல் செய்து;

சமயக்கால் அறத்துணித்து - போலியும் புன்மையும் நிறைந்த செயல்களின் மேற் கட்டப்பட்ட போலிச் சமயப் புனைவுகளை அறவே வெட்டி வீழ்த்தி.

ஒவ்வொரு சமயமும் பிறிதொவ்வொன்றுக்கும் மாறுபட்ட அமைப்புகளையே உடைமையின், அவை ஒவ்வொன்றும் மக்களை ஒரு மித்த வழியிலல்லாது வேறுபட்ட வழிகளிலேயே கொண்டு சேர்த்துப், புன்மையும் பூசலும் நிரப்பி வருகின்ற நிலைகளைத் தம் ஆற்றல் பொருந்திய அறிவுரைகளால் மக்கள் மனங்களினின்று வெட்டி வீழ்த்திய குமுகாயச் சீர்திருத்தக்காரர் இவர்-என்க.

கலக்குறு கொள்கைக் கடவுள் மறுத்தே - மனக் கலக்கத்தினின் றெழுந்த கொள்கையால் தோன்றிய கடவுள் தன்மைகளை மறுத்து மனத்தூய்மையால் எய்தப் பெறுவது இறைக் கொள்கை. அவ்வாறின்றி மனத்துய்மை பெறாது தீய நினைவுகளாலும் தந்நலப் பற்றுகளாலும் கலக்கமுற்றுக் கற்பனை நிறைந்த நிலையில் தோன்றியது கடவுட் கொள்கையாகலின் அதை மறுத்தார் என்றபடி என்னை? 'உள்ளங்கடந்த பொருள்' என்பது கடவுளெனின், உள்ளங் கடந்த பொருள் உள்ளத்துக்குப் புலப்படுவதெங்கன்? இனி உள்ளம் கடந்ததெனின் உள்ளம் என்பது வேறா? உள்ளமும் கடவுளும் ஒரே பொருளெனின் உள்ளத்தைக் கடந்து நிற்பது கூடுமோ? பொருள் என்பது மாத்திரை (அளவு)களான் அறியப் பெறுவதொன்றாகலான் கடவுளை அறியப் பெறுவதில் வேறுபாடுகள் தோன்றுவது ஏன்? ஓருள்ளத்தே கடவாமல் நின்றும் பிறிதோருள்ளத்தே கடந்து நின்றும் இருத்தல் கூடுமோ? அவ்வாறன்று உள்ளம் என்பது அறிவு; ஆகையான் அறிவான் அறிந்துரைக்கப் பெறாத ஒன்று என்றுரைக்கின்; அறிவுக்குப்புலப்படாததை அறிவறிந்த தெவ்வாறு? அறிவு காணாத ஒன்றை அறியக் கண்டது எது? அஃது ஒருவர்பாலிருந்து ஒருவர்பால் இராத கரணியமென்னை? உளர்பால் உணர்வித்தும் இலர் பால் மறைப்பித்தும் செய்தது எது? அவ்வல்லமை எவர்க்குண்டு? கடவுட்கே உண்டெனின் அவர் தோன்றாதிருக்கச் செய்த கரணியம் என்ன? அதனை நீவீர் அறிந்தது யாங்கன்? யாம் அறியவேண்டாதென்று கடவுள் கருதிச் செய்த ஒன்றை நீவிர் எமக்குப் புலப்படுத்த முயற்சி செய்வது ஏன்? என்பன போலும் வினாக்கள் எழுதலை உன்னுங்கால் கடவுள் என்னும் தன்மையை மக்கள் உணர்ந்த நிலை மனக்கலக்கமுற்ற நிலையே என முடிவு வரும்.

இனி, கடவுளின் மெய்க்கொள்கைதான் என்னையோ எனின், அது கலக்கமுறா மனத்தெழுந்த தெளிந்த இறைக்கூறுபாடே என்க. இறை எனும் கொள்கையோ மறைவெளிப்பாடு. (கடவுள்-உள்ளங் கடந்தது, இறையாவினும் இறுத்த தன்மை உடையது. இறுத்தல்-தங்குதல்) மறைந்த நிலை புலப்படுவது இறை-என்னை? அறியக் கண்டது அறியாமை, அறியாமை கண்டது அறிவு. அறிவின் பலநிலைப்படிகளின் மீமிசைக் கொள்கையே மெய்யறிவுக் கொள்கை. அதுவே இறைக்கொள்கை. இறைநிலையுள் அணுவும் அண்டமும் ஒன்றே இறைநிலையுள் அறிவும் அறியாமையும் ஒன்றே, விருப்பும் வெறுப்பும் ஒன்றே! புனலும் அனலும் ஒன்றே நிலனும் விசும்பும் ஒன்றே; புலம்பனும் உடலும் ஒன்றே ஒன்றினுள் ஒன்று ஒடுங்கும்; வெளிப்படும்; ஒன்றைவிட் டொன்று இயங்கும் அடங்கும் ஆகிய அனைத்து வினைப்பாடுகளும் இறைக் கூறுபாடே! இவற்றுள் இஃது இறைமை, இஃது இறைமையன்று என வேறுபிரித்தல் மாந்த அறிவுக்கு எட்டாதது. இவற்றின் தனித்தனி விளக்கமே அறிவியலும், சமயமும், நம்பு மதமும் நம்பாமதமும், பத்திமையும், பற்றின்மையும். இவற்றை விரிக்கில் மிகப்பெருகும். எனவே இறைமை என்னும் தன்மை எவராலும் மறுக்கப்படுவதொன்றன்று. எவராலும் மறுக்கப்படாததெதுவோ, எவராலும் ஒப்புக்கொள்ளப்படுவதெதுவோ அதுவே இறைத்தன்மை, அன்பு, தாய்மை, இன்பம் முதலிய விழை பாடுகளும், சினம், பேய்மை, துன்பம், முதலிய வெறுக்கைப்பாடுகளும் இறைத்தன்மைகளே. தீயின் குடும், நீரின் குளிர்ச்சியும், இடியின் கொடுமையும், மழையின் அருண்மையும் இறைத் தன்மைகளே! இவற்றுள் ஒளி வேண்டுவன சில இருள் வேண்டுவன சில:தீ வேண்டுவது சில நிலை, நீர் வேண்டுவது சில நிலை வேண்டப் பெறும் உயிர்களுக்குப் வேண்டப் பெறாத நிலைகள் உளவாகையால், அவை இறைமையல்லாது போய்விடுமோ ? அழுதரற்றும் துன்பம் தேவையற்றதெனின், கண்ணீரால் கண்கள் கழுவித் தூய்மை செய்யப் பெறுதல் இல்லாது போகுமே; அழுகையால் புலர்ந்து மலரும் சில உடலனுக்கள் தோன்றாதொழியுமே ; இடி மின்னல் இன்றாயின் உலகுக்குக் காந்தவெளி குறைந்து வெறுமையுறுமே, ஆகையின் ஒளியும் இருளும் இறையே. துன்பமும் இன்பமும் இறைத்தன்மைகளே. அவை ‘கன்மத்தாலோ’, ‘மாயையினாலோ' உண்டாக்கப்பெறும் என்பன வெல்லாம் இறைவியல் தெளிவற்ற கலக்கமுற்றார் கதைத்த உரைகளே. அக்கன்மமும் மாயையும் இறையினின்று வேறுபடுவன வென்னின், இறைமையின் தனித்தன்மைக்கே இழுக்கெனக் கொள்க. அக்கதைப்புரைகளின்றெழுந்த கடவுட் கூறுபாடுகள் இறைமையைப் பழிக்கும் இழிவுரைகளே! கிளியைக் கோட்டானென்றும், மானை மந்தி யென்றும் உரைத்த போலியுரைகளே!

எனவே பெரியார் மறுத்துரைக்கும் கடவுட் கொள்கை என்பது சமயக் குரவர்கள் என்னும் கற்பனைக் கலைஞர்கள் படைத்த கட்டுரைகளையே என்றும், உண்மையான இறைமையினை எவரும் மறுத்தற்கியலாதென்றும், அவ்வாறு மறுப்பாரின் உரை, தீயைக் காற்றென்றும், காற்றைக் கனப்பென்றும் கூறுதல் போலும் குறட்டுரைகளே என்றும், அவ்வாறு கூறுவார் உலகில் ஒருவரும் இலர் என்றும், குழந்தைக்கும், குமரனுக்கும் தந்தைக்கும், தாய்க்கும் புலப்படும் அன்பு பல்வேறு நிலைகளை உடையதெனினும், அவற்றை இல்லை யென்று மறுப்பார் எவருமிலாது போலவும், ஒருவருக்கு மிகச்சுடும் வெந்நீர், பிறிதொருவர்க்கு மிகக் குறைவாகச் சுட்டாலும் அதனைக் குளிர்நீர் என்று கூறுவார் எவருமிலாது போலவும், இறைமை பல்வேறு உயிர்களால் பலவகையில் அறிந்து கொள்ளப் பெற்றாலும் அத்தன்மையினை இல்லை என்று மறுப்பார் எவருமிலர் என்றும் தெளிந்து கொள்க.

இனி, “தீய நினைவுகளாலும், தந்நலப் பற்றுகளாலும் கலக்கமுற்றுக் கற்பனை நிறைந்த நிலையில் தோன்றியது கடவுட் கொள்கையாகவின் அதை மறுத்தார் என்றபடி" என்னும் முற்கூறிய அடியினுள் வரும், தீய நினைவுகள் தந்நலப்பற்று கற்பனை- முதலிய சொற்கள் எவற்றைக் குறிப்பன என்பதற்கும், அவை இறைமை ஆகாவோ என்பதற்கும் விடையென்னெனின் கூறுதும். -

தீயநினைவும், தந்நலப்பற்றும், கற்பனையும் இறைமையே! ஒன்றுக்குத் தீது பிறிதொன்றுக்கு நன்றாயும், ஒன்றுக்குத் தன்னலம் பிறிதொன்றுக்குப் பிறநலமாயும், ஒன்றின் கற்பனை பிறிதொன்றின் நிகழ்பாடாயும் இருத்தல் கண்கூடு. (மாந்தன் பறப்பது போலும் செய்யும் கற்பனை, பறவைக்கு நிகழ்பாடாயிருத்தல் காண்க) உலகியல் இயங்கும் பல்லாயிரங்கோடி உயிர்களுள் மாந்த உயிரினத்திற்கு என மாந்த இனம் வகுத்துக் கொண்டவையே அதற்கு நன்மையென்றும், தீமையென்றும் பெயர் பெறுவன. இவை ஓர் எல்லையுட்பட்டன. பெண்டிர் யாவரும் ஒருவர் போல்வரே என்னும் இயற்கூறுபாட்டில், மாந்தன் அவரைத் தாயென்றும், மனையென்றும், தங்கையென்றும் வகுத்துக் கொண்டது போல்வதே எல்லை என்க. அவ்வெல்லை கடந்தோமெனின் நம் நன்மை இன்னொன்றால் தீமை என்று பெயர் சூட்டப்பெறுவதையும், நம் தீமை இன்னொன்றால் நன்மை எனப் பெயர் சுட்டிச் சொல்லப் பெறுவதையும் நாம் உணரலாம். அக்கால் நாம் கொண்ட நமக்குகந்த தன்மைகள் மாறுபட்டுப் போவுதைப் பார்க்கலாம். அந்நிலையில் அவை இறைமையில்லை என்று சொல்லப் பெறுமா?

மாந்தநிலையில் உணவு எரிக்கப்பட்டுச் செந்நீர் உறிஞ்சப் பெற்றால் எஞ்சிய கரி மலம் என்று சுட்டப்பெறும் கழிவென்றும் இழிவென்றும் தள்ளப் பெறும் அது, பன்றிக்கு உணவுதானே, நமக்கு உணவு இறைமை என்றால், இறைவன் தந்ததென்றால் பன்றிக்கு மலம் இறைமையென்றும் இறைவன் தந்தது என்றும் கூறப்பெறுவதில் பிழையென்ன?

எனவே, சமயங்களைத் தோற்றுவித்த கற்பனைக் கலைஞர்கள் அனைவர் கருத்துகளும் அவர்கள் அவர்களுக்குள்ளாகவே மறுத்தொதுக்கும் கருத்துகளென்று உணர்க. மறுக்கப்படாத அறிவு எதுவோ, மறுக்கப்படாத உணர்வுநிலை எதுவோ இறை என்க. பிறநிலைகள் எல்லாம் இறைமையின் தன்மாத்திரைக் கூறுபாடுகளே.

இவ்வடிப்படையில் நோக்கின் சமயங்கள் கூறுகின்ற கடவுள் நிலைகள் கலக்குறு கொள்கையின் எழுச்சிகளே ! அவை அனைத்தும் இறைமைக்குட்பட்ட கோட்பாடுகளே எனினும் அவைதாம் இறைமை எனச் சுட்டப்பெறுவதில் தவறில்லை. பிறவெல்லாம் வேறு என்பதில்தாம் பிழைபாடுகள் நேர்ந்திருப்பதை அறிவியல் கண்கொண்டு பார்ப்போர் உணர்வர். அறிவியல் மெய்யறிவியலுக்கு மாறுபட்டதன்று. மெய்யறிவியலுக்கு அறிவியலே வாயில். மனம் திரையாயின் அறிவியல் ஒளியும், மெய்யறிவியல் காட்சியுமாம். பெரியாரால் கடியப்பெறும் கொள்கைகள் சாணியை வணங்கென்பதும், சாம்பலைப் பூசென்பதும் போன்ற சிறுமைக் கொள்கைகளே என்க. இறைமையின் பிறநிலைகள் பிறவிடத்து விளக்கப்பெறும்.

யாரும் யாவும் யாண்டும் துய்ம் என - உலக மக்கள் யாவரும் உலகில் நலந்தரும் யாவற்றையும், எக்காலும் துய்த்தல் செய்வீர் என.

பொதுமை அறம் பிலிற்றும் இக்கொள்கை உலக மக்கட்கெல்லாம் உடன்பாடான கொள்கை. ஒரு சாரார் மறுத்தொதுக்கும் எதுவும் பொதுமைக் கொள்கையாகாது என்க.

புதுமை பொழிவித்துப் பொதுமை தழைவிக்கும் - இத்தகைய மக்கட்குப் புதுமையான எண்ண வுணர்வுகளை அவர்கள் மனத்தே சொற்களால் பொழியச் செய்து, பொதுமை யறத்தைத் தழையச் செய்யும் அரியார் ஆகலின் அவர் ஒருவரே பெரியார் எனத்தக்கவர் என்க.

பெயரியோரே - எளிய மாந்தர்களினின்று வேறுபட்டெழுந்த பெரியார் என்னும் பெயருக்கு உரியவரே! என்னை? செயற்கரிய செய்வார் ஆகையால், பெரியார் என்னும் பெயர் அவர் முதுமையான் வந்ததன்று. முதுமை எய்தியோர் பலர் உளர் எனினும், பிறர்க்கு அருமையானவற்றை இவர் செய்கின்ற தன்மையாலேயே இவரைப் பெரியார் என்பது. இது பாடாண் திணையும் வாழ்த்தியலென் துறையுமாம்.