நூறாசிரியம்/கோலச் செழுந்தமிழ்

விக்கிமூலம் இல் இருந்து
Jump to navigation Jump to search

23 கோலச் செழுந்தமிழ்


அங்கா வெனுமங் காந்தமுக மேந்தி,
உங்கா வெணவமிழ் துறிஞ்ச வூட்டிப்,
பால்வாய் மோந்து பனிமுகம் நீந்தி,
மாலுறக் குழைவுடல் அணைந்தகங் குளிர்ந்து,
புன்றலை அளைந்து பொன்னுடற் கழுவி, 5
தென்றல் சிதர்புகு மிளமயி ரார்த்தி,
கதைபல குழைந்து காகஞ் சுட்டி,
இதழுடை மாட்டி, மணிக்கண் ணெழுதி
உள்ளார்ந் தெழுஉம் உவகை பொலியக்
கள்ளா ரிதழ்கள் கனிய முத்தி, 10
கொட்டிய பூங்கை வட்டித் தெடுத்து
மொட்டுடல் தாங்கித் தொட்டிற் கிடத்தி,
நீலக் கொழுங்கண் நனையிதழ் பொருந்தக்
கோலச் செழுந்தமிழ்த் தாலம் பயிற்றி
ஆர்தல் அயர அசைதல் சோர்வுற 15
ஈர்வாய்க் குதலை யிழிதரக் கிறங்கும்
இளமென் பூவுடல் இடையிடைப் பேணி
அருள்விழி மூடும் அன்னைக்கு
இருள்கழி உலகம் ஈடிறந் தன்றே!


பொழிப்பு:

அங்காவென அரற்றி, அங்காந்த வாயினதாகிய குழவியின் முகத்தை இருகையால் ஏந்தி எடுத்தும், உங்காவெனக் கூறி அமிழ்தத்தை உறிஞ்சிக் குடிக்குமாறு ஊட்டி, அப்பாலுண்ட வாயினைத் தாய்மையால் முகர்ந்தும், குளிர்ச்சி பொருந்திய அம் முகத்தோடு முகம் வைத்து நீந்துதல்போல் அளாவி, மயங்குதலுறுமாறு, சந்தனக் குழைவுபோலும் உடலை அணைந்து, நெஞ்சங்குளிர்தலுற்றும், இளந்தலையைக் கோதிப் பொன் போன்ற உடலை நறுநீரால் கழுவியும், தென்றல் சிதர்ந்து புகும் இளமயிரைக் காற்றிலும் இளவெயிலிலும் உலரச் செய்தும், கதைபல குழைந்து கூறிக் காகத்தை விளித்து வேடிக்கை காட்டி, மலரிதழ் போலும் மெல்லிய உடையை உடல் நலுங்காது மாட்டியும், மணிபோலும் ஒளிபொருந்திய கண்களுக்கு மையெழுதியும், உள்ளத்தே எழுந்து பொங்கும் உவகை மிகுமாறு கள்ஸ்ரீம் வாயிதழ்களைக் கனியும்படி முத்தமிட்டும், கொட்டி விளையாடிய குழவியின் பூங்தைகளைச் சுழன்று எடுத்து மலரின் மொட்டுப் போன்ற உடலைத் தாங்கித் தொட்டிலிற் கிடத்தியும், நீல நிறமான கொழுமைசேர் கண்களைப் போர்த்துள்ள இதழ்ப்போலும் நனைந்த இமைகள் பொருந்தும்படி சொல்லழகும் பொருளழகும் வாய்ந்து செழுமையுற்ற தமிழில் தாலாட்டுப் பாடியும், அவ்வாறு பாடிய ஓசைமெல்ல அடங்கவும், தொட்டிலை அசைத்த கைகள் சோர்வுறவும் அழுது அரற்றிய ஈரவாயினின்று குதலை நீர் இருபுறமும் வழியுமாறு உறக்க மயக்கங் கொள்ளுகின்ற குழந்தையின் இளமையும் மென்மையும் பொருந்திய பூப்போன்ற உடலை இடையிடையே காணித்துப் பேணியும் தன் அருள் பொருந்திய விழிகளை ஆழ்ந்து உறக்கங்கொள்ளாது மூடிக்கிடக்கும் அக்குழவியின் அன்னைக்குப், போர்த்துண்ட இருளை மெதுவாகக் கழிக்கின்ற இவ்வுலகமும் இணையற்றதே !

விரிப்பு:

இப்பாடல் அகத்துறையைச் சார்ந்தது. புதல்வனைப் பயந்து பாராட்டும் தலைவியின் தாய்மைத்திறம் நோக்கித் தலைவன் அவளின் தாய்மை யுணர்வுக்கு இவ்வுலகமும் ஈடாகாது என வியந்து கூறுவதாக அமைந்ததிப்பாட்டு,

தலைவியிடத்து இதுகாறும் பெண்மை நலத்தையே கண்டும் உண்டும் வந்த தலைவன், இக்கால் தாய்மை நலத்தைக்கண்டு மதித்துப் போற்றுகின்றான்.அருள்சான்ற அவளின் தாய்மைச் செவ்விக்கு இவ்வுலகம் ஈடிறந்தது எனப் போற்றும் அவன் கூற்றில், ஒரு தாய் தன் குழந்தையின்பாற் காட்டுகின்ற அன்பும் அருளும் அக்கறையும் புலப்படுவதோடு , தலைவன் தலைவியிடத்தும் தன் குழந்தையிடத்தும் செலுத்தும் ஈடுபாடும் பின்னியிருப்பதைப் பாடல் உணர்த்தும்.

அங்கா பசி வந்து அழுமிடத்துப் புனிற்றிளங்குழவி மிழற்றும் ஓர் ஒலிக்குறிப்பு மழலைச் சொல்.

அங்காத்தல் அண்ணாத்தல்-வாயை முற்றும் திறத்தல்.

குழவி தன் பசிக்குறிப்பைத் தாய்க்கு உணர்த்த அங்கா எனும் ஒலி மிழற்றித் தன் வாயை அங்காத்தல் செய்கின்றது. அங்ஙன் வாயை அங்காத்தவாறு அழும் குழவியை இருகைகளாலும் ஏந்தி எடுத்து உங்கா என ஆறுதல் மொழி கூறித் தன்மார்பை ஊட்டக் கொடுக்கின்றாள் தாயாகிய தலைவி.

உங்கா பாலுக்குத் தாய்கூறும் ஒர் ஒலிக்குறிப்புச் சொல்.

அமிழ்து உறிஞ்ச ஊட்டி தன் மார்பினின்றுாறும் பாலைக் குழவி உறிஞ்சி அருந்துமாறு ஊட்டுதல் செய்து.

பால்வாய் பாலுண்ட வாய் இளமென் வாய்.

பனிமுகம் நீந்தி பால் வாயை மோந்த தாய் குழந்தையின் குளிர்ந்த முகத்தில் தன் முகத்தை வைத்து ஒட்டி உரசுதல் நீரில் உடம்பு உரசி அளாவுதல்போல் குழவியின் மென்மையான முகத்தொடு தாய்முகம் அளாவுதலால் முகம் நீந்துதல் என ஒருபுடை உருவகமாகக் கூறப்பெற்றது.

மாலுற மயக்கமுற

குழைவுடல் சந்தனச் சாந்துபோலும் வண்ணமும் மென்மையும் குளிர்ச்சியும் தோய்ந்த உடல்,

அனைந்தகங் குளிர்ந்து குழந்தையோடு தாய்போய் அதன் உடல் நலுங்காது பொருந்துதலால் அனைத்து என்னாது அணைந்து எனலாயிற்று. அணைந்து அகங்குளிர்ந்தாள் என்றபடி

புன்றலை அளைந்து இளமையும் மென்மையும் சான்ற தலையின் முடி நலுங்கலுறாது நீரான் அளைந்து.

பொன்னுடற் கழுவி பொன்னிறம் போன்ற உடலைக் கழுவி யெடுத்து.

தென்றல் சிதர்போகும் இளமயிர் ஆர்த்தி : தென்றல் சிதர்ந்து புகுமளவில் மென்மை சான்ற தலைமுடியைக் காற்றிலும் இளவெளிலிலும் ஆர்த்தல் செய்து ஆர்த்தல்-ஒளிபெறச் செய்தல், ஈராமாயிருந்த முடி உலர்ந்தபின் ஒளிபெறுமாறு செய்தல்.

கதைபல குழைந்து காகஞ் சுட்டி குழவி, கதைகேட்கும் அறிவு பெற்றிலதேனும் தாய்க்கிருக்கும் உணர்த்துதல் உணர்வால் தானறிந்த கதைகளை அதன்பால் குழைந்துகூறி, குழைந்து கூறுதல் என்பது மழலையிற் சொல்லுதல். சொற்குழைதல் மழலை. காகஞ் சுட்டுதல்-குழந்தைக்கு “அதுகாண் குருவி; இதுகாண் கிளி; உது. காண் காகம்"என வேடிக்கைக் காட்டி அமைவுறச் செய்யுமொரு விரகு, குழந்தை அமைவுறுங்காலன்றித் தாய் அதற்கு இதழுடை மாட்டலும் மணிக்கண் எழுதலும் போலப் புனைவு செய்தல் இயலாது. ஆகையால் கதை குழைந்து காகஞ் சுட்டினாள் என்க.

இதழுடை மாட்டி மலரிதழ்ப் போலும் மென்மையான உடையைக் குழந்தையின் உடல் நலுங்காது அணிவித்து, உடுத்தி என்னாது மாட்டி என்றது உடல் நலுக்கமுறாது அணிவித்ததை என்க.

மணிக்கண் எழுதி மணியைப் போலும் ஒளி பொருந்திய கண்களில் மையெழுதி.பொதுப்படத் தீட்டாது அழகுபட எழுதி என்றது கருதத்தக்கது.

உள்ளர்ந் தெழுஉம் உவகை பொலிய உள்ளத்தினின்று புடையளாவி எழுதரும் மகிழ்வு முகத்திலே மலர்ந்து விளங்கும்படி

கள்ளாளிதழ்கள் கனிய முத்தி : கள் ஊறுகின்ற இதழ்கள் கன்றிச் சிவக்கும்படி முத்தத் தந்து.

கொட்டிய பூங்கை கொட்டி விளையாடிய குழந்தையினது கை

வட்டித் தெடுத்து நலுங்காமல் எடுத்து வட்டித்தல்-வடித்தல்-வடிவம் செய்தல், வடிவம் செய்த ஒன்றை அது குலையாது எடுத்தல் களிமண்ணால் ஆக்கிய கலம் ஒன்றினை வடிவம் குலையாமல் கைப்பழக்கமாக எடுத்து வைப்பது போல், பசுங்குழவியையும் நலுக்கமுறாது கைநயமாக எடுத்தாள் ‘ என்க.

மொட்டுடல் தாங்கி தாமரை மொட்டுப் போலும் இளந்தலையும், தண்டுபோல் நிமிர்பற்ற உடலும் இரு கைகளாலும் தாங்கி.

தொட்டிற்கிடத்தி தொட்டிவில் இடலும், போடலும் இல்லாது கிடத்துதல் என்றது, குழந்தையை மெதுவாகக் கிடக்கும்படி செய்தாள் என்றற்காம், கிடத்துதல்-கிடையாக வைத்தல்,

நீலக் கொழுங்கண் நீலநிறம் பொருந்திய கொழுமையான கண்கள்.

நனையிதழ் கண்ணிரால் நனைந்த, மலர் இதழ் போலும் இமை

பொருந்த பொருந்தும்படி மூடி உறங்கும்படி

கோலச் செழுந்தமிழ்த் தாலம் பயிற்றி உரை அழகும், சொற் செழுமையும் கொண்ட தமிழ் மொழியில் தாலாட்டுக்கூறி. தாலம்தாலப்பாட்டுதாலாட்டு, பயிற்றுதல்-பயில்வித்தல், தாலாட்டு வழித் தாய்மொழிப் பயிற்சியையும் உறக்கவின்பத்தையும் ஊட்டுதலால் பயிற்றுதல் எனலாயிற்று.

ஆர்தல் அயர பாடல் ஒலி அயரும்படி

அசைதல்சோர்வுற குழந்தையை ஆட்டுவிக்கும் அசைவு சோர்வுறும்படி அசைவு சோர்வுறுதல்-அசைகின்ற கை சோர்வுறுதல்.

ஈர்வாய் ஈரமுடைய வாய்.

குதலை இழிதர குழந்தையின் வாயினின்று குதலை என்னும் ஒருவகை நீர் இழிய இதற்குச் சொள் என்றும் ஒரு சொல் உண்டு.

கிறங்கும் உறக்க மயக்கத்திலாழும்.

மென்பூவுடல் இடையிடைப் பேணிஇள இளமையும் மென்மையும் வாய்ந்த பூப்போன்ற குழவியின் மெல்லுடலைத் தாய் தன் உறக்கத்திலும் இடையிடையே விழித்துப் பேணி.

குழவியின் மேற் போர்த்திய துணி உறக்கத்தின் இடையிடை விலகுவதைச் சரிசெய்வதும், உடலுறுப்புகள் அழுந்துமாறு உறங்கும் குழந்தையை அடிக்கடி புரட்டிச் சரிவரப் படுக்கவைப்பதும், வாயைத் திறந்துகொண்டோ, விரலைச்சப்பிக் கொண்டோ உறங்குமானால் அதன் முகத்தை உயரப்படுத்தியோ, வாயிலுள்ள விரலை அப்புறப்படுத்தியோ விடுவதும், கழிகளால் ஈரப்படும் படுக்கைத் துணி களை அடிக்கடி மாற்றுவதும் பிறவும் குழந்தையைத் தாய் இரவில் பேணும் வகைகளாகும். இவ்வாறு பேணுகின்ற உணர்வு ஒரு தாய்க்கு இயல்பாகவே அமையுமெனினும், இயல்பு திரிந்த இக்காலத்துக் குழந்தை தொட்டிலினின்று விழுந்து, அழுது கிடந்தாலும், தன்னுறக்கத்தினின்று விழியாத தாயாரும் உளர். அன்னவர் போலன்றித் தன் தலைவி “இளமென்பூவுடல் இடையிடைப் பேணும்” பெற்றியளாயிருத்தல் தலைவற்கு வியப்பினை யூட்டிற்றென்க. இவ்வாறு இரவில்தான் தொடர்ந்து உறங்காது இடையிடையெழுந்து தன் குழந்தையைப் பேணும் பெற்றி வாய்ந்தாள் அருளுடையளாதல் வேண்டும் என்பது பற்றி அருள்விழி மூடும் அன்னை என்றான் என்க. விழிகள் மூடுவதல்லது உறங்குதல் செய்யா என்னும் குறிப்பினை அறிக.

இத்தகையளாகிய அன்னைக்கு, இருள் கழியும் தன்மை வாய்ந்த இவ்வுலகம் ஈடிறந்தது என்பது தலைவன் கூற்றாகும்.

ஈடிறந்தன்று இணயைற்றது.

குழவியின் பசியறிந்து பாலூட்டியும், உடல் நலுங்காது குளிப்பித்தும், புனைவித்தும், உறங்குவித்தும், பகலிற் பேணியவள் இரவிலும் தான் முழுமை உறக்கம் கொள்ளாது இடை இடை எழுந்து அதனைப் பேணும் அருள் வாய்ந்த தன்மைக்கு இவ்வுலகமும் ஈடாகாது என, அண்மையில் தாய்மைப் பேறுற்ற தன் தலைவியைப் பார்த்துத் தலைவன் கூறியதாகும் இப்பாடல்.

இது, முல்லை யென் திணையும், புதல்வற் பயந்த தலைவியின் தாய்மைத் திறம் வியந்ததென் துறையுமாகும்.