நூறாசிரியம்/மலர்மிசை நாற்றம்

விக்கிமூலம் இல் இருந்து
Jump to navigation Jump to search

22 மலர்மிசை நாற்றம்


மலர்மிசை நாற்றம் போல் மதிமிசை யொளிபோல
நலங்கிளர் கள்ளுள் இளவெறி நசைபோல்
தழலினுள் தெறல்போல் தணிப்பரிதாம் விறல்வேட்கை
எழுந்தது மறிகிலன்; படர்ந்தது முணர்கிலன்
மடுத்தலை கொணர்நீர் வேண்டி 5
எடுத்ததோட் கள்வன் எதிர்ந்த ஞான்றே!

பொழிப்பு:

மலரின்கண் அது மலர்ந்தவிடத்து வந்து தங்கும் மணத்தைப் போலும், எழுகின்ற நிலவின்பால் நிறைந்து விளங்கும் ஒளியைப் போலும், உடல் நலத்தைக் கிளர்விக்கும் கள்ளினுள் வேட்கையை மூட்டுவிக்கும் மெல்லிய வெறியைப் போலும், எரிகின்ற தணலுள் தோன்றி விளங்கும் சூட்டைப்போலும், அடக்குதற்கரிதாகிய இவ் வெற்றி கொள்ளும் காதல் விருப்பம் என்பால் திடுமென்று எழுந்து நின்றதையும் அறிந்திலேன்; என் உடலும் உள்ளமும் பற்றிப் பரவி நின்றதையும் உணர்ந்திலேன்; நீர்தேங்கிய மடுவினிடத்தே யான் கொணர்ந்த நீரை விடாய்க்கென வேண்டிக் கேட்க, எடுத்த தோள்களையுடையனாய் என் நெஞ்சுகொண்ட கள்வன், என்முன் வந்து நின்ற அப்பொழுதே!

விரிப்பு:

இப்பாடல் அகத்துறையைச் சார்ந்தது.

தனக்குரிய தலைவனைக் கண்டமட்டிலேயே தன் உள்ளம் மலர்ந்து நின்றதையும், உடல் ஒளிபெற்றுப் பொன்போற் பசந்ததையும், மெல்லிதாய காதலுணர்வு மேனி முழுதும் பரவி நின்றதையும், மெய் சூடேறியதையும் தலைவி தன் தோழிக்குக் கூறி இஃது இயற்கை வழி பொருந்திய காதல் ஆகலின் இதன் பிரிவை யான் ஆற்றுதற்கல்லேன் என்று தன் ஆற்றாமையைப் புலப்படுத்துவதாகும் இப் பாட்டு.

மலர்மிசை நாற்றம்போல் - முகையவிழ்ந்து மலர்ந்த மலரிடத்து வந்து பொருந்துகின்ற மணம்போல், முகையாயிருந்தபொழுது தோன்றாதிருந்து முழுமலர்ச்சி யெய்திய பொழுது கமழ்தலுறும் மலரின் மணம்போல், தலைவனைக் காணாவிடத்து அடங்கியிருந்து அவனைக் கண்டவிடத்து உள்ளத்தே மணம் பரப்பியதாம் அக்காதல் எனக் கூறினாள்.

மலருக்கு மணம்போல் மங்கையர்க்குக் காதல் என்றாள் என்க. இது தானறியாது நிகழ்ந்தது பற்றி இயற்கையால் நேர்ந்ததென்றாள்.

மதி மிசை ஒளி போல் - மதி தோன்றுகின்ற பொழுது மழுங்கியிருந்து பின் ஒளி நிறைந்து விளங்குதல் போல், தன்னுளத்தும் முன்பு மழுக்க முற்றிருந்து, தலைவனைக் கண்டவிடத்துக் காதல் என்னும் ஒளி நிறைவுற்ற தென்றாள்.

கதிரவனால் நிலவு ஒளிபெறுதல்போல் தலைவனால் தானும் ஒளிபெற்றதை ஈண்டு விளக்கினாள் என்க.

நலங்கிளர் கள் - உடல் நலத்தைக் கிளர்விக்கும் கள். அளவின் உண்டார்க்குக் கள் உடல் நலத்தைத் தோற்றுவிப்பதுபோல், முறையின் கொள்வார்க்குக் காதல் உடல் நலத்தைக் கொடுக்கும் என்னும் உடலியலை ஒர்க.

இளவெறி நசைபோல் - கள்ளினால் தோற்றுவிக்கப் பெறும் முருகிய வெறிபோலன்றிக் காதலால் மெல்லிய வெறி தோன்றின தென்றாள். நசை யென்றது மேலும் மேலும் கொள்ளுகின்ற விருப்பத்தை அது கள்ளுண்பார் மேன்மேலும் கொள்ளுகின்ற விருப்பத்தைப் போன்றது. இது தலைவனால் எழுப்பப்பெற்ற காதல் என்னும் மெல்லிய வேட்கையை மேலும் மேலும் தான் விரும்பினாள் என்றபடி அவனை மறக்கவியலாத தன் நிலையைக் குறிப்பால் கூறினாள் என்க.

தழவினுள் தெறல்போல் - மூட்டப்பெறும் தீயினுள் வந்து பொருந்தும் சூடு போல், கொளுத்தப் பெற்ற காதலால் தன் உடலுள் ஒருவகைச் சூடு பாய்ச்சப்பெற்ற தென்றாள். அது தலைவனை மீண்டுங் கூடிய விடத்தன்றி அடங்காதென்றும் குறிப்பை யுணர்த்தினாள் என்க.

தனிப்பரிதாம் - தலைவனாலன்றிப் பிறரால் தணிப்பதற்கரியதாம். அவன் பிரிவின்கண் சூடுபோல் பரந்து நின்று, அவன் கூடற்கண் தண்ணெனக் குளிர்கின்ற தன்மை யுடையது காதல் என்னுந் திறமுரைத்தாள் என்க.

விறல் வேட்கை - வெற்றி கொண்ட வேட்கை கன்னியர்க்கு எழும் பிற வேட்கை யெல்லாம் அவற்றிற்குக் கரணியமானவற்றைப் பெற்ற விடத்து அடங்கி நிற்பதும் காதல் மட்டும் அதற்குக் கரணியமான தலைவனைப் பெற்றவிடத்தும் அடங்காமல் மேன்மேலும் மிகுந்து நிற்பதும் உணர்த்தப் பெற்றது. பிற வேட்கையெல்லாம் ஒரோவொருகால் தோல்வியுறுவதும், காதல் ஒன்றே தோல்வியுறாது தன்னையும் தான் கொண்ட பிற விருப்பங்களையும் வெற்றி கொள்வதும் ஆகையால் விறல் வேட்கை என்றாள். விறல்-வெற்றி. தான் பற்றியவிடத்துப் பிற பற்றுகளைப் பற்றவிடாத தன்மை பற்றிக் காதல் வெற்றி பெற்றதென்றாள். வெற்றிபெற்றது பற்றி அதன் ஆளுகைக்குத்தான் அடங்கினது இயற்கையே என்றாள்.

மலர்போல் மணம் பரப்பி, மதிபோல் ஒளி நிரப்பிக் கள்போல் இளவெறி மூட்டித் தழல்போல் காய்தலுற்றுப் பிறர் எவராலும் தணிக்கவியலாத ஓங்கிய தன்மையால் காதலது வெற்றியும் ஆட்சியும் விளக்கப்பெற்றன.

எழுந்ததும் - எழுச்சியுற்றதும், அடங்கிருந்த காதலுணர்வு தலைவனால் எழுப்பப் பெற்றதை உணர்த்தினாள் என்க.

மலர் விரிய விரிய மனம் எழுவதும், மதி எழ எழ ஒளி எழுவதும், கள் உண்ண உண்ண வெறி எழுவதும், தீ அடர அடர வெப்பம் எழுவதும் இயற்கையேபோல் தோன்றிய அவன் நெருங்க நெருங்கக் காதல் எழுவதும் இயற்கையே என்றாள். அவை தடுத்தற்கியலாமைபோல் இதுவும் தடுத்தற்கியலாமையாம் என்றாள்.

அறிகிலன் - அறிந்தேனல்லன். அறிகின்ற பொறிகளைப் புறத்தே தான் பெற்றிருந்தும், புறத்திருந்து காட்சிப் பொருளாய் வந்த தலைவனாடு வந்த காதலைத் தான் அறிய வியலாது போயிற்றென்றாள். பொறியுணர்வால் அறிகின்ற தன்மை பற்றி அறியேன் என்றாள். என்னை? தலைவனைக் கண்களாற் கண்டதும் அவன் மொழிகளைச் செவிகளாற் கேட்டதும் தான் அறிந்திருந்தும், அவன் எழுப்புவித்த காதல் உணர்வு அக் காட்சியாலும் கேள்வியாலும் அறியக் கூடாததாயிற்று; உள்ளிருந்தே எழுந்து உள்ளத்தைப் பற்றியதாகலின் புறத்தே அறிகிலன் என்றாள் என்க.

படர்ந்ததும் - பரவிப் படர்ந்ததும்; அளாவி நின்றதும் எழுச்சிக்குப் பின் அவ்வுணர்வு உடல் முழுதும் பரவி நின்றதைக் கூறினாள். மலர் விரிதலுறும் பொழுதே மணமும், மதி எழலுறும் பொழுதே ஒளியும், கள் அருந்தலுறும் பொழுதே வெறியும் தழல் கொளுத்தலுறும் பொழுதே குடும் எங்ஙன் அவ்வவற்றிற் படர்ந்து தோன்றுகின்றனவோ, அங்ஙனே அவனைக் காண்டலுறும்பொழுதே காதலுணர்வும் எழுந்து தன் உள்ளத்தும் உடலுள்ளும் உயிருள்ளும் படர்ந்து தோன்றிய தென்றாள்.

உணர்கிலன் உணர்வெழுச்சிக்குக் கரணியனான தலைவனைத் தான் அறிந்தும் அவனால் எழுப்பப்பெற்ற உணர்வை அறியாது போனதால் அறிகிலன் என்றவள். அஃது அகத்தே ஊடுருவி அளாவிப் படர்ந்த தன்மையை உணர்கிலன் என்றாள். பொறியறிவுக்குப் படும் அளவில் புறத்தே பருப்பொருளாய் நின்ற பொழுதே அறியாதவள், உணர்வுக்குப் படும் அளவில் அகத்தே நுண்பொருளாய் நின்றதை உணரக்கூடுமோ என்று இயல்புணர்த்தினாள் என்க.

புறத்தே பருப்பொருளாய் நின்றதென்றது காட்சிக்கும் கேள்விக்கும் பிற பொறியறிவிற்கும் பொருளாகி நின்ற தலைவனை என்க. நுண்பொருளாய் நின்றதென்றது அத்தலைவனாகிய பருப்பொருளினின் றெழுந்து வந்து உயிரொடு அளாவிப் பிணைந்த அன்புணர்வினை என்க.

மலர்புறத்தே பருவாயும், அதனின்றெழும் மணம் நம்மை அளாவுமிடத்து அருவாயும், மதிபுறத்தே பருவாயும், அதனின்றெழும் ஒளி நம்மை அணுகுமிடத்து அருவாயும், கள் புறத்தே பருவாயும் அதனின்றெழும் வெறி நம்மிற் கலக்குமிடத்தே அருவாயும், தீ புறத்தே பருவாயும் நம்மைத் தெறுமிடத்து அருவாயும் நிற்றல்டோல், தலைவன் புறத்தே பருவாயும் அவனின்றெழுந்த அன்புணர்வு அருவாயும் நிற்றல்பற்றி முன்னதை அறிவதும் பின்னதை உணர்வதும் என வேறுபடுத்திக் கூறினாள் என்க.

மடுத்தலை - மடுவினிடத்தே.
கொணர்நீர் கொணர்ந்த நீர்,

கொணர்தலென்பது கொண்டுவரல் என்பதினின்றுவேறுபட்டது. கொண்டுவருதல் என்பது ஈரிணைப்பொருசொல்லாயினும் வருங்கால் கையோடு எடுத்துவரல் என்னும் பொருளது. கொணர்தல் என்பது இங்கிருந்து போய் எடுத்து வருதல் என்னும் பொருளது. இஃது ஆங்கிலத்தில் உள்ள Bring, Fetch என்னும் இரு சொற்களைப் போன்றது.

வேண்டி - விரும்பி. மடுவினின்று கொணரும் நீரை அருந்த விரும்பி.

தலைவியொடு உரையாட விரும்பிய தலைவன் அவள் கொணரும் நீர்வேட்டு நின்றான் என்க.

எடுத்த தோள் - திரண்டு எழுந்த தோள்.

கள்வன் - நெஞ்சைத் திருடிய தலைவன்.

எதிர்ந்த ஞான்றே! எதிர் வந்து நின்றபொழுதே!

தலைவன் நீர் வேட்கையுற்று எதிர்வந்த நின்றபொழுதே தன்னுள்ளத்து மலருள் மணம்போலும் மதிக்கண் ஒளிபோலும் கள்ளுள் வெறிபோலும் தழலுள் தெறல் போலும், உளத்துள் காதல் எழுந்து படர்ந்தது. அதனை யான், அறியவும் அறிகிலேன், உணரவும் உணர்கிலேன் என்று அவனைப் பிரிதலுற்ற தலைவி, தோழியிடம் தன் ஆற்றாமையைப் புலப்படுத்தினாள் என்க.

இது குறிஞ்சியென் திணையும், பிரிவிடையாற்றாத தலைவி தோழிக்கு உரைத்தது என் துறையுமாம்.