உள்ளடக்கத்துக்குச் செல்

நூறாசிரியம்/வீணர் ஒதை

விக்கிமூலம் இலிருந்து

21 வீணர் ஒதை



மறவி வாழியோ! உறவின் நெருங்கிக்
கரவின் மொழிவாங்கிக் கதுமென் புறமாறும்
பொய்தோய் நெஞ்சத்துப் புரையோர் கேடும்,
தவலறு பேதைமைத் தகவோர் தவறும்,
கவலறு கட்டுரை கடிதின் தந்து 5
நிலையின் நீங்கி நிறைகெட நெகிழ்க்கும்
விலைமாறு வினைகொள் வீணர் ஒதையும்,
முந்நீர் உலகத்து மூண்டுயிர் மேவ்லால்
உட்பகை நொதியும் உளத்தோர் தீமையும்
எட்பக வேனுமெம் முளம்பதி யாமல் 10
கதிர்க்கைப் பணியாக் கடுகிச்
சிதர்க்கை உகலும் செய்கை யானே!


பொழிப்பு:

மறவியே நீவாழ்வாயாக! உறவினர்போல் நெருங்கியிருந்து கள்ளத்தினராய்யாம் கூறும் உள்ளுறை உண்மைகளை மொழியக் கேட்டுச் செவிகளால் வாங்கி, அவற்றைப் புறத்தேபோய் விரைந்து பிறர்பால் உரைபோக்கும், பொய்ம்மையே தோய்ந்து நிற்கும் நெஞ்சினையுடைய கீழ்மையினோர் செயத்தகும் கேடுகளும், குற்றமற்ற பேதைமையால் தக்கவர் செய்யும் தவறுகளும், கவலையைப் போக்கும் நீண்ட உரைகளால் விரைந்து உறுதி கூறி, அவ்விடத்தே நின்று நீங்கிய அளவினானே தமக்குற்ற பெருமை கெடுமாறு அவ்வுறுதியை நெகிழ்வித்துத் தாம்கொண்ட கடமைகளைப் பிறரிடத்துத் தாம்பெறும் நலன்களுக்கு விலையாக மாற்றிக் கொள்ளும் புல்லிய வினைப்பாடுகளைக் கொண்ட வீணர்தம் ஆரவாரங்களும், முப்புடையும் நீர் சூழ்ந்த இவ்வுலகின் வந்து பொருந்தி உயிர்ப்புற்று மாந்தத் தோற்றத்தோடு, மேவுகின்றாராய் உள்ளே கொண்ட பகை நாளுக்கு நாள் ஊறிப் புளிப்பேறும் தன்மை கொண்ட நெஞ்சினோர் செய்கின்ற தீமைகள் தாமும் ஒர் எள்ளின் பிளவுத்துணையேனும் எம் உள்ளத்தே தங்கியிராமல், கதிரவனின் சுடர்க்கைகளின் முன் மூட்டமிட்ட மூடுபனி விரைந்து சிதர்வுற்று அழியுமாறுபோல் செய்யும் செய்கையால்!

விரிப்பு:

இப்பாடல் புறத்துறையைச் சார்ந்தது.

மாந்தருக்குள்ள மறவியை வாழ்த்துவதாகும் இப்பாடல் , மறவி மறதி

நெடுநீர் மறவி மடிதுயில் நான்கும்

கெடுநீரார் காமக் கலன் -என்று திருவள்ளுவர் மறவியைக் கெடுகின்றார்தம் தன்மையுள் ஒன்றாகக் குறிப்பர். கல்வி நலனைப் பொறுத்த அளவில் மறவி கடிய வேண்டிய தன்மைகளுள் ஒன்றாகக் குறிக்கப் பெறினும் பிறர் செய்யும் தீங்குகளையும் நமக்கு இயல்பான் வந்து பொருந்துகின்ற துன்பங்களையும் பொறுத்த அளவில் மறவி மாந்தத் தன்மைக்குத் தேவையானதொரு தன்மையதாய்ப் பாராட்டப் பெறுகின்றது.

பொறுத்தல் இறப்பினை என்றும் அதனை
மறத்தல் அதனினும் நன்று. - என்னும் குறளில்


மறவி பாராட்டப் பெறுதல் காண்க


ஈண்டுக் குறிக்கப்பெறும் இப்பாடலும் அத்தகைய மறதியைப் பாராட்டிப் புகழ்வதோடு, அது செய்ய வேண்டிய வினைப்பாடுகளையும் எடுத்துக் கூறுகின்றதாக அமைந்துள்ளது.

“ஏ, மறதியே! உறவினர்போல் நெருங்கிக் கரவுள்ளத்தினராய் நம்பால் பெற்ற மொழிகளைப் புறத்தே மாறியுரைக்கின்றாராய்ப் பொய்த்தொழுகும் புரையோர் செய்யும் கேடுகளையும், தவறு நினையாதவர் ஒரோவொருகால் செய்யும் பேதைமை சான்ற செயல்களால் வரும் தவறுகளையும், நாம் நம்பத்தகுந்த அளவு உறுதிமொழிகளை எளிதே கூறிப் புறத்தே போய் அவர்க்கு நன்மை வந்தவிடத்து நிலைமாறிக் கொள்ளும் நெகிழ்ந்த மனங்கொண்டவர்களின் அசைநிலைகளையும், மாந்தர் உருவினராகி நம்பால் உட்பகை கொண்டொழுகும் உளத்தவர் செய்கின்ற தீமைகளை யும், ஒர் எள்ளைப் பகிர்ந்த சிறிய அளவேனும் நம் உள்ளத்தில் நிலைத்து நில்லாமற் செய்து, அவற்றைப் பனிமூட்டத்தைச் சிதர்க்கும் பகலவனைப்போல் அழித்துவிடும் தன்மை பொருந்திய உன் செயலுக்காக, நீ வாழ்வாயாக"- என்று பாராட்டிக் கூறுவதாக அமைந்ததிப் பாடல்.

துன்பங்களுக் கேதுவாகிய குற்றங்களையும் அவற்றை விளைவிக்கும் மாந்தர்தம் வினைப்பாடுகளையும் மறந்து போகாமல் எண்ணத்திலேயே வைத்திருப்பதால், அத்துன்பச் சுமை மேலும் மேலும் பெருகுவதல்லால் குறைவதில்லை. ஆகலின் அத்துன்ப ஏதுக்களை மறந்து போவதே நாம் நம்மை இன்பத்தின்பாலும் அமைதியின்பாலும் வழி நடத்திச் செல்லும் வகையாகும் என்பதை உணர்த்துவதே இப்பாடலின் நோக்கம்.

உறவின் நெருங்கி உறவுபோல் நெருங்கியிருந்து.

கரவின் மொழிவாங்கி - கரவு நிறைந்த உள்ளத்தோடு பிறர் கூறுகின்ற மொழிகளை ஒன்றுவிடாது உள்வாங்கி, இயல்பாக மொழிவதை மட்டுமன்றி, மொழியாலாகாத பிறவற்றையும் தம் கரவு சான்ற மொழிகளால் மேலிட்டு வாங்கி, நாம் கொடுப்பது அன்றித் தாமே வருவித்துக் கொள்ளலால் வாங்கி எனலாயிற்று.

கதுமென-விரைவு என, விரைவாக, வாங்கியவுடனே புறமாறுதலால் கதும் எனும் மிகுவிரைவுக் குறிப்பு குறிக்கப்பட்டது.

புறமாறும்புறத்தே விலைபோக்கும். மாறுதல் - விலைபோக்குதல், முல்லை மாறி-கற்பை விலைபோக்குநள். முல்லை - கற்பு.

பொய்தோய் நெஞ்சம்-பொய்ம்மை தேங்கி உறைந்த நெஞ்சம் தோய்தல் உறைதல்(எ.டு) தயிர் தோய்ந்தது. பொய்ம்மைதோயாது நீர் போல் நிற்பின் ஒரு காலத்தே அதனை வடிவித்தலும் கூடும். ஆகையால் அவ்வாறு வடிவித்தலும் கூடாமைப் பொருட்டுத் தோய்ந்து கிடக்கும் நெஞ்சம் எனலாயிற்று.

புரையோர் கீழ்மையோர், நிறையற்றவர், உள்ளீடற்றவர். புரை. உட்டுளை, பொள் துளை பொள்-புள்-புளைபுழை-புரை உள் தங்கும் நெஞ்சினரல்லாமையின் ஒரு புறம் வாங்கிய மொழிகளை மறுபுறத்தே ஒழுகவிடுந் தன்மையோர்.

தவறுை பேதைமை குற்றமற்ற பேதைமை.

தவல் - குற்றம் தவநிறைவைக் குறிக்கும் ஒர் உரிச்சொல். மிகுதிப் பொருள்தரும் ஒரு முன்னிலை (எ-டு) தவப் பெரிது-மிகப் பெரிது.

தவ+அல்-தவல்-மிகுதியல்லாதது; குறைவானது குற்றமுடையது.

குல்-குர்-குறு-குறுமை; குறு-குற்று-குற்றம், குறு-குறை

குல்-குன்-குறு-குன்னு-குன்று குன்றல்,

தகவோர் தவறு தக்கவர் சிற்சிலகால் செய்யும் தவறு.

குற்றம் செய்தல் வேண்டும் என்ற கருத்தின்மையால் ஒரோவொருகால் செய்யப்பெறும் தவறு. அவை அவ்வப்பொழுது சிற்சில கேடுகளைப் பயப்பினும் அறியாமையால் செய்யப் பெற்றனவாகையால் அவை பொறுத்தற்குரியனவும் மறத்தற் குரியனவுமாம் என்பது.

பேதைமை ஒன்றோ பெருங்கிழமை என்றுனர்க
நோதக்க நட்டார் செயின் - என்பது குறள்.

கவலறு கட்டுரை : கவலையைப் போக்குகின்ற நெடிய உரை. கட்டி உரைக்கப்படுவதால் கட்டுரை. கட்டியுரைத்தல்-மேன் மேல் தொடர்பு படக்கோத்து உரைத்தல்,

கடிதின் தந்து விரைந்து தந்து

துன்ப மேலீட்டால் கவலுற்றகாலை அத் துன்பம் போக்கும் உறுதியுரைகளை விரைந்து தந்து,

நிலையின் நீங்கி - தம் நிலையினின்று நீங்கி,

நிறைகெட நெகிழ்க்கும் தம் நிறைநிலை கெடுமாறு இடையூழ்த்தும் உறுதிபயப்பதாஞ்சொற்களை விரைந்து தந்தவர். தம் பெருமை கெடுமாறு அவற்றைப் புறத்தே போய்க் கைதளர்க்கும்.

விலைமாறு வினைகொள் வீனர் ஒதை-நம் துன்பத்திற் கேதுவாயவற்றைக் களைய விரும்பிய செயல்களைத் தம் இன்பத்திற்கென விலைபோக்குகின்ற புல்லிய வினையை உடைய வீணர்களின் ஆரவாரம். கூறிய உறுதிமொழிகளும் அவற்றிற்குரிய காலமும் அவற்றின் மேல் கொண்ட நம்பிக்கைகளும் வீண் என்று கருதுமாறு செய்ததால் வீணர் எனப்பட்டனர். அவ்வுறுதிமொழிகளும், அவற்றின் மேற்கொண்ட நம்பிக்கையும் பயனின்றிப் போனமையால் அவை வெறும் ஆரவார மென்று கொள்ளப்பட்டன.

ஒதை ஒசை ஆரவாரமிக்க பொருளில் வெற்றொலிகள்.

முந்நீர்உலகம் - கடலால் சூழப்பெற்ற உலகம். முந்நீர்கடல் ஊற்று நீரும், ஆற்று நீரும், மழை நீரும் சேர்ந்த தொகுதியாகையால் முந்நீர் என்பது கடலைக் குறித்தது.

மூண்டுயிர் மேவலால்-மூளுதலுற்ற உயிர் உடம்போடு மேவி இருத்தலால் உயிர் உடம்பொடு பொருந்தி இருத்தல் பற்றியே மாந்தப் பிறவி என்று திரிதரலால் மாந்தப்பிறவி பிற உயிர்ப் பிறவிபோல் அன்றி, உட்பகையற்று வாழவேண்டிய தொன்றாக விருந்தும், அப் பிறவியெடுத்தும் பிற விலங்குகள் போலும் சிற்றுயிரினங்கள் போலும் உட்பகை கொண்டு வாழ்கின்ற தன்மையினர் சிலர் என்பது.

உட்பகை நொதியும் உளத்தோர் - உட்பகை என்னும் நீரில் ஊறிக்கிடக்கின்ற உளத்தை உடையவர்.

உட்பகை கொண்டவர் மேலும் பொறாமை கொண்டவராகிப் பகை வலுக்கவே இருப்பாராகலின் பகைநொதிகின்ற உள்ளம் உடையவர் எனக் கூறப்பெற்றது.

எட்பகவு - எள்ளைப் பிளந்த அளவு.

உளம் பதியாமல் - உளத்தே நினைவிற் பதிவுறாமல்,

கதிர்க்கை பனியா - கதிரவனின் சுடர்க்கைமுன் பணிபோல்.

கடுகி - விரைந்து.

சிதர்க்கை உகலுதல் - சிதர்ந்து அழித்தல்.

பிறர் செய்யும் தீங்குகளை உடனடியாக மறந்து போதல் என்பது நாகரிகம் பொருந்தியதொரு நல்ல பண்பு. அவ்வாறு மறவாவிடத்து அத்தீங்குகளால் ஏற்படும் மனவுளைவும் அவற்றைச் செய்தாரிடத்து நாம் காட்டும் வெறுப்புகளால் அவர் மேன்மேலும் பகைகொண்டு செய்யும் தீமைச் செயல்களால் பல்வகையான இடர்ப்பாடுகளுமே மிகுமல்லாது, அவரால் நேர்கின்ற துன்பங்கள் ஒழிந்து போகாவென உணர்த்துவதாகும் இப்பாட்டு.

இது பொதுவியலென் திணையும், முதுமொழிக்காஞ்சி என் துறையுமாகும்.

"https://ta.wikisource.org/w/index.php?title=நூறாசிரியம்/வீணர்_ஒதை&oldid=1251228" இலிருந்து மீள்விக்கப்பட்டது