உள்ளடக்கத்துக்குச் செல்

நூறாசிரியம்/மொய்துயில் ஒன்றாய்

விக்கிமூலம் இலிருந்து
48 மொய்துயி லொன்றாம்

கையனை யாக மெய்வெளிக் கிடத்திப்
பெய்பணி போர்த்திய பெற்றி யோர்க்கும்
புனைநார்ப் பின்னிய புல்லடுக் கத்து
வினைநாட் கலைந்து வீழ்ந்துருள் வார்க்கும்
மெய்யுறுத் தில்லா மெத்தெனப் பஞ்சின் 5
தொய்யுட் சேக்கை துவட்டி யோர்க்கும்
மொய்துயி லொன்றாம் போலச்
செய்வினை பலவாச் செறுவிளை வொத்தே!

பொழிப்பு:

கையையே தலைக்கு அணையாக வைத்து உடலை வெட்ட வெளியிற் கிடத்தி, பெய்கின்ற பனியையே போர்வையாகப் போர்த்து உறங்கும் தன்மையோர்க்கும், புனையப் பெற்ற நாளினால் பின்னியதும், மூங்கிலைக் கொண்டு கோத்துக் கட்டப்பெற்றதுமான கட்டிலில், வினைமிகுந்த நாளுக்கென அலைந்து, ஓய்வின்றி வினையாற்றிக் களைத்து, அயர்வை நாடி, விழுந்து உருண்டு புரள்வார்க்கும், மேனி உறுத்தலில்லாத மெத்தென்னும் பஞ்சால் பொதியப் பெற்றதும், தொய்வுடையதுமான படுக்கையில் படுத்து, அது துவளும்படிஅயர்வார்க்கும்,மொய்த்துவருகின்ற தூக்கம் ஒரு தன்மையுடையதாக இருப்பது போலவே, இவ்வுலகத்துச் செய்யப் பெறுகின்ற வினைகள் பலவாக இருப்பினும், அமைகின்ற விளைவு மக்கள் துய்ப்பு என்னும் ஒரு தன்மை நோக்கியதாகவே இருக்கின்றது.

விரிப்பு :

இப்பாடல் புறத்துறையைச் சார்ந்தது.

உலகத்துள்ள பலரும் பலவாறான வினைகளில் ஈடுபட்டு தம் வானாளைப் போக்குகின்றனர். வினைகளின் தொடக்கமும் நடப்பும் முடிவும் பல்வேறு வகையாகின்றன. ஆனாலும் அவற்றின் பயன் முழுவதும் மாந்தனின் துய்ப்பு என்னும் ஒரு விளைவுக்குள்ளேயே அடங்கிவிடுகின்றது. எந்த வினையும் அவன் துய்ப்புக்காகவே செய்யப் பெறுகிறது. எனவே, உலக வினைகளின் முடிவு மாந்த உயிரின் துய்ப்பு என்று முடிவாகின்றது. இந்த உயரிய அரிய மெய்ப்பொருள் உண்மை இங்கு ஒர் உவமையால் விளக்கப் பெறுகிறது. மாந்தர்கள் வினைகளின் பொருட்டாகப் பலவாறான முயற்சிகளில் ஈடுபட்டுப் பலவகையாக இயங்குகின்றனர். பலவேறு இடங்களுக்குப் பல்வேறு திசைகளில் அலைகின்றனர் பலவகையான உணவுப் பொருள்களை உண்கின்றனர்; பலவேறு சுவைகளை விரும்புகின்றனர். அவ்வாறே நாளிறுதியில் அவர்கள் பலவாறான இடங்களில் படுத்து உறங்குகின்றனர். ஒருவன் கையையே தலையணையாகக் கொண்டு வெட்டவெளியில் பனியில் படுத்துறங்குகின்றான் இன்னொருவன் நாரால் பின்னிய கட்டிலில் படுத்து உறங்குகின்றான், மற்றொருவன் மெல்லிய பஞ்சு பொதிந்த மெத்தையில் படுத்து அது துவளுமாறு புரண்டுருண்டு உறங்குகின்றான். ஆனால், அவ்வனைவர்க்கும் உறக்கம் என்னும் அவ் வோய்வின்ப உணர்ச்சிநிலை ஒன்றுதான்.

கையணையாக- கையே அணையாக கையைத் தலைக்கு அணையாக வைத்து.

மெய் வெளிக் கிடத்தி - மெய்யை (உடலை) வெட்ட வெளியிற் கிடத்தி அஃதாவது படுக்கக் கிடத்தி

பெய் பணிபோர்த்திய பெற்றியோர்-பெய்கின்ற பனியையே போர்வையாகப் போர்த்துக் கொண்ட தன்மையோர், அஃதாவது வெற்று மேனியுடன் வெட்ட வெளியில் படுத்துத் தூங்கும் தன்மையுடையவர்.

புனைநார்ப் பின்னிய புல்லடுக்கம் : - புனையப்பெற்ற நாரால் பின்னிய கட்டில், மூங்கில் கட்டில்.

புல்லடுக்கம் : மூங்கிலால் இணைத்துக் கட்டியது.

வினைநாள் : வினைக்குரிய நாள்.

வீழ்ந்துருள்வோர் : படுத்துப் புரள்வோர்.

மெய்யுறுத்தில்லா மேனி உறுத்தாத,

மெத்தென : மெத்தென்று உள்ள

பஞ்சின் தொய்யுள் சேக்கை : பஞ்சாலான தொய்வு உடைய படுக்கை

துவட்டியோர் : படுக்கை துவளுமாறு படுத்துருண்டு துங்குவார்.

மொய்துயில் : மொய்க்கின்ற தூக்கம் சூழ்கின்ற உறக்கம்.

செய்வினை பலவா : ஒவ்வொருவரும் செய்கின்ற வினைகள் பலவாக இருக்க

செறுவிளைவு : செறுத்த விளைவு அமைந்த பயன். ஒத்து ஒத்தது. வினைகள் பல விளைவு ஒன்று.

இவ்வுலகத்து மனஞ்சார்ந்ததும், அறிவு சார்ந்ததும், உடல் சார்ந்ததும், காலஞ் சார்ந்ததும், திசை சார்ந்ததும், இடஞ் சார்ந்த- பூதங்கள் தனித்தும் இணைந்தும் சார்புற்றதும் ஆகிய எண்ணிறந்த வினை முயற்சிகள் பலவாக இருப்பினும், அவையாவற்றின் முடிவும் பயனும் உயிர் துய்ப்புறுவதும், அதன்வழி அது மீமிசை உயர்ந்து மலர்ந்து ஒளிபெறுதலுமே என்க. அஃது, எதுபோலாம் எனில், அனைவரின் படுக்கை நிலைகள் வேறு வேறாயினும், அவர்தம் துயிலும் உறக்க நிலை அவ்வுயிர்களுக்கு ஒய்வும் ஆறுதலும் ஒடுக்க வின்பமும் தரும் துய்ப்புணர்வு ஒன்றாதல் போல் என்க.

இது பொதுவியல் என் திணையும், பொருண்மொழிக் காஞ்சி என்துறையுமாம்