உள்ளடக்கத்துக்குச் செல்

நூறாசிரியம்/பெண்பால்அல்லன்

விக்கிமூலம் இலிருந்து
49 பெண்பால் அல்லன்!

அம்ம, வாழியோ! மன்றல் ஆகுமதி:
மூப்பெதிர் கொளாநின் யாக்கை யாப்பற
நாட்பூந் தும்பை நல்லிதழ்ப் போலும்
முடிநரை சேரலும் கட்குழி வாங்கலும்
வடிநரம் பெழுந்து மெய்யொளி சுவறலும் 5
பிடியொடு நடக்கும் பெற்றியும் யாங்கெனப்
பூவா ராடை புரள உடுத்தி
முருகின் விரைமா முகம்பட அப்பி
இடக்கை தாழ ஏக்குற நடக்கும்
கல்விக் கழகத்து இளையோள் ஒருத்தியை 10
வல்லென் வாயில் மறித்து வினவ, அச்
செல்வக் குடிமகள் செறிய நோக்கிக்
கண்ணொளி கழன்றீர் போலும் ஐய,யான்
பெண்பால் அல்லன்; பிறழக் கொண்டு
வினாயினிர் என்று வெகுண்டான்;
எனாவெடுத் துரைப்பலிவ் விழிநிலைப் போக்கே! 15

பொழிப்பு:

‘அம்ம நீ வாழ்வாயாக திருமணமும் நினக்கு ஆகுக’ முதுமையை எதிர்கொள்ளாத நின் (இளைய உடல் தளர்வுறும்படி, அன்று பூத்த தும்பைப் பூவின் நல்ல (வெள்ளை) இதழ்களைப் போல நின் முடியானது நரை சேர்ந்ததும், தின் கண் குழி வாங்கியதும், வடிவு செய்யும் நரம்பானது வெளியே புலப்படும்படி எழுந்து நின்றதும், மெய்யானது ஒளி வற்றிப் போனதும், நீநன்னடைபெறாது, பிடிகளைத் தாங்கி நடக்கின்ற தன்மையும் எப்படி வாய்ந்தன எனப் பூக்கள் செறிந்த ஆடையைத் தரையில் புரளும்படி உடுத்திக் கொண்டு, முக அழகு செய்யும் மணமுள்ள மாவைப் பூசியும், இடக்கை தாழும்படி சோர்வுற நடந்து செல்லும், கல்லூரிக் கண் பயிலும் இளைய பெண் ஒருத்தியைத் திடுமென வலிந்து வழியை மறித்துக் கேட்க, அந்தச் செல்வக் குடியைச் சேர்ந்த பெண் எம்மை அடர்த்து நோக்கி, நீவிர் கண்ணொளி தவிர்ந்தீர் போலும் ! ஐயன்மிர் யான் பெண்பால் அல்லன்; என்னைப் பெண்ணென்று தவறாக எண்ணிக் கொண்டு இவ்வினாவை என்னிடத்துக் கேட்டீரே” என்று வெகுண்டுரைத்தான். இவ்வகைத்தான உலக நாகரிகத்தின் இவ்விழிந்த போக்கினை என்னவென்று எடுத்துரைப்போம்!

விரிப்பு:

இப்பாடல் புறத்துறையைச் சார்ந்தது.

கல்விக் கழகத்துப் பயிலும் ஆண்மகன் ஒருவன், தன்னை ஒரு பெண்ணைப் போல் புனைவு செய்து கொண்டு புறம் வந்ததையும், அவன் தன் இளமைக்குரிய வாலை நிலைகள் திரிந்து, முதுமை நிலைக்குரிய தன்மைகளைப் பெற்றிருந்ததையும் நன்கு புலப்படுத்துவான் வேண்டிக் கூறியதாகும் இப்பாடல்.

கல்வி பயிலும் இளைஞர் தம் ஆண் தன்மைக்குரிய வகையில் ஒப்பனை செய்து கொள்ளாமல், பெண்ணியல்புக்கான வகையில் தம்மைப் பலவாறு தோற்ற உடைகளால் சுவடித்துக் கொள்ளும் இழிநிலை இயல்புகளைப் பகடி செய்ததாகும் இது.

நாகரிகம் என்னும் பெயரால் இளைஞர் தம் நடைமுறைகளால் சீரழிவுற்றுச் சிதைந்து வருவதைக் கண்டித்ததும் ஆகும் இது.

இளைஞன் ஒருவன் பெண் போலும் முகமா பூசி, பெண்கள் அணியும் பூவண்ணத் துணிகளில் உடையுடுத்துப் பெண்ணென மயங்குமாறு நீள் முடி வளர்த்து, பல்வேறு எண்ணத் திரிபுகளால் தன் இளமை நழுவ முதுமைச் சாயலுற்றுத் தோன்றினன். அவனைப் பெண்ணென மயங்கி, ‘அம்ம, நீ வாழ்க விரைவில் திருமணமும் பெறுக’ என வாழ்த்தியும், அவன் அதற்கு நானுறாமல், நீவிர் கண்ணொளி கெட்டீர் போலும், நான் பெண்ணல்லன்; ஆணே யாகும் என வெகுண்டுரைத்தான். அது கேட்டு, ‘இவ்வுலகின் இழிநிலைப் போக்கு என்னே’ என்று வருந்தியுரைக்கின்றதாக அமைந்ததிப்பாடல்.

அம்ம, வாழியோ - அம்மா, நீ வாழ்வாயாக,

மன்றல் ஆகுமதி - திருமணம் ஆகுமாக பெண்போலும் தோற்றமுற்றிருந்த அவனை, அவள் என்றெண்ணி, நல்லெண்ணத்தால் வாழ்த்துவர். மன்றல் மன்றினில் நடைபெறும் திருமணம்.

மூப்பெதிர் நிற்கும் ஒருத்தி மணவணி காணாது நிற்கின்றாளே என்று வருந்தி, அவளுக்கு விரைவில் திருமணம் ஆகுக என்று வாழ்த்தினார் என்க.

மூப்டெதிர் கொளா நின் யாக்கை - முதுமைக் காலத்தை எதிர் கொளா நின்ற நின் உடல் எதிர் கொளா நிற்றல் - எதிர் கொள்ளல். மூப்புக்காலம் விரைவில் வந்துறுமாறு நின்ற உடல் என்றபடி உடல் மூப்புக் கொள்ளும்படி இருந்தும், இன்னும் திருமணம் கொள்ளாமல் இருக்கின்றாளே என்பதால் கவலுற்றுத் ‘திருமணம் கொள்க’ என்று வாழ்த்தினார் என்க.

யாப்புற கட்டுக் குலையும்படி யாக்கை யாப்பற என்று கூட்டி, உடல் கட்டுக் குலையும்படி என்று பொருள் கொள்க.

நாட்பூந் தும்பை - சேரலும் அன்றை நாள் பூத்த வெள்ளிய தும்பைப் பூவின் நல்ல இதழ்களைப்போலும் நிறத்தினதாய் முடிநரை சேர்ந்திருந்ததும்.

கட்குழி வாங்கலும் கண்கள் குழி வாங்கி உள்ளழுந்தியிருந்ததும்.

வடிநரம்பு எழுந்து உடலின் கண் வார்ந்த நரம்புகள் பார்க்க இயலுமாறு எழுந்திருந்ததும்.

மெய்யொளி சுவறலும் - உடலின் இளமையொளி வறண்டு போய் உடல் பளபளப்பின்றி யிருந்ததும்.

பிடியொடு நடக்கும் பெற்றியும் - இயல்பான நிமிர்ந்த நடை இன்றி, எதையாவது பிடித்துக் கொண்டு நடக்கும் தன்மையும்.

யாங்கு என - எவ்வாறு ஆகியன என்று கேட்க

பூவாராடை புரள உடுத்தி- பூக்கள் போலும் ஒவியம் நிறைந்து விளங்கும் ஆடையை மெய் துவளும்படி தளர உடுத்தி ,

முருகின் விரைமா முகம்பட அப்பி - அழகு செய்யும் மணமுள்ள மாவை முகம் நன்கு புலப்படுமாறு அழுந்தப் பூசி,

இடக்கை தாழ ஏக்குற நடக்கும் இடக்கையைப் பெண்கள் போல் தாழ வீசி, சோர்வுறும்படி நடந்து செல்லும்;

கல்வி. ஒருத்தியை கல்லூரிக் கண் பயிலும் இளம்பெண் ஒருத்தியினை.

வல்லென் ... வினவ - விரைந்து செல்லும் வழியைத் திடுமெனத் தடுத்துக் கொண்டு கேட்க

அச் செல்வக் குடி மகள் - செல்வக் குடியில் பிறந்த அந்தப் பெண்.

செறித்து நோக்கி உறுத்த நோக்கி: உற்றுப் பார்த்து.

செல்வ மிகுதியால் புன்மையும் போலிமையும் சார்ந்த நாகரிகத்தில் படிந்திருந்தானாகையால், அவ்வினா அவனுக்குச் சினத்தை எழுப்பியது; எழுப்பவே வினாவியவரை முறைத்துப் பார்த்தான் என்றபடி

கண்ணொளி கழன்றிர் போலும் - நீவிர் கண்ணொளி அவிந்து போனிர் போலும்.

ஐய, யான் பெண்பால் அல்லன் - ஐயா, யான் பெண்பாலினள் அல்லன், ஆண்பாலனே பிறழக் கொண்டு வினாயினிர் - என்னைப் பெண்பாலாக எண்ணி, இக்கேள்வியை ஆண்பாலான என்னைக் கேட்டீர்.

என்று வெகுண்டான் - என்று சினத்துடன் கூறினான். எனாவெடுத் துரைப்பல் இவ்விழிநிலை போக்கே! ஆணைப்பெண்ணென்று மயங்கும்படியாக உடையுடுப்பதும் புனைந்து கொள்வதுமான இவ் விழிந்த புன்மை நாகரிகப் போக்கினை என்னவென்று எடுத்துரைப்போம்.

போலி நாகரிகப் பரவலால் நேரும் பாலியல் தோற்ற மாற்றங்களை அளவிட்டு உரைக்கவியலாது. இஃது, அப்புன்மை நாகரிகத்தால் உருவாகும் இழிவு நிலைகளுள் ஒன்று என்பதாக, என்னவென்று எடுத்துரைப்போம்’ என்னும் தொடருக்குப் பொருள் கொள்க.

இது பொதுவியல் என் தினையும், இயனிலை திரிதல் என்னும் துறையுமென்க. இயற்கை நிலை திரிந்த தன்மைகளை எடுத்துக் கூறலின் இயனிலை திரிதல் என்னும் புதுத்துறை வேண்டுவதாயிற்று.