நூறாசிரியம்/யாவர்ப் பாடுகங்

விக்கிமூலம் இலிருந்து


50 யாவர்ப் பாடுகம்


யாவர்ப் பாடுகங் கொல்லோ கழகம்
மூமுறை நிறீஇ முத்தமிழ்ப் புரந்தோர்
அன்றே மாய்ந்தனர் அரசும் பொடிந்த
வென்றியுந் தோற்பு மின்றே யிரப்பார்க்
கொன்று தரலிலர் தரினுமுள் உவந்து 5
நன்றி நினைவிலர் கற்றல் நனியிலர்
உள்ளஞ் செவ்விலர் ஊருயும் பாடிலர்
கள்ளத்து முதலாக் களவூ தியத்துப்
பொய்ம்மை வாணிகப் போலி வாழ்வினர்
மெய்யறு சமயத்துச் சாதி மீட்பிலா 10
வெய்ய புன்குழாம் வீழ்ந்து
செய்யுட் கருவினார் தோன்றுநாள் வரையே!

பொழிப்பு:

யாவரைப் பாடுவம் கொல்; தமிழ்க் கழகத்தை முதல், இடை, கடை என மூன்று முறை நிறுவி, முத்தமிழையும் புரந்த செந்தமிழ்ச் சான்றோர்கள் அன்றையே மாய்ந்து போயினர்; அக்கழகங்களைப் பேணிய தமிழரசுகளும் காலத்தாக்குதலில் பொடிந்து போயின. இனி, வெற்றியும் தோல்வியும் இல்லை; இற்றையோ இரப்பவர்க்கு ஒன்று தருபவரும் இலர் , தரினும் உள்ளம் மகிழ்ந்து நன்றி நினைப்பவரும் இலர் கல்வியைச் செப்பமுறக் கற்பவரும் ஈண்டிலர். உள்ளத்தால் சிறந்தவர்களும் இலர் ஊர் மக்கள் உய்ய வேண்டும் என்றெண்ணி அவர் பொருட்டாய் உழைப்பவரும் இலர். கள்ளத்தையே முதலாகக் கொண்டு, களவையே ஊதியமாகப் பெறும் நோக்கில், பொய்ம்மை வாணிகஞ் செய்யும் போலி வாழ்க்கையினரே இங்குளர். மெய்ம்மை அற்ற சமயங்களையும் சாதி வேறுபாடுகளினின்று மீளாத தன்மையினையும் கொண்ப கொடிய புல்லிய மக்கள் கூட்டம் வீழ்ந்தழிந்து, செய்யுள் தோன்றுவதற்க்கு கருவாக நிற்பவர்கள் தோன்றுகின்ற நாள் வரைக்கும்.

விரிப்பு:

இப்பாடல் புறத்துறையைச் சார்ந்தது. செய்யுள் தோன்றுவதற்கு உள்ளத்தில் நல்ல கரு ஒன்று உருவாகல் வேண்டும். இனி, ஒருவரைப் புகழ்ந்து பாடும் செய்யுளாயின், அதற்குத் தகுமாறு கருவாக அமைபவர்"ஒருவர் இருத்தல் வேண்டும். அத்தகையவர் செயல்களையோ, அறிவு நிலைகளையோ, கொடைத் தன்மையினையோ, வீரவுணர்வையோ, வெற்றி தோல்விகளையோ, தொண்டு நிலைகளையோ, நல்லற வாழ்க்கையினையோ கருவாகக் கொண்டு, அவரின் உயர்வாந் தன்மைகளைப் பிறரும் பின்பற்றவேண்டிப் புலவர்கள் அவர் பற்றிய செய்யுள்களைப் பாடி மகிழ்வர். ஆனால் அவ்வாறு ஒருவர் மேல் உவந்து பாடி மகிழ்கின்ற நிலையில் இற்றைக் காலத்து எவரும் இலர். எனவே, அத்தகைய ஒருவர் தோன்றும் வரை யாரைப் பாடுகோம் என்று வருந்திக் கூறியதாகும் இப்பாடல்.

உண்மைப் புலமை மனத்தைக் கவர்கின்ற இனிதாந்தன்மை நிறைந்தவர் இக்காலத்து எவரும் இலரே, இனி, எவரைப் பாடுவோம் என்று கவல்வது.

யாவர்ப் பாடுகம்-யாது சிறப்புக் கருதி இக்காலத்து யாவரைப் பாடுவோம்.

கழகம் - புரந்தோர் - தமிழ்க் கழகத்தை முதல், இடை, கடை என்று மூன்று முறை நிறுவி முத்தமிழ் மொழியைப் புரந்த சான்றோர்.

அன்றே மாயந்தனர்- அக்காலத்திலேயே மாண்டு போயினர். இல்லெனின் நான்கு, ஐந்து என்று மேலும் கழகங்கள் தோன்றியிருக்கும். இனி, அவ்வாறு இல்லாதவிடத்து முத்தமிழ்ப் புரக்கும் சான்றோரும் இல்லாமற் போயினர். அத்தகையவர் இருப்பின் அவரைப் பாடலாம். அவர் இல்லாதவிடத்து எவரைப்பாடுவது என்றபடி

அரசும் பொடிந்த - இனி, புலவர்களைப் பேணிய தமிழ் அரசுகளும் காலக் காய்ச்சலுள் பொடிந்து போயின. எனவே அவரையும் பாடுதற்கியலாமற் போனது.

வென்றியும் தோற்பும் இன்றே - அரசுகள் இலவாகவே அவற்றுள் வெற்றியும் தோல்வியும் நிகழா வாயின. அவை நிகழுமாயினும் வெற்றியை வாழ்த்திப் பாடவும் தோல்வியைத் தாங்கிப் பாடவும். ஒல்லும். எனவே அதற்கும் இடமில்லை என்றவாறு.

இரப்பார்க்கு ஒன்று தரவிலர் - மற்று, இக்காலத்து இரவலர்க்கு ஒன்று ஈயும் வள்ளலரும் இலர். அவ்வாறிருப்பின் அவரையேனும் பாராட்டிப் பாடலாம் என்று அழுங்கியதென்க.

தரினும் . நினைவிலர் - அவ்வாறு ஒரொவொருகால் எங்கேனும் இரவலர்க்கு ஈயும் புரவலர் இருப்பினும், அவர் ஈந்ததை நன்றியுடன் நினைத்துப் போற்றும் பண்பினாரும் இலர் இருப்பின் அவரையேனும் மெச்சிப் பாடலாம் என்றவாறு உள்ளுவந்து நன்றி நினைவிலர் என்றது, நன்றி வாயால் சொல்வதினும் உள்ளத்தால் நினைக்கத் தக்கது என்றும், அதுவும் உவந்து நினைக்கத்தக்கது என்றும் பொருள் கொள்வான் வேண்டி என்க.

கற்றல் நனியிலர் - இனி, கல்விச் சிறப்பால் பெருமையுறுவோரும், அதுவழி புலவர் நெஞ்சத்துப் புக்குப் புலவளங் கொள்வாரும் இலர் என்றவாறு,

உள்ளம் செவ்விலர் - உள்ளச் செப்பம் வாய்ந்தாரும் இலர் என்றபடி என்னை, உள்ளச் செப்பம் வாய்த்த விடத்து வாழ்வின் அனைத்துச் செப்பங்களும் நிறைவுற அமையுமாகவின், அத்தகையோரையும் காணாத நிலையில் அவரைப் பாடுதற்கும் இயலாது போயிற்றென்க.

ஊருயும் பாடிலர் - ஊர் மக்கள் உய்யும் படியாகப் பாடாற்றுவார் இலர் என்றபடி தூய பொதுநலவுணர்வுடன் குடி செய்ய வல்ல நடுநிலையும் ஈகவுணர்வும் உடையவர்கள் இருப்பின், அவரை ஊக்குவிப்பான் வேண்டி அவர்தம் பொதுத் தொண்டைப் பாராட்டிப் பாட வியலும், ஆனால் அத்தகையோரும் இலராயினர் ஆகையின், அவரையும் பாடற் கியலாது போனதென்க.

கள்ளத்து முதலா - கள்ளத்தையே தம் வாணிக முதலாக வைத்து.

களவு ஊதியத்து களவுப் பொருளையே ஊதியமாகக் கொள்ளுகின்ற.

பொய்ம்மை வாணிக - பொய் வாணிகஞ் செய்யும்.

போலி வாழ்வினர் - போலித்தனமான வாழ்க்கை நிலைகளை உடையவர்கள்.

இக்காலத்து உள்ளவர்தம் வாழ்வு நிலையை அனைத்து வகையினர்க்கும் பொருந்துமாறு கூறியது.

கள்ளத்தையே அடிநிலை வாணிக முதலாக வைத்துப் பொய்யையே வாணிகஞ் செய்து, களவு கொண்ட பொருள்களையே ஊதியமாகக் கருதி மகிழும் போலி வாழ்க்கையை உடையவர்கள். இவர்களை எங்ஙன் பாடுவது என்று கவன்றது.

மெய்யறு சமயத்து- மெய் நெறிகள் அற்றுப் பொய் நெறிகள் மலிந்த மதங்களைக் கொண்டதும்.

சாதி மீட்பிலர் - சாதிச் சகதியில் விழுந்து மீட்க வியலாத இழிவு நிறைந்ததும் ஆகிய

வெய்ய புன்குழாம் - வெய்தாகிய புன்மை நிறைந்த மக்கள் கூட்டம். வெய்துகொடியது. வெம்மையும் புன்மையும் நிறைந்த மாந்தக் கும்பல்.

வீழ்ந்து- வீழ்தலுற்று. அழிந்து போய். செய்யுட் கருவினார் - புலவர்கள், தாம் புலனெறிச் செய்யுள்கள் யாத்தற்குரிய உட்கருவாகும் தகுதியுடைய பெருமக்கள்.

தோன்றுநாள் வரையே- தோன்றுகின்ற நாள் வரைக்கும். செய்யுட் கருவினார் தோன்றுநாள் வரையே, யாவர்ப் பாடுகம் கொல்லோ என்று அடிமுடி கூட்டுக.

‘இன்றுள்ள நிலைகள் மாறி மக்கள் கூட்டமும் நன்னிலை பெற்று உயர்ந்த தன்மைகளைப் பெறும் சிறந்த மக்கள் தோன்றும் வரை யாரைப் பெருமையுறப் பாடுவது’ என்று அழுங்குகின்றது புலவர் நெஞ்சம்.

‘முக்கழகம் நிறுவிய சான்றோர் போல்வரும் இன்றிலர் , அரசுகளும் இல்லை; எனவே வெற்றி தோல்விகளுக்கும் இன்று இடமில்லை : இரவலர்க்கு ஈயும் புரவலர்களும் இல்லை ஈயினும் நன்றி நினைக்கும் நல்ல பண்பினாரும் இலர் கல்வியில் சிறந்த நல்லறிவாளரும் இன்றிலர் உள்ளச் செழுமை வாய்ந்த உயர்ந்தோரும் இலர்; ஊருக்காக உழைக்கும் பொதுநலங் கருதும் குடிசெய்வாரும் இலர் இவர்கள் இல்லாத நிலை ஒருபுறத்து உளதாக இருக்கின்றவர் எல்லாரும் கள்ளத்தை முதலாகக் கொண்டு களவை ஊதியமாகப் பெறுதற்குப் பொய்யையே வாணிகமாக நடத்திப் போலி வாழ்க்கை வாழ்பவராக உள்ளனரே. இவருள் எவரைப் பாடலுக்குக் கருவாகக் கொண்டு பாடல்கள் செய்வது? எனவே, உயர்ந்த புலனெறிச் செய்யுளுக்கு இலக்கணமாக விளங்கிப்பாடுகின்ற உணர்வையெழுப்புதற்குக் கருவாக நிற்கும் பெருந்தகையினார் இங்குத் தோன்றுகின்ற வரை எவரையும் பாடுதற்கு இயலாது’ என்று, புலமைமிகு நெஞ்சம் உள்ளழுங்குவதாக அமைந்ததிப்பாடல் என்க.

இது, பொதுவியல் என் திணையும், புலனெறி அழுங்கல் என்னுந் துறையுமென்க. புலமை வெளிப்பாட்டுக்குரிய நெறி பற்றி வருந்திக் கூறுவதாகலின் புலனெறி அழுங்கல் என்னும் புதுத்துறை வேண்டுவதாயிற்று.