உள்ளடக்கத்துக்குச் செல்

நூலக ஆட்சி/நூலக விதிகள்

விக்கிமூலம் இலிருந்து

6. நூலக விதிகள்


வரையறுக்கப்பட்ட சட்ட திட்டங்கள் இருந்தால் தான் நூலகத்தில் ஒழுங்கையும் கட்டுப்பாட்டையும் எதிர்பார்க்க முடியும். எனவே நூலகத்திற்கு வரும் ஒவ்வொரு வரிடமும் நூலக விதிகளையும், ஒழுங்கினையும் எடுத்துச் சொல்ல வேண்டும். பெரிய நூலகங்களில் நூலக விதிகள் அச்சடிக்கப்பட்டு, ஒவ்வொரு உறுப்பினர்க்கும் ஒவ்வொரு படி (Copy) வழங்கப்படுகின்றது. மேலும் நூலக விதிகளடங்கிய அச்சுப்படியினை அறிக்கைப்பலகையிலும் ஒட்டலாம்.

நூலக விதிகள் கீழ்க்கண்டவைகளைத் தழுவி அமைக்கப்படவேண்டும்.

1. நூலகத்தின் நூல் தொகுதி பற்றிய சிறு குறிப்பு.
2. வகைப்படுத்தும் முறை பற்றிய விளக்கம்.
3. நூலக வேலை நேரம்.
4. விடுமுறை நாட்கள்.
5. நூலக ஒழுங்குகள்.
6. அரிய நூல்களுக்கு அனுமதிக்கப்படவேண்டிய காலம் (Period of loan).
7. புகைபிடித்தல், உறுப்பினர்கள் தங்கள் பொருள்களே நூலகத்தினுள்ளே கொண்டு வருதல் முதலியவை பற்றிய விதிகள்.

நூலகத்தின் தன்மையைப் பொறுத்தே நூலக விதிகள் அமைக்கப்பட வேண்டும். சான்றுக்காக பொது நூலக விதிகள் கீழே கோவைப் படுத்தப்பட்டுள்ளன.

மாவட்ட நூலக ஆணைக்குழு, மதுரை.
பொது நூலக விதிகள்.

அ. பொது விதிகள் :

1. ஒரு வாரத்தில் வெள்ளிக்கிழமை, அவ்வப்பொழுது அறிவிப்புப் பலகையில் வெளியிடப்படும் நாட்கள் தவிர ஏனைய எல்லா நாட்களிலும் நூலகம் திறந்திருக்கும்.

2. நூலகம் திறந்திருக்கும் நேரம்:

காலை ஏழு மணி முதல் பதினொன்று வரை.
மாலை நான்கு மணி முதல் எட்டு வரை.

3. இது பொது மக்களின் இலவச நூலகம். தூய உடையோடும் நல்ல நடத்தையோடும் வருபவரைத்தவிர ஏனையோர் நூலகத்தில் நுழைய முடியாது. இது பற்றிய முடிவு நூலகத் தலைவரைப் பொறுத்ததே.

4. நூலகத்திற்கு வருபவர்கள் முதலில் தங்களுடைய முழு முகவரியை, நுழைவுப் பதிவேட்டில் (Gate Register) எழுதிக் கையொப்பமும் இடவேண்டும். அத்தகைய கையொப்பங்கள் கையொப்பம் இட்டவர்கள் நூலக விதிகளுக்குக் கட்டுப்பட்டு நடக்க ஒப்புக் கொண்டதற்குச் சான்றாகக் கருதப்படும்.

5. நூலகத்திற்கு வருபவர்கள், நூல், செய்தி இதழ், படம் முதலியவற்றிலே எழுதவோ அவைகளைக் கிழிக்கவோ கூடாது. படங்களின் மீது வைத்து அச்செடுப்பது அறவே கூடாது. 6. நூலகத்தினுள் அமைதி நிலவ வேண்டும். புகைத்தலும், எச்சில் உமிழ்தலும், உண்பதும், உறங்குவதும் கூடாது.

7. நாய்கள் முதலிய வளர்ப்பு உயிரினங்கள் நுழைய விடப்பட மாட்டா.

8. நூலகத்திலிருந்து முறையற்ற வழியில் நூல்களை எடுத்துச் செல்வதோ ஏனைய பொருட்களைக் கடத்துவதோ சட்டப்படி குற்றமாகும்.

9. நூலகத்திற்கு வருகின்றவர்கள் தங்களுடன் கொண்டு வரும் குடை , நூல், பை போன்றவற்றை வெளியிலே வைத்துவிடவேண்டும்.

10. நூலகத்திற்கு நூல் வாங்குவது குறித்துத் தம் கருத்துக்களைச் சொல்ல விரும்புகின்றவர்கள் அதற்கென வைக்கப்பட்டிருக்கும் ஒரு ‘கருத்து ஏட்டில்' (Suggestion Register) தாங்கள் விரும்பும் நூலின் பெயரினை, ஆசிரியர், நூலின் விலை முதலிய விளக்கங்களுடன் எழுதி வைக்கலாம்.

11. நூலக ஊழியர்கள் அவர்களுடைய கடமையிலிருந்து வழுவினால் அவற்றை நூலகத் தலைவரிடம் உடனே அறிவிக்கவேண்டும். மேலும் நூலக ஊழியர்கள் எந்த விதமான அன்பளிப்பையும் பெறக்கூடாது.

ஆ. ஆராய்ச்சியகம்-படிப்பகம்

12. நூலக ஆராய்ச்சியகம் வேலை நாட்களில் ஏழு மணியிலிருந்து பதினொரு மணி வரையிலும், மாலை நாலு மணியிலிருந்து எட்டு மணி வரையிலும் திறந்திருக்கும். 13. ஆராய்ச்சியகத்தை விட்டு ஒருவர் வெளியேறு முன்னர் தான் படித்த நூலை அப்படியே விசிப்பலகை மீது (Table) வைத்துவிட்டுச் செல்லவேண்டும். அவரே அலமாரியில் திரும்பவும் வைக்கக்கூடாது.

14. நூலகத்தலைவருக்கு எழுத்து விண்ணப்பம் கிடைத்தபிறகே சில நூல்கள் தரப்படும். அவைகளைப் படித்தபின் நூலகத் தலைவரிடமோ அவரது உதவியாளரிடமோ ஒப்படைத்துவிடவேண்டும்.

இ. நூல்கள் வழங்கும் பகுதி (Lending Department)

15. நூலகத்தில் நூல்கள் வழங்கும்பகுதி நூல்களை இல்லத்திற்கு எடுத்துச் செல்லக் கொடுக்கவும், திரும்பப் பெற்றுக்கொள்ளவும் காலை எட்டு முதல் பத்தரை மணி வரையிலும், மாலை நாலரை முதல் ஆறரை மணிவரையிலும் திறந்திருக்கும்.

16. நூலக ஆணைக்குழுவினரால் ஒப்புக்கொள்ளப்பட்ட இடங்களில் வாழ்பவராகவும், பதினேழு வயதிற்கு மேற்பட்டவராயும் இருக்கும் எவரும் ஐந்தோ பத்தோ வெண்பொற்காசுகள் (Rupees) பொறுப்புப் பணமாகச் (Deposit) செலுத்தி நூலகத் தலைவர் ஏற்றுக்கொள்ளும் வகையில், கீழ்க்காண்பவர்களில் எவரையேனும் பொறுப்பாகக் காட்டினால் ஒரு நூலோ இரு நூல்களோ இரு வாரகால அளவிற்கு மிஞ்சாது இல்லத்திற்குப் படிப்பதற்காக எடுத்துச் செல்லலாம்.

(க) அரசாங்க அலுவலர்களில் உதவிப் பள்ளித் தணிக்கை அலுவலரின் (Deputy Inspector of Schools) தரத்திற்குக் கீழ்ப்ப டாத அரசாங்க அலுவலர்.

(கா) ஒருகௌரவ நீதிபதி (Hon'rary Magistrate).

(கி) நகரவைக்கழக உறுப்பினர் அல்லது மாவட்டக் கழக உறுப்பினர் அல்லது சிற்றூரைவைத் தலைவர் அல்லது உறுப்பினர்.

(கீ) ஓர் உயர்நிலைப் பள்ளித் தலைமை ஆசிரியர் அல்லது கல்லூரித் தலைவர் அல்லது பேராசிரியர்.

(கு) மாநில அல்லது மத்தியச் சட்ட மன்ற உறுப்பினர்.

17. நூலெடுக்க விரும்புவோர் அதற்கென உள்ள விண்ணப்பத்தில் எழுதித்தர வேண்டும்.

18. நூல்களை இல்லத்திற்கு எடுத்துச் செல்ல உரிமை பெற்றவருக்கு பொறுப்புப் பணத்திற்குத் தக்கவாறு உறுப்பினர்ச் சீட்டுக்கள் (Borrower's Tickets) வழங்கப்படும். இச்சீட்டுக்களைக் கொடுத்து இல்லத்திற்கு எடுத்துச் செல்லப்படும் நூல்களுக்கு, இச்சீட்டுக்களை நூலகத்திலிருந்து திரும்பப் பெறும் வரையிலும் நூல் எடுத்தவரே பொறுப்பாளியாவர்.

19. பொறுப்புப் பணத்தைத் திரும்ப வாங்க எண்ணுவோர் ஒரு வாரத்திற்கு முன்னரே அறிவித்தல் வேண்டும். நூல்களோ, சீட்டுக்களோ திருப்பித் தரப்படாமலிருப்பின் இப்பணம் திருப்பி அளிக்கப்பட மாட்டாது. 20. நூலகச் சீட்டு தொலைந்து போகுமானல் உடனே நூலகத் தலைவருக்குத் தெரிவிக்கவேண்டும். எட்டணா செலுத்தித் தொலைந்துபோன சீட்டுக்குப் பதிலாக வேருெரு சீட்டைப் பெற்றுக்கொள்ளலாம்.

21. நூலகத்திலிருந்து எடுத்த நூல்களைப் பிறருக்கு இரவல் தரக்கூடாது.

22. செய்தி இதழ்கள், அகராதிகள், வார, மாத வெளியீடுகள், நிகண்டு, நாட்டுப்படங்கள் போன்ற மேற்கோள் நூல்கள் (Reference Books) இரவல் தருதற்கில்லை.

23. மிகுந்த தேவையுள்ள நூல்களைத் தேவையான குறுகிய கால எல்லைக்குள் இல்லத்திற்கு எடுத்துச் செல்லலாம்.

24. குறிப்பிட்ட நாளிலே நூலினைத் திருப்பித்தரா விட்டால் ஒவ்வொரு நூலுக்கும் (குறிப்பிட்டநாளுக்கு மேற்பட்ட) நாள் ஒன்றுக்கு ஒரு அணா தண்டமாக வாங்கப்படும். விதி 16 ன் கீழ் ஒப்புக்கொள்ளப்பட்ட தவணைக் காலத்திற்கு மேல் இரவல் காலம் நீடிக்கப்பட மாட்டாது. மேலும் பதினான்கு நாள் தவணைக்குப் புதுப்பித்துக் கொள்ளலாம்.

25. இல்லத்திற்கு எடுத்துச் செல்லும் நூல்களைத் திருப்பிக் கொடுக்கும்பொழுது நூல்கள் பழுதுபட்டு இருப்பதாகத் தெரியவந்தால், அந்நூல்களை எடுத்துச் சென்றவர் புது நூல்களை வாங்கித்தரவேண்டும். எனவே நூலெடுத்துச் செல்வோர் எடுத்துச் செல்லும்பொழுது நூலிற்குப் பழுது ஏற்பட்டிருப்பின் அதனை உடனே உரியவரிடம் அறிவித்தல் வேண்டும். மேலும் எடுத்துச் சென்ற நூல்களை மிகவும் பாதுகாப்போடும் அழுக்குப் படாமலும் கையாள வேண்டும்.

26. நூலகத் தலைவர் இரவல் தருவதை எந்த நேரத்திலும் நிறுத்திக்கொள்ளலாம். மேலும் இரவல் கோரும் எந்த விண்ணப்பத்தையும் (சரியின்றியிருப்பின்) எக்காரணமும் கூறாது மறுக்கலாம். அத்தகைய விண்ணப்பங்கள் எல்லாம் நூலக ஆணைக்குழுச் செயலாளருக்கோ தலைவருக்கோ அனுப்பப்படல் வேண்டும்.

27. நூலகக்குழுச் செயலாளருடன் கலந்து சில விதிகளின் பேரில் நூலகத் தலைவர் சிறப்பான இரவல் தரலாம்.


செயலாளர்.

தலைவர்.

நூலகத் தலைவர்.




"https://ta.wikisource.org/w/index.php?title=நூலக_ஆட்சி/நூலக_விதிகள்&oldid=1130460" இலிருந்து மீள்விக்கப்பட்டது