நெஞ்சக்கனல்/3

விக்கிமூலம் இல் இருந்து
Jump to navigation Jump to search

3

ஏழையின் திறமைகள் வியக்கப்படாத உலகம் இது. திறமைகளை உடையவன் செல்வாக்கு என்ற வெளிச்சத்தைப் போட்டு அதை மற்றவர்களுக்கும் காட்டிப் ‘பார் பார்’—என்று தாண்டிவிட்டு வியக்கச் செய்யவேண்டும். எத்தனையோ சாதாரணப் பள்ளிக்கூட ஆசிரியர்கள் கூட மிகவும் திறமையாக மேடையில் பேசுகிற காலம் இது. எத்தனையோ சாதாரண அரசியல் கட்சிகளின் தொண்டர்கள் கூடப் பிறர்வியக்க மேடையில் முழங்குகிற இந்த நூற்றாண்டில் மனிதனின் வெற்றி தோல்விகளே மேடை மீது தான் நிர்ணயிக்கப்படுகின்றன. சாரசரி மனிதனின் வெற்றி தோல்விகள் போர்க்களத்தில் நிர்ணயிக்கப்படாமல் பொது மேடையிலேயே நிர்ணயிக்கப்பட்டுவிடுகிற இந்த நாளிலும் அந்த வெற்றியை நிரூபிக்கச் செல்வாக்கு என்ற வெளிச்சத்தைப் போட்டுக் காண்பிக்கத்தான் வேண்டியிருக்கிறது. கமலக்கண்ணன் தமது முதல் மேடையேற்றத்தின் போதே அந்த வெளிச்சத்தைத் தாராளமாகப் போட்டுக்காண்பித்து விட்டார். திண்டிவனத்துக்குஅருகில் அந்தக் குக்கிராமத்து ஆண்டு விழாவுக்குப் போகவேண்டிய தினத்தன்று காலையிலிருந்தே அவருடைய சுறுசுறுப்புத் தொடங்கிவிட்டது.

“என்ன சார்! சாயங்காலம் ரேஸ் கிளப்பில் பார்க்கலாமில்லியா? நம்பகமான ‘டிப்ஸ்’ ஏதாவது கிடைச்சிருக்கா?” என்று விடிந்ததும் விடியாததுமாக அன்றையக் குதிரைப் பந்தயத்தைப் பற்றி ஃபோன் செய்தார் ஒரு சிநேகிதர். அவருக்கு ஃபோனில் பதில் கூறியபோதுகூட “எஸ்க்யூஸ் மீ சார்! இன்னிக்கு ரேசுக்கு நான் வரப்போறதில்லே. எனக்கு வெளியூர்லே ஒரு மீட்டிங் இருக்கு... ரெண்டு மணிக்கே புறப்பட்டுடனும்...” என்று இழுத்தார் அவர்.

“அடடே! நீங்ககூட மாறிட்டீங்க போலிருக்கே... சோஷியல் ஆக்டிவிடீஸ்ல எல்லாம் இறங்கிட்டீங்களா; என்ன?”– என்று எதிர்ப்புறம் பேசியவர் சிரித்துக் கொண்டே வினாவியதைக் கூடக் கமலக்கண்ணனால் பொறுத்துக்கொள்ள முடியவில்லை. வேறு சிலருக்கு அவரே ஃபோன் செய்து தாம் அன்று மாலை ஓர் ஆண்டு விழாவுக்குத் தலைமை வகித்துத் தொடங்கி வைக்கப் போவதை வலுவில் தெரிவித்தார்.அந்த ஆண்டுவிழாவைப் பற்றி விசாரித்தவர்களுக்கு எல்லாம் பிரமாதமாகப் பதில் கூறி மகிழ்ந்தார் அவர். விசாரித்துக் கேட்காதவர்கள் மேலெல்லாம் கோபம் கோபமாக வந்தது அவருக்கு.

“ரொம்ப ஸ்டிரெயின் பண்ணிக்காதீங்க...வெளியூர் கிளியூர்லாம் ஏதுக்கு? உடம்பைக்கவனிச்சிக்கவாணாம்?”– என்று ஆதரவாக விசாரித்த ஒரு நண்பரிடம்,

“என்ன சார் செய்யறது? யாரோ சென்ட்ரல் மினிஸ்டர். வரேன்ருந்தானாம். வரலே. நீங்கதான் வரணும்னாங்க... தட்டமுடியலே–காந்தியன் ‘மெத்தேட்’லே ஸிம்பிளா பணிபுரியிற சங்கம்... நாம ஆதரிக்கனுமில்லியா?”– என்று. கொஞ்சம் தாராளமாகவே வெளிச்சத்தைப் போட்டுக் காட்டினார்.

“இதென்ன? காலையிலேருந்து பைத்தியம் மாதிரி எல்லாரிட்டயும் இதைப் பத்தியே பேசிக்கிட்டிருக்கீங்க... சரியான பைத்தியந்தான் பிடிச்சிருக்கு ஒங்களுக்கு” என்று அவருடைய மனைவி சொல்லிச் சிரித்ததுகூட அவருக்குப் பெருமையாகத்தான் இருந்தது. முழுமையாக நான்கு பக்கம் கூடத் தேறாத அந்தப் பிரசங்கத்தைத் தாம் பேசும் போது கூட்டத்திலிருப்பவர்களுக்கு வழங்குவதற்காக ஓர் ஆயிரம் பிரதிகள் அச்சிட்டும் வைத்துக்கொண்டிருந்தார் அவர் இரண்டரை மணிக்குப் புறப்படலாம் என்று முடிவு செய்திருந்தார் அவர் புறப்படுவதற்குக் கால் மணி நேரத்திற்குமுன் ஃபோன் செய்த ஒரு நண்பர்,

“பிரஸ் ரிப்போர்ட்டர்ஸ் யாராவது வந்தாக் கூட்டிக் கிட்டுப் போகப்படாதோ? இவ்வளவு தூரம் போறது தான் போlங்க. பேப்பர்லியாவது வரட்டுமே? நமக்குத் தெரிஞ்ச ரிப்போர்ட்டர் ஒருத்தர் இருக்காரு. அவருக்கே போட்டோவும் பிடிக்கத் தெரியும்...நம்ம காரிலேயே பிக்... அப் பண்ணிட்டுப் போய் வர்ரபோது கொண்டாந்து ‘டிராப்’ பண்ணிட்டாப் போதும்’–என்றார்.

“ஒ எஸ்! முடிஞ்சா ஃபோன் பண்ணி இங்கே வரச் சொல்லிடுங்க... நான் இன்னும் கொஞ்ச நேரம் அவருக்காக ‘வெயிட்’ பண்றேன்...” என்று கமலக்கண்ணன் அந்த நண்பரிடம் ஃபோனில் குழைந்தார்.

“அந்த ரிப்போர்ட்டரைக் கொஞ்சம் கவனிச்சிக்குங்க... கூட்டம் முடிஞ்சதும் ஏதாவது பார்த்து...”

“ஒ எஸ் டெபனட்லி...அதாவது...”

“நாட் லெஸ் தென் ட்வெண்டிஃபைவ் ருபீஸ்...”

டெலிபோன் உரையாடல் இவ்வளவில் முடிந்தது. கமலக்கண்ணன் தும்பைப்பூப் போல் கதருடைஅணிந்து– அங்கவஸ்திரத்தையும் தரித்துத் தயாரானார்.

‘இதென்ன கோலம்: புதுசாயிருக்கே?” – என்று மிஸஸ் கமலக்கண்ணன் வியந்தாள்.

“நீயும் வரியா?”–-என்ற கமலக்கண்ணனின் கேள்விக்குப் பதில் கூறாமல் உதட்டைப் பிதுக்கினாள் அவள். பத்து நிமிஷம் கழித்து பீட்டில்ஸிலிருந்து பிரிந்து வந்த ஆள்போல் முன் நெற்றியில் சுருண்டு விழும் கிராப்பும் அரும்பு மீசையுமாக ஒரு ஸ்லாக்–பாண்ட்–ஆள் போர்டிகோவில் வந்து நின்றான். அவனுடைய தோளில் காமிரா ஒன்றும் தொங்கியது. கையில் அவனைவிடச் சற்று பருமனான ஒரு ‘லெதர் பாக்’ காட்சியளித்தது.

“சார் நீங்கதானே...?” என்று இழுத்தான் அவன்.

“ஆமாம்!...நான்தான்.பூமி நாயகம் அனுப்பிச்சாரா? நீங்கதானே நியூஸ் ரிப்போர்ட்டர்...”

“ஆமாங்க...! கலைச்செழியன்...சீஃப் ரிப்போர்ட்டர் ஆப் டெய்லி டெலிகிராம்.”

“அது சரி! உங்க சொந்தப் பேரு”.

“சொந்தப் பேரே கலைச்செழியன் தானுங்க...”

“சரி? புறப்படலாமா?”

“ராத்திரி ஒன்பது மணிக்குள்ள திரும்பிடலாமில்லிங்களா? ஏன்னா எங்க பேப்பர் ஸிட்டி எடிஷனுக்குள்ள வந்திட்டா உங்க பேச்சும் போட்டோவும் காலைப்பேப்பர்லே வரும்படியாய்ப் பண்ணிடலாம்...” என்றுகூறியஅந்தஆள் “வரும்படியாய்” என்பதை மட்டும் கொஞ்சம் அழுத்தினாற் போலிருந்தது. அந்த ஒரு வார்த்தைக்கு மட்டும் ரெண்டு அர்த்தம் இருப்பதுபோல் தோன்றியது கமலக்கண்ணனுக்கு உள்ளுற நகைத்துக் கொண்டார் அந்தப் பிறவி வியாபாரி.

நிருபர் முன் ஸுட்டில் ஏறிக்கொண்டார். கமலக்கண்னன் பின்னால் ஏறிக்கொண்டதும், டிரைவர் ஸ்டார்ட் செய்தான்.போர்டிகோவில் நின்று மிஸஸ் கமலக்கண்ணன் கையை ஆட்டிவிடைகொடுத்தாள். கார் கேட்டைக் கடந்து ரோடில் இறங்கி விரைந்தது.பிரயாணம் உற்சாகமாக இருப்பதை உணர்ந்தார் கமலக்கண்ணன். கிண்டியைக் கடந்து கார் விரைந்த போது குதிரைப் பந்தய மைதானத்திற்கு ஒடிப் பாசத்தோடு, ஒரு கணம் அங்கே தங்கி மீண்டது அவர் மனம். கூட வருகிற நிருபரோடு ஏதாவது பேச வேண்டுமே என்பதற்காக சூயஸ்கெனால் விவகாரம், ஈரோப்பியன் காமன் மார்க்கெட், நாட்டோ, விட்டோ போன்றவைபற்றி ஏதோ பேச்சுக் கொடுத்தார். ஆனால் பாவம் அந்த சீஃப் ரிப்போர்ட்டருக்கு அவற்றையெல்லாம் பற்றி எதுவுமே தெரிந்திருக்கவில்லை. கோடம்பாக்கத்திற்குப் புதிதாக வந்திருக்கும் நட்சத்திரங்கள், படப்பிடிப்புக்கள், இவை பற்றி மட்டுமே மளமளவென்று பேசினார். கலைச்செழியன். அதற்குபின் ராயபுரத்தில் இரண்டு நாட்களுக்கு முன் நடைபெற்ற ஒரு குழாயடிச் சண்டையைப் பற்றியும் வியந்து கூறினார். சண்டைபோட்ட இரண்டு பெண்களும் பரஸ்பரம் ரவிக்கையைக் கிழித்துக்கொண்டதை மிகவும் சுவாரஸ்யமாக விவரித்தார் நிருபர்.பேச்சை நிறுத்திவிட்டுக் காரிலேயே மெல்லக் கண்களை முடித் தூங்கத் தொடங்கினார் கமலக்கண்ணன்.

மறுபடி அவர் கண்களைத் திறந்தபோது கார் திண்டி வனத்துக்குப்போகிற பெரிய சாலையிலிருந்து விலகிக் காந்திய சமதர்ம சேவாசங்கம் இருந்த கிராமத்திற்குப்போகும் சிறிய செம்மண் ரஸ்தாவில் சென்றுகொண்டிருந்தது. அந்தச் சங்கம் கிராம சேவகிகளுக்குப் பயிற்சியளித்து அனுப்பும். ஒரு ‘வில்லேஜ் டிரெயினிங் சென்டர்’–போலிருக்கிறது. வெள்ளை வெளேரென்று. கதர்ப்புடவையணிந்த இளம் பெண்கள் கூட்டமும் அவர்களுடைய பிரின்ஸிபால், ஆசிரியைகளும் ஆசிரம வாசலிலேயே அவருடைய காரை எதிர் கொண்டு வரவேற்றார்கள். கமலக்கண்ணன் அங்கேயே காரை நிறுத்தி இறங்கி அவர்களோடு மேடையை நோக்கி நடக்கலானார். அப்படி அவர் அந்தப் பெண்கள் கூட்டம் புடைசூழ நடப்பதை ஒரு படம் பிடித்துக்கொண்டார் நிருபர் கலைச்செழியன். திடீரென்று அத்தனை பெண்களுக்கும் நடுவே பேசிக்கொண்டு நடந்து செல்வது சிரமமாக இருந்தது அவருக்கு

“உங்களைப் போன்றவர்கள் பெரிய மனசு பண்ணினால் இந்த ஆசிரமம் எவ்வளவோ வளரமுடியும்”– என்று பேச்சோடு பேச்சாக எதையோ நினைவூட்டி வைத்தாள் பிரின்ஸிபால் அம்மாள். தலைமை வகித்து விழாவைத் தொடங்கி வைப்பதற்குமுன் எதிர்பாராதவிதமாக இன்னொரு காரியத்தையும் அவர் செய்யவேண்டியிருந்தது. காந்திய சமதர்ம சேவா சங்கத்து ஆசிரமத்தின் புதிய ‘பிளாக்’ ஒன்றைக்கட்டுவதற்கான அஸ்திவாரக்கல்லையும் அவரை நடும்படி வேண்டிக்கொண்டாள் பிரின்ஸிபால் அம்மாள். அழகிய சிறிய வெள்ளிக்கரண்டி அவரிடம் அளிக்கப்பட்டது. அஸ்திவாரக்கல்லின் ஒர் ஒரத்தில் சம்பிரதாய மாக இரண்டு கரண்டி சிமென்ட்டை அள்ளிவைத்தார் கமலக்கண்ணன். மீதிக் காரியங்களை அருகிலிருந்த கொத்தனார் செய்துமுடித்தார். கூட்டம் தொடங்கியது.பிரின்ஸி பால் அம்மாள் கமலக்கண்ணனை வானளாவப் புகழ்ந்து வரவேற்பு மடல் ஒன்றை வாசித்துக் கொடுத்தாள்.

அந்த வரவேற்பில் ஆசிரமக் கட்டிட நிதிக்குக் கமலக் கண்ணன் நிதியுதவி செய்யவேண்டுமென்ற வேண்டுதலும் இருந்தது. கலைச்செழியன் ‘பளிச்’ சென்று ‘பிளாஷ்’ பல்புகள் எரியப் புகைப்படங்களைப் பிடித்துத் தள்ளினான். கிராமத்து மக்களுக்குக் கலைச்செழியன் அங்கும் இங்கும் தாவித்திரிந்துபோட்டோ பிடிப்பது மிகவும் வேடிக்கையாக இருந்தது. பலர் படங்களில் விழவேண்டுமென்றே தலையைக் கொக்குப்போல் உயர்த்தினார்கள். சிலர் படங்களில் விழ முயன்று கீழே விழுந்தார்கள். கமலக்கண்ணன் பேச எழுந்து– ஒரு பற்றுக்கோடும் இன்றி நிராதரவாக விடப்பட்டது போன்ற சபை அச்சத்துடன் எதிரே இருந்த ஒரே பற்றுக்கோடாகிய ‘மைக்’ கைப்பற்றினார்... அந்தநாட்டுப் புறத்து மைக் ‘டபக்’ கென்று கீழே சரிந்துவிட்டது. ‘மைக்’ காரன் ஓடிவந்து சரிசெய்து பார்த்தும் அதுகமலக்கண்ணனுடைய வாய்க்குச்சரியான உயரத்தில் நிற்க மறுத்துவிட்டதனால் அவனே அதைப்பேச்சு முடிகிறவரைகையினால் தாங்கிப்பிடித்துக் கொண்டு நிற்க வேண்டியதாயிற்று. இந்தமுதல் பதற்றத்திலேயே கமலக்கண்ணனுக்குச் சொல்ல நினைத்த தெல்லாம்மறந்து போயிற்று. இரண்டாவதாக அவர் மென்றுவிழுங்கி ஏதோ சொல்ல முயன்று முன் வந்தபோது யாரோ மாலையோடு வந்து எதிரே நின்றுவிட்டார்கள், கடைசியில் வேறு வழியின்றி அச்சிட்டுக்கொண்டு வந்திருந்த பிரசங்கத்தை அப்படியே படிக்கத் தொடங்கிவிட்டார் அவர். அதன் பிரதிகளைக் காந்திய சமதர்ம சேவா சங்கப்பெண்கள் கூட்டத்தில் வழங்கத்தொடங்கினார்கள். கமலக்கண்ணன் வேர்க்க விறுவிறுக்க அதைப்படித்தாலும் அவர்பேசும்போது நடுநடுவே கை தட்டி உற்சாகப்படுத்த வேண்டுமென்று பிரின்ஸிபால் அம்மாள் முன்பே சொல்லி வைத்திருந்ததனாலோ என்னவோ, மாணவிகள் நடுநடுவே கரகோஷம் செய்து அவரை வியந்தனர். அந்தக்கரகோஷம் அளித்த உற்சாகத்தில் அச்சிட்டுக்கொண்டு வந்திருந்ததைப் படித்து முடித்த பின் அதில் இல்லாமல் தாமே துணிந்து சொந்தமாக, ‘என்னை இங்கு அழைத்துக் கெளரவித்த உங்களுடைய சங்கத்துக்கு என் மனப்பூர்வமான நன்றியறிதலைத் தெரிவித்துக்கொள்கிறேன்’ என்று ஒரு புது வாக்கியமும் பேசிவிட்டார். கமலக்கண்ணன். தன்னுடைய தலைமையுரையில் பிறர் இரசிக்கவோ வியக்கவோ தகுந்த எந்த அம்சமும் இல்லையென்பது, அவருக்கே தெரிந்திருந்தது. ஆனால் தனக்கு அடுத்தாற்போல் தொடர்ந்து பேசிய ஒவ்வொருவரும் தவறாமல் தன்னுடைய தலைமையுரையைப் பற்றியே வியந்தும், புகழ்ந்தும் வானளாவத் தூக்கி விட்டதைக் கேட்கக் கேட்கத்தான் பிரமாதமாகத் தான் பேசியிருக்கவேண்டும் என்றொரு நம்பிக்கை அவருக்கே வந்து விட்டது. அச்சிட்டுக்கொண்டு வந்து படித்ததற்கே இவ்வளவு பாராட்டானால் சுயமாக எழுந்து பேசியிருந்தால் இன்னும் எவ்வளவு பாராட்டுக் கிடைத்திருக்கும் என்பதையும் இப்போதிருந்தே கற்பனைசெய்யத் தொடங்கி விட்டார் கமலக்கண்ணன். எல்லோரும் தன்னைப் புகழ்ந்து பேசும் போது மேடையில் விறைப்பாக நிமிர்ந்து உட்கார வேண்டும் போல் தோன்றியது அவருக்கு மேடையில் அதிகநேரம் உட்கார்ந்து பழக்கமில்லாத அவருக்குநடுவில் ஒரு சிகரெட் புகைக்கவேண்டுமென்று ஆசையிருந்தும் மிகவும் சிரமப்பட்டு அந்த ஆசையை அடக்கிக்கொண்டார்.

“ரொம்ப நல்லாப் பேசிட்டீங்க சார்” என்று நிருபர் கலைச்செழியன் மேடைக்கு வந்து அவர் காதருகே கூறி விட்டுப் போனான். அவன் அப்படிச்சொல்ல வந்தபோது, மேடையேறியதும் கமலக்கண்ணனின் அருகே நெருங்கியதும் தனக்கு அவரோடு ஒரு ‘இன்டிமஸி’–நெருக்கம் இருப்பதாகக் கூட்டத்தினருக்குக் காண்பிக்க முயல்வது போலிருந்ததே தவிரப் பேச்சைப் பாராட்டிக்கூற மட்டும் வந்ததாகத் தோன்றவில்லை. கூட்டத்தின் இறுதியில் தன்னையறியாமலே ஒரு தவறு செய்துவிட்டார் கமலக்கண்ணன். ஒலி பெருக்கிக்காரர்கள் ஒலிபெருக்கியில் பதிவு செய்த தேசீய கீதத்தைப் போட்டிருப்பதை உணராமல் எல்லோரும் ‘அட்டென்ஷனில்’ நிற்பதையும் கவனியாது மெல்ல நகரத் தொடங்கிவிட்டார். முன் வரிசையில் சிலர் அவருடைய இந்த அப்பாவித்தனத்தைக் கண்டு சிரிப்பை அடக்கிக் கொண்டுவிட்டனர். அப்புறம் யாரோ சைகைசெய்ததைப் புரிந்து கொண்டு நகரத் தொடங்கிய இடத்திலேயே நின்றார் அவர். தேசியகீதம் முடிந்ததும் பிரின்ஸிபால் அம்மாள் அவரைத் தம்முடைய அலுவலக அறைக்கு அழைத்துச் சென்று ‘விஸிட்டர்ஸ் நோட்புக்கை’ நீட்டினாள். அந்த ஆசிரமத்தை வானளாவப் புகழ்ந்து எழுதிக் கையெழுத் திட்டுக் கொடுத்தார் அவர். ஆசிரமம் தோன்றிய விதம், பணிகள் முதலியன பற்றிய சிறு சிறு பிரசுரங்களை அவருக்கு அளித்தாள் அந்த அம்மாள்.

“இந்த நாட்டில் காந்தியசமதர்ம வாழ்வு கிராமங்களில் எல்லாம் மலர வேண்டுமானால் ‘ரூரல்டெவலப்மெண்ட் ஸ்கீம்’ சரியாக அமையவேண்டும். ‘ரூரல்டெவலப்மெண்ட்’ சரியாக அமைவதற்கு நல்ல கிராம சேவகர்களும், கிராம சேவகிகளும் வேண்டும். நல்ல கிராம சேவகர்களும், சேவகிகளும் உருவாவதற்கு இதுமாதிரி ஆசிரமங்கள் தான் பாடுபட முடியும்” என்று அந்த அம்மாள் பிரசங்கபாணியில்விவரித்த போது, ‘சரிதான் இதுமீண்டும் நன்கொடையில் வந்துமுடியும் போலிருக்கிறது’ என்று அநுமானித்துக் கொண்டார் கமலக்கண்ணன். இந்த மாதிரி தேசிய சேவை, காந்திய தர்மம் இவையெல்லாம் அவருக்கு மட்டுமல்லாமல் அவருடைய குடும்பத்துக்கே புதியவை. அவருடைய தகப்பனார் யுத்த நிதிக்கு நிறையப் பணம் கொடுத்து வெள்ளைக்காரனிடம் திவான் பகதூர், சர் பட்டங்களையெல்லாம் பெற்றிருந்த ஒரு ஜஸ்டிஸ் கட்சிக்காரர். மிகமிக ‘கன்சர்வேடிவ்’ ஆசாமி. அவர் காலமான பின்பும் அவருடைய அபிப்பிராயங்கள், கொள்கைகளே நீண்டநாள் அந்தக் குடும்பத்தில் நிலவின. காலநிலையை உத்தேசித்துக் கமலக்கண்ணன் தான் படிப்படியாக மாறினார். அப்படிப்பட்ட குடும்பத்தில் செல்லப்பிள்ளையாக வளர்ந்தவருக்கு ‘ரூரல் டெவ்லப் மெண்ட்’ போன்ற தொடர்கள் திடீர் திடீரென்று காதில் விழத் தொடங்கினால் அவற்றைப் புரிந்துகொள்ளவும், உணர்ந்து கொள்ளவும் சிரமமாயிராதா என்ன? நீண்ட நாள்வரை அவருடைய வீட்டில் மாட்டத்தகாத படங்கள் என்ற வரிசையில் காந்தி, சுபாஷ், நேரு, பாரதியார் போன்றவர்களின் படங்கள் தடை செய்யப்பட்டிருந்தன. தகப்பனார் காலமானபின்பே இந்தத் தடை மெல்லமெல்ல நீங்கியது. தடைநீங்கியது என்றாலும் முதல்முதலாக அந்தப் படங்களைச் சுவர்களில் மாட்டும் துணிவு யாருக்கும் வரவில்லை. கமலக்கண்ணனுக்கு வேண்டிய வியாபாரிகள் சிலருடைய கம்பெனிக் காலண்டர்களில் மேற்படியார்களுடைய படங்கள் வரநேர்ந்ததால்–அந்தக் காலண்டர்கள் அவருடைய வீட்டில் மாட்டப்படவேண்டிய நிர்ப்பந்தத்திற்கு ஆளாயின. ஆனால் அந்தக் குடும்பத்தைப்பொறுத்தவரை கமலக்கண்ணனின் இந்த மாறுதல் ஒரு ‘டிரான்ஸ்மிஷன் பீரியட்’ என்றுதான் சொல்லவேண்டும். அதனால் தான் இருந்தாற்போலிருந்து காந்தியம், கிராம வளர்ச்சி, கிராம் சேவகர் என்ற பெயர்களைக் கேட்டவுடன் மிரண்டார் அவர். கடைசியில் பிரின்ஸியால் அம்மாள் நேர்டியாகவே பேச்சைத் தொடங்கினாள்.

“ ‘புது பிளாக்’ கட்டுவதற்கு நீங்களெல்லாம் நிறைய உதவி செய்ய வேண்டும்... உங்களுக்குத் தெரிஞ்சவங்களுக்கும் எடுத்துச் சொல்லணும்...”

“பார்க்கலாம்! நல்ல காரியங்கள் தெய்வசித்தத்திலே தான் நடக்கணும்” என்று பட்டுக்கொள்ளாமல், ‘நான் கமிட்டலாக’ பதில் கூறினார் கமலக்கண்ணன்.

“உங்களைப் போன்றவர்கள்தான் இன்னிக்கு தெய்வங்களுக்குச் சமானம்” என்று விடாமல் மேலும் தொற்றிக்கொண்டே பேசினாள் அவள் . கமலக்கண்ணன் காரை நோக்கி மெதுவாக நகர்ந்தார். கலைச்செழியன் ஏற்கெனவே தயாராக முன் வீட்டில் உட்கார்ந்திருந்தபடியால் பின் தொடர்ந்து வந்திருந்த எல்லாரையும் நோக்கிக் கைகூப்பி விட்டுக் காரில் ஏறினார் கமலக்கண்ணன்.

“சீக்கிரமாப் போயிட்டா நியூஸை ஸிடி எடிஷன்லியே சேர்த்துப்பிடலாம்” என்று கலைச்செழியன் மீண்டும் கமலக்கண்ணனை நோக்கி வாயெல்லாம் பல்லாகச் சிரித்துக் கொண்டே கூறினான்.

கமலக்கண்ணன் டிரைவரிடம், “முடிஞ்ச வரைக்கும் வேகமாகத்தான் போயேன்” என்று அவசரப்படுத்தினார்.

கார் விரைந்தது.

"https://ta.wikisource.org/w/index.php?title=நெஞ்சக்கனல்/3&oldid=976856" இருந்து மீள்விக்கப்பட்டது