நெஞ்சக்கனல்/8

விக்கிமூலம் இல் இருந்து
Jump to navigation Jump to search

8

மலக்கண்ணனுடைய புதிய தினசரிப் பத்திரிகை தொடங்கப்பட்டுச் சில மாதங்கள் ஆகிவிட்டன. இந்தச் சில மாதங்களில் ‘தினக்குரல்’— எல்லாச் சிற்றுரர்களிலும் பேரூர்களிலும் பரவி விட்டது. சினிமாவில் காட்டப்படும் சிலைடுகளிலிருந்து, தகர போர்டுகள் வரை எல்லா விளம்பரங்களிலும் மாயாதேவி ஒரு ‘தினக்குரல்’ இதழைக்கையில் விரித்துப் படித்துக் கொண்டிருப்பது போல்– படுத்துக் கொண்டிருக்கும் காட்சியோடு விளம்பரங்களைச் செய்திருந்தார் ‘பிரகாஷ் பப்ளிஸிட்டீஸ்’ உரிமையாளர் பிரகாசம். ஒரு தினசரிப் பத்திரிகையை ஒரு கவர்ச்சி நட்சத்திர நடிகை படிப்பதுபோல் காட்சியிட்டு விளம்பரம் செய்தது, இது முதல் தடவை–என்று கமலக்கண்ணனைச் சந்திக்கும் போதெல்லாம் பெருமையாகக் கூறிவந்தார் பிரகாசம்.

மாயாதேவியின் தொடர்பை ஏற்படுத்திக் கொடுத்திருந்த காரணத்தால் கமலக்கண்ணனும் பிரகாசத்தை ஒரு செல்லப்பிள்ளை போல் கவனிக்கத் தொடங்கியிருந்தார். தன்னுடைய அந்தரங்கங்களும், பலவீனங்களும், பிரகாசத்திற்குத் தெரிந்தவைகளாக விடப்பட்டதன் காரணமாகவே –நிர்ப்பந்தமாகப் பிரகாசத்தைத் தன் செல்லப்பிள்ளையாக வைத்துக்கொள்ள வேண்டிய அவசியம் ஏற்பட்டுவிட்டது. கலைச்செழியனோ பிரகாசத்துக்கு முன்பே செல்லப் பிள்ளை ஆகிவிட்டிருந்தான். பத்திரிகை எப்படி நடத்துவது என்பதைப் பற்றிய விவரங்களை– இந்த இருவர் மட்டுமே தன்னை அணுகிக் கூறும்படி விட்டிருந்தார் கமலக்கண்ணன்.

இருவரும் சேர்ந்து தங்களைத் தவிர அவருக்கு வேறு சிந்தனைகள் கிடைத்து விடாதபடி பாதுகாத்து வந்தனர். வசதிகளை உடையவர்களை அண்டிப்பிழைக்கின்றவர்கள் இயல்பாகவே செய்கிற காரியம்தான் அது. தாங்கள் அண்டிப் பிழைப்பதோடு பிறர் அண்ட முடியாதவாறு கவனித்துக்கொள்கிற காரியத்தையும் அவர்கள் செய்து கொண்டிருப்பார்கள். கமலக்கண்ணனின் இருபுறமும் கலைச்செழியனும், பிரகாசமும் இருந்து இப்படிப்பிறர் அணுகாதபடிகாத்துக் கொண்டார்கள். பத்திரிகை தரத்தில் மிகமிகக் கீழானதாக இருந்தாலும்– கமலக்கண்ணன் பதவிகளை எதிர்பார்த்து எந்தஅரசியல் கட்சியைச்சார்ந்திருந்தாரோ அந்தக் கட்சிக்கு ஆதரவாகவே பத்திரிகை நடத்தப்பட்டது. கட்சியின் குரலாக வேறு சரியான பத்திரிகைகள் இல்லாத காரணத்தால் கட்சியும் கமலக்கண்ணனுடைய தினசரியை ஒப்புக்கொண்டிருந்தது.

கட்சிக் கூட்டங்களுக்காகப் பிரசாரத்திற்குப் போகிறவர்களுக்குக் கார் பிரயாணப்படி செலவு போன்றவற்றிற்கு எல்லாம் கமலக்கண்ணன் தன்கையிலிருந்தே தாராளமாகச் செலவழித்துக்கொண்டிருந்தார். கட்சியின் முழுஇயக்கமும் ஏறக்குறைய அவர் கையில் இருப்பதுபோல் வந்துவிட்ட இந்த நிலையில் தான் கட்சியின் செயற்குழுக் கூட்டத்தில் ஒரு சலசலப்பு உண்டாயிற்று. கட்சியின் நகரக் குழுவில் உள்ள உறுப்பினர்களும், தலைவரும் செயலாளரும் கமலக்கண்ணனை எதிர்க்க முடியாதவர்களாக இருந்தனர். ஆனால் கட்சி ஊழியர்கள்—உண்மைத் தொண்டர்கள், கட்சியின் அடிப்படை இலட்சியங்களை ஆன்ம பலமாகக் கொண்டவர்கள் கமலக்கண்ணன் போன்றவர்களை எதிர்ப்பதற்குச் சமயத்தை எதிர்பார்த்துக் காத்துக் கொண்டிருந்தார்கள்.

இந்த ஊழியர்களின் மனப்போக்கைப் புரிந்து கொண்டு கட்சித்தலைவர்—நீண்ட நாட்களாக ஊழியர் கூட்டத்தைக் கூட்டாமலே தள்ளிப் போட்டுக் கொண்டு வந்தார். கடைசியில் ஒருநாள்—ஊழியர்களில் முக்கியமான சிலர் கட்சித் தலைவரை அவருடைய வீட்டிற்கே தேடிக்கொண்டு வந்து விட்டார்கள். தலைவர் அவர்களை நாசூக்காக வரவேற்றார்.

“வாங்க! என்ன சேதி கட்சி நிலைமை எப்படி இருக்கு ஊழியர்கள் மத்தியிலே கட்சியைப்பற்றி என்ன பேசிக்கிறாங்க...?”

“ஊழியர்கள் மத்தியிலே கட்சியைப் பற்றி இருக்கிற அதிருப்தியைச் சொல்றதுக்காகத் தான் நாங்களே இங்கே தேடி வந்தோங்க கட்சியிலே மேல் மட்டத்திலே இருக்கிற வங்க ஊழியர்களின் மனச்சாட்சியை மதிக்கிறதே இல்லேன்னு நினைக்கிறாங்க ஊழியர்கள் கூட்டத்தையே கூட்டி அதிக நாளாச்சுங்க. இந்த நிலைமைக்காக ஊழியர்கள் ரொம்ப வருத்தப்படறாங்க..." என்று ஊழியர்களிடம்

இருந்து மறுமொழி வந்ததைக் கேட்டுத் தலைவர் சிறிது நேரம் ஒன்றுமே பேசத் தோன்றாமல் சும்மா இருந்தார். நீண்ட நேரம் அப்படிச் சும்மா இருந்தபின் மெதுவாகப் பதில் பேசத் தொடங்கினார்.

“ஊழியர்கள் கூட்டத்தைக் கூட்ட வேண்டியதுதான். ஆனால் அதைச் செய்யறதுக்கு இப்ப என்ன அவசியம்? ஒரு காரியமுமில்லாமே சும்மாச் சும்மா ஊழியர்கள் கூட்டத்தைக் கூட்டி என்ன காரியத்தைச் சாதிக்கப் போறோம்னுதான் தெரியலே. இப்ப என்ன நடக்காதது நடந்திரிச்சு? இதுக்கு ஊழியர் கூட்டத்தைக் கூட்டு வானேன்?”

“அதுக்கில்லீங்க! கட்சி நம்பிக்கையைப் பொது மக்கள் அளவிலே பரப்பறதும், பிரச்சாரம் செய்யிறதும் நாங்க தான்! எங்களுக்கே அதிலே நம்பிக்கையில்லாமப் போயிட்டா அப்புறம் நாங்க எப்பிடி மற்றவங்களுக்கு எடுத்துச் சொல்ல முடியும்?”

“உங்களுக்கு அப்பிடி நம்பிக்கை இல்லாமப் போகும் படியா இப்ப என்ன நடந்திடுச்சு? அதைத்தான் கொஞ்சம் சொல்லுங்களேன்.”

“எவ்வளவோ நடந்திருக்குங்க இப்பிடி உட்கார்த்தி வச்சுத்தனியே கேட்டா எதுவும் சொல்ல முடியாதுங்க. நின்னு நிதானமா ஊழியர்களைக் கூட்டிப் பேசினா எல்லாமே சொல்லலாம்.”

வேறு வழி இல்லாதகாரணத்தால் அடுத்த ஞாயிற்றுக் கிழமையே ஊழியர் கூட்டத்தைக் கூட்டுவதற்கு ஒப்புக் கொண்டார் கட்சித் தலைவர். ஊழியர் கூட்டத்தைக் கூட்டினால் என்னென்ன கேள்விகள் வரும் என்பது அவருக்குத் தெரியாததல்ல. ஆயினும் கூட்டத்தைக் கூட்டுவதற்கு அவர் ஏற்பாடு செய்து சுற்றறிக்கை அனுப்ப வேண்டியது தவிர்க்க முடியாததாயிற்று.

சுற்றறிக்கையைக் கமலக்கண்ணனும் பார்த்தார். உடனே நகரக் கட்சித்தலைவரை டெலிபோனில்அழைத்து “என்னய்யா இது?திடீரென்றுசொல்லாமல்,கொள்ளாமல் ஊழியர் கூட்டத்தைக் கூட்டியிருக்கிறீர்? என்ன சமாசாரம். ஏதாவது கலவரம் பண்ணப்போறாங்கன்னா முன்கூட்டியே சொல்லிப்பிடும். நான் கூட்டத்துக்கு வரலை, நான் இருக்கிறது உங்க கட்சிக்குப் பலமே ஒழிய எனக்கு உங்க கட்சியாலே பலம் இல்லே! ஞாபகமிருக் கட்டும்.’’ என்றார் கமலக்கண்ணன்.

“அதெல்லாம் ஒண்ணுமில்லீங்க! நீங்க சும்மா ராஜா வாட்டம் வந்து கூட்டத்திலே உட்காருங்க. நான் பார்த்துக்கறேன். இந்தக் கூட்டமே ஒரு கண் துடைப்புக்காகத்தான் ஏற்பாடு பண்ணியிருக்கேன். நம்ம பசங்க வந்து தொந்தரவு செய்யிறாங்க ஊழியர் கூட்டம் போட்டு நாளாயிடிச்சாம். கட்சியிலே ஊழியர்களுக்கே நம்பிக்கைக் குறைஞ்சுக்கிட்டு வருது–அப்பிடி–இப்படிங்றாங்க...வெறும் வாயை மெல்றவங்களுக்கு அவல் கிடைச்சாப்ல. நாம் கூட்டத்தைக் கூட்ட மாட்டேன்னு மறுத்தா நிலைமை இன்னும் மோசமாயிடும். அதுனாலேதான் கூட்டத்துக்குச் சம்மதிச்சாப்பிலே ஒரு சுற்றறிக்கையை விட்டேன்” என்று கமலக்கண்ணனுக்கு ஃபோனில் மறுமொழி கூறினார் கட்சித் தலைவர்.

“எப்படியோ பார்த்துச் சமாளிக்கத் தெரிந்து கொள்ளும். என் பத்திரிகையைக் கட்சிக்காகவே கொடுத்திருக்கேன். என் செலவிலே ஊரூராய்க் கட்சிப் பிரச்சாரமும் நடக்குது. என்னை எவனாவது ஊழியர் கூட்டத்திலே குறைசொல்லிப் பேசினா நான் தாங்கமாட்டேன்” என்று மீண்டும் வற்புறுத்திக் கூறிய பின்பே கமலக்கண்ணன் ஃபோனை வைத்தார்.

பேசி முடித்து ஃபோனை வைத்துவிட்டாலும் அவர். மனம் என்னவோ. கவலை நிறைந்தே இருந்தது. அந்தவேளையில் பார்த்துச் சமய சந்தர்ப்பம் தெரியாமல் புலவர் வெண்ணெய்க்கண்ணனார் அவரைத் தேடிக் கொண்டு வந்து சேர்ந்தார். கமலக்கண்ணனோ அப்போதிருந்த மனநிலையில் அவர் வந்ததையே கவனிக்காதது போல் இருந்துவிட்டார்.

புலவர் என்ன செய்வதென்று தெரியாமல் தயங்கிய படியே நின்றார். தாம் வந்திருப்பதை அறிவுறுத்துவதற்கு அடையாளமாக இலேசாய்ச் செருமினார். அதற்கும் கமலக் கண்ணன் திரும்பவில்லை. பின்பு சற்றுப் பலமாகவே இருமினார். கமலக்கண்ணன் மெல்ல நிமிர்ந்து திரும்பிப் பார்த்தார். எதிரே நின்ற புலவரை உட்காரச் சொல்ல வேண்டும் என்று தோன்றவில்லை அவருக்கு. சுபாவமாகவே ஒருமுறை—இருமுறை பணிந்து விட்டுக் கொடுக்கிறவனிடம்— எப்போதுமே அப்படி விட்டுக்கொடுக்க வேண்டுமென்று எதிர்பார்ப்பது பணக்காரர்களுக்கு வழக்கமாகி விடும். விட்டுக்கொடுக்காமல் எப்போதுப் பிடிவாதமாக நிமிர்ந்து நிற்கிற தீரனைத்தான் ஒரு சீராக மதிக்க வேண்டுமென்று அவர்கள் பயப்படுவார்கள். ஒருமுறை இருமுறை விட்டுக் கொடுக்கிறவனிடம் அவர்களுக்கே குளிர் போய்விடும். புலவர் அப்படிப் பலமுறை விட்டுக்கொடுத்தே பழகியிருந்ததனால்—அவரை மரியாதையாக உட்காரச் சொல்லாவிட்டாலும் தவறில்லை என்றே கமலக்கண்ணன் எண்ணினார்.

“ஐயா...வந்து...வந்து...” என்று புலவர் நின்றபடியே எதையோ பேசத் தொடங்கினார்

“வந்தாவது...போயாவது? இப்ப என்ன காரியமா வந்தீங்க...”

“ஒன்றுமில்லை ஐயா! தங்கள் தந்தையார் நினைவு நாள் இத்திங்கள் பதினாறாம் நாள் வெள்ளிக்கிழமையன்று வருகிறது. யான் செயலாளனாக இருந்து கட்மையாற்றும் செங்குட்டுவன் படிப்பகத்தின் சார்பில் அறப்பெருந்தகையும், வள்ளலுமான தங்கள் தந்தையார் நினைவு நாளைச் சீரிய முறையிலே கொண்டாட எண்ணியுள்ளோம்.”

“சரி, அதான் வருமே வழக்கமா...”—என்று அசுவாரஸ்யமாக இழுத்தார் கமலக்கண்ணன்.

வழக்கமாக இப்படி ஒரு கோரிக்கையைப் புலவர் விடுத்தால் உடனே ஒரு புத்தம் புதிய நூறு ரூபாய் நோட்டை உறையிலிட்டுக்காதும் காதும் வைத்தாற்போல் கொடுப்பது கமலக்கண்ணன் இயல்பு. இன்று அந்த இயல்புக்குமாறான கடுமையோடு அவர் இருக்கவே புலவருக்கு என்ன செய்வதென்று தெரியவில்லை. மறுபடி எப்படித் தனது குறிப்பைத் தெளிவாகப் புலப்படுத்துவது எனப் புரியாமல் தவித்தார் புலவர். கமலக்கண்ணனோ அப்போது இத்தகைய கூட்டங்கள், கட்சிகள், மாநாடுகள் ஆகியவற் றையே வெறுக்கும் மனப்பான்மை யோடிருந்தார். எனவே புலவர் தன்னிடமே பணம் பெற்றுக்கொண்டு போய்த்தன் தந்தைக்கு நினைவுவிழா நடத்துவதையும் அந்தக் கணத்திலே வெறுக்கிற நிலையில் இருந்தார் அவர்.

ஆனால் ஒரு காலத்தில் இப்படி இரகசியமாகப் பணம் கொடுத்து விழாக்களுக்கு ஏற்பாடு செய்யப் பழக்கப்படுத்தியவரே அவர்தான், புலவருக்கே அந்த வழக்கம் அவரால் தான் பழகியது. இப்போது அவரே மெளனமாக இருந்ததைக் கண்டு புலவருக்கு ஒன்றும் புரியவில்லை. பேசாமல் எதிரே தயங்கி நின்றார். கமலக்கண்ணனோ புலவர் நின்று கொண்டிருப்பதைக் கவனிக்காததுபோல் வேறு காரியங்களில் மூழ்கினார் நீண்ட நேரங்கழித்து அவர் மறுபடி தலை நிமிர்ந்தபோது இன்னும் புலவர் நின்று கொண்டிருப்பதைக் கண்டு கோபம் வந்தது அவருக்கு. உடனே ஆத்திரமாகக் கேட்கலானார்.

“என்ன நிற்கிறீர்? அதுதான் நினைவுவிழா நடத்து வதைப்பற்றி எனக்கு ஒன்றும் மறுப்பில்லை என்று சொன்னேனே?”

“அதற்கில்லை...வந்து...விழாச் செலவுகளுக்கு ஒரு நூறு வெண் பொற்காசுகள் தாங்களே தந்து வரும் வழக்கப்படி...”

“வழக்கமாவது ஒண்ணாவது? நான் என்ன படியளக்கிறதாகவா எழுதிக் கொடுத்திருக்கேன்? படிப்பகத்தின் சார்பிலே வசூல் செய்து நடத்தினால் என்ன?”

“அது சரிதான்! ஆனால் இதற்கெல்லாம் எப்படி வசூல் செய்வது?”

“சரி சரி! எப்படி முடியுமோ பார்த்துச் செய்யும். இப்ப எனக்கு நிறைய வேலையிருக்கு. பிறகு பேசலாம்”—என்று புலவரைத் துரத்தினார் கமலக்கண்ணன். புலவர் கமலக்கண்ணனை மரியாதையாக ஒதுங்கி நின்றுகும்பிட்டு விட்டுப் போய்விட்டார். கமலக்கண்ணன் தனியே கட்சியின் வரவிருக்கும் ஊழியர் கூட்டத்தைப் பற்றிச் சிந்திக்கத் தொடங்கினார். அந்த விநாடியிலிருந்து— ஊழியர் கூட்டம் நடைபெறும் தினமாகிய ஞாயிற்றுக்கிழமை வருகிற வரை ஒவ்வொரு விநாடியும் இதே சிந்தனையிலும் கவலையிலுமாகவே மூழ்கியிருந்தார்அவர். இந்த ஊழியர் கூட்டத்தைக் கூட்டுவதில் தமக்குள்ள அதிருப்தியைக் காட்டுவதன் அடையாளமாகக் கூட்டம் நடைபெறப் போகிற அறிக்கையைத் தமது ‘தினக்குரலி’ல் வெளியிடாமலே இருந்துவிட்டார்.

“அறிக்கையைத் ‘தினக்குரலி’ல் எதிர்பார்த்தோம். ஏன் வெளியிடவில்லை?’’—என்று கேட்டுக் கடிதங்கள் வந்தன. அவற்றையும் கிழித்துக்குப்பைக் கூடையிலே போடச் செய்தார். அதோ, இதோ, என்று ஊழியர்களின் கூட்டம் நடைபெறும் தேதியாகச் சுற்றறிக்கை அனுப்பப்பட்டிருந்த ஞாயிற்றுக்கிழமையும் வந்தது. கூட்டம் காலை பத்து மணிக்கு என்று குறிக்கப்பட்டிருந்தது. ஒன்பது மணி சுமாருக்குக் கட்சித் தலைவரிடமிருந்து கமலக்கண்ணனுக்கு ஒரு அந்தரங்கமான டெலிபோன் செய்தி வந்தது.

“இன்றைக்கு ஊழியர்கள் கூட்டத்திற்கு நீங்கள் வர வேண்டாம். இங்கு நிலைமை ஒருவிதமாக இருக்கிறது. நானே பார்த்துச் சமாளித்துக் கொள்கிறேன்”—என்றார் கட்சித் தலைவர். கமலக்கண்ணன் இதை அவ்வளவாக இரசிக்கவில்லை. கூட்டத்திற்குத் தானும் போகவேண்டுமென்றே விரும்பினார். பழைய பயம் அவர் மனத்தில் அன்று இல்லை.

“அதெல்லாம் நீங்கள் ஒன்றும் கவலைப்படாதீர்கள். தனியாக நீங்கள் மட்டுமே இருந்து கேள்விகளுக்குப் பதில் சொல்லிச் சிரமப்படுவதைவிட நானும் சேர்ந்து இருப்பது நல்லது. பயல்களுக்கு ஒரு அத்து இருக்கும். சரியாகப் பத்து மணிக்கு—ஐந்து நிமிடம் இருக்கும்போது நான் வந்து விடுகிறேன்”–என்று தானும் வரப்போவதாகவே கூறினார் கமலக்கண்ணன். “சரி! நான் சொல்வதைச் சொல்லி, விட்டேன். அப்புறம் உங்கள் விருப்பம்”—என்று எதிர்ப்புறம் டெலிபோனை வைத்தார் கட்சித்தலைவர். கமலக்கண்ணன் ஊழியர் கூட்டத்திற்கு வருவதே இரசாபாசமாக முடிந்துவிடும் என்று கருதிப் பயந்துதான் அவருக்குக் குறிப்பாக அறிவித்தார் கட்சித்தலைவர். கமலக்கண்ணனோ அதைப் புரிந்துகொள்ளாமல் கூட்டத்திற்குத் தானும் வரப்போவதாக அறிவித்துவிட்டார்.

ஊழியர் கூட்டம் தொடங்கியபோது பரபரப்பாக இருந்தது. கமலக்கண்ணன் உள்ளே நுழைந்தபோது விரும் பத்தகாத ஒருவித மெளனம் அங்கே நிலவியது. கட்சித் தலைவர் தான் அவரை வரவேற்று உட்காரச்சொன்னாரே ஒழிய வேறு யாரும் பேசவே இல்லை. ‘வாருங்கள்’ என்று கூப்பிடவோ, கமலக்கண்ணன் உள்ளே நுழைந்தபோது, எழுந்து நின்று மரியாதை செய்யவோ யாருமே தயாராக இல்லை அங்கே.

“இந்தக் கூட்டம் ஊழியர்களின் மனக்குறைகளை அறிவதற்காகக் கூட்டப்பட்டிருக்கிறது. ஒவ்வொருவரும் கட்சியில் தமக்குள்ள உரிமையைப் பாராட்டித் தாராளமாகப் பேசலாம்”— என்று தலைவர் அறிவித்ததும் ஒர் ஊழியர் ஆத்திரத்தோடு துள்ளி எழுந்தார்.

“கட்சியில் உறுப்பினர்களைச் சேர்க்கும்போது அடிப்படைக் கொள்கைகளில் நம்பிக்கை இல்லாதவர்கள் கூடச் சேர்க்கப்படுகிறார்கள், ‘சினிமா’ டிக்கெட் விற்கப்படுவது. போல் கட்சி உறுப்பினர் டிக்கெட்டுகளும் விற்கப்படுகின்றனவா? என்பது தெரியவேண்டும்”–எனக் கேட்டார் அந்த ஊழியர். “உறுப்பினர் விண்ணப்பத்தில் குறிப்பிடப்பட்டிருக்கும் கொள்கை ரீதியான தகுதிகள் இல்லாதவர்களைக்கூட உறுப்பினர்களாகச் சேர்த்து வருவதைப் பார்க்கிறோம். இப்படி நிகழ்ச்சிகள் சமீபகாலத்தில் கட்சியில் அதிகமாகி இருக்கின்றன என்று தோன்றுகிறது” என்றார் மற்றொரு உறுப்பினர். கட்சித் தலைவர் மறுமொழி கூற முடியாமல் விழித்தார்.

"தயவு செய்து ஒரே சமயத்தில் பலபேர் கேள்வி கேட்டால் மறுமொழி சொல்ல முடியாதநிலை ஏற்பட்டுவிடும். கூட்டத்தில் கட்டுப்பாடும் ஒழுங்கும் வேண்டும். ஒவ்வொருவராகக் கேட்பதே நல்லது”–என்று ஒழுங்குப் பிரச்னையை எடுத்துக் கூறினார் தலைவர். யாரும் அதை இலட்சியம் செய்யவில்லை. “கட்சி படிப்படியாக வசதியுள்ளவர்களுக்கு விற்கப்பட்டு விட்டதென்பதை இப்போதாவது ஒப்புக் கொள்கிறீர்களா?” என்று கேட்டார் ஒரு ஊழியர்.

“கட்சியின் மதுவிலக்குக் கொள்கையில் அறவே நம்பிக்கை இல்லாதவர்கள் எப்படிக் கட்சியிலே தீவிர உறுப்பினர்களாகச் சேர்க்கப்பட்டார்கள் என்பதற்குச் சரியான காரணம் கூறப்படவேண்டும்”–என்று கொதிப்போடு எழுந்து நின்று கேள்வி கேட்டார் ஒரு முதியவர். இந்த நிலைமையைத் தலைவரால் ஒழுங்கு செய்ய முடியாமல் போகவே தாம் எழுந்து நின்று பேசினால் எல்லாரும் அடங்கிவிடுவார்கள் என்று தமக்குத் தாமே ஒரு சக்தி இருப்பதாகக் கற்பித்துக் கொண்ட கமலக்கண்ணன் பேசுவதற்கு எழுந்திருந்தார். அத்தனை எதிர்ப்பும், அத்தனை கேள்விகளும் தனக்காகத்தான் கேட்கப்பட்டன என்பதைக் கூட அவரால் புரிந்துகொள்ள முடியவில்லை. அவர் எழுந்து நின்றதும் கூட்டத்தில் அனைவர் முகங்களிலும் வெறுப்புத் தாண்டவமாடியது. முதல் வாக்கியத்தை அவர் தொடங்கியபோதே, எங்கோ ஒருமூலையிலிருந்து யாரோ பேசவேண்டாம், போதும்’ என்பதுபோல் கைதட்டுவது கேட்டது. அடுத்தவாக்கியத்தை அவர் தொடங்குவதற்குள் “தயவு செய்து மன்னிக்க வேண்டும்! தாங்கள் கட்சியில், எவ்வளவு காலமாக உறுப்பினர் என்பதை நாங்கள் அறிய மாட்டோம், தீவிர உறுப்பினரா? சாதாரண உறுப்பினரா என்பது கூடத் தெரியாது எங்களுக்கு, எந்த முறையில் இன்று இந்தக் கூட்டத்தில் நீங்கள் பேச முன் வந்தீர்கள் என்பதும் தெரியவில்லை?”–என்று எழுந்து கூப்பாடு போட்டான் ஓர் இளம் ஊழியன்.

கமலக்கண்ணன் இதை எதிர்பார்க்கவில்லை. கனவில் கூட திடீரென்று இப்படி ஒரு கேள்வியையோ, எதிர்ப்பையோ அவர் எதிர்பார்க்கவில்லை. ஆகவே திகைத்துப் போனார். ஒரு வசதியுள்ள பெரிய குடும்பத்து மனிதனைப் பார்த்து ஏழைகள் இப்படி ஆவேசத்தோடு கேள்விகள் கேட்க முடியும் என்பதையே அவரால் கற்பனை செய்ய இயலவில்லை. அத்தனை ஊழியர்களும் தனக்கும், தன் பணவளத்திற்கும், செல்வாக்கிற்கும், பயந்திருப்பார்கள் என்று நினைத்திருந்த அவரால் சிறிதுகூட, தாட்சண்யமே இல்லாமல் கூட்டத்தினர் இப்படிக் கேள்விக் கணைகளைத் தொடுத்ததைத் தாங்கவே முடியவில்லை.

பழக்கத்தின் காரணமாகவும், உடம்பில் ஊறிப் போயிருந்த திமிரின் காரணமாகவும் இரைந்த குரலில், ‘நான்சென்ஸ்’–என்று கத்திவிட்டு அவர் உடனே நாற்காலியில் திரும்பவும் அமர்ந்துவிட்டார். அவ்வளவுதான் கூட்டத்தில் ஒரே கூச்சல், குழப்பம்.

“யாரைப் பார்த்து ‘நான்சென்ஸ்’—என்று கூறினீர்கள்? முதலில் அந்த வார்த்தையை வாபஸ் வாங்குங்கள்” என்று. எல்லாரும் சேர்ந்து கூப்பாடு போடத் தொடங்கிவிட்டார் கள்.அதுவரை பேசாமல் உட்கார்ந்திருந்த கட்சித்தலைவர் எழுந்திருந்து, “அன்பர்களே! நமது கட்சி ஒழுக்கத்திற்கும், ஒற்றுமைக்கும் பெயர் பெற்றதாகும்.நாம் இப்படிக் காட்டு மிராண்டிகள்போல் பழகுவது நல்லதா என்பதைச் சிந்தித்துப்பாருங்கள்”—என்ற போதும் கூப்பாடு அடங்கவில்லை.

“யார் காட்டுமிராண்டி போல் பேசினார்கள் என்பதைத் தலைவரே சிந்தித்துப் பார்க்கவேண்டும்.”–என்று சிலர் நடுக்கூட்டத்திலேயே எழுந்து நின்று மேடையை நோக்கிக் கத்தினார்கள்.

“கமலக்கண்ணன் அவர்களைக் கேவலம் வாய் தவறிக் கூறிய இந்த ஒரு வார்த்தைக்காக நாம் வாபஸ் வாங்கச் சொல்லக்கூடாது. கட்சிக்காகவே அவர் பெரும் முதல் போட்டுத் தினசரி ஏடு நடத்தி வருகிறார். அவரால் கட்சி பலவழிகளில் பயனடைகிறது. எனவே கூட்டத்தில் யாரும் அவர் மனம் புண்பட நடந்துகொள்ள வேண்டாமென்று. மன்றாடிக் கேட்டுக் கொள்கிறேன்”—என்று தலைவர் முழங்கியபோது–

“அதுதான் கட்சியையே நீங்கள் அவருக்கு விலைபேசி விற்று விட்டீர்களே”—என்று கூப்பாடு போட்டார்கள் கூட்டத்தில் சிலர், தலைவர் நிலை தர்மசங்கடமாகி விட்டது. புகழ், பதவி, செல்வாக்கிற்காகச் சேர்ந்த கட்சியில் முதல் முதலாக ஒர் அவமானம் நிறைந்த கடும் எதிர்ப்பை இப்போதுதான், சந்தித்தார் கமலக்கண்ணன். கூட்டத்தினரோ, ‘நான்சென்ஸ்’ என்ற வார்த்தையை வாபஸ் வாங்காமலோ, மன்னிப்புக் கேட்காமலோ, அவரை அங்கிருந்து வெளியேற விடவே தயாராயில்லை.

"https://ta.wikisource.org/w/index.php?title=நெஞ்சக்கனல்/8&oldid=976861" இருந்து மீள்விக்கப்பட்டது