நெஞ்சை உருக்கும் நீதிக்கதைகள்/003-013
3. ஈகை
முன்னாள் பாரதப் பிரதமர் நேருவின் தந்தையான மோதிலால் நேருவின் வாழ்வில் நடந்த சிறு சம்பவம் தான் இது. மோதிலால் நேரு தலைசிறந்த சட்ட நிபுணர். வாதாடுவதில் மிகவும் வல்லவர். புத்திக் கூர்மை மிக்கவரும் கூட.
ஒருநாள் காலை, அலுவலகத்திற்குச் செல்ல வெளியே வந்தபோது அவரைப் பார்க்கக் காத்திருந்த ஓர் ஏழை மனிதன் அவரை வணங்கினான். மோதிலால் நேரு “யார் நீங்கள்? என்ன வேண்டும் உங்களுக்கு” என அன்புடன் வினவினார்.
“ஐயா, நானோர் ஏழை பிராமணன். புரோகிதம் செய்வது தான் என் தொழில். அதில் வரும் சொற்ப வருமானம், என் பெண்ணும் நானும் அரைவயிறு உண்ணத்தான் போது மானதாய் உள்ளது. தாயற்ற என் ஒரே பெண்ணுக்குத் திருமணம் நிச்சயித்துவிட்டேன். ஆனால் திருமணம் நடத்தப் பலரிடம் கடன் கேட்டும் பயனில்லை. ஓரிருவர் தங்களின் பெயரைக் கூறித் தாங்கள் நிச்சயம் உதவுவீர்கள் என்றனர். ஆதலால் நம்பிக்கையுடன் இங்கே வந்தேன். கருணையோடு என் மகளின் திருமணம் நடக்க உதவ வேண்டும்” என்றார்.
“அப்படியே, ஆகட்டும்! உங்கள் பெண்ணின் திருமணத்திற்குச் செலவுத் தொகை எவ்வளவு ஆகும் எனக் கூறுங்கள்!” என்றார் மோதிலால்.
ஓரிரு நிமிடங்கள் யோசித்த புரோகிதர் “சுமார் ஒரு முந்நூறு ரூபாய் தேவைப்படலாம்” என்றார்.
இதைக்கேட்ட மோதிலால் தமது உதவியாளரிடம், “இன்றைக்கு நம் கட்சிக்காரரிடமிருந்து எவ்வளவு பணம் வருகிறதோ அதை இவருக்குக் கொடுத்து விடுங்கள்”(Upload an image to replace this placeholder.)
ஒவ்வொரு நாளும் வழக்குகளைப் பொறுத்துக் கட்சிக் காரரிடமிருந்து பணம் வருவது வழக்கம். மிகச் சிறந்த சட்ட நிபுணர் என்பதால் பலரும் அவரையே நாடினர். அன்றைய தினம் அவருக்குவந்த மொத்த வருமானம் ஆயிரத்து முந்நூறு ரூபாயாகும். உதவியாளர் அவரை அணுகி “புரோகிதருக்கு முந்நூறு ரூபாய் கொடுத்துவிட்டு, மீதிப் பணத்தை வங்கியில் கட்டி விடட்டுமா?” எனக் கேட்டார்.
“வேண்டாம் - இன்றைக்கு வரும் பணம்முழுவதும் அவருக்கே கொடுப்பதாகக் கூறிவிட்டேன்.ஆகவே, மொத்தப் பணத்தையும் அவரிடமே கொடுத்து விடுங்கள் அவரது பெண்ணின் அதிர்ஷ்டமே இன்று பணம் அதிகமாகக் கிடைத்திருக்கிறது ஆகவே அவளது திருமணம் சிறப்பாக நடக்கட்டும்” என்றார் மோதிலால் நேரு. கொடுப்பதற்கு என்று இப்படியொரு மனம் மட்டும் இருந்தால் புரோகிதர் மகிழ்ச்சிக்குக் கேட்கவா வேண்டும்!
🌑