உள்ளடக்கத்துக்குச் செல்

நேரு தந்த பொம்மை/இரண்டில் ஒன்று

விக்கிமூலம் இலிருந்து



இரண்டில் ஒன்று!


ஆறு வயது இருக்கலாம்;
அந்தச் சிறிய வயதிலே
நேரு வீட்டில் நடந்தஓர்
நிகழ்ச்சி தன்னைக் கூறுவேன்;

ஆரும் இல்லா வேளையில்
அப்பா வுடைய அறையிலே
நேரு மெல்ல நுழைந்தனர்;
நெருங்கிச் சென்றார் மேஜையை

அழகுப் பேனா இரண்டினை
அங்கே நேரு கண்டனர்;
பளப ளக்கும் அவற்றையே
பார்த்துப் பார்த்து மகிழ்ந்தனர்.

“அருமைப் பேனா இரண்டுமே
அப்பா வுக்குத் தேவையா?
இரண்டில் ஒன்றை நானுமே
எடுத்துக் கொள்வேன்” என்றனர்.


எடுத்தார் ஒன்றைக் கையிலே.
என்ன செய்தார் அதனையே?
படிக்கும் அறையில் வைத்தனர்;
பாய்ந்து வெளியே சென்றனர்.

வெளியில் சென்ற தந்தையார்
வீடு திரும்பி வந்தனர்.
களைத்து வந்த அவருமே
கண்டார் பேனா ஒன்றையே!

“இரண்டு பேனா இருந்தன;
எங்கே ஒன்று போனது?”
குரலில் கடுமை தெரிந்தது.
கோபம் பொங்கி வழிந்தது.

தந்தை குரலைக் கேட்டதும்
தாயார் ஓடி வந்தனர்.
“இந்த அறையில் உள்ளதை
எவர் எடுப்பார்?” என்றனர்.



வேலை பார்க்கும் ஆட்களை
மிரட்டித் தந்தை கேட்டனர்:
“தோலை உரிப்பேன்; உண்மையைச்
சொல்வீர்,” என்றே இரைந்தனர்.

ஆடி ஓடி வெளியிலே
ஆனந் தமாய்த் திரிந்தபின்
வீடு வந்த ஜவஹரோ
விவரம் புரிந்து கொண்டனர்.

சீறு கின்ற தந்தையைச்
சிறுவர் நேரு பார்த்ததும்,
நேரில் எதுவும் பேசவே
நெஞ்சில் துணிச்சல் இல்லையே!

“நானே பேணு எடுத்தவன்;
நானே தவறு செய்தவன்:
பேனா எடுத்த என்னையே
பெரிதும் மன்னித் தருளுவீர்”

என்று கூறத் துடித்தனர்.
ஏனோ தொண்டை அடைத்தது.
கண்கள் சிவந்த தந்தையைக்
கண்டு கலக்கம் கொண்டனர்!

வீடு முழுதும் தேடினர்,
வேலை யாட்கள் கடைசியில்,
தேடிப் பேனா எடுத்தனர்!
சிறுவர் நேரு அறையினில்!

உண்மை அறிந்த மோதிலால்
ஓடி வந்தார், கோபமாய்;
சின்னப் பையன் என்பது
சிறிது கூட நினைவில்லை.

கட்டி முத்தம் கொடுப்பவர்,
'கண்ணே, மணியே’ என்பவர்,
பட்டுப் போன்ற உடலிலே
'பட்பட்' டென்றே அடித்தனர்.

சிவந்த உடலோ மிகமிகச்
சிவந்து போச்சே, அடியினால்!
ஜவஹர் என்னும் இளந்தளிர்
சருகு போலச் சுருண்டது!

அழுது கொண்டே ஜவஹரும்
அன்னை அருகில் ஓடினர்;
கழுத்தைக் கட்டிக் கொண்டனர்;
கண்ணீர் வழிய நின்றனர்.

துடிது டித்த மகனையே
தூக்கி அணைத்த அன்னையும்
தடித்துப் போன இடங்களைத்
தடவிக் கொடுத்தாள் பாசமாய்.

வலியைப் போக்க அன்னையும்
மருந்து போட்டாள் தினமுமே.
சிலநாள் சென்றே ஜவஹரும்
சிகிச்சை முடிந்து தேறினார்.

“நல்ல வழியில் நானுமே
நடக்க வேண்டும் என்பதில்,
அல்லும் பகலும் தந்தையார்
ஆர்வம் செலுத்தி வந்ததால்,

தவறு செய்த என்னையே
தண்டித் தாரே அந்தநாள்.
அவரைப் போன்ற நல்லவர்
எவரும் இல்லை,” என்றனர்.