உள்ளடக்கத்துக்குச் செல்

நேரு தந்த பொம்மை/நவம்பர் 14

விக்கிமூலம் இலிருந்து


நவம்பர் 14

நவம்பர் மாதம் பதினான்கு
நல்ல நாளாம் நாட்டிற்கு.
ஜவஹர் பிறந்தது அந்நாளே.
சகலரும் போற்றும் பொன்னாளே!
பிறந்த நாளில் ஜவஹர்லால்
பெரிதும் மகிழ்ச்சி கொண்டிடுவார்.
உறவினர் எல்லாம் அவர் வீட்டில்
உற்சா கத்துடன் கூடிடுவார்.
குழந்தை நேரு ஒருதட்டில்,
கோதுமைத் தானியம் மறுதட்டில்
அளவாய் வைத்து நிறுப்பார்கள்
அன்று காலை தராசினிலே
இப்படி நிறுத்த தானியத்தை
ஏழைக ளுக்கு வழங்கிடுவர்.
அப்புறம் நேரு புத்தாடை
அணிந்தே மிகவும் மகிழ்ந்திடுவார்.

வேந்தர் போல நடந்திடுவார்;
மிகவும் பெருமை கொண்டிடுவார்;
‘நான்தான் இந்த விழாவிற்கே
நாயகன்’ என்றே எண்ணிடுவார்.

வகைவகை யான பரிசுகளை
வந்தவர் தருவார் ஜவஹரிடம்.
மிகமிக நன்றி' என்றிடுவார்;
விழுந்தே வணக்கம் செலுத்திடுவார்.

தின்றிடப் பற்பல பண்டங்கள்
செய்திடு வார்கள் சுவையாக.
நண்பர்கள், உறவினர் பலருடனே
நன்றாய் உண்டு களித்திடுவார்.


“என்றன் பிறந்த நாள்தன்னை
இதுபோல் அடிக்கடி கொண்டாட
அன்னை, தந்தை இருவரையும்
ஆசை யாக நான் கேட்டேன்.

அதிகம் ஆகுமே என்வயது
அடிக்கடி பிறந்த நாள்வந்தால்!
இதனை இளமையில்அறியேனே!'
என்றார் பின்னர் ஜவஹருமே”