உள்ளடக்கத்துக்குச் செல்

நேரு தந்த பொம்மை/காணாமல் போன நேரு!

விக்கிமூலம் இலிருந்து



காணாமல் போன நேரு!


மாலையில் ஒருநாள் நேருவை வீட்டில்
காணோம், காணோமே!
மாளிகை முழுதும் தேடிப் பார்த்தும்
காணோம், காணோமே!
சோலையில் எங்கும் சுற்றிப் பார்த்தும்
காணோம், காணோமே!
சுறுசுறுப் பாகத் தேடிப் பார்த்தும்
நேருவைக் காணோமே!
காவலர் எங்கும் தேடிப் பார்த்தும்
காணோம், காணோமே!
கலக்கினர் டில்லி நகரம் முழுவதும்
காணோம், காணோமே!
தீவிர மாகப் பலரும் தேடியும்
காணோம், :காணோமே!
தெரிந்தவர்க்கெல்லாம் டெலிபோன் செய்தும்
நேருவைக் காணோமே!

எந்த நிகழ்ச்சியும், அந்தச் சமயம்
இல்லை; அதனால
"எங்கே சென்றார்? எங்கே சென்றார்?”
என்றே கேட்டனரே.
வந்தவர் போனவர் காதில் இந்தச்
சேதி விழுந்திடவே,
மாநகர் எங்கும் காட்டுத் தீபோல்
பரவிட லானதுவே!

காவலர் பலரும் நகரம் முழுவதும்
தேடிப் பார்த்திடவே,
கடைசியில் நேருவைக் கண்டு பிடித்தனர்;
கண்டு பிடித்தனரே!
ஆவல் பொங்கப் பூங்கா ஒன்றில்
குழந்தைகள் நடுவினிலே
அடடா, நேரு இருந்தது கண்டு
அசந்தே போயினரே!

மழலை மொழியைக் கேட்டுக் கேட்டு
மகிழ்ச்சியில் மூழ்கினரே.
மறந்தனர் இந்த உலகம் யாவையும்
மறந்தே போயினரே.


குழந்தைகள் அந்தப் பூங்கா நடுவில்
கூடிப் பாடிடவே
குஷியாய் நேருவும் குழந்தை போலவே
ஆடிப் பாடினரே.

கோடை வெயிலைப் போன்றது என்றும்
அரசியல் உலகம்தான்.
குளுகுளு தென்றல் காற்றைப் போன்றது
குழந்தைகள் உலகம்தான்.
தேடியே வந்தார் குழந்தைகள் உலகைத்
திருட்டுத் தனமாக.
தெரிந்தது நேருவின் குழந்தை உள்ளம்
தெள்ளத் தெளிவாக!