நேரு தந்த பொம்மை/நேரு தந்த யானை

விக்கிமூலம் இலிருந்து



நேரு தந்த யானை


டில்லிக்குப் போனேன்;
நேருவைப் பார்த்தேன்;
‘சல்யூட்’ செய்தேன்;
சாக்லேட் தந்தார்.

“என்னடா கண்ணு
ஏதட வேணும்?
சொன்னால் தருவேன்
சொல்வாய்” என்றார்.

“அன்புள்ள மாமா,
அவசியம் வேணும்.
சின்னதாய் யானை
சீக்கிரம் தருவீர்,”

என்றேன். உடனே
எடுத்தார் காகிதம்
என்னவோ அதிலே
எழுதிக் கொடுத்தார்.

பார்த்தேன் அதையே.
படத்தில் யானை!
பார்த்தேன் அவரை;
'பக் கெனச் சிரித்தார்.


“யானை நீ கேட்டாய்.
அன்புடன் தந்தேன்.
தீனியே வேண்டாம்.
செலவுமே இல்லை.

அடக்கமாய் இருக்கும்,
அங்குசம் வேண்டாம்.
மடித்து நீ பைக்குள்
வைத்திடு” என்றார்.

ஜோர் ஜோர் யானை!
ஷோக்கான யானை?
யார்தான் தருவார்
இதுபோல் யானை?

தலைவர் தந்தார்
தங்கக் கையால்.
விலைக்கா வேண்டும்?
விற்கவே மாட்டேன்!

நேரு மாமாவும் குழந்தைக்கவிஞரும்

1958, நவம்பர் 14.
நேரு மாமா பிறந்த நாள்.
அந்த நல்ல நாளில், நேரு மாமாவைக் காணவும், அவருடன் பேசவும் ஒரு வாய்ப்புக் கிடைத்தது, குழந்தைக் கவிஞருக்கு !
ஆம், 1956-ல் அனைத்து இந்தியப் புத்தகக் காட்சியை டில்லியில் நடத்தியது சாகித்ய அகாதமி. அங்கே தமிழ்ப் பிரதிநிதியாகச் சென்றிருந்தார் குழந்தைக் கவிஞர். நேரு மாமா, தமது பிறந்த நாளில் அக்காட்சியைக் காண வந்தார். தமிழ்ப்பகுதிக்கு அவர் வத்தபோது எடுத்த புகைப்படத்தான் மேலே உள்ளது.