நேரு தந்த பொம்மை/மானின் கேள்வி
Jump to navigation
Jump to search
மானின் கேள்வி
ஜவஹர் ஒருநாள் வேட்டைக்குத்
தனியே கிளம்பிச் சென்றனரே.
அவரது கையில் துப்பாக்கி
ஆயுத மாக இருந்ததுவே.
குட்டி மான்ஒன் றவர்முன்னே
குதித்துக் குதித்துச் சென்றிடவே,
சுட்டார் ஜவஹர் குறி வைத்து.
துடித்துக் கொண்டே மான்குட்டி,
வந்து ஜவஹர் காலடியில்
மயங்கி வீழ லானதுவே:
அந்தக் காட்சி ஜவஹரையே
அதிகம் கலக்கி விட்டதுவே.
“எவர்க்கும் கெடுதி செய்தறியேன்.
என்னைச் சுட்டது சரிதான?’’
ஜவஹரைப் பார்த்துக் கேட்பதுபோல்
தரையில் கிடந்தது மான்குட்டி.
கண்ணீர் சிந்தும் மான் அதனைக்
கண்டார் ஜவஹர்; கண்டதுமே
புண்ணாய்ப் போனது அவர்மனமும்.
புழுங்கிக் கண்ணீர் விட்டனரே.
"துப்பாக் கிதனை இனிமேல்நான்
தொடவே மாட்டேன்: சத்தியமே.
இப்படி ஜவஹர் கூறினரே
இறுதி வரையில் காத்தனரே.