பக்கம்:அகநானூறு, வேங்கடசாமி நாட்டார்.djvu/191

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

௧௮௮

அகநானூறு

[பாட்டு


வைத்த, நெடுஞ்சுடர் விளக்கம் நோக்கி - நீண்ட சுடரின் ஒளியினை நோக்கி, வந்து நம் நடுங்கு துயர் களைந்த நன்னராளன் - வந்து நமது நடுக்கத்தைத் தரும் துயரினை ஒழித்த நன்மையாளனாகிய நம் தலைவன்,

அ-கரு. குன்றத்து இரும்புலி தொலைத்த பெருங்கை யானை - குன்றின் கண்ணுள்ள பெரிய புலியைக் கொன்ற பெரிய கையினை யுடைய யானையின், கவுள் மலிபு இழிதரும் காமர் கடாஅம் - கன்னத்திலிருந்து' பெருகி இழியும் அழகிய மத நீரில், இருஞ்சிறைத் தொழுதி ஆர்ப்ப- கரிய சிறகினையுடைய வண்டின் கூட்டம் ஒலிக்க, யாழ் செத்து - அதனை யாழிசையெனக் கருதி, இருங்கல் விடர் அளை அசுணம் ஓர்க்கும் - பெரிய மலையின் பிளப்பாய குகையிலுள்ள அசுணங்கள் உற்றுக் கேட்கும், காம்பு அமல் இறும்பில் - மூங்கில் நிறைந்த சிறு காட்டில், பாம்பு பட துவன்றி - பாம்பு இறந்துபட நெருங்கி, கொடுவிரல் உளியம் கெண்டும் - வளைந்த விரலினையுடைய கரடி தோண்டும், வடு வாழ் புற்றின - வடுக்கள் பொருந்திய புற்றுக்களை யுடையனவாகிய, வழக்கு அருநெறி - வழங்குதற்கு அரிய நெறியின் கண், சென்றனன் கொல் - சென்றான் கொல்லோ!

(முடிபு) பன்றி வருதிற னோக்கிக் கானவன் கழுதுமிசைக் கொளீஇய விளக்கம் நோக்கி வந்து, நம் துயர்களைந்த நன்னராளன், வழக்கரு நெறி சென்றனன் கொல்லோ.

(வி - ரை.) பாடு - ஓசை. புருவை - இளமை. கழுது - பரண். புலியைக் கொன்ற யானையும், அசுணமும், பாம்பின் புற்றும், கரடியும் உடைய கொடு நெறியிற் சென்றானோ என்று வருந்தினள் என்க. இத்தன்மையான வழியிலே வந்து போகின்றாரோவென இரங்கிக் கூறக் கேட்டு வரைவானாவது பயனாக இங்ஙனம் கூறினாள். பன்றி பல்லி நிமித்தம் பார்த்துச் செல்லுதலுண்டென்னுங் கருத்து, 1"எய்ம்முள் ளன்ன பரூஉமயி ரெருத்திற், செய்ம்ம் மேவற் சிறுகட் பன்றி, ஓங்குமலை வியன் புனம் படீஇயர் வீங்கு பொறி, நூழை நுழையும் பொழுதிற் றழாது, பாங்கர்ப் பக்கத்துப் பல்லி பட்டென, மெல்ல மெல்லப் பிறக்கே பெயர்ந்து தன், கல்லளைப் பள்ளி வதியும் நாட” என நற்றிணையிலும் வந்திருத்தல் அறிந்து மகிழற்குரியது.

(உ - றை.) 'தினை நுகர்தற்குப் பன்றி நிமித்தம் பார்த்து வருகையைச் செய்தேயும், கானவன் அது வருதிறமறிந்து சுடர் கொளுத்தினாற் போல, தாமும் பேணி வந்தாரே யாயினும் வரவு வெளிப்படும் என்றவாறு.



89. பாலை


(மகட் போக்கிய செவிலித்தாய் சொல்லியது.)


தெறுகதிர் ஞாயிறு நடுநின்று காய்தலின்
உறுபெயல் வறந்த ஓடுதேர் நனந்தலை



1. நற். ௬அ.