பக்கம்:அகநானூறு, வேங்கடசாமி நாட்டார்.djvu/197

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

௧௯௪/194

அகநானூறு

[பாட்டு


கால் ஆசினி ஒடுங்காட்டு உம்பர் - நீண்ட அடியையுடைய ஈரப்பலா மரங்களையுடைய ஒடுங்காடு எனும் ஊர்க்கு அப்பால், விசிபிணி முழவின் குட்டுவன் காப்ப - இறுகப் பிணித்த முழவினையுடைய குட்டுவன் என்பான் புரத்தலால், பசி எனவு அறியா பணை பயில் இருக்கை - பசி எனலை அறியாத மருதவளம் மிக்க ஊர்களை யுடைய, தட மருப்பு எருமை தாமரை முனையின் - வளைந்த கொம்பினை யுடைய எருமை (மேய்ந்த) தாமரையை வெறுக்குமாயின், முடம் முதிர் பலவின் கொழுநிழல் வதியும் - வளைவு மிக்க பலாவினது கொழுவிய நிழற்கண்ணே தங்கும், குடநாடு பெறினும் - குடநாட்டினையே பெறுவாராயினும், மடமான் நோக்கி - இளமை வாய்ந்த மான் போலும் பார்வையினை யுடையாய், நின் மாண் நலம் மறந்து தவிரலர் - நினது மாண்புற்ற நலத்தினை மறந்து ஆங்குத் தங்குவா ரல்லர்.

(முடிபு) தோழி! மானோக்கி! நம் தலைவர் வெயிலவிர் நனந்தலை அரும் பொருள் வேட்கையின் அகன்றனராயினும் பெரும் பேரன்பினராகலின் குடநாடு பெறினும் நின் மாணலம் மறந்து ஆங்குத் தவிரலர்.

(வி - ரை.) மாரிக்கண் உண்ட நீரை கோடையில் உமிழும் இயல்பினதாகிய மலையின் பயன் கெடத்தெறும் என வேனிலின் வெம்மை மிகுதி கூறியவாறாயிற்று. ஆன்ற - இல்லையான ; அகன்ற என்பதன் மரூஉ. சுனைக்கண் சூர் உறையும் என்பதனை, 1'சுனை யுறையும், சூர்மகள் மாதோ என்னுமென் னெஞ்சே' என்பதனாலும் அறிக. சூர், அச்சமுமாம். யானை பாசியைத் தின்றமை நீர்ப் பசை கருதி யென்க. ஒடு - ஒருவகை மரம் என்பதும், அதன் முன் வல்லெழுத்துவரின், மெலி மிகும் என்பதும், 2'உதிமரக் கிளவி மெல்லெழுத்து மிகுமே' 'ஓடுமரக் கிளவி யுதிமர வியற்றே' என்பவற்றால் அறியப்படும். ஈண்டு ஒடு மரங்கள் சூழ்ந்தமையின் ஒடுங்காடு எனப்பட்ட தென்க. இருக்கையையுடைய குட நாடு என்க. எருமை தாமரை முனையின் பலவின் நிழலில் வதியும் என்றது மருதத்திற்கும் குறிஞ்சிக்கும் அணிமை கூறியபடியாம். எருமை, தாமரை யென்னும் மருதக் கருப்பொருள்கள் பாலைக்கண் வந்தன ; என்னை? 3'எந்நில மருங்கிற் பூவும் புள்ளும், அந்நிலம் பொழுதொடு வாரா வாயினும், வந்த நிலத்தின் பயத்த வாகும்.' என்பவாகலின் என்க.




92. குறிஞ்சி


[இரவுக்குறிச் சென்று தலைமகளைக் கண்ணுற்று நீங்குந் தலைமகனைப் பகற்குறி நேர்ந்த வாய்பாட்டால் தோழி வரைவுகடாயது.]


நெடுமலை யடுக்கம் கண்கெட மின்னிப்
படுமழை பொழிந்த பானாட் கங்குல்
குஞ்சரம் நடுங்கத் தாக்கிக் கொடுவரிச்



1. அகம். க௬அ. 2. தொல். எழுத். உயிர்மயங். ௪க. ௬0. 3. தொல். அகத். க௬.