பக்கம்:அகநானூறு 2, புலியூர்க் கேசிகன்.pdf/248

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

மூலமும் உரையும்

புலியூர்க்கேசிகன் ★ 233



‘பகலைச் செய்விக்கும் பல கதிர்களை உடையவன் ஞாயிறாகிய அழகிய செல்வன். அகன்ற இடத்ததாகிய வானத்து, அவனுடைய தேர்ச்சக்கரம் ஊர்ந்து செல்லும். அது உலகைப் பிளந்து கொண்டு சென்றாற்போல, நீரற்றுப்போய் வறட்சியுற்ற இடங்கள் வெடிப்புண்டு கிடக்கும். தொலையாத அத்தகைய நெடுவழியிடத்தே, மெல்லிய தலையினையுடைய கன்றினையும், கவிந்த நகத்தினையுமுடைய இளைய பிடியானையானது, தன் கன்று உண்பதற்காக வேண்டித் தான் தழையுண்ணாது அதனை உண்பித்தபடியே வாடிநிற்கும். உடம்பின் உறுப்புக்கள் பலவும் தோன்ற நிற்கும் அது, பாழ்பட்ட ஊரிலேயுள்ள கூரைபிய்ந்த குடிசையைப் போலத் தோன்றும். அத்தகைய இடங்களையுடைய நெடிய தொலைவுக்கும் இடையிட்டுக் கிடக்கும் குன்றங்களையும் கடந்து சென்றவர், பொய்ம்மையிலே வல்லாளராகிய நம் தலைவர். அவர், முயற்சியுடன் ஈட்டும் பெரும் பொருளானது, நாம் இல்லாமற் போனாலும் விரைந்து கைகூடுவதாக” “என்று, மகட்கு வறுமையுற்று வாடியவர்க்குப் பிறந்த இளைய மகளான தலைவியே! நீ பெரிதும் துன்பம் கொள்ளாதிருப்பாயாக

உள்ளத்திலே வருத்தம் மிகுந்து, அதனால் வடித்த நுண்ணிதாக வருகின்ற கண்ணிர், பலவாகிய இதழ்களையுடைய தாமரை மலர்போன்ற குளிர்ந்த கண்ணின் பாவையினையும் மறைத்தது. பொன்னிறம் போன்ற பசலைகள் மேனியிலே படர்ந்தன. புள்ளிகளாகிய தேமல்களையும் வரிகளையும் உடைய நல்ல சிறந்த மேனியின் வனப்பெல்லாம் தொலைந்து போகின்றன. இவற்றை நோக்கி, நீயும் வருந்தாதே என்கின்றாய்.

தோழி! பசுமையான அரும்புகளை ஈன்ற கொம்புகளையுடைய, சிவந்த முகைகளையுடைய முருக்கமரத்தினது, அழகிய போதுகள் விரிந்த மலர்களைக் கிண்டி, அவற்றிலுள்ள தாதுகளை உண்டு, அழகிய தளிர்களையுடைய மாமரத்தின் அசையும் கிளைகளின் மேலேயிருந்து, சிவந்த கண்களையுடைய கரிய குயில்கள் இனிதாகக் கூவுகின்ற, இனிய இந்த இளவேனிற் காலத்தினும் கூட, ‘இப்பொழுதே வருவோம்’ என, அன்று தெரிவித்துச் சென்றவர் வந்திலராயின், இனி என்ன செய்வேனோ?

என்று, தலைமகன் பிரிவின்கண் வேறுபட்ட தலைமகளை வற்புறுத்துந் தோழிக்குத், தலைமகள் வன்புறை எதிரழிந்து சொன்னாள் என்க.