பக்கம்:அகநானூறு 2, புலியூர்க் கேசிகன்.pdf/250

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

மூலமும் உரையும்

புலியூர்க்கேசிகன் ★ 235


        இம்மனைக் கிழமை எம்மொடு புணரின்
        தீதும் உண்டோ, மாத ராய்? எனக் 1O

        கடும்பரி நல்மான், கொடிஞ்சி நெடுந்தேர்
        கைவல் பாகன் பையென இயக்க,
        யாம்தற் குறுகினமாக ஏந்தெழில் அ
        ரிவேய் உண்கண் பனிவரல் ஒடுக்கிச்
        சிறிய இறைஞ்சினள், தலையே- 15

        பெரிய எவ்வம் யாமிவண் உறவே!

‘பெரிய உப்பங்கழியின் பக்கங்களிலே, நீர்ப்பசையுடன் மலர்ந்துள்ள சிறிய கருநெய்தலின் கண்போன்ற கரிய மலர்கள், பெரிய தண்ணிய சிறந்த தழையுடையிலே பொருந்தியிருக்க, அதனை அணிந்திருக்கும் அல்குல் தடத்தை உடையவளே! மென்மையாக அரும்பிய சுணங்கினையும், கூர்மையான பற்களையும், கருமையான நீண்ட கூந்தலையும், ஒளியுடைய நெற்றியையும் கொண்டவளே! இளம் பெண்ணே!

மாதரசியே! நின்னுடைய விளையாட்டுத் தோழியர்களுடனே, புன்னைமரமானது வெண்மணலிலே உதிர்த்துள்ள நுண்மையான பூந்தாதினைப் பொன்னாகப் பாவித்துக் கொண்டு முகந்து வழங்கி நீ இல்லறம் நடத்துவாயானால், அந்த இல்லறக் கிழமை எம்முடனும் கூடி எவ்வளவும் சேர்ந்து நடப்பதாயின், அதனால் எத்தகைய தீதும் நினக்கு உண்டாகுமோ? என்றேன்.

கடுமையாகச் செல்லும் நல்ல குதிரைகள் பூட்டிய, நீண்ட தேர் மொட்டுக்களையுடைய, நெடுந்தேரினைச் செலுத்துவதிலே வல்லவனான பாகன் மெல்லென நடத்திச்செல்ல, யான் அவ்வாறு சொல்லிக்கொண்டே அவளை நெருங்கினேன்.

அப்போது, யான் இவ்விடத்தே காமநோயினாலே பெரிய வருத்தத்தை அடையுமாறு, அழகு மிகுந்த செவ்வரிகள் படர்ந்த மையுண்ட தன் கண்களிலே துளிர்த்த கண்ணிர் வெளிப்பட்டு வருதலையும் மறைத்துத் தன் தலையினைச் சிறிதே கவிழ்த்துக் கொண்டனள் அவள்;

என்று, தலைமகளைக் கண்ணுற்று நீங்கும் தலைமகன் தன் நெஞ்சிற்குச் சொன்னான் என்க.

சொற்பொருள்: 1. உறுகழி - பெரிய உப்பங்கழி. ஒதம் - நீர்ப்பசை மாறாத நிலப்பகுதி. 2. மாமலர் - கரிய மலர். 4. ஐய மென்மையாக நுண்ணிதாக 7. நொண்டு - முகந்து. 8. மனைபுறந்தருதல் - குடும்ப வாழ்வினை நடத்துதல்.