பக்கம்:அகநானூறு 2, புலியூர்க் கேசிகன்.pdf/287

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

272

அகநானூறு - மணிமிடை பவளம்


பாடுபவர் பாணர்கள்.அவர்கள் வந்து தன்பால் இரந்து நின்றால், அது நாள்தோறுமானாலும் மனங்கோணாதவனாகப் பொற்பூணினைக் கொம்பிலே செறித்துப் பொன்னரி மாலையினையும் கழுத்திலே பூட்டிச், சந்தனத்தை முழுவதும் மறையுமாறு பூசியுள்ள விளக்கமான அழகிய திமிலையுடைய ஏறுகளை அவர்கள் முன்னால் நிறுத்தி முதலிலே வழங்குவான்; மிகுந்த பக்குவமான உணவினையும் குவிப்பான்; நெடிய தேரினைத் தருவான்; களிறுகளையும் அளிப்பான்; வளைந்த பூணினையும் பலரான வேல் வீரர்களையும் உடையவனான முசுண்டை என்பவன். அவனுக்கு உரியதான ‘வேம்பி’ என்னும் ஊரினைப் போன்ற, என்னுடைய நல்ல அழகுடைய இளமை நலமெல்லாம் தொலைந்து போயினாலும்கூட, அவர் வந்து எனக்கு அருள் செய்யாதவர்ாயினர் அவரே அங்ஙனமிருக்கும், பல நாளாக் இந்த ஊரவர் உரைக்கும் பழிச்சொற்கள் தாம் எனக்கு எத்தகைய துன்பத்தைத் தந்துவிடுமோ?

என்று? தலைமகனின் பிரிவின்கண் வேறுபட்ட தலைமகளது வேறுபாடு கண்டு ஆற்றாளாய தோழிக்குத், தலைமகள், தான் ஆற்றுவல் என்பதுபடச் சொன்னாள் என்க.

சொற்பொருள்: 1. வள்வார் - வளமையான நரம்புகள். அரிகோல்-கிணையை இசைக்கும் கோல்.4. அகவுநர்-பாடுவார்; பாணர். 5. பொலந்தார் - பொன்னரி மலை. 6. துளங்கு எழில் - விளக்கமான அழகு.7. முந்துறுத்து- முற்பட நிறுத்தி.7, சால்பதம் - மிகவும் பக்குவமான உணவு. 8. சுரக்கும் - அளிக்கும். 10. இள நலம் - இளமை நலம். 13. நாகு ஆ - கன்றையுடைய பசு, இளமையான பசுவும் ஆம் 14 துகள்வாய் - துகள்களையுடைய. 16. வாள்வரி - ஒளியுடைய கோடுகள். 16. கவலைய கவர்த்த வழிகளிற் செல்வன.

உள்ளுறை: மேல்காற்றுப் புலாலில் துழாவுதலுடன் துகள் வாய்க்கோடையாகவும் திகழும்; அதுபோலவே, அலர் கூறும் பெண்டிரும் இழிந்தவைகளையே மேற்கொண்டு கூறும் இயல்பினர் ஆவர். அதன் ஒலியைத் தனக்குப் பகையான புலிமானைத் தீண்டிய ஒலியாக மானினம் எண்ணியது போலவே, அந்த அலர்உரைகளைக் கேட்ட தாயும் ஐயுற்று நடுங்கினள் என்று கொள்க.

பாடபேதம்: ஏந்துளங்கு இமில் எழில்.