பக்கம்:அகநானூறு 2, புலியூர்க் கேசிகன்.pdf/293

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

278

அகநானூறு - மணிமிடை பவளம்


நோயானது வருத்தத், தனியாக அவனைப் பிரிந்திருத்தலை என்னாலும் பொறுக்க இயலவில்லை.

அரிய காவலைமேற்கொண்ட நம் அன்னையும், ஈங்கையின் ஆர்க்குக் கழன்ற குளிர்ந்த மலர்கள் உதிருமாறு பெய்த பெய்யுந் தொழிலினைக் கொண்ட மேகம் பொழிந்து கொண்டிருக்கும் இரவின் நடுச் சாமத்திலே, மோதும் அலைகளின் துளிகள் பரக்கும் சிறிய கரையினையுடைய பெரிய குளத்தைக் காத்திருக்கும் காவற்காரனைப் போலத், தன் துயிலையும் மறந்து என்னைக் காவல் காத்துவருகின்றனள். இனி யாம் எவ்விடத்தே எங்ஙனம் அவருடன் கூடி மகிழ்வோம்?

என்று, தலைமகன் சிறைப்புறத்தானாகத் தோழிக்குச் சொல்லுவாளாய்த் தலைமகள் சொன்னாள் என்க.

சொற்பொருள்: 2 ஆளி யாளி என்னும் விலங்கு 3 ஒற்றி அறைந்து கொன்று. 5. ஒரு வேல் - ஒப்பற்ற வேல் 10.துய் - ஆர்க்கு 1.தொழின் மழை-பெய்தற்றொழிலின் சிறப்பினையுடைய மழை. 12. கோடு - கரை.

விளக்கம்: தவறாது வேட்டையாடும் ஆற்றலுடைய புலியும் நடுங்குமாறு வந்து, அது குறித்த யானையைத் தான் கொன்று வீழ்த்தும் யாளியை உடைய காடு என்பது, அக்காட்டின்கண் அவன் தனியனாக வருவதற்குத் தான் அஞ்சியதை உணர்த்தியதாகும். அவன் வரும் வழியில் துயருறுவானோ எனவும் அஞ்சுகின்றோம்; அன்னையின் காவலோ கடுமையாகிவிட்டது; அவனைப் பிரிந்து நம்மால் இருக்கவும் முடியவில்லை என்றெல்லாம் தலைவி சொல்வதனால், அவள் உள்ளம் விரைவிலே திருமணம் நிகழவேண்டும் என்ற நினைவு உடையதாயிற்று என்க. சிறு கோடு - சிறிய கரை. பெரிய குளத்துநீரின் அலைகள் கரைகளிலே மோதிக் கொண்டிருக்கும் மழைக்காலத்திலே, கரை உடைந்து போய்விடாது விழிப்பாகக் காத்திருக்கும் காவலன்போலத் தாயும் காத்திருப்பாள் என்க. இது குடும்பச் செல்வி. தலைமகளின் களவு உறவால் ஊரலர்க்கு இடமாகிக் கட்டு அழிந்து போய்விடக் கூடாதே என்ற கவலையால், தாய் காத்திருந்தனள் என்பதையும் உணர்த்தும்.

பாடபேதங்கள்: 1. தெழி மழை.

253. பொட்டிட்ட திங்கள்!

பாடியவர்: நக்கீரர். திணை: பாலை துறை: தலைமகன் பிரிவின்கண் வேறுபட்ட தலைமகட்குத் தோழி சொல்லியது.