பக்கம்:அகநானூறு 3, புலியூர்க் கேசிகன்.pdf/104

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

92

அகநானூறு -நித்திலக் கோவை


இரண்டுக்குமாகக் கவறுபட்டுள்ள எம் நெஞ்சமே! இருபுறக் கணுக்களினும் நெருப்புப்பற்றி எரிய, இருதலைக் கொள்ளியினையுடைய அதன் இடைப்பகுதிக்கண் நின்று வருத்த முற்றதாகி, ஒருபக்கமும் செல்லுதற்கும் இயலாது தடுமாற்றம் அடைந்திருக்கும் ஓர் எறும்பினைப்போன்ற நிலையிலேயே, யாமும் இருக்கின்றோம்.

உடலுக்கு உயிர் பொருந்தியிருப்பது போன்றதாக அமைந்துள்ள நட்பினையும், அதனால் அவ்வுயிர் வாழ்வு பெறுதலைப் போன்றதாக அமைந்த காதலையும், அவ்வுயிர் சாதலைப் போன்றதாக விளங்கும் பிரிவினையும் உடைய அருமையினை உடையவள் அவள். அவள், நம் செயலுக்கு நொந்தவளாகி வருந்துவாளோ? அவள் மிகவும் இரங்கத்தக்கவள்தாம்!

சொற்பொருள்: 1. வீங்குவிசை - மிகுதியான விரைவு பிணித்த பூட்டிய விரைபரி - விரையச் செல்லும் குதிரைகள். 2. நோன்கதிர் - வலிமையான ஆரைக் கால்கள். ஆழி - உருள்: சக்கரம். ஆழ்மருங்கு அகழ்ந்து செல்லும் சுவடு. இதனால், நிலம் ஈரமான தன்மையும் மழையுடைமையும் உணர்த்தினர்.4. ஊழ்ப்ப - முற்ற, கைவிரல்களைக் குவித்துப் பின் விரல்களின் பற்றினைச் சற்றே நீங்கினாற்போலப் பயற்றின் முற்றிய காய்க்குலைகள் விளங்குவதனைக் 'கூப்பிப் பற்றுவிடுவிரலிற் பயறுகாய் ஊழ்ப்ப' என்றனர். 7 தட்ப - தடை செய்ய, 8. கவைபடல் - பிளவுபடல். கட்கண் - கணுக்களிடத்து; கட்கண் அகைய என்றதனால், 'இருதலைக் கொள்ளி' உட்டுளையுடைய மூங்கில் என்பதும், இடைநின்று என்றது. ‘உள்ளே இருந்து' என்பதும் உணர்தல் வேண்டும்.10. உறவி - எறும்பு.

விளக்கம்: 'வீங்குவிசைப் பிணித்த விரைபரி நெடுந் தேர்' எனத் தலைவன் ஊர்ந்து செல்லும் தேரினைக் குறித்தமையால், அவனுடைய குடியுர்வும், அவன் செல்லும் வினை வேந்துவினை என்பதும், ஆள்வினை என்பதும் பெற்றனம்.'அசைவில் உள்ளம்' எனலே, அவன் தன் வினையிடத்தே தளர்தலற்ற உள்ளவுறுதி உடையவனாதலும், அவன் பிரிந்து செல்லற்கே இறுதியில் துணிந்தனன் என்றலும் உணரப்படும்.

அவனது உள்ளத்து நிலைக்கு, 'கட்கண் அகைய இருதலைக் கொள்ளி யிடைநின்று வருந்தி ஒருதலைப்படாஅ உறவியின்’ நிலைமை, மிகவும் சிறந்த உவமையாதலைக் கருதி இன்புறுக.

காதல், உயிர் வாழ்தல் அன்னது; பிரிதல், உயிர் காதல் அன்னது. யாக்கைக்கு உயிரியைந்தன்ன நட்பு இப்படி