பக்கம்:அகநானூறு 3, புலியூர்க் கேசிகன்.pdf/105

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

மூலமும் உரையும்

புலியூர்க்கேசிகன் * 93


அமைந்தது. இதன் செறிவினை நன்கு சிந்தித்துக் காதற் செல்வியின் சிறந்த இயல்பினை அறிக.

உயிர் வாழ்தலே உடலுக்கு உயிர்ப்பும் இயக்கமும் நிலைப்பும் தருவதாம்; அது சாதலோடு அவ்வுடல் அனைத்தையும் இழந்து அழிந்து போய்விடும். இங்ஙனமே, காதலியருடன் கூடியிருத்தலும், காதலித்தாரைப் பிரிதலும் ஆம். 'உடம்பொடு உயிரிடை என்ன, மற்றன்ன மடந்தையொடு எம்மிடை நட்பு' என்ற குறளும், 'வாழ்தல் உயிர்க்கன்னள் ஆயிழை சாதல் அதற்கன்னள். நீங்குமிடத்து' என்ற குறளும் இக்கருத்துக்களையே வலியுறுத்திக் கூறுவதனை அறிந்து இன்புறுக.

340. சாந்து அணிகுவம்!

பாடியவர்: நக்கீரனார். திணை: நெய்தல், துறை: பகற்குறிக் கண் தோழி தலைமகற்குச் சொல்லியது, சிறப்பு: திரையன் என்பவனுக்கு உரியதான பவத்திரி என்னும் ஊரின் சிறப்பு.

(நெய்தல்நிலத்துத் தலைவன் ஒருவன், தன் உளங்கவர்ந்த தலைவி ஒருத்தியுடன், பகற்குறியிடத்தே கூடியவனாக நாளும் இன்புற்று வருகின்றான். அவனுடைய உறவுக்குத் தலைவியின் ஆருயிர்த் தோழியும் துணையாக விளங்குகின்றனள். பகலிற் கானற்சோலையில் கூடியிருந்து, இரவு நெருங்கவும், அவன் தன்னூருக்குச் செல்லுதலையும் வழக்கமாகக் கொண்டிருந்தான். இந்நிலையில், அவர்களைப் 'பிரிதலற்ற மண உறவில் பிணைத்தலை' விரும்புகின்றாள் அத்தோழி. அவனைப் பிரிந்து தலைவி இரவிலே கொள்ளுகின்ற துன்பத்தினைக் கூறி, அன்று அவர்கள் பாக்கத்திலேயே தங்கிச் செல்லுமாறு அவனிடத்துக் கூறுகின்றாள். அவன் தங்குவதற்கு இசையாது, விரைவில் வேட்டுவந்து மணந்துகொள்வான் என்பதே இக்கூற்றின் உட்குறிப்பு ஆகும்.)

பன்னாள் எவ்வம் தீரப் பகல்வந்து
புன்னை.அம் பொதும்பின் இன்னிழற் கழிப்பி
மாலை மால்கொள நோக்கிப் பண்ஆய்ந்து
வளவன் வண்தேர் இயக்க நீயும்

செலவுவிருப் புறுதல் ஒழிகதில் அம்ம -
5


'செல்லா நல்லிசைப் பொலம்பூண் திரையன்
பல்பூங் கானற் பவத்திரி அனவிவள்
நல்லெழில் இளநலம் தொலைய ஒல்லெனக்
கழியே ஒதம் மல்கின்ற வழியே

வள்ளெயிற்று அரவொடு வயமீன் கொட்கும்
1O