பக்கம்:அகநானூறு 3, புலியூர்க் கேசிகன்.pdf/126

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

114

அகநானூறு -நித்திலக் கோவை


வீட்டு முற்றத்திலேயுள்ள, திரண்ட அடியினையுடைய மாமரத்தின், தேனென்று சொல்லத்தக்க சுவையுடைய, கோடைக்காலத்தே முதிர்ந்த,மணங்கமழும் இனிய கணிக ளுடனே, பிசினைக்கொண்ட பலாமரத்தினது ஒளிபொருந்திய சுளைகளை விரவித் தேனோடும் கூட்டிக் கலந்தது, வண்டு மொய்க்கும் அரியல் என்பது.நீண்ட கணுவிடையுள்ள அசையும் மூங்கிலினின்றும் வெட்டிக் கொணர்ந்த குழாயில், அந்த அரியல் நெடுங்காலம் இருந்து முதிர்ச்சியும் அடைந்தது. கடுமையான வேகத்தையுடைய பாம்பின் வெருட்சியைப் போன்ற தோப்பி என்னும் கள்ளும் ஆகியது. அதனை உயர்ந்த முடியினையுடைய கடவுள் உறையும் மலைக்குப் படைத்துப், பின்னர்த் தளிரினாலான தழையுடையணிந்த மகளிர் உண்பிக்கக், குறவர்கள் உண்டனராயினர். அதனாற் பக்கமலையிடத்துப் பெரிய தினைப்புனங்களைக் காவல் செய்வதனையும் மறந்தவராயினர்.

காவலர் காவல் மறந்தனராகவே, யானைகள் தினைப் புனத்தைக் கவர்ந்து உண்டன. அதனைப் பொறாது இளையரும் முதியருமாகிய சுற்றமெல்லாம் ஒன்று கூடினர். வில்லை ஆராய்ந்து கைக்கொண்டவராக, அந்த யானைகளைத் தேடி மலைப்புறமெல்லாம் திரிவராயினர். அத்தகைய நாட்டை யுடையவன் தலைவன்.அவனுடைய உறுதியற்ற, நன்மை தருவது போன்று சொல்லப்பெற்ற சொற்களை மெய்யானவை என்று தெளிந்து மேற்கொண்ட நெஞ்சமே! இனி என்னென்ன நமக்கு நிகழுமோ? (அறியாது யானும் கலங்குகின்றேனே!

சொற்பொருள்: 1. முன்றில் வீட்டின் முற்றம். 3. கோடைக்கு ஊழ்த்த கோடைக்காலத்தே தோன்றிமுதிர்ந்த இதனைக் கோடை மாங்காய் என்பர்; காலத்துக் காய்ப்பதிலும் சுவைமிகுதி கொண்டிருப்பது இது. 4. பயிர்ப்பு உறு - பிசினைப் பொருந்திய எதிர்ச்சுளை - ஒளியுடைய சுளை; பலாச் சுளைகளின் பொன்னிறச் செவ்வியைக் குறித்ததாம். 5. இறால் - தேன். அரியல் மாங்கனியும் பலாக்கனியும் தேனும் கூட்டிக் கலந்த கலவை. 6. ஆடமை - அசையும்மூங்கில். நெடுங்கண் - கணுக்களுக்கு இடையே நெடிதாக விளங்கும் தன்மை 7. கடுப்பு - வெருட்சி : சீற்றத்து வேகம் தோப்பி - தோப்பிக்கள். வான் கோடு - உயர்ந்த மலைமுடி, 9. முறித்தழை மகளிர் தளிராலான தழையுடை அணிந்த குறக்குடிப் பெண்கள். 11. நோனாது பொறாது. 14. நிலையா நன் மொழி - நன்மொழி நிலையைாதுபோய்ப்

பொய்ப்படுதல்; வார்த்தை பிறழ்தல். தேறிய தெளிந்த