பக்கம்:அகநானூறு 3, புலியூர்க் கேசிகன்.pdf/129

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

மூலமும் உரையும்

புலியூர்க்கேசிகன் ★ 117


சொற்பொருள்: 2 வரைந்து தன் தலைவி அவளே எனக் குறித்து. 3. ஆய்ந்தனர் - கருதினர். ஞெமன்ன - தெரிகோல் - துலாக்கோல். 5. உலைந்த அழிவடைந்த 6 உரன்-ஊக்கம் முனை - பகைவரின் போர் முனை. 7. பெருங்கல வெறுக்கை - பெரிதும் மதிப்புடைய அணிகள் முதலான செல்வம் 8. சூழாது - ஆராயாது; பாடுவார் தகுதியையோ, அல்லது பொருளை அடைதற்குத் தான் மேற் கொண்ட முயற்சிகளையோ கருதாது. 11. எரி மருள் கவளம் - தீயையொத்த உணவு : வேங்கையின் செந்நிறப் பூக்களாகிய கவளம் என்க. 14:சொல் பெயர் தேயம் - மொழி வேறுபட்ட நாடு, பிறமொழி வழங்கும் நாடு

விளக்கம்: சொல் பெயர் தேஎம் 'என்றது, நன்னனின் ஏழிற்குன்றத்துக்கும் அப்பாலுள்ள நாடு என்க. 'வளைசெறிந்த முன்கை வரைந்து தாம் பிணித்த தொல்கவின் தொலைய’ என்றனள், புரிவின் மெலிவினாலே முன்கைவளைகள் தம் செறிவு நீங்கித் தளர்ந்து சோர்கின்ற தன்மையை நினைந்தனளாக நன்னன் வாய்மையுடையான் என்பதனைக் கூறுவார், 'ஞெமன்ன் தெரிகோல் அன்ன செயிர் தீர் செம்மொழி' என்றனர். இது, தலைவன் தன் வாய்மொழி பிழைத்துத் தன்னைப் பிரிந்ததை நினைந்து நொந்தவளாகிக் கூறியதாம். நன்னனின் வள்ளன்மையைக் கூறினாள், ஏதிலாரான பிறர்க்கு வழங்கி மகிழும் அவனைப் போலாது, உரிமையுடைய எமக்கும் அருளாது தலைவர் சென்றனரே என்ற குறிப்பினாலாம். வேங்கைப் பூக்களை மாந்திக் களிறு தன் நெற்றியின்மீது கைவைத்து இருத்தலைக் கூறியது, அது மதச் செருக்குற்று அலையும் தன்மையுடைய காடு என்றதாம். களிற்றின் நுதல் கல்லுக்கும், தடவும் அதன்கை பாம்புக்கும் உவமைத்தோன்றக் கல்லூர் பாம்பின் தோன்றும் என்றனள் வேங்கையைத்தன் பகையான புலியென அஞ்சி ஒதுங்கும் இயல்புடைய களிறு, அதன் பூக்களை உண்டதென்றது, வேறு உணவு கிடைக்காமையால் என்றுஅறிக. மேலும், வேங்கை பூத்தல் வரைந்து கோடற்கு உரிய காலமாதலால், அதனை நினைந்ததும் ஆம். இதனால், இந்தப் பிரிவு வரைவிடை வைத்துப் பொருள்வயிற் பிரிந்தது எனவும் உணர்க.

350. எம் சிறிய ஊர்!

பாடியவர்: சேந்தன் கண்ணனார். திணை: நெய்தல். துறை: பகற்குறி வந்து நீங்கும் தலைமகற்குத் தோழி சொல்லியது. சிறப்பு: கொற்கைப் பேரூர்.