பக்கம்:அகநானூறு 3, புலியூர்க் கேசிகன்.pdf/159

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

மூலமும் உரையும்

புலியூர்க்கேசிகன் ★ 147


பட்டுப்போக வறிதே மீண்டும் செல்வானாயின், இன்று, இந்த இரவுப் பொழுதும் யான் வாழ்ந்திருக்க ஆற்றேன்.

சுணங்கினால் அணிபெற்ற நம்முடைய முலைகளிடையே, அவற்றின் பரப்பிலே கிடக்கின்ற முத்தாரத்தைப்போலவும், மலையிடத்தேயுள்ள நெடிதான சோலைக்கண்ணே. துளிகள் தூங்கும் குளிர்ச்சியினையுடைய, விளங்கும் வெள்ளிய அருவியினைப் போலவும், திங்களின் அழகிய கதிர்களும் பூமியிற் பரவினவே! யாம் இனிச் செய்வதுதான் என்னையோ?

சொற்பொருள்: 1. விடர் - மலைப்பிளப்பு இட்டுத் துறை ஒடுக்கமான நீர்த்துறை. ஒடுக்கம் இருபுறமுமாக அடர்ந்துள்ள மரச்செறிவினால், 3. புண்கூர்த்து - புண் மிகுந்து. 4 வல்லியம் - புலி. 5 வயப் பிணவு - வலியபெண் புலி, 6. கடிகொள - காவலை மேற்கொள்ள 7 எல்லின்று - இரவு வந்துற்றது. 9. வறுவியன் பெயரின் எண்ணியது கைகூடாதானாகிப் போவானானால், 13. சிதர் - துளி. தூங்குதல் வீழ்தல்; சோலையிற் சிதர் தூங்குதல் மழையினால் என்க. அன்றி மலர்த் தேன்களாலும் ஆம்.

விளக்கம்: 'யாறு நிறைந்தன' என்றதும், 'வயப்பிணவு கடிகொள வழங்கார் ஆறே' என்றதும், எல்லிற்று' என்றதும், வழியிடையின் ஏதத்தினை உயர்த்துவன. 'ஆயிடைநசைதர வென்வேல் ஏந்தி வந்த நன்னராளன்’ என, அவனுடைய ஆண்மைச் செவ்வியினை உரைத்தனள். 'இன்றிப் பொழுதும் வாழலனே' என்றது, 'அதனால் தலைவியும் வாழ்தலற்றவளாகத், தானும் அவன்மீதுள்ள அன்பினால் உயிர்துறப்பள்’ என்றதாம். மலைப்பகுதியிலே நிலவுக் கதிர்கள் பரவுகின்றதனை, முலை முற்றத்திடை முத்தாரங்கிடந்து ஒளிர்வது போலவும், மலையிடத்து இலங்கும் வெள்ளிய அருவிபோலவும் என்று உரைத்தனள். நிலவு வெளிப்படின், இரவுக்குறிச் சேர்க்கை தடைப்படும் என்ற மரபினையும் உணர்த்தினள். இதனால், தலைவனை விரையவந்து மணந்து கொள்ளத் தூண்டினள் என்க. 'கோடு குத்திய புண்மிகுந்து ஆண்புலி குகையிற் சென்று ஒடுங்கப், பெண்புலி காவலிருக்கும் என்றதும், அதற்கு அஞ்சிய வழிப்போக்கர் அவ்வழிச் செல்லார் என்றதும் நினைக்க வேண்டும். இதனால் தலைவிக்குத் தலைவனிடத்து அத்தகைய உழுவலன்பு உள்ளதும் உணர்த்தப்பெற்றது.

363. நயந்து வந்தனர்!

பாடியவர்: மதுரைப் பொன்செய்கொல்லன் வெண்ணாகனார். திணை: பாலை. துறை: பிரிவிடை வேறுபட்ட தலைமகட்குத் தோழி சொல்லியது.