பக்கம்:அகநானூறு 3, புலியூர்க் கேசிகன்.pdf/18

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

6

அகநானூறு -நித்திலக் கோவை


பெரிய கற்களையுடைய மலைச்சாரலிடத்தே, நம் தமையன்மார் உழுது விளைத்திருக்கும் இடத்திலே, கரும்பினைப் போலத் திரண்டு வளர்ந்து அழகுற்றுப், பெரிதான கதிர்களையும் உடையதான தினைப்பயிரிடத்தே கிளிகள் வந்து படியும். அந்த அளவிற்குத் தினைப்பயிர் விளைந்துள்ளமையினை அறிந்தும், 'செல்க' என ஏவி, நம்மை அவ்விடத்திற்குப் போகச் செய்பவளாகவும் நம் அன்னையானவள் தோன்றவில்லை. அவ்வாறு அறவுணர்ச்சி சற்றும் இல்லாதவளாயினாள் அவள்.

சிலவாகிய தேமற்புள்ளிகளை அழகுடையவனவாக அணிந்து விளங்குவதும், நெருக்கமுற்றுப் புடைத்து விளங்குவதுமான நம் இளைய முலைகளை, மென்மைத் தன்மையுடனே தழைத்திருக்கும் நம் கூந்தலுடனேயும், பன்முறை குறிப்பாகக் கூர்ந்து நோக்குபவளும் அவள் ஆயினளே!

சொற்பொருள் : 1. செம்முக வாழை - செவ்வாழை. 2.அலங்கல்- அசையும், 3. பரூஉப்புறம் -பருத்திருக்கும் மேற்புறம், முதுகு 5. குற்றும்-கொய்தும்.10.கவினிய- அழகுற்றுத் தோன்றிய. 14. ஒலிவரல் - தழைத்தல். கதுப்பு - கூந்தல் 15. அறனில் யாய் - அறனில்லாத தாய்; கன்னியர், தாம் கொண்டு காதலித்த இளைஞருடனே களவிற்கூடி இன்புறுவது அறத்தொடுபட்டதே என்று கருதுகின்ற தன்மை இல்லாத தாய்.

விளக்கம் :'பல்கால் நோக்கும்' என்றது ஐயுற்றனளாதலின், அவ்வாறு குறிப்பிட்டு நோக்கியவளாயினள் என்க. களவு உறவினால் கூந்தல் கலைந்தும் முலைகள் புளகித்தும் மாறுபாட்டையும் இயல்பின; இதனைப் பற்றியே தாய் அவற்றைக் குறித்து நோக்கினள் என்றனளாம்.

‘செவ்வாழையின் இலைகள் காற்றசைக்குந் தோறும் தூங்கும் யானையின் முதுகைத் தடவும் என்றது, அவன் மலையிடத்தே விளங்கினங்கள்கூடத் தாம்நினையாத இன்பத்தைப் பெறுகின்றன என்பதாம். ஆகவே, 'அவன் நினைத்த இன்பமாகிய, தலைவியை மணந்து கூடுதலை உறுதியாகப் பெறுபவனாவான்’ என்பதைக் குறிப்பினாலே உணர்த்தியது மாம். 'நறுவீ வேங்கை இனவண்டார்க்கும் வெறிகமழ்சோலை’ என்றது, வேங்கையின் மலர்ச்சியே மணங்கொள்ளும் காலமாத லினால் அதுவும் தோன்றி வந்ததைக் குறித்ததாம். தினை விளைந்தும், அன்னை கிளிகடிய அனுப்புகிறவளாகத் தோன்றவில்லை என்பது, இனித் தலைவி இற்செறிக்கப்படுவாள் என்பதை உணர்த்தியதாம். இதனால், தோழி, தலைவன்