பக்கம்:அகநானூறு 3, புலியூர்க் கேசிகன்.pdf/25

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

மூலமும் உரையும்

புலியூர்க்கேசிகன் ★ 13


பனிமீக் கூரும் பைதற் பானாள்
பருகு வன்ன காதலொடு திருகி 5

மெய்புகு வன்ன கைகவர் முயக்கத்து
ஓருயிர் மாக்களும் புலம்புவர் மாதோ
அருளி லாளர் பொருள்வயின் அகல
எவ்வம் தாங்கிய இடும்பை நெஞ்சத்து
யானெவன் உளனோ - தோழி! தானே 10


பராரைப் பெண்ணைச் சேக்குங் கூர்வாய்
ஒரு தனி அன்றில் உயவுக்குரல் கடைஇய
உள்ளே கனலும் உள்ளம் மெல்லெனக்
கனைஎரி பிறப்ப ஊதும்
நினையா மாக்கள் தீங்குழல் கேட்டே? 15

தோழி!

பகலெல்லாம் நீங்காததாகிப் பொழிந்தது; இரவின் யாமங்களும் நீங்காத வெள்ளப்பெருக்குடனே மெல்லெனக் கழிந்தன; மேகம் மழை பொழிந்ததனால் எழுந்த குளிர்ச்சியாக வருதலையுடைய வாடையும் வந்தது; இவற்றுடனே மிகுதியான வருத்தத்தை அடைகின்றதான துயர்மிகுந்த நள்ளிரவு வேளையிலே-

பல அடுக்குகளாலே உயர்ந்திருக்கும் வறுமையற்ற படுக்கையினிடத்தே, பருகுதலைப் போன்ற காதலுடனே பிணைந்து கிடந்து, ஒருவரின் உடல் மற்றவரின் உடலிற் புகுந்து ஒன்றாகியது போன்ற விருப்பமுடன், கைகளாலே தழுவிக் கிடக்கும் அணைப்பிலே ஒன்றுபட்டிருக்கும் மாக்களும், குளிருக்கு ஆற்றாராகிப் புலம்புவார்கள் அன்றோ? இங்ஙனமாகவும்,

அருள் இல்லாதவராக நம் காதலர், பொருள் கருதியவராகிப் பிரிந்துபோக, அதனால் வந்துற்ற துன்பத்தைத் தாங்கிய இடும்பை நெஞ்சத்தவளான யான், எங்ஙனம் தனித்திருந்து உயிர் வாழ்வேனோ?

பருத்த அடியினையுடைய பனைமரத்திலே, தன்னந்தனியே தன் துணையைப் பிரிந்து தங்கியிருக்கும், கூர்மையான வாயினையுடைய அன்றிற் பறவையின் வருத்தக்குரல் மூட்டி விடுதலினாலே, கனலுகின்ற உள்ளமானது மேலும் கொழுந்துவிட்டு எரியுமாறு, மெல்லெனத் தம் இனிதான குழலை ஊதி எழுப்புபவர் எண்ணமற்ற மக்களான ஆயர்கள்! அவர்களின் குழலொலியாகிய அதனைக் கேட்டும் யான் எவ்வாறு ஆற்றியிருப்பேனோடி!